6.2 பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைநடை

17, 18ஆம் நூற்றாண்டுகளில் மேலை நாடுகளிலிருந்து
சமயம் பரப்ப வந்த துறவியர் தமிழ்க் கற்றனர்
; உரைநடை
நூல்களைப் படைத்தனர். பேச்சு மொழியிலும், ஆங்கிலக்
கலப்பிலும் அந்த உரைநடைகள் அமைந்தன. பத்தொன்பதாம்
நூற்றாண்டிலும் கிறித்துவ சமய உரைநடை நூல்களே அதிகம்
வெளியாயின. முகம்மதியர்     நூல்கள்     பெரும்பாலும்
மொழிபெயர்ப்பாகவே அமைந்தன. ஆங்கில அரசு 1835இல்
அச்சகம் வைத்துக் கொள்ளும் அனுமதியை இந்தியர்களுக்குத்
தந்தது. உரைநடை உற்சாகம் பெற்றுப் புதிய பாதை கண்டது.
ஆனாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை
கூட பனையோலைகளும், அச்சு நூல்களும் ஒரே சமயத்தில்
நிலவி வந்தன. தமிழறிஞர்கள் பலர் உரைநடையின் பக்கம்
கவனத்தைத் திருப்பினர். அவர்களில் சிலரின் உரைநடைப்
போக்கினைக் காண்போம்.

6.2.1 ஆறுமுக நாவலர்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் தமிழ்
உரைநடை வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர். உரைநடையின்
தந்தை
என்றும் பாராட்டப்படுபவர். நாவலர் காலம் கிறித்துவ
சமயப் பிரச்சாரம் எழுச்சி பெற்றிருந்த காலம். அதனால்
சைவரான நாவலர் தம் சமயமான சைவத்தைப் பரப்பப்
பொதுமக்களுக்கும் புரியும் எளிய நடையில் உரைநடை
படைத்தார்.

பெரியபுராண வசனம், திருவிளையாடற்புராண வசனம்,
பாலபாடம், நன்னூற் காண்டிகை உரை, சைவசமய
நெறியுரை
எனப் பல நூல்களை அவர் படைத்தார்.

இலக்கணப் பிழை இல்லாமல், சிறு சிறு வாக்கியங்களில்
எழுதுதல்
; மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளும்படி எழுதுதல்
என்பது நாவலருக்குக் கைவந்த கலை.

“சிறு சிறு வாக்கியங்களின் திட்பம், அவை கோவையாகப்
பத்தி பத்தியாக ஒற்றுமை நயம்பட்டு விளங்கும் நுட்பம்,
கட்டுரை முழுவதும் ஒரு பொருளாய் அமையும் இனிமை,
கருத்தின் தெளிவு, சொற்களின் எளிமை, அழகு இலக்கண
நயம் - இவை எல்லாம் இவரது உரைநடையில் காணலாம்’
எனத் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தம்முடைய நீங்களும்
சுவையுங்கள்
என்ற நூலில் பாராட்டுவார்.

நாவலரின் எளிய நடைக்குச் சான்றாகக் கீழ்க்காணும் பகுதி
அமைகின்றது.

“சில நாள் கழிந்த பின், சோழராசன், வரகுண
பாண்டியனோடு போர் செய்யக் கருதித் தன் சேனையோடு
வந்து, மதுரையை அணுகினான். வரகுண பாண்டியன்,
அஃதறிந்து, தன் சேனையோடு எதிர்ந்து பொருதான்.”

6.2.2 இராமலிங்க சுவாமிகள்

இவர் தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள மருதூரில்
பிறந்தவர். சிறுவயதில் சென்னையில் வசித்தார். வடலூருக்கு
அருகே மேட்டுக் குப்பத்தில் வாழ்ந்து, சமரச சன்மார்க்க
நெறியைப் பரப்பினார். மனுமுறை கண்ட வாசகம்,
சீவகாருணிய ஒழுக்கம், உண்மை நெறி
முதலிய உரைநடை
நூல்களை எழுதினார். இராமலிங்க சுவாமிகள் கையாண்ட
உரைநடை, இலக்கண வரம்புடையது. மேலும் கற்றோர்
விரும்பக் கூடிய சொற்களிலேயே எழுதப்பட்டிருந்தது.
அவருடைய வாக்கியங்கள் பல பக்கங்களுக்கு நீண்டு செல்லும்
தன்மையுடையது. ஆகவே “பொது மக்களுக்குப் பெரிதும்
பயன்படக் கூடியது அல்ல” என்பார் வி.செல்வநாயகம்.

6.2.3 வீராசாமி செட்டியார்

வீராசாமி செட்டியார் இயற்றிய விநோத ரசமஞ்சரி
சிறந்த உரைநடை     இலக்கியமாகக் கருதப்படுகின்றது.
வாக்கியங்களை நீண்டதாக எழுதியிருந்தாலும், அவை
படிப்போருக்கு     அலுப்புத்     தோன்றாத வகையில்
அமைந்துள்ளன. உலக வழக்கில் உள்ள சொற்களையும்,
மக்களிடையே சாதாரணமாக வழங்கும் பழமொழிகளையும்,
உவமைகளையும் தம் உரைநடையில் வீராசாமி செட்டியார்
பயன்படுத்தியுள்ளார். இவருடைய நடையைக் கதம்ப நடை
என்றும் கூறுவர். தெலுங்கு, வடமொழிச் சொற்கள்
இவருடைய உரைநடையில் கலந்துள்ளன.

“அக்காலத்தரசர்களிற் சிலர் நிறை கல்வி கற்காமலும்,
அரசியற்று முறைமை இன்னதென்று குறியாமலும் சற்சன
சகவாச செய்யாமலும், ‘துரியோதனன் குடிக்குச் சகுனியைப்
போல’க் கிருத்திரம குணமுள்ளவர்களையும், ‘குதிரை பிடிக்கச்
சம்மட்டி அடிக்கக் கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்ன’த்
தக்கவர்களையும்...’ என்னும் பகுதி வீராசாமி செட்டியார்
உரைநடைத் தன்மைக்கு எடுத்துக் காட்டாக அமைகின்றது.

6.2.4 பிறர் உரைநடை

19ஆம் நூற்றாண்டில் எழுந்த உரைநடை நூல்களுள்
வித்துவான் தாண்டவராய முதலியார் மொழி பெயர்த்து
இயற்றிய பஞ்ச தந்திரம் குறிப்பிடத்தக்கது. அந்நூல்
மாணவர்கள் படித்தறியும்படித் தெளிவாக எழுதப்பட்டது.

யாழ்ப்பாணம் அ.சதாசிவம் பிள்ளை பாவலர் சரித்திர
தீபகம், வானசாஸ்திரம், சாதாரண இதிகாசம்
போன்ற
நூல்களை எழுதியுள்ளார். அவர் யாழ்ப்பாணத்துப் பேச்சு
வழக்குச் சொற்களைத் தமது உரைநடையில் கலந்து எழுதினார்.