1.3 முறைமை என்பது என்ன?

தகவல் முறைமை (Information System) பற்றிப் படிப்பதற்கு முன்பாக முறைமை (System) என்கிற பொதுவான கருத்துரு (Generic Concept) பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வோம். சில விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாகச் செயல்படும் ஒரு செயல்பாட்டு அமைப்பினை முறைமை என்கிறோம். அண்ட வெளியில் சூரியனை மையமாகக் கொண்டு ஒன்றையொன்று மோதிக் கொள்ளாமல் கோள்கள் சுற்றி வருகின்றன. அந்தக் கோள்களைத் துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன. இந்த அண்டவெளி அமைப்பினை சூரிய முறைமை (Solar System) என்கிறோம். இதுபோல நாம் வாழும் பூமிக் கோளில் இயற்கையில் அமைந்து கிடக்கும் முறைமைகளும் உள்ளன. மனிதனால் உருவாக்கப்பட்ட முறைமைகளும் உள்ளன.

ஒவ்வோர் உயிரினங்களுக்குள்ளும் நுண்ணிய முறைமைகள் செயல்பட்டு வருகின்றன. மனிதனின் உடலுக்குள் சுவாச முறைமையும் (Respiratory System), செமிப்பு முறைமையும் (Digestion System) மனிதனின் நேரடிக் கட்டுப்பாடின்றி எவ்விதச் சிக்கலும் இல்லாமல் தானாகவே மிகவும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை நாமறிவோம். கணினி முறைமை, தகவல் முறைமை, போக்குவரத்து முறைமை, ஆட்சி முறைமை போன்ற எத்தனையோ முறைமைகளோடு மனிதனின் வாழ்க்கை முறைமை நாள்தோறும் இணைந்து, இயைந்து, ஊடாடி, உறவாடி இயங்கிக் கொண்டிருக்கிறது.

இயற்கையில் அமைந்த முறைமை ஆயினும் மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை முறைமைகள் ஆயினும் அவற்றில் சில பொதுவான கட்டமைப்புக் கூறுகளும் சில அடிப்படையான செயல்பாட்டுக் கூறுகளும் அமைந்து கிடப்பதை நம்மால் உணர முடிகிறது. ஒவ்வொரு முறைமையிலும் பல்வேறு செயல்பாட்டுக் கூறுகள் (Functional components) இணைந்து செயல்படுவதைக் காணமுடிகிறது. அவை ஒரு பொது நோக்கத்துக்காக அல்லது ஓர் ஒட்டுமொத்தப் பயன் அல்லது பலனுக்காகச் செயல்படுகின்றன.

மேற்கண்ட விளக்கங்களின் அடிப்படையில் முறைமை என்பதை நாம் இவ்வாறு வரையறுக்கலாம். ஒரு பொதுவான நோக்கம், பயன் அல்லது பலனுக்காக, சில வதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, உள்ளீடுகளைப் பெற்று அவற்றைச் செயலாக்கி வெளியீடுகளை வழங்குகிற, ஒன்றோடொன்று இயைந்து ஊடாடிச் செயல்படக் கூடிய கூறுகளின் ஓர் ஒட்டுமொத்தக் கட்டமைப்பே முறைமை எனப்படுகிறது. முறைமையின் அமைப்புக் கூறுகளையும் அடிப்படைச் செயல்பாடுகளையும் இனிக் காண்போம்.

1.3.1 முறைமையின் கூறுகள்

முறைமை என்பது உள்ளீடுகளை ஏற்கிறது. அவற்றை செயலாக்கத்துக்கு உட்படுத்துகிறது. நிர்ணயிக்கப்பட்ட வெளியீடுகளைத் தருகிறது. ஆக, திரு முறைமையின் மூன்று முக்கிய அமைப்புக் கூறுகளாக விளங்குபவை:

1.
உள்ளீடு (Input).
2.
செயலாக்கம் (Process).
3.
வெளியீடு (Output).
4.
மதிப்பீட்டு அமைப்பு (Feedback).
5.
கட்டுப்பாட்டு அமைப்பு (Control).

வெளியீடுகள் முன் வரையறுக்கப்பட்ட தரப்பாடுகளோடு ஒப்பிடப்படுகின்றன. வெளியீடுகளின் தரத்தில் வேறுபாடு இருப்பின் அத்தகவல் கட்டுப்பாட்டு அமைப்புக்குத் தரப்படும். இத்தகவல் மதிப்பீடு (Feed back) எனப்படுகிறது. இத்தகவலின் அடிப்படையில், உள்ளீடுகளில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கலாம். அல்லது செயலாக்க முறையில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கலாம். இப்பணியைக் கட்டுப்பாட்டு அமைப்பு கவனித்துக் கொள்கிறது. ஆக, மூன்று முக்கிய அமைப்புக் கூறுகள் தவிர கீழ்க்காணும் இரு கூறுகளும் முறைமையின் இயக்கத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன.

