2.1 அண்ணாவின் வாழ்வும் பணிகளும் |
தமிழ் உரைநடையில் உணர்ச்சிகளைக்
கலந்து ஊட்ட
முடியும் என்பதை எடுத்துக்காட்டியவர்களுள்
அறிஞர்
அண்ணா குறிப்பிடத்தக்கவர். அவரது வாழ்வையும், அவர்
ஆற்றிய பணிகளையும் தெரிந்து
கொள்வது இங்குப்
பொருத்தமாக இருக்கும்.
அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின்
வட எல்லையாக
அமைந்திருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரமாக
விளங்கும் காஞ்சிபுரத்தில் 1909 ஆம் ஆண்டு செப்டம்பர்த்
திங்கள் 15ஆம் நாள் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர்
நடராசனார்; தாயார் பெயர் பங்காரு அம்மாள்.
இளமை
முதலே அண்ணா அவர்களை அன்போடு வளர்த்தவர்,
'தொத்தா' என்று அழைக்கப்பெற்ற அவருடைய
சித்தி
இராஜாமணி அம்மாள் ஆவார். அண்ணா என்று உலகத்
தமிழர்களால் அன்போடு அழைக்கப்படும்
இவருக்குப்
பெற்றோர் இட்ட பெயர் அண்ணாதுரை என்பதாகும்.
இப்பெயரே பின்னர் சுருங்கி
'அண்ணா' என்று
அழைக்கப்படலாயிற்று. அண்ணாவின் தொடக்கக்
கல்வி காஞ்சிபுரத்திலேயே
அமைந்தது. உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் அண்ணா
காஞ்சிபுரத்தில் இருக்கும் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில்
பயின்றார். கல்லூரிக் கல்வி பெறுவதற்காக
அண்ணா சென்னைக்கு
வந்தார். சென்னையில் இருக்கும் பச்சையப்பன் கல்லூரியில்
இடைநிலைக்கல்வி (Intermediate) முடித்து, அதன் பின்பு
பி.ஏ. (ஆனர்சு) பொருளியல்
பாடத்தில் சேர்ந்து
ஆர்வத்துடனும், திறம்படவும் கற்றுத் தேர்ந்தார். அப்படிப்பை,
வெற்றிகரமாக முடித்ததே அவரது வாழ்வில் திருப்புமுனையாக
அமைந்தது. அறிஞர் அண்ணா அவர்களுக்கு 1930
இல் திருமணம்
நடைபெற்றது. அவர் இராணி அம்மையாரைத் தம் வாழ்க்கைத்
துணையாக ஏற்றுக் கொண்டார். எளிமையை
விரும்பும்
அண்ணாவின் இயல்பிற்கு ஏற்றவாறு இராணி அம்மையார்
விளங்கினார்.
அண்ணா இடைநிலைக் கல்வி முடித்ததும் சிறிது
காலம்
காஞ்சிபுரத்தில் இருக்கும் கோவிந்தப்ப நாயக்கர் பள்ளியிலும்,
பின்னர் காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்திலும் பணிபுரிந்தார். அண்ணா
தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசுவதில்
வல்லவராக விளங்கினார். இவரது பேச்சாற்றலைக் கண்ட
தந்தை பெரியார் தம்மோடு இணைந்து பணியாற்ற அழைத்துக்
கொண்டார். பெரியாருடன் இணைந்த அண்ணா, பெரியார்
தொடங்கி வளர்த்த திராவிடர்
கழகத்தின் குரலாகச்
செயல்பட்டார். 'திராவிட நாடு', 'காஞ்சி'
முதலிய வார
இதழ்களைத் தொடங்கி உரைநடைத் தமிழுக்கு உரமூட்டினார். 1949 இல்
திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அண்ணா,
உற்ற நண்பர்கள் சிலரோடு திராவிட முன்னேற்றக் கழகம்
என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். அக்கழகத்தைத்
தமது பேச்சாற்றலாலும், அரசியல் அறிவாலும் திறம்பட
வளர்த்தார். 1967 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்
திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைக்
கைப்பற்றியது. அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தின் முதல் முதலமைச்சராக 1967 இல் பொறுப்பேற்றார்.
அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, உடல் நலம்
குன்றி
03.02.1969 இல் இயற்கை எய்தும் வரை இரண்டாண்டுகள்
தமிழ்நாட்டின் தகைசான்ற முதல் அமைச்சராக வீற்றிருந்தார். அவரது
ஆட்சிக்காலத்தில்தான் 'சென்னை மாகாணம்'
தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது. இரண்டாம் உலகத்
தமிழ் மாநாடு சென்னையில் 1968 இல் மிகச் சிறப்பாகக்
கொண்டாடப்பட்டது. அம்மாநாட்டை ஒட்டியே பழந்தமிழ்ப்
புலவர்களுக்கும், இருபதாம் நூற்றாண்டில்
வாழ்ந்த
பெருங்கவிஞர்களுக்கும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து
தமிழ்த் தொண்டாற்றிய மேனாட்டு அறிஞர்களுக்கும் சிலைகள்
நிறுவப்பட்டன. அம்மாநாட்டின் விளைவாக உருப்பெற்றதுதான்
சென்னை தரமணியில் இருக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி
நிறுவனம். அண்ணா அவர்கள் அமெரிக்கா சென்றிருந்தபோது,
யேல்
(Yale) பல்கலைக்கழகம் அவருக்குக் கௌரவ டாக்டர்
பட்டம்
வழங்கிச் சிறப்பித்தது. அண்ணாவின் தமிழ்ப்பணி அளவிடற்கு அரியது.
அண்ணா
சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர்; நாடக ஆசிரியர்; திரைப்பட
வசனங்களைத் தீட்டியவர். அவருடைய 'ஓரிரவு', 'வேலைக்காரி',
'நீதிதேவன் மயக்கம்', 'சந்திரமோகன்', 'சிவாஜி கண்ட இந்து
சாம்ராஜ்யம்' ஆகிய நாடகங்கள் திரைவடிவம் பெற்றன. இதழ்களைத்
தவிர அவரது தலைசிறந்த பேச்சுக்களும்
நூல்வடிவம் பெற்றன. 'ஏ தாழ்ந்த தமிழகமே',, 'நாடும் ஏடும்',
'தீ பரவட்டும்' முதலியன இவ்வாறு வந்தவை. நூல்களாக
வெளிவந்தவை 'கம்பரசம்', 'ரோமாபுரி ராணிகள்' முதலியன. மேடைப்
பேச்சு, இதழ்களில் கட்டுரைகள், கடிதங்கள்
மற்றும் தனியாக வெளிவந்த நூல்கள் எல்லாவற்றிலும் அவர்
தமது தனித்தன்மையைப் பதித்தார். இதை அப்படியே பின்பற்ற
முயன்று வெற்றி பெற்றவர்கள் தமிழ்நாட்டில்
உண்டு.
சமூகநலன், சமுதாய முன்னேற்றம், தமிழ்உணர்ச்சி, தமிழ்
வளர்ச்சி ஆகியவை அவரது எழுத்துகளில் அடிநாதமாக
விளங்கின.
|