கர்மயோகம் என்பது சாத்திரங்களைப்
பயின்ற அறிவினால்
சில சடங்குகளையும் கடமைகளையும் தவறாது செய்தல் ஆகும்.
இவற்றுள் நித்திய கருமங்களும் நைமித்திக கருமங்களும்
அடங்கும். நாள்தோறும் செய்யும் சந்தியாவந்தனம், இறைவழிபாடு
(பகவதாராதனம்) போன்றவை நித்திய கருமங்களாம். கார்த்திகை,
சங்கராந்தி, ஆவணி அவிட்டம் போன்ற சிறப்பான நாட்களில்
மேற்கொள்ளப்படுவன நைமித்திக கருமங்கள் ஆகும்.
இறைவனை
ஏத்தல், திருத்தலப்பயணம் செல்லுதல், அறம்புரிதல்
போன்றவையாவும் கர்மயோகத்தில் அடங்கும். எப்போதும்
எவ்விடத்தும் பற்றற்றுப் பண்புடன் பெருவினையாற்றுதலே
கர்மயோகம் எனப் பகவத்கீதை பகரும். யாதொரு பலனையும்
எதிர்பாராது செய்யப்பெறும் கருமத்தால் மனம் தூய்மை
அடைகிறது. இஃது ஆன்மா தியானத்தில் அழுந்துவதற்குரிய
வழியாகவும் அமைகின்றது. மனமும் அகப்பற்று புறப்பற்று
நீங்கிக் குவிய
வல்லதாகிறது.
பரிவது இல் ஈசனைப்பாடி
விரிவது மேவல் உறுவீர்:
பிரிவகை இன்றிநல் நீர்தூய்
புரிவதும் புகைபூவே
(திருவாய்மொழி : 1-6-1) |
(பரிவதுஇல்ஈசன் = துன்பம் இல்லாத இறைவன்;
விரிவதுமேவல் = விரிவடைவதாகிய செல்வத்தை அடைதல்;
உறுவீர் = (அடைவதில்) உறுதியுடையவர்களே; பிரிவகைஇன்றி
= விலகிப்போவது இல்லாமல்; தூய் = தூவி; புரிவதுவும் =
சமர்ப்பிப்பதும்)
என்று திருவாய்மொழியில் பலனை எதிர்பாராது இறைவனுக்குச்
செய்யும் கருமம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ‘ஏதேனும் ஒரு பூவோ
புகையோ கொண்டு இறைவனை வழிபடலாம்’ என்றதன் மூலம்
அவன் ஆராதனைக்கு எளியவன் என்பதும் இதனால்
உணர்த்தப்படுகின்றது. எளியவனாய் இருப்பதுடன்
ஆராதிப்பார்க்கு இனியவனாகவும் இருக்கின்றான் இறைவன்
என்பதை,
ஆயர் கொழுந்தாய் அவரால்
புடையண்ணும்
மாயப் பிரானை என் மாணிக்கச்சோதியை,
தூய அமுதைப் பருகிப்பருகி, என்
மாயப் பிறவிமயர்வு அறுத்தேனே(தி.வா.மொ.
1-7-3) |
(புடையுண்ணும் = அடிபடும்; மயர்வு = மயக்கம்)
என்னும் பாசுரத்தால் தெரிவிக்கின்றார் நம்மாழ்வார். இக்
கர்மயோகத்தினால் தடையான தீவினையழிந்து மனம் மலமற்றுத்
தன்மை விளக்கம் (சொரூபப்ரகாசம்) உண்டாகும். அதனால்
இறைவனை அறியும் அறிவும் அவனிடத்தில் விருப்பமும் பிறந்து,
பின்னர் மேலான அன்பு (பரபக்தி), மேலான அறிவு (பரஞானம்),
மிக்க மேலான அன்புகளாக (பரமபக்தி) மாறிப் பேற்றினை
நல்கும்.
ஆயினும் இந்நெறி செய்வதற்கு அரியது. மந்திரக்குறை
(மந்த்ரலோபம்), செய்முறைக்குறை (க்ரியாலோபம்), உரிய
பொருட்குறை (த்ரவ்யலோபம்), காலமாறுபாடு (காலபேதம்),
தெய்வவேறுபாடு (தேவதாவ்யத்யயம்) என்பவற்றில் ஒன்று
உண்டாயினும் பயனின்றிப் போய்விடும்.
|
கர்மயோகத்திற்கு அடுத்தநிலை ஞானயோகமாகும். இந்த
நிலையை,
ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்தன்
நாமங்கள்
தானத்தால் மற்றுஅவன்பேர் சாற்றினால்-வானத்து
அணிஅமரர் ஆக்குவிக்கும்(இரண்டாம் திருவந்தாதி
- 2) |
என்கிறார் பூதத்தாழ்வார். ‘ஞானத்தால் நன்றாக உணர்ந்து
அவனுடைய திருப்பெயர்களை அன்பின் உச்சியில் நின்று
சொன்னால், பரமபதத்துக்கு அணியாகவுள்ள நித்திய சூரிகள்
போலே நம்மை இறைவன் ஆக்குவான்’ என்பது இதன்
பொருளாகும். (நித்திய சூரிகள் = இறைவனோடு என்றும் உடன்
உறைபவர்கள்) ஞானயோகத்தால் அலைந்து திரியும் மனத்தை
அங்ஙனம் அலையவிடாமல் நிலைநிறுத்த முடிகின்றது. அதாவது,
மெய்விளக்க அறிஞர்கள் குறிப்பிடும் கைவல்ய நிலை
உண்டாகின்றது. இந்த யோகத்தினால் தன் ஆன்மா இன்னது
என்று தனக்குப் புலனாவது போல எல்லாச் சீவர்களிடத்தும்
ஆன்மா என்னும் ஒன்று இருப்பது தெரியவருகின்றது. எல்லா
ஆன்மாக்களும் சமம் என்ற உண்மையும் பளிச்சிடுகின்றது.
