4.3 சொல்லாக்கமும் துறைவல்லுநர்களும்

    தமிழில் சொல்லாக்கம் செய்வதற்கான நெறிமுறைகள் குறித்து
வல்லுநர்கள் தத்தம் கருத்துகளைப் புலப்படுத்தியுள்ளனர். அவற்றில்
சிலர் குறிப்பிடும் கருத்துகள் அறிமுகமாக இங்குத் தொகுத்துத்
தரப்பட்டுள்ளன.

4.3.1 செ.சுந்தராசன் கருத்துகள்

    பண்டைத்     தமிழ் இலக்கியங்களிலும்     நாட்டுப்புற
மக்களிடையேயும் வழங்கும் கலைச் சொற்களைத் தொகுத்தும்
புதிதாகச் சொற்களை உருவாக்கியும் சொல்லாக்கத்தினை
மேற்கொள்ள வேண்டும் என்கிறார் செ. சுந்தரராசன். அவர்
குறிப்பிடும் சொல்லாக்க நெறிமுறைகள் பின்வருமாறு:

(i)
காரணம் கருதி வேர்ச் சொற்களினின்று ஆக்குதல்.
(ii)
மூலமொழியில் அச்சொல்லின் கருப்பொருள் கண்டறிந்து,
அது போலவே தமிழிலும் ஆக்குதல்.
(iii)
இரு சொற்களை இணைத்துப் புதிய சொல்லாக்குதல்.
(iv)
ஒப்பாய்வு மூலம் ஆக்குதல்.

4.3.2 அ.கு.மணியன் கருத்து

    சொல்லாக்கத்திற்குரிய நெறிமுறைகளாகப் பின்வருவனவற்றை
அ.கு.மணியன் குறிப்பிடுகிறார்.

(1) பிறமொழிச் சொல்லின் கருத்துக்கேற்பத் தமிழில்
சொற்களை அமைத்தல்.
(2) பிறமொழிக் கருத்துக்கும் ஓசைக்கும் ஒத்த சொற்களை
ஆக்குதல்.
(3) தொழிலாளரும் தொழில் வல்லுநரும் ஏற்கெனவே
பயன்படுத்தும் சொற்களைப் பயன்படுத்துதல்.