5.2 அச்சுக்கலையின் வளர்ச்சி

    அச்சுக்கலை ஐரோப்பியர்களால் நம் நாட்டிற்குக்
கொண்டுவரப்பட்ட பொறியியல் நுட்பமாகும். இந்தியாவிற்கு
முதல் அச்சு இயந்திரம் கி.பி.1550இல்     ஸ்பெயின்
நாட்டிலிருந்து     கோவாவிற்குக்     கொண்டுவரப்பட்டது.
இப்பொறிகளின் மூலம் ஏட்டு வடிவலிருந்த பல இலக்கியங்கள்
நூல் வடிவிற்கு மாற்றப்பட்டன. இந்தியாவில் துணியில்
அச்சடிக்கும் முறை ஏற்கெனவே இருந்தது.

5.2.1 தொடக்கக் காலம்

    சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களின்
சிறப்புகளையும் நிகழ்ச்சிகளையும் கோவில் மதில்களிலும்
கற்பாறைகளிலும் செப்புத் தகடுகளிலும் பொறித்து வைத்தனர்.
பொதுமக்களும் புலவர்களும் தமது எண்ணங்களை ஓலைச்
சுவடிகளில்     எழுதி வைத்தனர். பல்வேறு நிலையில்
எழுதப்பட்ட     எழுத்து வடிவங்களில் இத்தாலியிலிருந்து
கி.பி.1700இல் தமிழ்நாட்டிற்கு வந்த வீரமாமுனிவர் பல
சீர்திருத்தங்களைச்     செய்தார். இவர் தமிழ் எழுத்து
வடிவங்களில் இருந்த மயக்கத்தை நீக்கினார். இதனால் இவர்
‘தமிழ் வரிவடிவின் தந்தை’ என்றழைக்கப்படுகிறார்.

• கோவாவில் அச்சுக்கலை

    தமிழ்நாட்டில்     16ஆம்     நூற்றாண்டிலிருந்துதான்
அச்சுக்கலை உருவாக்கப்பட்டது. ஐரோப்பியக் கிறித்துவர்களே
தமிழ் எழுத்துகளை அச்சில் கொண்டு வரும்வழியைக்
கண்டுபிடித்தனர். இவர்களது மதத்தைப் பரப்ப இக்கலை
அவர்களுக்கு உதவியது. எனவே இக்கலையை வளர்க்க
ஆர்வம் காட்டினர். மேலும் அச்சு இயந்திரங்களை
ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பும்படி கூறினர்.
கி.பி.1556 செப்டம்பர் 6இல் கோவாவிற்கு வந்துசேர்ந்த
போர்ச்சுக்கீசியக் கப்பல் அச்சுப்பொறியையும் அச்சுக்கலை
வல்லுநர்களையும் இந்தியாவிற்குக் கொண்டுவந்தது.

5.2.2 முதல் அச்சகம்

    கொச்சிப் பகுதியில் உள்ள அம்பலக்காட்டில் ஏசு
சபையினரால் மரத்தில் செதுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களைக்
கொண்டு முதலில் தமிழ் நூல் அச்சிடப்பட்டது. மதத்தைப்
பரப்ப வந்த ஜெர்மனியின் சீகன்பால்கு பாதிரியார் 1713இல்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி என்னும் கடற்கரை
நகருக்கு அச்சுப்பொறியை வரவழைத்தார். இதனைக் கொண்டு
முதல்     அச்சுக்கூடம் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது
‘டி நோபிலி அச்சகம்’ என்ற பெயரில் உருவான அந்த
அச்சுக்கூடம் இன்றும் அங்கே செயல்பட்டு வருகின்றது.
சீகன்பால்கு காகித ஆலை ஒன்றையும் தரங்கம்பாடியில்
ஏற்படுத்தினார்.

    ‘முதலில் அச்சேறிய தமிழ்நூல்கள்’ என்னும் கட்டுரையில்
தனிநாயக அடிகள் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
“முதல் அச்சுக்களைத் தமிழில் 1576இல் கோவாவில்
அமைத்தனர். பின்பு 1577இல் கொல்லத்தில் அமைத்தனர்.
கோவாவில் செய்த தமிழ் அச்சுக்கள் சிறந்தவையாய் இல்லை.
அதனால் கொல்லத்தில் புதிதாய் அமைத்தனர். அக்காலக்
கல்வெட்டுக்களுடனும் செப்புத்தகடுகளுடனும் ஒப்பிட்டுப்
பார்க்கும்போது இவற்றின் வடிவம் உறுதியாகவும் அழகாகவும்
இருந்தன” என்கிறார்.

• முன்னோடி

    பொதுவாக, சென்னையிலிருந்தே பல மொழிகளில்
அச்சுக்கலை எழுத்துக்களை உருவாக்கி மும்பை போன்ற
பிறபகுதிகளுக்கு     அனுப்பி     வந்தனர்.     பின்புதான்
அச்சுவார்க்கும் கூடங்கள் ஆங்காங்கே ஏற்பட்டன. எனவே
இந்தியாவின் அச்சுக்கலைத் தோற்றம் தமிழ்நாட்டிலிருந்துதான்
தொடங்கியது என்று கூறலாம். இந்திய மொழிகளில் அச்சு
எழுத்தும் அச்சுப் புத்தகமும் உருவாக்கப்பட்டது தமிழில்தான்
எனலாம்.