2.2 தகவல் கட்டுமானத்தின் தேவை

தகவல் கட்டுமானம் என்பது அண்மைக் காலத்தில் உருவான கருத்துரு ஆகும். மிகக் குறுகிய காலத்திலேயே அதிக முக்கியத்துவம் பெற்றுவிட்டது எனலாம். அனைத்துத் துறைகளிலும் கணிப்பொறியின் பயன்பாடும், உலகையே உள்ளங்கைக்குள் கொண்டுவந்து நிறுத்தும் இணையத்தின் பங்களிப்பும், இன்றைய தகவல் தொழில்நுட்பத் துறையின் மாபெரும் வளர்ச்சியுமே இதற்கான காரணம் எனலாம். இன்றைய கால கட்டத்தில் தகவல் கட்டுமானத்தின் தேவைபற்றி இப்பாடப் பிரிவில் காண்போம்.

2.2.1 தகவல் சுனாமி

‘தகவல் கட்டுமானிகள் - ஓர் அறிமுகம்’ என்னும் நூலில் உர்மன் அவர்கள் எழுதியுள்ள கருத்துகள் இங்கு கவனிக்கத் தக்கன. “நவீன உலகின் கடற்கரைகளைத் தரவுகளின் சுனாமி (Tsunami of Data) தாக்குகிறது. பிட்டுகள் (Bits) பைட்டுகளில் (Bytes) ஆன தரவுகள் ஆழிப் பேரலைகளாய் வந்து நம்மை மூழ்கடிக்கின்றன. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, ஒழுங்கமைக்கப்படாத, கட்டுப்பாடில்லாத, ஒருங்கிணைவற்ற தரவுகள் நாள்தோறும் ஏராளமாய் அதிவேகமாக வந்து குவிகின்றன. ஓர் இரவுக்குள் அவை இரண்டு மடங்காய் வளர்கின்றன. மின்காந்த நாடாக்களிலும் காந்த வட்டுகளிலும் தாள்களிலும் அவை சேமிக்கப்படுகின்றன. அரசு அலுவலர்களும் வணிகத்துறையினரும் மற்றும் வரைகலை வடிவமைப்பாளர்களும் என்ன செய்வதென்று புரியாமல் தகவல் சுனாமியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்” என்று உர்மன் எழுதுகிறார்.

அவர் இதை எழுதிச் சிலகாலம் ஆகிவிட்டது. சுனாமியின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை இப்போது நாம் அனுபவ பூர்வமாக நன்றாகவே உணர்ந்துள்ளோம். இன்றைக்கு இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல் குவியலைக் காணும்போது உர்மனின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை என்பது புலனாகும். இந்தத் தகவல் சுனாமியை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

2.2.2 தகவல் நுகர்வோரின் தேவைகள்

ஒழுங்கமைப்பின்றிக் கொட்டிக் கிடக்கும் தரவுக் குவியலால் எவருக்கும் பயனில்லை. தரவுகளைப் பிழிந்து தகவலைப் பிரித்தெடுக்க வேண்டும். பிரித்தெடுத்த தகவல்களை வகைப்படுத்தி ஒழுங்கமைக்க வேண்டும். நுகர்வோரின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் சரியான வடிவமைப்பில் தகவலை வழங்க வேண்டும்.

தகவல் தேடுவோர் பல்வகையினர். ஏற்கெனவே தெரிந்த ஒன்றிலிருந்து தெரியாத ஒன்றைப் புரிந்துகொள்ள முயல்வோர்; அறிவை வளர்த்துக்கொள்ளப் புதிது புதிதாய் அறிந்துகொள்ள விழைவோர்; அப்போதைய சிக்கலுக்கு அவசரமாய் விடைகாணத் தேடுவோர்; பொழுதுபோக்காய்ப் புரட்டிப் பார்ப்போர் - இப்படிப் பலதரத்தினரும் தகவல் தேடலில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அனைவரும் பயன்பெறத்தக்க வகையில் சரியான ஒழுங்கமைப்பில் தகவலை வழங்க வேண்டியது தகவலை வழங்குவோரின் தலையாய பொறுப்பாகும்.

2.2.3 வரைகலை வடிவாக்கம் (Graphics Design)

சொற்களைவிடப் படங்கள் சக்தி வாய்ந்தவை. பக்கம் பக்கமாய் எழுதி விளக்குவதைவிட ஒரு படத்தின் மூலம் எளிதாய் விளக்கிவிட முடியும். ஒரு பெரிய அட்டவணையில் தரவுகளை நிரப்பி விளக்கும் ஒரு கருத்தை ஒரு வரைபடத்தின் மூலம் மிக எளிதாய் உணர்த்திவிட முடியும்,

மின்சார ரயிலில் பெண்களுக்குத் தனிப்பெட்டி உண்டு. அதைக் குறிக்க அப்பெட்டியில் பெண்ணின் படத்தை வரைந்திருப்பர். அதே போலக் கழிப்பறைகளில் ஆண், பெண் படங்களைக் காணலாம். பெரும்பாலான மக்கள் படிக்காதவர்கள் என்பதற்காகவா இவ்வாறு படங்கள் வரைந்துள்ளார்கள்? இல்லை. படித்த மக்களாயினும் அவசரமான வேளைகளில் எழுத்துகளைவிடப் படமே மூளைக்குக் கருத்தை உடனே உணர்த்தும்.

தகவல் வழங்கலில் படங்கள் (Pictures), படிமங்கள் (Images), வரைபடங்கள் (Graphs), நிரல்படங்கள் (Charts), வரைகலை (Graphics) ஆகியவை இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. “ஒரு சிக்கலான சூழ்நிலையில், கிடைக்கும் தகவல் குவியலிலிருந்து சாரங்களைப் பிழிந்தெடுத்து, அச்சாரங்களைப் பயனாளர் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக அழகியல் வெளிப்பாட்டோடு வழங்க வேண்டியது தகவல் கட்டுமானியின் கடமை” என உர்மன் வலியுறுத்துகிறார். அவரே ஓர் ஓவியக் கலைஞராகவும் சிறந்த வரைகலை வடிவாக்கக் கலைஞராகவும் இருந்த காரணத்தால் தன் தகவல் வெளிப்பாடுகளில் வரைகலையின் வல்லமையை உணர்த்தியுள்ளார்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
கட்டுமானம் (Architect) என்ற சொல் எங்கெல்லாம் பயன்படுத்தப் படுகிறது?
2.
தகவல் கட்டுமானம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?
3.
தகவல் கட்டுமானம் என்னும் கருத்துருவைப் பின்னாளில் வளர்த்தெடுத்தவர் யாவர்?
4.
தகவல் கட்டுமானத்தைக் கட்டடக் கட்டுமானத்தோடு ஒப்பிடுக.
5.
தகவல் கட்டுமானி என்பவர் யார்?
6.
தகவல் கட்டுமானம் என்னும் கருத்துரு தற்போது முக்கியத்துவம் பெறக் காரணம் என்ன?
7.
தகவல் சுனாமி பற்றி உர்மன் கூறியவற்றை விளக்குக.
8.
தகவல் தேடுவோர் எப்படிப்பட்டவர்?
9.
சொற்களைவிடப் படங்கள் சக்தி வாய்ந்தவை - விளக்குக.
10.
தகவல் கட்டுமானியின் கடமை என உர்மன் வலயுறுத்திக் கூறுவது யாது?