4.2 மொழிபெயர்ப்பு வகைகளின் விளக்கம் - I

    மொழிபெயர்ப்பு எந்தெந்த வகைகளில் அமையும் என்று
பார்த்தோம்.     இந்தப் பாடப் பிரிவில் அவற்றின்
விளக்கங்களைக் காணலாம்.

4.2.1 சொல்லுக்குச் சொல் பெயர்த்தல்

    மூல     மொழியிலுள்ள     சொல்லுக்கு இணையான
மாற்றுமொழிச் சொல்லால் பெயர்க்கும் முறையைத்தான்
சொல்லுக்குச் சொல் பெயர்த்தல் என்கிறோம். ஆனால்
இம்முறையில் அமையும் மொழிபெயர்ப்பு சிறப்பானதாய்
அமையப் பெரும்பாலும் வழி இல்லை. ஒருசில இடங்களில்
இதுவும் சரியாக அமைவதைக் காணலாம். பாரதிதாசனின்
அழகின் சிரிப்பு என்ற நூல் தலைப்பை Smile of Beauty
என்று மொழி பெயர்ப்பதில் தவறில்லை. He kicked the
bucket
என்ற ஆங்கிலத் தொடருக்கு அவன் வாளியை
உதைத்தான்
என்ற மொழிபெயர்ப்பு, சொல்லுக்குச் சொல்
பெயர்த்தாலும் தவறில்லை என்றாலும் ஆங்கில மரபில்
இதற்கான பொருள் அவன் காலமானான் என்பது தான். இந்த
மரபுநிலை மொழிபெயர்ப்பில் தெளிவு புலப்படுதலைக்
காணலாம். அகத்தினழகு முகத்தில் தெரியும் என்ற தமிழ்ப்
பழமொழியை The Beauty of the mind appears in
the face
என்றும் அய்யன் அளந்தபடி என்பதை As God
Measured
என்றும் பெர்சீவல் மொழி பெயர்த்தார் இதுவும்
கருத்தைத் தெளிவுபடுத்துகிறது. எனினும் இதில் மூலமொழியின்
விறுவிறுப்பு குறைந்திருப்பதை வாசகர்கள் உணர இயலும்.

4.2.2 விரிவான மொழிபெயர்ப்பு

    மூலமொழி நூலின் கருத்துகளை விட அதிகமான
செய்திகளை, பெயர்ப்பு நூலிற்கு ஏற்றவாறு கூறுவதைத்தான்
விரிவான மொழி பெயர்ப்பு என்கிறோம். இது ஒருவகையான
மொழிபெயர்ப்பு என்பதுதான் பொருந்தும்.

    கல் ஆனாலும் கணவன் ; புல் ஆனாலும் புருஷன்

    காடு விளையாவிட்டாலும் கடமை போகுமா?

என்ற பழமொழிகளை முறையே.

    Though in heart hard as a stone, and worthless
as a blade of grass, he is your husband. என்றும்
Though the waste land has yielded nothing will tax be
remitted? - என்றும் பெர்சீவல் மொழி பெயர்த்துள்ளார். இது
சற்று விரிவான விளக்கமான மொழிபெயர்ப்புத்தான். எனினும்,
தமிழின் சரியான உட்கிடையை ஆங்கிலேயர் புரிந்து கொள்ள
இது துணைநிற்கும் என்பதில் ஐயமில்லை. சில வேளையில்
இத்தகைய விரிவான மொழிபெயர்ப்பு குறைந்த அளவு
படித்தவருக்கும் ஒரு குறிப்பிட்ட துறையைப் பற்றி ஓரளவு
அறிந்தவருக்கும் மட்டுமே மிகுந்த பலனைத் தருவதாக
அமையலாம்.

