|
குறில், நெடில், ஆய்தம், ஒற்று, அளபெடை, குறுக்கம் என
ஆறு வகைகளில் எழுத்துக் குறித்துத் தெரிந்து கொள்ளுதல்
போதுமானது.
குறில் என்பது குறுகி ஒலிக்கும் எழுத்தாகும். இதற்குரிய
மாத்திரை (ஒலிக்கும் கால அளவு) 1 ஆகும். அ, இ, உ, எ, ஒ
என்னும் ஐந்தும் உயிர்க்குறில்களாகும். க, கி, கு, கெ, கொ
என்பன முதலாகிய தொண்ணூறும் (5x18=90) உயிர்மெய்க்
குறில்களாகும்.
நெடில் என்பது 2 மாத்திரையுடைய எழுத்தாகும். ஆ, ஈ,
ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் உயிர் நெடில்களாகும். கா, கீ,
கூ, கே, கை, கோ, கௌ என்பன முதலாகிய நூற்றிருபத்தாறும்
(7x18=126) உயிர் மெய் நெடில்களாகும்.
ஆய்த எழுத்தும், ‘க்’ முதல் ‘ன்’ வரையிலான பதினெட்டு
மெய்யும் ஆகிய பத்தொன்பதும் ‘ஒற்று’ எனப்படும். இவை
அரைமாத்திரை உடையனவாகும். சில இடங்களில் ஆய்தம் ஒரு
மாத்திரையும் பெறும்.
அளபெடை என்பது, ஓரெழுத்து தனக்குரிய
மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதாகும். நெடில் தனக்குரிய
மாத்திரையிலிருந்து நீண்டு 3 அல்லது அதற்கு மேற்பட்ட
மாத்திரையளவு நீண்டொலிப்பது ‘உயிரளபெடை’ எனப்படும்.
உயிர் நெடிலாயினும், உயிர்மெய் நெடிலாயினும் அவை
நீண்டொலிப்பதற்கு அடையாளமாக அந்தந்த நெடிலுக்கு
இனமான உயிர்க்குறில் அருகில் எழுதப்படும். ஐ, ஒள என்னும்
நெடில்களுக்கு முறையே இ, உ என்பன இனமாக அமையும்.
இவ்வாறே, ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள், ஃ ஆகிய
பதினொன்றும் தமக்குரிய மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பது,
‘ஒற்றளபெடை’ எனப்படும். இவற்றிற்கு அடையாளமாக அதே
ஒற்றெழுத்து அருகில் எழுதப் பெறும்.
குறுக்கம் என்பது, ஓரெழுத்து தனக்குரிய மாத்திரையிலிருந்து
குறுகி ஒலிப்பதாகும். உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து
குறுகி ஒலிப்பது குற்றியலுகரம் எனப்படும். தனிக்குறில் தவிர்த்து,
பிற எழுத்துகளை அடுத்து ஒரு சொல்லின் இறுதியில் வரும்
வல்லின மெய்களின் மேல் ஏறிவரும் உகரம் குற்றியலுகரமாகும்.
குற்றியலுகரச் சொற்களையடுத்து யகர வரிசைச் சொற்கள் வந்து
புணரும் போது குற்றியலுகரம், குற்றியலிகரமாக மாறும். அதுவும்,
தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறுகி ஒலிக்கும். ஐகாரம்,
மொழி முதலில் நெடிலாகவும், இடையிலும் இறுதியிலும்
குறிலாகவும் கருதப்பெறும். |