2.5 தமிழ் உரைநடைக்கு அண்ணாவின்
பங்களிப்பு |
அண்ணா வாழ்நாள் முழுவதும் அரசியலில்
ஈடுபட்டுத்
தமிழ்நாட்டின் ஆட்சியில் மாற்றத்தைக் கொண்டு வந்தவர்.
அவரது எழுத்துகள் யாவும் தமிழர்களுக்கு வீர உணர்ச்சியை
ஊட்டும் வகையிலும் தன்மான உணர்ச்சியைத் தட்டி எழுப்பும்
வகையிலும் அமைந்தவை. அத்தகைய அரிய பணிக்கு
அண்ணா ஒவ்வொரு தமிழனிடத்திலும் தனித்தனியே பேச
வேண்டும் என்று நினைத்தார். ஒருவரோடு
நெருங்கிப்
பேசுவதற்கு உறவுமுறை இன்றியமையாதது என்று கருதினார்.
தனக்கு வாய்த்த அண்ணாதுரை என்னும் பெயரை ‘அண்ணா’
என்று சுருக்கி வைத்துக் கொண்டதற்கும் இதுவே காரணம்
ஆகும். எனவே நேருக்கு நேர் உரையாடும்
இலக்கிய
வடிவத்தை அண்ணா தேர்வு செய்தார். அவ்வாறு அவர்
தேர்வு செய்த இலக்கிய வடிவங்களில் அவர் நிகழ்த்திய
புதுமைகளைத் தமிழ் உரைநடைக்கு அண்ணாவின் சிறந்த
பங்களிப்பு எனலாம். அண்ணாவின் பங்களிப்புகளைப்
பின்வரும் ஐந்து வகைகளாகப் பகுத்துக் காணலாம். அவை,
(1) |
மடல் இலக்கியம் |
(2) |
மேடைத் தமிழ் |
(3) |
நாடகத் தமிழ் |
(4) |
அந்திக் கலம்பகம் |
(5) |
ஊரார் உரையாடல் |
என்பன.
அண்ணா, தமது விருப்பத்தை
வெளிப்படுத்தவும்,
ஏக்கங்களையும் கற்பனைகளையும் எடுத்துரைக்கவும் ஏற்றதோர்
இலக்கிய வடிவமாக மடல் இலக்கியத்தைக் கையாண்டார்.
இதழ்களில் வரையும் மடல்களுடன், பொங்கல் மலர், ஆண்டு
மலர் ஆகியவற்றில் வெளியிடும் மடல்களும் இங்குக்
குறிப்பிடத்தக்கவை ஆகும். பகுத்தறிவு என்பதற்கு அண்ணா
ஒரு மடலில் தரும்
விளக்கத்தை எடுத்துக் காட்டிற்காகக் காணலாம். “பகுத்தறியும்போது,
உணர்ச்சிக்கு முதலிடம் இருக்காது;
உணர்ச்சிக்கு மட்டுமே முதலிடம் கொடுத்து விடுபவர்கள்
பெரும்பாலும் பகுத்தறியும் திறனை
முழுவதுமாகப் பெறமாட்டார்கள். உணர்ச்சி ஒருவிதமான
கொந்தளிப்பு.
பகுத்தறிவு என்பது கொதிப்பைக் கிளறிக் கிளறிப் பார்த்து
உள்ள பொருள் என்ன, என்ன நிலையில் அஃது உள்ளது
என்பதைக் கண்டறிவது.” அண்ணா, கட்சி மாநாட்டிற்கு வருகை தந்த
தம்பிகளுக்கு
எழுதிய மடலில் இருந்து ஒரு
பகுதியைக்
காண்போம். “உரிமையுடன் பெருமிதம்
கொள்கிறாய் - உன்
புன்னகையில் ஓர் புதுஎழில் காண்கிறேன் - பனித்துளியுடன்
காணப்படும் புதுமலர் உன் கண்கள் - ஆமாம். வெற்றிக்
களிப்புடன் இருக்கிறாய் - தம்பி ! - திருப்பரங்குன்ற மாநாடு,
நமது இயக்க வரலாற்றிலே நிச்சயமாக ஒரு திருப்புமுனை
என்பதை நிகழ்ச்சிகளையும் நிலைமைகளையும் ஆராய்வோர்
அனைவரும் உணருவர்”.
