1.0 பாட முன்னுரை இன்று நாம் தகவல் சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனித இனம் இதுவரையில் சேகரித்துச் சேமித்து வைத்துள்ள தகவல் மலைபோல் குவிந்து கிடைக்கிறது. தகவல் பெட்டகத்தில் நாள்தோறும் புதுப்புதுத் தகவல்கள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. நவீன தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக ஓரிடத்தில் சேமிக்கப்பட்ட தகவல் மனித சமூகம் முழுமைக்கும் சென்று சேர்வதற்கான ஊடகங்களும் பெருகிக் கிடக்கின்றன. வாழ்க்கையைச் சுமூகமாக நடத்துவதற்குத் தகவல் இன்றியமையாதது ஆகிவிட்டது. அரசாட்சி செவ்வனே நடைபெற தகவல் சேகரிப்பும், சேமிப்பும், செயலாக்கமும் தவிர்க்க முடியாத பணியாகிவிட்டது. வணிகப் போட்டிக்கிடையே ஒரு நிறுவனம் தாக்குப்பிடித்து தன்னிலையைத் தக்கவைத்துக் கொள்ள தகவல் முறைமை கட்டாயத் தேவையாகிவிட்டது. தகவலுக்கு அடிப்படையாக விளங்குபவை தரவுகள்(Data). தரவுகளைச் சேகரித்துச் சேமித்து வைத்து, தரவுச் செயலாக்கத்தினால் (Data Processing) தேவையான தகவல்களைப் பிழிந்து தரும் பணியை தகவல் முறைமை நிறைவேற்றித் தருகிறது. தகவல் முறைமையில் மேற்கொள்ளப்படும் தரவுச் செயலாக்கத்துக்கு வன்பொருளும் (Hardware), மென்பொருளும் (Software), பிணையங்களும் (Networks) இன்றியமையாதவை. இவற்றை இயக்கி வைக்க மனிதர்களும் தேவை என்பதை மறுக்க முடியாது. இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் தகவல் தொடர்பு (Communication) தொழில்நுட்பம் மாபெரும் வளர்ச்சி கண்டது. அதே காலகட்டத்தில் கணினித் தொழில்நுட்பமும் வரலாறு காணாத வளர்ச்சிக் கட்டத்தை எட்டியது. இவ்விரண்டு தொழில்நுட்பங்களும் இணைத்து தகவல் தொழில்நுட்பமாகப் (Information Technology) பரிணமித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் இணையத்தின் வளர்ச்சியோடு இணைந்து தகவல் புரட்சிக்கு (Information Revolution) வித்திட்டுள்ளது. தரவுக்கும் தகவலுக்கும் உள்ள வேறுபாட்டையும், தகவலின் இன்றியமையாத பங்களிப்பையும், தகவல் முறைமையின் கட்டமைப்புக் கூறுகளையும், தகவல் முறைமையின் வகைகளையும் இப்பாடத்தில் விரிவாக அறிந்துகொள்ள முடியும். |