2.4 வலையக வடிவாக்கம்

‘தகவல் கட்டுமானம்’ என்கிற கருத்துரு இன்றைக்கு இணையத்திலுள்ள வலையகங்களின் வடிவாக்கத்தில்தான் அதிகமாகப் பேசப்படுகிறது. ரோசன்ஃபெல்டும், மார்வல்லியும் ‘வைய விரிவலைக்கான தகவல் கட்டுமானம்’ (Information Architecture for World Wide Web) என்ற தங்கள் நூலில், ஒரு வலையகத்தில் எவ்வாறு தகவலை வழங்குவது, அந்த வலையகத்தின் பக்கங்களுக்கிடையேயான தொடர்புகளை எப்படி அமைப்பது, பார்வையாளர்கள் பக்கங்களுக்கிடையே தத்தம் போக்கில் உலா வர எவ்வாறு அனுமதிப்பது அல்லது நெறிப்படுத்துவது என்பதைப் பற்றியெல்லாம் மிக விரிவாக விளக்கியுள்ளனர். முதலில் வைய விரிவலை, வலையகங்கள் மற்றும் மீத்தொடுப்புகள் பற்றிச் சில பொதுவான தகவல்களை அறிந்துகொண்டபின் வலையக வடிவாக்கத்தில் தகவல் கட்டுமானம் பற்றி விரிவாகக் காண்போம்.

2.4.1 வைய விரிவலையும் வலையகங்களும்

இணையம் என்பது ‘பிணையங்களின் பிணையம்’ (Network of Networks) எனப்படுகிறது. அதாவது உலகமெங்கிலும் பரவிக் கிடக்கும் பல்லாயிரக் கணக்கான கணிப்பொறிப் பிணையங்கள் ஒன்றாகப் பிணைக்கப்பட்ட ஒரு மாபெரும் பிணையமே இணையம் ஆகும். நாள்தோறும் புதுப்புதுப் பிணையங்கள் இணையத்தில் இணைந்து கொண்டிருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் அவ்வாறு இணைக்கப்பட்ட பிணையமே வைய விரிவலை (World Wide Web) ஆகும்.

வைய விரிவலை என்பது ஒரு சிறப்புவகைப் பிணையம் ஆகும். இவ்வகைப் பிணையத்தில் பிணைக்கப்பட்ட கணிப்பொறிகளில் ‘மீவுரைக் குறியிடு மொழியில்’ (Hyper Text Markup Language - HTTM) உருவாக்கப்பட்ட ஆவணங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றும் மீத்தொடுப்புகளால் (Hyper Links) தொடர்புபடுத்தப் பட்டிருக்கும். ஓர் ஆவணத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போதே அதிலுள்ள ஒரு மீத்தொடுப்பைச் சுட்டியால் சொடுக்கி, தொடர்புடைய வேறோர் ஆவணத்துக்குத் தாவ முடியும்.

ஒரு காலகட்டத்தில் இணையத்தின் ஓர் அங்கமாக விளங்கிய வைய விரிவலை இன்றைக்கு இணையம் முழுமையையும் ஆட்கொண்டு விட்டது. இணையம் முழுமையுமே வைய விரிவலைப் பிணையமாக மாறிவிட்டது. அதாவது இணையத்தில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் மீத்தொடுப்புகளைக் கொண்ட ஆவணங்களே. ஆக, இன்றைக்கு இணையம் என்பதும் வைய விரிவலை என்பதும் ஒருபொருட் பன்மொழிச் சொற்களாகிவிட்டன.

அரசுத் துறைகள், அரசுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள், நூலகங்கள், வணிக நிறுவனங்கள் இவையனைத்தும் தமது பிணையங்களை இணையத்தில் பிணைத்துள்ளன. எனவே உலகெங்குமுள்ள மக்கள் இணையத்தின் வழியாகப் பல்வேறு தகவல்களைப் பெறமுடிகிறது. நிறுவனங்கள் தமது தகவல்களை ‘வலையகம்’ (Website) வடிவில் ஒழுங்கமைத்து வெளியிடுகின்றன.