தியானத்தின் மூலமும் ஆன்மா தன் உண்மைநிலையை உணர்ந்து
இறைவனைச் சார்ந்திருக்கும் நிலையை அறிகின்றது. அதன்பிறகு
அது இறைவனை அடைய அவாக் கொள்ளுகின்றது.
எனினும் ஐம்பொறிகளையும் வருத்திக் கொள்வதாக இந்நெறி
அமைகின்றது என்பர் பெரியவாச்சான்பிள்ளை.
|
ஞானயோகத்திற்கு அடுத்தநிலை பக்தியோகமாகும். இந்தத்
தியான நிலையில் தான் ஆன்மா தனக்கும் இறைவனுக்குமுள்ள
தொடர்பினை அறிகின்றது. இது ஞானநிலையின் இறுதிப்படியும்
பக்திநிலையின் முதற்படியும் ஆகும்.
உய்த்து உணர்வு என்னும் ஒளிகொள்
விளக்கேற்றி
வைத்து அவனைநாடி வலைப்படுத்தேன்(மூன்றாம் திருவந்தாதி
- 94) |
என்னும் பேயாழ்வாரின் பாசுரத்தில் இந்த நிலையினைக்
காணலாம். (உணர்வு என்னும் ஒளிமயமான விளக்கை ஏற்றி
அவனைத் தேடிப் பிடித்து (உய்த்துவைத்து) ஆராய்ந்து (நாடி)
எனக்கு வசமாக்கிக் கொண்டேன் (வலைப்படுத்தேன்) என்பது
இதன் பொருளாகும்.) ஞானம் கனிந்த நலம் என்று
திருவரங்கத்தமுதனார் (இராமாநுச நூற்றந்தாதி, 66)
குறிப்பிடுவதும் இதுவே.
இந்தப் பக்திநெறி ஆழ்வார் பாசுரங்களில் ஆங்காங்கு இடம்
பெற்றுள்ளது. நாலாயிரத்தை ஓதுவார் இதனை நன்கு அறிவர்.
அறிந்து ஐந்தும் உள்ளடக்கி ஆய்மலர்
கொண்டு, ஆர்வம்
செறிந்த மனத்தராய், செவ்வே - அறிந்து அவன்தன்
பேர் ஓதி ஏத்தும் பெருந்தவத்தோர் காண்பரே
கார்ஓத வண்ணன் கழல் |
(ஐந்தும் உள்ளடக்கி = ஐம்புலன்களை அடக்கி; ஆய்மலர் =
தேர்ந்தெடுத்த மலர்; ஆர்வம் செறிந்த = பக்திநிறைந்த;
கார்ஓத வண்ணன் = கடல்நிற வண்ணன்; கழல் = திருவடி)
என்னும் பூதத்தாழ்வாரின் பாசுரத்தில் இந்தப் பக்தி
நெறியைக் காணலாம். விஷ்ணுவை என்றும் தன் சித்தத்தில்
வைத்துள்ள
விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வார், தம்
பக்திநிலையைப்
பின்வருமாறு வெளிப்படுத்துகின்றார்:
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து
மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூஇட வல்லார்க்கு
அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே
(பெ.தி.மொ. 4-5-3) |
(மார்வம் = நெஞ்சு; ஆர்வம் = அன்பு; அரவதண்டம் = யம
தண்டனை; உய்யல் = தப்பிப்பிழைத்தல்)
நம்மாழ்வாரின் திருவாய்மொழிப்பாசுரம் ஒன்றிலும் இப்பக்தி
நிலையினைக் கண்டு அனுபவிக்கலாம். அப்பாசுரம் வருமாறு:
பூசும் சாந்துஎன் நெஞ்சமே;
புனையும் கண்ணி என்னுடைய
வாச கம்செய் மாலையே:
வான்பட் டாடையும் அஃதே
தேசமான அணிகலனும்
என்கை கூப்புச் செய்கையே
(தி.வா.மொ. : 4-3-2) |
(பூசும்சாந்து = பூசுகின்ற சந்தனம்; புனையும் கண்ணி =
சூட்டுகின்ற மாலை; வாசகம் செய்மாலை = ஆழ்வாருடைய
சொற்களாலாகிய மாலை; வான்பட்டாடை = சிறந்த பட்டாடை;
தேசமான = ஒளிபொருந்திய)
பக்தியோகத்தால் இறைவனுக்கும் அடியார்க்கும் இடையில்
அறுபடாத தைலதாரை (எண்ணெய் ஒழுக்கு) போன்ற தொடர்பு
ஏற்படுகின்றது. நாளாகநாளாக இந்நிலையில் ஒரு புதிய ஆற்றல்
தோன்றுகின்றது. அதனால் சீவான்மா பரமான்மாவுடன்
கலக்கின்றது. அப்பொழுது அது கடலிற் கிடக்கும் கடற்பஞ்சு
போன்ற நிலையினை அடைகின்றது. |