அண்ணாவின் ஆற்றொழுக்கான தமிழை அவரது மேடைத்
தமிழில்தான் காண முடிகிறது. மேடைத் தமிழை ஓர் அரிய
கலையாக்கிய பெருமை அண்ணாவுக்கு உண்டு. அவருடைய
மேடைத் தமிழ் புதுமையும் பொலிவும் சுவையும் பயனும்
மிக்கதாகும். அண்ணாவின் மேடைத் தமிழுக்குச் சான்றாக “மொழியைக்
காத்திடவும் நாட்டை மீட்டிடவும் வீரர்களே விரைந்து வாரீர்’
என்னும் பொழிவில் இருந்து ஒரு பகுதியைக் காணலாம். “வடநாட்டு
ஏகாதிபத்தியம் என்ற நோய் நம்முடைய
மூளையைத் தொட்டிருக்கிறது. அடிவயிற்றைத்
தடவிப்
பார்த்தார்கள் - பொறுத்துக் கொண்டோம்!
ஆனால்
இப்போது மூளையைத் தடவிப் பார்க்கிறார்களே!
எந்தப்
பக்கத்திலே புறநானூறு இருக்கிறது. எந்தப்
பக்கத்திலே
தொல்காப்பியமும் கலித்தொகையும் கலிங்கத்துப் பரணியும்
இருக்கின்றன என்று தடவிப் பார்த்து அந்தப் பக்கத்திலே
இந்தியைத் திணிக்க முற்பட்டிருக்கிறார்கள்”
என்னும்
பொழிவைப் படித்துப் பாருங்கள். மேடைத் தமிழ்
என்னும் புதுவகைத் தமிழ்நடையை
அண்ணா தோற்றுவிக்கப் பின்னர் வந்த இளைஞர்கள் பலரும்
அந்த நடையைப் பின்பற்றி வளர்த்தனர்.
அண்ணா, தாம் பரப்பக் கருதிய
கருத்துகளுக்கு ஏற்ற
கலைக்கருவியாக நாடக மேடையையும்,
திரைப்பட
ஊடகத்தையும் தேர்ந்தெடுத்தார். அவருடைய
நாடகத்
தமிழ்நடை நாடகக் கலைக்கே
புத்துயிர் அளித்தது.
சந்திரோதயம், சந்திரமோகன், ஓரிரவு,
வேலைக்காரி,
காதல்ஜோதி முதலிய நாடகங்களை எழுதிய
அண்ணா
நாடகத்தமிழுக்கும் பங்களிப்பை வழங்கியுள்ளார். “சட்டம்
ஓர் இருட்டறை; அதிலே வக்கீலின் வாதம் ஓர்
விளக்கு. ஏழையால் அந்தப் பிரகாசமான விளக்கைப் பெற
முடியாது......” என்னும் நாடகத் தமிழ்நடை
‘வேலைக்காரி’ என்னும்
நாடகத்தில் வரும் வழக்குரைஞர் உரையாகும்.
மக்கள் மொழியில் அமைந்த
இலக்கிய வடிவங்களில்
கருத்துகளை அமைப்பது, மக்களை விரைவில் சென்றடைய
வழிவகுக்கும். இதனை அண்ணா நன்கு உணர்ந்திருந்தார்.
அத்தகைய மக்கள் இலக்கிய வடிவமாக
அண்ணா
உருவாக்கியவற்றுள் அந்திக் கலம்பகமும் ஒன்றாகும். அந்திக்
கலம்பகம் என்பது, ஓய்வு நேரங்களில் பெண்கள் ஒன்று கூடி
ஊர்வம்பு அளக்கின்ற பாங்கில், அந்தப் பெண்கள் அரசியல்
போக்கினையும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் அறிவியல்
நுட்பங்களையும் பகிர்ந்து கொள்வதாக அமைக்கப்படும்
‘கற்பனை உரையாடல்’ ஆகும். இந்த அந்திக் கலம்பகத்தில்
மனோன்மணி, பொன்னி, வடிவு, பட்டு எனப் பெண்களுக்குப்
பெயரிட்டு உலவ விட்டுள்ளார்.
ஆண்கள் திண்ணை, குளத்தங்கரை
முதலிய பொது
இடங்களில் கூடி நின்று உரையாடுகின்ற போது
‘ஊர்க்கதை’
பேசுவது இயல்பு. அத்தகைய நேரங்களில் அவர்கள்
பயனுள்ள கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது ஏற்புடைத்தாக
இருக்கும் என்று அண்ணா கருதியுள்ளார். எனவே ‘ஊரார்
உரையாடல்‘ என்னும் இலக்கியப் புனைவை உருவாக்கினார்
எனக் கருதத் தோன்றுகிறது. இத்தகைய ‘ஊரார் உரையாடல்’
என்னும் பகுதியில் அரசியல், சமுதாய நிலை ஆகியவை
ஆய்வுப் பொருள்களாக அமைந்துள்ளன.
முடிச்சூரர்;
வெட்டூரர் முதலியவை அண்ணா ஊரார் உரையாடலுக்குப்
படைத்த பாத்திரங்களின் உருவகப் பெயர்கள் ஆகும். |