5.3 இயக்கம் சார்ந்த விளைவுகள்

    மனித வாழ்க்கையில் அரசியல் என்பது அடிப்படையானது.
அது எல்லா நிலைகளிலும் ஆழமாக ஊடுருவிப் பாய்ந்திடும்
சக்தி படைத்தது.

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் இருந்து
தமிழாக்கப்பட்ட     நூல்கள் வெளியீட்டில் காலத்தின்
செயல்பாட்டினைக் கவனிக்கலாம். இந்தியாவைக் காலனியாக்கி
அரசாண்ட ஆங்கிலேயரின் கருத்துகளின் வெளிப்பாடாகவும்
மொழிபெயர்ப்பு நூல்களைக் கருத இடமுண்டு. மக்களைக்
கருத்தியல் நிலையிலும்     செயல்பாட்டு நிலையிலும்
ஒருங்கிணைக்க, மொழிபெயர்ப்புகளும் துணைநின்றுள்ளன.
தமிழகத்தைப் பொருத்த வரையில் மேற்கண்ட இரண்டு
நிலைகளிலும் மக்களை ஒருங்கிணைத்தனர். அரசியலில்
தேர்தல் முறை வந்தபிறகு பல்வேறு இயக்கங்கள் தோன்றி
மக்களின் செல்வாக்கைப் பெற முனைந்தன.

5.3.1 திராவிட இயக்கம்

    இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு மூட நம்பிக்கைகள்,
அடக்குமுறைகள், சாதீய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை,
பொருளியல் சுரண்டல்கள் போன்ற சமூகக் கொடுமைகளால்
சீரழிந்து கொண்டிருந்த தமிழகத்தில் விழிப்புணர்வை
ஏற்படுத்தப் பலர் அமைப்பு ரீதியிலும்     தனிப்பட்ட
முறையிலும் போராடிக்கொண்டு இருந்தனர். ஈ.வெ.ரா - பெரியார் தோற்றுவித்த திராவிட இயக்கம் வலுவடைந்தது. 1940 களில்
பார்ப்பனீய எதிர்ப்பு, வருணாசிரம எதிர்ப்பு, கடவுள் மறுப்பு,
சாதி ஒழிப்பு, விதவை மறுமணம், சமய மறுப்பு போன்ற
சீர்திருத்தக் கருத்துகள் திராவிட இயக்கத்தினரால் முன்னிலைப்
படுத்தப் பட்டன.

    பண்பாட்டு நிலையில் மாற்றங்களைக் கோருவதன் மூலம்
ஏற்கெனவே நிலவி வந்த நிலமானிய மதிப்பீடுகளைக்
கேள்விக்கு உள்ளாக்கினர். திராவிட இயக்கத்தைச் சார்ந்த
இதழ்கள், புத்தகங்கள், மேடைப் பேச்சுகள் மூலம் சமூகச்
சீர்த்திருத்தக் கருத்துகளைப் பரப்பினர். அப்பொழுது
பெருமளவில் பிரெஞ்சு சிந்தனையாளர்களின் கருத்துளையும்,
இலக்கியப் படைப்புகளையும் தமிழாக்கிப் பயன்படுத்தினர்.
திராவிட இயக்கத்தாரின் கருத்தியல் பிரச்சாரத்திற்குப் பிரெஞ்சு
மொழி நூல்கள் அடிப்படையாக விளங்கின. மாறிவரும் புதிய
போக்குகளை வெளிப்படுத்த, பிரெஞ்சு நூல்கள் அவர்களுக்குப்
பயன்பட்டன.

    கி.பி.18 ஆம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் எல்லா
அடக்குமுறைகளுக்கும் எதிராக ஏற்பட்ட புரட்சியை முன்நின்று
நடத்திய புரட்சியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் ரூசோ
எழுதிய சமுதாய ஒப்பந்தம் என்ற நூல் மறை நூலாக
விளங்கியது. பிரெஞ்சு சிந்தனையாளர்களான வால்டேர்,
மாண்டெயின், மொந்தெஸ்சியோ, திதெரோ, ஒல்பாக், மப்லி,
ரெய்னால், மெர்சியோ, நியெட்ஸே, ரூசோ போன்றோரின்
சிந்தனைகள்     உலகமெங்கும்     பல     மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டது     போன்று     தமிழிலும்
மொழிபெயர்க்கப்பட்டன.

• குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள்

    திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான சி.பி.சிற்றரசு,
எமிலி ஜோலாவின் வாழ்க்கை வரலாற்றை 1952 இல்
ஆங்கில மூலத்திலிருந்து மொழிபெயர்த்து இரண்டு பாகமாக
வெளியிட்டுள்ளார்.

    திராவிட     முன்னேற்றக் கழகத்தின் தலைவரான
சி.என்.அண்ணாதுரை 1959 இல் ஏழைபங்காளன் என்ற
தலைப்பில் எமிலி ஜோலா பற்றி உணர்ச்சிமயமாக
எழுதியுள்ளார். “ஜோலா ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டுக்
கொடுமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக எழுதினார். எழுதினார்
என்றால் போராடினார் என்றே பொருள். அவருடைய எழுத்து
வீரனின் கைவாளை விட வலிமையானது” என்று, பேனாவின்
மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்ற கருத்தை
வெளியிட்டார்.