வலையகம் என்பது மீவுரை ஆவணங்களைக் கொண்ட ஒரு தகவல் திரட்டு எனலாம். இணையத்தில் ஒவ்வொரு வலையகமும் ஒரு வலையக முகவரி மூலம் அடையாளம் காணப்படுகிறது. வலையக முகவரி பெரும்பாலும் www.tamilvu.org என்பதுபோல மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும். www என்பது வைய விரிவலையைக் குறிக்கிறது. tamilvu என்பது Tamil Virtual University என்ற நிறுவனத்தின் சுருக்கப் பெயரைக் குறிக்கிறது. org என்பது நிறுவனத்தின் வகைப்பாட்டைக் குறிக்கிறது. வணிக நோக்கில்லா நிறுவனங்கள் இணையத்தில் org என வகைப்படுத்தப்படுகின்றன. வேறுசில வலையக முகவரிகள் www.bsnl.co.in என்பதுபோல நான்கு பகுதிகளையும் கொண்டிருக்கலாம். bsnl என்பது நிறுவனப் பெயர். co என்பது அது வணிக நிறுவனம் என்பதையும் in என்பது அந்நிறுவனம் இந்தியாவில் உள்ளது என்பதையும் குறிக்கின்றன. ஒரு வலையகத்தின் தகவல்கள் பல கணிப்பொறிகளில் பரவியிருக்க முடியும். ஒரே கணிப்பொறி பல வலையகங்களின் தகவல்களைக் கொண்டிருக்க முடியும்.

2.4.2 வலையகமும் வலைப்பக்கங்களும்

ஒரு வலையகத்தின் தகவல்கள் வலைப்பக்கங்களில் (Web Pages) சேமிக்கப் படுகின்றன. வலைப்பக்கம் என்பது ஒரு மீவுரை ஆவணமாகும் (Hyper Text Document). ஒரு வலையகத்தின் முதல் பக்கம் ‘முகப்புப் பக்கம்’ (Home Page) எனப்படும். இணையத்தில் ஒரு வலையகத்தைப் பயனர் ஒருவர் அணுகும்போது அவ்வலையகத்தின் முகப்புப் பக்கமே முதலில் தோற்றமளிக்கும். எனவே ஒரு வலையகத்துக்கு முகப்புப் பக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த வலையகத்தில் என்னென்ன தகவல்கள் அடங்கியுள்ளன என்பது பயனர் பார்த்த அளவில் மனதில் பதியுமாறு முகப்புப் பக்கம் அமைந்திருக்க வேண்டும்.

ஒரு வலையகத்தின் தகவல்கள் வகைப்படுத்தப்பட்டு வகைப்பாட்டுத் தலைப்புகள் பட்டிப் பட்டியலாக (Menu List) முகப்புப் பக்கத்தில் தோற்றமளிக்கும். ஒவ்வொரு தலைப்புக்குமான தகவல்கள் தனித்தனி வலைப்பக்கங்களில் சேமிக்கப்படிருக்கும். ஒவ்வொரு தலைப்பும் மீத்தொடுப்பாக அமைக்கப்பட்டிருக்கும். சுட்டியைத் தலைப்பின்மீது வைத்தால் சுட்டிக்குறி கையாக மாறும். அப்போது சுட்டியைச் சொடுக்கினால் அத்தலைப்புக்கான வலைப்பக்கம் திறக்கும். இவ்வாறாக அவ்வலை யகத்தில் உள்ள தகவல் அனைத்தையும் மீத்தொடுப்புகள் மூலமாகப் பிற வலைப்பக்கங்களை அணுகிப் படித்துவிட முடியும்.

ஒரு வலைப்பக்கம் என்பது பல்வேறு விவரங்களையும் உள்ளடக்கிய மிகநீண்ட பக்கமாக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட விவரத்தை மட்டுமே சுருக்கமாய்த் தெளிவாக விளக்குமாறு அமைக்கப்பட வேண்டும். வேறு ஒரு கருத்தையும் விளக்க வேண்டிய தேவை ஏற்படின் அதை ஒரு மீத்தொடுப்பு மூலமாக வேறொரு பக்கத்தில் வழங்க வேண்டும். ஒரு வலைப்பக்கத்தை படிப்பவரின் கண்களுக்கு இதமூட்டும் வண்ணத்தில் தேவையான படங்கள் மற்றும் மீத்தொடுப்புகளோடு அமைக்க வேண்டும்.

ஒரு வலைப்பக்கத்தில் உள்ள பட்டித் தேர்வு மட்டுமின்றி, ஒரு சின்னம் (Icon) அல்லது ஒரு படம் (Picture or Image) மீத்தொடுப்பாக இருக்க முடியும். ஒரு அச்சுப்பொறிச் சின்னம் மீது சொடுக்கினால் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பக்கம் அச்சிடப்படுமாறு செய்யலாம். சிறிய வீடுபோன்ற சின்னத்தைச் சொடுக்கினால் முகப்புப் பக்கத்திற்கு இட்டுச் செல்லுமாறும், ஒரு அஞ்சலுரைச் சின்னத்தின்மீது சொடுக்கினால் மின்னஞ்சல் பக்கம் தோன்றுமாறும் மீத்தொடுப்புகளை அமைக்க முடியும். அதுமட்டுமின்றி, ஓர் ஆவணத்தில் உள்ள ஒரு சொல்லைக்கூட மீத்தொடுப் பாகப் பயன்படுத்த முடியும். ஒரு வலைப்பக்க ஆவணத்தில், “இப்போது சங்க இலக்கியங்கள் குறுவட்டுகளில் பதியப்பட்டுக் கடைகளில் விற்கப்படுகின்றன” என இடம்பெற்றுள்ள உரைப்பகுதியில் குறுவட்டு என்ற சொல்லை மீத்தொடுப்பாக அமைத்து, அதன்மீது சொடுக்கினால் குறுவட்டு பற்றிய குறிப்புகள் அடங்கிய ஒரு வலைப்பக்கம் விரியுமாறு செய்யலாம். அதுபோலவே கடைகளில் என்ற சொல்லை மீத்தொடுப்பாக அமைத்து அதன்மூலமாக குறுவட்டு கிடைக்கும் கடைகள் மற்றும் விலை விவரங்களைக் காண்பிக்குமாறு செய்ய முடியும்.