    வி.எஸ்.வி. இராகவன் அவர்கள் எழுதிய மெகஸ்தனீஸ்
என்னும் மொழிபெயர்ப்பு நூலில் கூட “இந்நூலில் வரும்
வரலாற்றுத் தொடர்பான பகுதிகளுக்கு வரலாற்றில் புகழ்மிக்க
பலருடைய நூல்களிலிருந்து ஆங்காங்கே மேற்கோள்கள்
காட்டப்பட்டுள்ளன.     தமிழ்     இலக்கியங்களிலிருந்தும்
ஆங்காங்கே     பொருத்தமான ஒப்புமைப் பகுதிகளும்
சேர்க்கப்பட்டுள்ளன” என்ற பதிப்புரையின் படி நோக்குங்கால்
இது ஒரு விரிவான மொழிபெயர்ப்புக்குச் சான்று என்று
தெரியலாம்.

4.2.3 முழுமையான அல்லது சரியான மொழிபெயர்ப்பு

    “சரியான மொழிபெயர்ப்பு” என்பது ஒரு மொழியில்
சொல்லப்படும் கருத்துகளைப் பொருட்சிதைவு பிறழாத
வகையிலும், மொழியின் அமைப்பு, சமுதாயச் சூழல், பண்பாட்டு
நிலை இவற்றிற்கு ஏற்பவும் மிகப் பொருத்தமாகக் கூட்டாமலும்
குறைக்காமலும் எழுதும் மற்றொரு நிலையாகும்.

    வீணையடி நீ எனக்கு ; மேவும் விரல் நானுனக்கு

என்னும் தம்முடைய கவிதையை,

    Thou to me the harp of gold
    And I to thee the finger bold

என்று பாரதியார் தாமே மொழிபெயர்த்துள்ளார். இதில்
ஆசிரியனது ஆன்ம     ஈடுபாடு மொழிபெயர்ப்பிலும்
புலப்படுதலைக் காணமுடிகிறது. ஜேம்ஸ் ஆலன் என்னும்
ஆங்கில அறிஞரின் As a man thinketh என்ற நூலில் வரும்

    Thought in the mind hath made us
    What we are by thought was wrought and built
    If a man’s mind hath evil thoughts pain
    Comes on him as comes the wheel
    The ox behind ..... If one endures
    The purity of thought; joy follows him
    As his own shadow - sure

என்ற வரிகளைத் தமிழில்

    “மனமெனும் நினைப்பே நமையாக்கியது
    நினைப்பால் நாம் நம் நிலையை உற்றனம்
    ஒருவர் நினைப்பு கருமறம் பற்றிடின்
    எருதுபின் உருளை போல்வரும் நனிதுன்பமே
    ஒருவன் நினைப்பு திருஅறம் பற்றிடின்
    தன்நிழல் போல் மன்னும் இன்பமே”

என்று மனம் போல் வாழ்வு எனும் நூலில் வ.உ.சி. அவர்கள்
செய்துள்ள மொழிபெயர்ப்பு செம்மையும், சீர்மையும் நிறைந்த
சரியான மொழிபெயர்ப்பாக அமைவதை நாம் அறியலாம்.
இதில் மொழிபெயர்ப்பாளரின் இருமொழித்திறன் தெளிவாகப்
புலப்படுவதைக் காணலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. சொற்களை இட்டு நிரப்புவது மொழி பெயர்ப்பு ஆகுமா? விடை
2. மொழிமாற்று, மொழிபெயர்ப்பு என
இருவகையாகப் பிரித்து விளக்குபவர் யார்?
விடை
3. மொழி ஆக்கம் என்று கூறுவதே சரி என்று
விளக்கியவர் யார்?
விடை
4. பொதுவாக மொழிபெயர்ப்பு எத்தனை
வகையாகப் பகுக்கப்பட்டுள்ளது?
விடை
5. மெகஸ்தனீஸ் என்ற மொழிபெயர்ப்பு நூலை
எழுதியவர் யார்?
விடை
6. தம் நூலைத் தாமே மொழிபெயர்த்துள்ள
நிலைக்கு எந்தக் கவிஞர், இப் பாடத்தில்
எடுத்துக்காட்டப்படுகிறார்?
விடை
7. As a man thinketh என்ற நூலின் மொழி
பெயர்ப்புப் பெயர் என்ன? மொழி பெயர்ப்பாளர்
யார்?
விடை