6.1 படைப்புகளும் உள்ளடக்கமும்

கோவி.மணிசேகரன் ஐம்பதாண்டுகளுக்கும் மலோக எழுதி
வருகிறார். இவரது படைப்புகள் பலதரப்பட்டவை. இவரது
உரைநடையின் தன்மையை அறிந்து கொள்ளும் முன் அவரது
படைப்புகளின் பரப்பினைத் தெரிந்து கொள்வது பொருத்தம்
அல்லவா? எனவே கோவி.மணிசேகரன் எந்தெந்த
வடிவத்தில் எத்தனை நூல்களை எழுதியுள்ளார் என்பதைக்
காண்போம்.
 

கோவி.மணிசேகரனைத் தமிழ் உலகம் புத்திலக்கியம்
படைப்போர் பட்டியலில் சேர்த்துள்ளது. நாவலும் சிறுகதையும்
இவருக்கு மிகவும் இயல்பாக வரக்கூடிய இலக்கிய வடிவங்கள்
எனலாம். எனினும் இவரது படைப்புகளைப் பின்வருமாறு
ஆய்வாளர்கள் பட்டியலிட்டுக் காட்டுகின்றனர்.
 

வ.எண் படைப்பின் வடிவம் எண்ணிக்கை
1. நாடகங்கள் 8
2. சிறுகதைத் தொகுப்பு 29
3. சமூக நாவல்கள் 30
4. வரலாற்று நாவல்கள் 50
5. கட்டுரைகள் 8
6. கவிதைத் தொகுப்பு 15

இப்பட்டியலைக் காணும் போது கோவி.மணிசேகரனின்
பரந்துபட்ட இலக்கிய ஆளுமை நமக்குப் புலப்படுகிறதல்லவா?
இப்பட்டியலில் இருந்து நாம் சிறப்பாக அறிந்து கொள்ள
வேண்டிய செய்தி, அவர் நாவல்கள் படைப்பதில் மிகவும்
ஆர்வமும் ஆற்றலும் உடையவர் என்பதாகும். இது பற்றியே
இவரைப் பலரும் புதினப் பேரரசு என்று அழைக்கின்றனர்
போலும். நாவல்களிலும் வரலாற்று நாவல்களை எழுதுவதில்
சிறந்து விளங்குபவர் என்பது புலப்படக் காண்கிறோம். இவர்
உரைநடையில் மட்டுமன்றிக் கவிதை எழுதுவதிலும் பயிற்சி
உடையவர் என்பதை இவர் 15 கவிதைத் தொகுப்புகள்
வெளியிட்டுள்ளார் என்ற குறிப்புச் சுட்டிக் காட்டுகிறது.
 

கோவி.மணிசேகரனின் படைப்புகளில் பல வகைகள்
இருப்பதைப் போலவே     அவருடைய படைப்புகளின்
உள்ளடக்கங்களும் பல்வேறு வகையில் அமைந்துள்ளன.

தமிழகத்தின் வரலாறும்     சமூகமும் அவருடைய
படைப்புகளுக்கு இரு கண்களாக உள்ளன. தமிழரின்
வாழ்வியல், தமிழரின் சிறப்பு, தமிழரின் இசை முதலியன
இவரது படைப்புகளில் பரவலாகக் காணப்படுகின்றன.
இவற்றுடன் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமுதாயத்தில்,
தமிழர் குடும்பத்தில் எழுந்த பல சிக்கல்களை விளக்கி
விவாதித்து அவற்றிற்குத் தீர்வு காணும் வகையிலும் இவரின்
படைப்புகள் அமைந்துள்ளன.

‘இலக்கியம் காலத்தின் கண்ணாடி’ என்று கூறுவர். எனவே,
இவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் எழுந்துள்ள
பிரச்சனைகள் பலவற்றைக் குறித்துத் தனது படைப்புகளின்
வழியாகத் தன் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.
 

இலக்கிய ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருவர்
முன்னோடியாக இருத்தல் கூடும். தனக்கு ஒருவரை
முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் இலக்கியங்களைப் படைக்க
முனைவர். சிலர் தாங்களே தங்கள் இலக்கிய நடையை
உருவாக்கிக்     கொள்வதும்     உண்டு.     ஆனால்
கோவி.மணிசேகரன் தன் உரைநடைக்கு ஆசான் என்று
அறிஞர் அண்ணா
வைக் குறிப்பிடக் காண்கிறோம்.

கோவி.மணிசேகரன் தன் கவிதை நாடகத்தைப் பற்றித்
தெரிவிக்கையில், ‘அண்ணாவின் எழுத்துகளைப் படித்தமையின்
விளைவுதான் எனக்கென்று தனிநடை உருவானது’ என்று
குறிப்பிடுகின்றார். ஆதலின் அண்ணாவின் அடுக்குமொழியும்
அழகுமிளிரும் தமிழும் கோவி.மணிசேகரனுக்குத் தமிழில்
தனிநடையை     உருவாக்கிக்     கொள்ளும் ஊக்கத்தை
வழங்கியுள்ளது என்று உரைப்பதில் தவறில்லை அல்லவா?
எனவே கோவி.மணிசேகரனின் உரைநடைக்கு ஊற்றுக்
கண்ணாகத் திகழ்ந்தவர் அறிஞர் அண்ணா என்று
குறிப்பிடலாம்.

தமிழ் உரைநடையில் தனக்கென்று தனிநடையை வகுத்துக்
கொண்டவர் அறிஞர் அண்ணா. படைப்பிலக்கியத்தில்
தன்னுடைய உரைநடையின் அழகைப் பதிவு செய்தவர்
என்பதை இப்பாடத் தொகுப்பின் முற்பகுதியிலேயே நீங்கள்
கண்டிருப்பீர்கள். அறிஞர் அண்ணாவின் உரைநடை குறித்துத்
தனிப்பாடம் அமைந்துள்ளதை இங்கு நீங்கள் நினைவு கூர்வது
நல்லது. அண்ணாவின் மேடைப் பேச்சைப் போலவே அவரது
உரைநடையும், தமிழின்     மிடுக்கையும் அடுக்குமொழிச்
சிறப்பையும் புலப்படுத்தும்.