ஒரு வலையகம் பயனர் விரும்பும் வண்ணம் மிகவும் சிறப்பாக அமைய அதன் முகப்புப் பக்கம், மற்றும் பிற வலைப் பக்கங்களின்¢ வடிவாக்கம் அழகியல் சிறப்போடு அமைய வேண்டும். வலைப்பக்கங்களில் தகவல்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும். பயனர் தாமாகவே தாம் விரும்பியவாறு தகவலைத் தேடிப் படித்துக் கொள்ளுமாறு மீத்தொடுப்புகள் அவரை வழிநடத்திச் செல்ல வேண்டும். தகவல் கட்டுமானக் கோட்பாடுகளின் அடிப்படையில் தகவல்களை ஒழுங்கமைத்து வழங்க வேண்டும். எவ்வாறு என்பதை அடுத்துப் பார்ப்போம்.

2.4.3 வலையக வடிவாக்கமும் தகவல் கட்டுமானமும்

தகவல் கட்டுமானம் என்னும் கருத்துருவை உர்மன் அறிமுகபப்டுத்திய பிறகு அதனை வளர்த்தெடுத்த பெருமை லூயிஸ் ரோசன்ஃபெல்டு, பீட்டர் மார்வல்லி ஆகிய இருவரையுமே சாரும். அடிப்படையில் இவர்கள் இருவரும் நூலக அறிவியலாளர்கள். பலதரப்பட்ட தகவல்களைச் சேமித்துப் பின்னாளில் பயனர்கள் எளிதில் அணுகும் வகையில் அவற்றை ஒழுங்கமைத்து வைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வேறெவரையும்விட நூலகர்கள் நன்கு புரிந்து வைத்திருப்பர். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் தகவல் ஒழுங்கமைப்பு மற்றும் தகவல் கட்டுமானம் பற்றித் தெளிவான கண்ணோட்டம் இருந்தது.

1990களில் இணையமே உலகத்தின் ஒட்டுமொத்த தகவல் மையம் என்ற நிலை உருவானது. நூலகத் தகவல் தொகுப்புகளெல்லாம் இணையத்தில் இடம்பெற வேண்டிய நிலை உருவாகியது. தகவல்களைத் தொகுத்து வலையகத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது என்பது நூலகத்தின் தகவல் ஒழுங்கமைப்பை ஒத்ததாகவே இருந்தது. எனவே நூலக அறிவியலில் வல்லுநர்களான ரோசன்ஃபெல்டும் மார்வல்லியும் வலையக வடிவாக்கம்பற்றி தெளிவான கருத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் எழுதிய ‘வைய விரிவலைக்கான தகவல் கட்டுமானம்’ (Information Architecture for World Wide Web) என்னும் நூலில் வலை யக வடிவாக்கம் பற்றிய தெளிவான கருத்துகள் வழங்கப்பட்டுள்ளன.

வலைப்பக்கம் எப்படி அமைய வேண்டும், முகப்புப் பக்கம் எப்படி அமைய வேண்டும் என்பதை விளக்குவது அவர்கள் நோக்கமில்லை. ஒட்டுமொத்தமாய் ஒரு வலையகம் எப்படி அமைக்கப்பட வேண்டும், அதிலுள்ள பக்கங்கள் ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்பு கொண்டிருக்க வேண்டும், வலையகத்தைப் பார்வையிடுவதில் பயனரை எவ்வாறு வழிச்செலுத்த வேண்டும் என்பதைப்பற்றியே அவர்கள் பேசுகின்றனர்.

