3.2 மொழிநடை அமைப்பு

    ஒவ்வொரு பத்திரிகையின் மொழிநடை அமைப்பும்
ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்பதில்லை. செய்திகளை
வாசகர்களுக்கு அறிவிக்கிற     பணியே     இதழ்களுக்கு
முக்கியமான பணியாகும். அதனால், அவர்கள் எளிதில்
புரிந்துகொள்ளும்     வகையில் இதழ்களின் மொழிநடை
அமைப்பு இருக்க வேண்டும். எளிமை, இனிமை, சுருக்கம்,
செறிவு     உள்ளதாக     நடை இருக்க வேண்டும்.
செய்தி, கட்டுரை, தலையங்கம் ஆகியவற்றைப் படிப்பவர் இதை
இவர்தாம் எழுதியிருப்பார் என்று மொழிநடையைக்
கொண்டு தீர்மானிக்க முடிந்தால், அதை எழுதியவர்
வெற்றியடைந்துவிட்டார் எனலாம்.

3.2.1 பிழையில்லாத மொழிநடை அமைப்பு

    இதழ்களின்     மொழிநடை     எழுத்துப் பிழைகள்,
இலக்கணப் பிழைகள் இல்லாததாக இருக்க வேண்டும்.
தொடர் அமைப்புச் சரியானதாக இருப்பது அவசியம்,
தவறான தொடர் அமைப்புகள் தவறான பொருளைத்
தந்துவிடும். எனவே, நடை அமைப்புத் தெளிவாக இருத்தல்
அவசியம். சொல்லுகின்ற கருத்துகளைச் சுற்றி வளைத்துக்
கூறாமல் நேரடியாகச் சொன்னால் வாசகர்கள் செய்தியின்
உட்பொருளை முழுமையாகப் புரிந்துகொள்வர்.

    கருத்துகளைச் சிறுசிறு தொடர்களாகச் சொல்லுதல்
சிறந்தது. நீண்ட தொடர்களாக எழுதும் பொழுது இலக்கணப்
பிழைகள்     ஏற்படலாம்.     வாசகருக்குச்     செய்தியை
உள்வாங்குதலில் சிரமம் நேரலாம். இன்றைய அவசர உலகில்
இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் வாசகர் செய்திகளை
விரைவாகப் படிக்க வேண்டிய நிலை உள்ளது. நீண்ட
தொடரமைப்பு வாசகருக்குப் படிக்கத் தடையாக இருக்கும்.
புதிய சொற்களைப் பயன்படுத்தும் பொழுது அவற்றிற்குச்
சரியான விளக்கம் தரவேண்டும். மொழித் தெளிவிற்காகக்
கால் புள்ளி, அரைப் புள்ளி போன்ற நிறுத்தற் குறிகளைச்
சரியான இடத்தில் கொடுக்க வேண்டும். இருபொருள்படும்
சொற்களைப் பயன்படுத்துவதைத்     தவிர்ப்பது நல்லது.
வேற்றுமை உருபுகளைத் தக்க இடங்களில் பயன்படுத்த
வேண்டும்.

3.2.2 துறை சார்ந்த மொழிநடை அமைப்பு

    முன்பெல்லாம் இதழியலாளர் எல்லாத் துறைகளைப்
பற்றிய செய்திகளையும் எழுத வேண்டும். ஆனால், இப்போது
நிலைமை அப்படி இல்லை. ஒவ்வொரு துறை பற்றிய
(வாணிகம், பொருளாதாரம்,     அரசியல், விளையாட்டு,
திரைப்படம், நாட்டு நடப்பு     போன்ற) செய்திகளை
எழுதுவதற்கும்     தனித்தனியாக     இதழாளர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால், ஒரு குறிப்பிட்டத் துறை
சார்ந்த செய்தியை அத்துறையில் நன்கு தேர்ச்சிபெற்ற
துணையாசிரியர் எழுதுவதால், தமக்கென்று ஒரு தனித்த
எழுத்துப் பாணியையும் வளர்த்துக் கொள்கின்றனர். இந்த
வளர்ச்சி பெறுவதற்குத் துறையில் தேர்ந்த அறிவினைப்
பெறுவதோடு, வைரத்தைப் பட்டை தீட்டுவது போல்
மொழிநடையைச்     சிறப்பாக அமைக்கப் பயிற்சிபெற
வேண்டும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.

தமிழ் இதழ்களின் மொழிநடையில் பெரிய
மாற்றத்தை ஏற்படுத்தியவர் யார்?

விடை
2.

திரு.வி.க. நடத்திய பத்திரிகைகள் யாவை?

விடை
3.

தமிழில் மொழிநடை நூலை உருவாக்கியப்
பெருமை பெற்றவர் யார்?

விடை
4.

இதழியல் மொழிநடை எவ்வாறு இருக்க
வேண்டும்?

விடை