ஓர் எளிய எடுத்துக்காட்டுப் பார்ப்போம். அரிசி, கோதுமை போன்ற தானியங்களை அரைக்கும் மாவரைக்கும் எந்திரத்தை எடுத்துக் கொள்வோம். பெரிய புனல்போன்ற அமைப்பில் அரிசி அல்லது கோதுமையைக் கொட்டுகிறோம். தானியம் அரைக்கப்பட்டு ஒரு குழாய் வழியாக மாவு வெளியே கொட்டுகிறது. எந்திர இயக்குநர் மாவைத் தொட்டுப் பார்க்கிறார். சரியாக அரைபடவில்லையெனில் அதனை மீண்டும் உள்ளே கொட்டுகிறார். அரைக்கும் பகுதியில் பொறி அமைப்பில் மாற்றம் செய்கிறார். சரியான பதத்தில் மாவு அரைபடுமாறு பார்த்துக் கொள்கிறார். இதுபோலத்தான் ஒவ்வொரு முறைமையும் செயல்படுகின்றது. நம் உடலில் இயங்கும் சுவாச முறைமையும் சேமிப்பு முறைமையும் செயல்படும் விதத்தைச் சற்றே எண்ணிப் பாருங்கள். முறைமைகளின் பொதுவான இயக்கமும் செயல்பாடும் புரியத் தொடங்கும்.

1.3.2 முறைமையின் இயங்கு தளம்

வெளி உலகோடு தொடர்பின்றி தனித்து இயங்கும் முறைமைகள் பெரும்பாலும் இருக்க முடியாது. சுற்றுச் சூழல் (Environment)அல்லது பிற முறைமைகளோடு உறவின்றிச் செயல்படும் முறைமைகள் மிகவும் அரிதாகும். ஆனாலும் ஒவ்வொரு முறைமையும் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள்ளேதான் செயல்படுகின்றது. பெரும்பாலான முறைமைகளுக்கு அவற்றின் எல்லைகள் துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஒரு முறைமையானது தன் எல்லையைத் தாண்டி பிற முறைமைகள் அல்லது சுற்றுச்சூழலோடு உறவுகொள்ள இடைமுகங்கள் உதவுகின்றன. இடைமுகங்கள் (Interfaces) முன்வரையறுக்கப்பட்டவையாய் இருக்கலாம். தளத்தில் அவ்வப்போது தேர்ந்தெடுத்துக் கொள்ளப்படலாம். ஆக, ஒரு முறைமை இயங்கும் தளத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கூறுகள் இவை:

1.
முறைமை எல்லைகள் (System boundaries).
2.
பிற முறைமைகள் (Other Systems).
3.
சுற்றுச் சூழல் (Environment).
4.
இடைமுகங்கள் (Interfaces).

பொருள் உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்கூடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மூலப்பொருட்கள் (Raw materials) உள்ளீடாகப் பயன்படுத்தப்படுகின்றன. வரையறுக்கப்பட்ட வழிமுறைகளின் பொருள் உற்பத்தி நடைபெறுகிறது. முடிக்கப்பட்ட செய்பொருட்கள் (Finished Products) விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. நிதிப் பரிமாற்றம், வழங்கீட்டாளர், விற்பனைச் சந்தை, சுங்கம் / தீர்வை / வரி, அரசின் சட்டதிட்டங்கள் இவற்றோடு தொடர்பின்றி தொழிலக உற்பத்தியும், விற்பனையும் நடைபெற இயலாது. வழங்கீட்டாளர்கள் (Suppliers), விற்பனையாளர்கள் (Vendors), கணக்காளர்கள், தணிக்கையாளர்கள் போன்றோர் பிற முறைமைகள் /சுற்றுச்சூழலோடு தொடர்பு ஏற்படுத்தித் தரும் இடைமுகங்களாகச் செயல்படுகின்றனர்.

ஒரு பொதுவான முறைமையின் அனைத்துக் கூறுகளையும் கீழே உள்ளவாறு உருவகிக்கலாம்:

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
மனித குலம் கடந்துவந்த மூன்று சகாப்தங்கள் எவை?
2.
மனித வாழ்க்கைக்குத் தகவல் எவ்வாறு பயன்படுகிறது?
3.
மின்-அரசாண்மைக்குத் தகவல் எவ்வாறு பயன்படுகிறது?
4.
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தகவல் எவ்வாறு பயன்படுகிறது?
5.
தகவல் தொழில்நுட்பம் எவ்வாறு உருவானது?
6.
தரவு – தகவல் வேறுபடுத்திக் காட்டுக.
7.
தகவல் – அறிவு வேறுபடுத்திக் காட்டுக.
8.
முறைமை (System) என்பதை வரையறுக்கவும்.
9.
முறைமையின் முக்கிய ஐந்து அமைப்புக் கூறுகளைப் பட்டியலிடுக.
10.
முறைமையின் இயங்கு தளக்கூறுகளை சுருக்கமாய்க் குறிப்பிடுக.