1.7 தொகுப்புரை

  • மனிதகுலம் வேளாண் சகாப்தம், தொழில் சகாப்தத்தைக் கடந்து தகவல் சகாப்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
  • தகவலின்றி மனிதன் வாழமுடியாது. வாழ்க்கைக்கும், அரசாட்சிக்கும் மற்றும் மனிதனின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தகவலே ஆதாரம்.
  • தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களும், கணினித் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சிகர வளர்ச்சியும் தகவலின் பரவலுக்குக் காரணமாய் அமைந்தன. தகவல் தொழில்நுட்பம் என்கிற புதிய தொழில்நுட்பமும் பிறந்தது.
  • தரவு-தகவல்-அறிவு ஆகியன ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்று மற்றொன்றாய்ப் பரிணமிப்பவை. இச் சங்கலித் தொடர்ச்சியில் ஞானம் உச்சநிலையானது.
  • தரவுகளின் சாரம் தகவலாகவும், தகவல்களின் பிழிவு அறிவாகவும் வெளிப்படுகிறது.
  • தரவுகள் உதிரியானவை. சிதறிக் கிடப்பவை தகவல்கள் சாரமானவை; குறிப்பானவை.
  • தகவல் பாய்வு நிலையில் உள்ளது நிலையற்றது; நீடித்தில்லாதது; குறிப்பானது; அறிவு இருப்பால் நீடித்திருப்பது; பொதுவானது.
  • ஒரு பொதுவான நோக்கம், பயன் அல்லது பலனுக்காக, சில விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு உள்ளீடுகளைப் பெற்று, செயலாக்கி, வெளியீடுகளை வழங்குகின்ற – ஒன்றுக்கொள்று இயைந்து, ஊடாடிச் செயல்படக்கூடிய – அமைப்புக் கூறுகளின் ஓர் ஒட்டுமொத்தக் கட்டமைப்பே முறைமை எனப்படுகிறது.
  • முறைமையின் முக்கிய அமைப்புக் கூறுகள் உள்ளீடு, செயலாக்கம், வெளியீடு, மதிப்பீடும், கட்டுப்பாடும் முறைமையின் துணை உறுப்புகளாகும்.
  • முறைமைகளுக்கு எல்லைகள் உண்டு. பிறமுறைமைகளோடும் சுற்றுச்சூழலோடு உறவுகொண்டு இயங்குகின்றன. இந்த உறவுக்கு இடைமுகங்கள் உதவுகின்றன.
  • தகவல் முறைமை என்பது மக்கள், வன்பொருள், மென்பொருள், தரவுகள், பிணையங்கள் ஆகியவற்றின் உறுதுணையோடு செயல்படுகின்றது.
  • தரவுகளின் உள்ளீடு, தரவுச் செயலாக்கம், தகவல்களின் வெளியீடு, தரவுச் சேமிப்பு, முறைமைக் கட்டுப்பாடு ஆகியவை தகவல் முறைமையின் செயல்பாடாகும்.
  • தகவல் முறைமைகள் பல்வேறு வகைப்பட்டவை. செயல்பாட்டுத் தகவல் முறைமைகள், மேலாண்மைத் தகவல் முறைமைகள் என வகைப்படுத்தலாம்.
  • வேளாண்மை, மருத்துவம், வானிலை, விண்வெளி, போக்குவரத்து, சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் வல்லுநர் முறைமைகள் பயன்படுகின்றன. தகவல் முறைமையின் உச்சகட்ட வடிவம் செயற்கை நுண்ணறிவு முறைமை ஆகும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
தகவல் முறைமையின் ஐந்து கூறுகள் எவை?
2.
தகவல் முறைமையின் அங்கமாக விளங்கும் மக்களை வகைப்படுத்திக் காட்டுக.
3.
தகவல் முறைமையில் பயன்படுத்தப்படும் வன்பொருள்கள் எவை?
4.
தகவல் முறைமையில் எப்படிப்பட்ட தரவுகள் கையாளப்படுகின்றன?
5.
தரவுச் செயலாக்கம் என்பது என்ன?
6.
மேலாண்மைத் தகவல் முறைமைகளின் பயன்பாடு என்ன?
7.
வல்லுநர் முறைமை பற்றிச் சிறு குறிப்பு வரைக.
8.
செயற்கை நுண்ணறிவு முறைமை என்பது என்ன?