    இவை தவிர பிரேமா பிரசுரம், சிந்தனையாளர் வரிசையில்
நூல்கள் வெளியிட்டது, பிரெஞ்சு சிந்தனையாளரின் வாழ்க்கை
வரலாறு, சிந்தனைகள் என்ற இருபெரும் பிரிவுகளுடன் எளிய
தமிழில் ரூசோ (1954), வால்டேர் (1960), மாண்டெயின்
(1962), மாக்கியவல்லி (1964), நியெட்ஸெ (1965) ஆகிய
நூல்கள் இன்று வரை பல பதிப்புகள் வெளிவந்துள்ளன.

    திராவிட இயக்க இதழ்களான திராவிட நாடு, மன்றம்,
காஞ்சி, தென்றல், எண்ணம்
போன்ற ஏடுகளில் பிரெஞ்சு
சிந்தனையாளர்கள் பற்றிய கட்டுரைகளும், பிரெஞ்சு இலக்கியப்
படைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

5.3.2 பொதுவுடைமை இயக்கம்

    சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய
இயக்கங்களில் குறிப்பிடத்தக்கதும், வல்லரசு அமைத்ததுமாகிய
பொதுவுடைமை இயக்கம், ரஷியாவால் சாதித்துக் காட்டியது
போல உலகின் பல்வேறு நாடுகளிலும் சாதித்துக் காட்டிய
சித்தாந்தம். ஆகையால் இந்தியாவிலும் அச்சித்தாந்தம் ஏற்றுக்
கொள்ளப்பட்டது. அதே போன்று தமிழகத்திலும் சித்தாந்த
அடிப்படையில் பொதுவுடைமை இயக்கங்கள் தோன்றின.
இயக்கத் தோழர்களுக்கு உதவும் வகையில் தமிழில்
ஆயிரக்கணக்கான அரசியல், அறிவியல், தத்துவ, பிரச்சார
நூல்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு மலிவான விலையில்
தரப்படுகின்றன.

    காரல் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரின் அரசியல்
சித்தாந்த நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. மார்க்ஸின்
மூலதனம்,      மாஜினி,     தியாகு     ஆகியோரால்
மொழிபெயர்க்கப்பட்டன. லெனினின் பேச்சும், எழுத்தும்,
அவரைப் பற்றி எழுதப்பட்ட நூல்களும் உலகின் மிகுதியான
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    ரஷ்ய மொழியிலிருந்து எட்டு நாடகங்கள் தமிழில்
மொழிபெயர்க்கப் பட்டு வெளியிடப்பட்டுள்ளன. மாக்சிம்
கார்க்கி, பொககோடின், அர்டிஸிங் ஆகிய ரஷியப்
படைப்பாளிகளின் நாடகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்
பட்டுள்ளன.

    ரஷிய இலக்கிய மொழிபெயர்ப்பில், புதினம் இலக்கியம்
சிறப்பிடம் வகிக்கின்றது. ஒட்டுமொத்த புதினம் நூல்கள்
மொழிபெயர்ப்பில், ரஷியப் புதினம் நூல்கள் 25% இடம்
பெறுகின்றன.

    ரஷியச் சிறுகதைகள் மொழிபெயர்ப்பில் அதிக அளவில்
குழந்தை இலக்கியப் படைப்புகள் இடம் பெற்றுள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது.

    ரஷியக் கவிதைகள் தொகுப்பு நூலாகவும், குழந்தை
இலக்கியங்கள் பலவும் தமிழில் மொழிபெயர்ப்புக்கு உள்ளாயின.

5.3.3 தலித் இயக்கம்

    நிறவெறிக்கு எதிராகவும், சாதி ஒடுக்குமுறைகளுக்கு
எதிராகவும் ஆங்காங்கே உலகின் பல்வேறு இடங்களில்
எழுப்பப்படும் கண்டனக் குரல்கள் அனைத்தையும் இந்த
இயக்கத்திற்குள் இணைக்கலாம். இந்திய நாட்டில், தலித்
என்பது, ஒடுக்கப்பட்ட, தீண்டாமைக்கு உள்ளான மக்களைக்
குறிக்கிறது. தலித்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை ஒழிக்க,
தலித்     இயக்கம்     தலித்     மக்களின்     குரல்களை
ஒருங்கிணைத்துள்ளது.

    டாக்டர்     பாபாசாகிப்     அம்பேத்கரின் நூல்கள்
தொடர்களாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அம்பேத்கர்
பவுண்டேஷனால் வெளியிடப் பட்டுள்ளன. தலித் மக்களுக்கான
விடுதலை உணர்வை வெளிப்படையான போராட்டங்கள் மூலம்
பெறவேண்டும் என்றும் கட்சி சார்பாகவும் விடுதலை பெற
வேண்டும் என்றும் உருவான கட்சிகள், கொள்கைத்
தெளிவுக்காகப் பல நூல்களை மொழிபெயர்க்க ஏற்பாடு
செய்துள்ளன.