வகலையக வடிவாக்கத்தில் தகவல் கட்டுமானியின் தலையாய பணிகளாவன:

  • வலையகம் எப்படி இருக்கப்போகிறது, அது எவ்வாறு செயல்படப்போகிறது என்பதைத் தெளிவாக வரையறுத்துக்கொள்வதே முதலாவது பணி. அடுத்து,
  • வலையகம் அமைக்கும் நிறுவனம், வலையகத்தைப் பார்வையிடப்போகும் வாடிக்கையாளர்கள் ஆகிய இரு தரப்பாரின் தேவைகளையும் சீர்தூக்கிப் பார்த்து, வலையகத்தின் குறிக்கோளையும், கோட்பாட்டையும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
  • வலையகத்தின் உள்ளடக்கம், அது செயல்படும் தன்மை ஆகியவற்றை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
  • பயனர்கள் தகவலை எவ்வாறு தேடி அறிவார்கள் என்பதைக் குறித்துக் கொண்டு, அதற்கேற்ப தகவல் ஒழுங்கமைப்பு, வழிச்செலுத்தல், வகைப்படுத்தல், தேடல் முறைகள் ஆகியவற்றை வரையறுத்துக்கொள்ள வேண்டும்.
  • காலப்போக்கில் ஏற்படவிருக்கும் வளர்ச்சியையும் மாற்றத்தையும் வலையகம் உள்வாங்கிக் கொள்ளும் வழிவகைகளையும் முன்கூட்டியே வரையறுத்துக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தகவல் கட்டுமான நுட்பங்கள் வலையக வடிவாக்கத்திற்கு மட்டுமின்றி எந்தவகை தகவல் திரட்டு அமைப்புக்கும் ஏற்புடையவையாகும். ‘வலையகம்’ என்று இருக்கும் இடங்களில் எல்லாம் ‘நூலகம்’, ‘தகவல் மையம்’, ‘கலைக்களஞ்சியம்’ போன்ற சொற்களில் எதைப் போட்டாலும் பொருத்தமாகவே இருக்கும்.

பயனர் எனப்படும் நுகர்வோர் தகவலை எளிதாகவும் விரைவாகவும் தேடிப்பெறவே விரும்புவர். இன்றைய விரைவான வழ்க்கைச் சூழலில் நேரத்தை வீணாக்க எவரும் விரும்பார். மோசமான தகவல் கட்டுமான அமைப்பில் உள்ள வலையகத்தைப் பார்வையிடும் வாடிக்கையாளர்கள் குழப்பமடைவதுடன் விரக்தியும் கோபமும் கொள்வர். நன்கு திட்டமிடப்பட்ட தகவல் கட்டுமானங்கள் தயாரிப்பாளருக்கும் நுகர்வோருக்கும் ஒருசேரப் பலன்தரும்.

வலையகத்தில் தகவல் தேடுவோர் இருவகைப்படுவர்: முதல்வகையினர் எதைத் தேடுகிறோம் என்பதைச் சரியாகத் தெரிந்து வைத்திருப்பர். அத்தகவல் எப்படி வகைப்படுத்தப்பட்டிருக்கும் என்பதையும் அறிந்து வைத்திருப்பர். அவ்வலை யகத்தில் அத்தகவல் இருக்கிறது என்பதும் தெரிந்திருக்கும். முடிந்த அளவு விரைவாகக் கடின முயற்சியின்றி அதைத் தேடிப்படித்துவிட்டுப் போக விரும்புவர். இது தெரிந்த தகவலைத் தேடும் முறையாகும். இரண்டாம் வகையினருக்குத் தாம் தேடுவது எது என்பதே தெரியாது. அவர்கள் தேட விரும்பும் தகவல் பற்றித் தெளிவற்ற கருத்துடன் வலையகத்தில் நுழைவர். அவர்கள் தேடும் தகவல் எந்தத் தலைப்பில் இருக்கும் என்பதும் தெரியாது. அத்தகவல் அவ்வலையகத்தில் கிடைக்குமா என்பதும் தெரியாது. மேம்போக்காக வலையகத்தில் உலா வருவர். அவர்கள் தேடிவந்த தகவல் கிடைக்கிறதோ இல்லையோ, அந்த நிறுவனம் பற்றியும், அதன் தயாரிப்புகள் பற்றியும் அறிந்து செல்வர்.

இவ்வாறு தேடல் முறையில் இரண்டு வகை இருப்பினும் வலையுலா வாசிகள் இந்த இரண்டில் ஏதேனும் ஒரு வகையில்தான் தேடுவார்கள் என்பதில்லை. மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வலையகம் எனில், தெரிந்த தகவலைத் தேட வந்தவர்கள்கூட, தேடி முடித்தபின் இரண்டாம் வகையினரைப்போல் மொத்த வலையகத்திலும் மேம்போக்காக உலா வருதலும் உண்டு. நூற்றுக்கு நூறு நுகர்வோர் மனநிறைவையே மனதில் கொண்டு உருவாக்கப்படும் வலையகங்கள் இந்த இருவகைத் தேடலுக்கும் ஏற்ற கட்டுமான நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
தகவல் திரட்டு அமைப்புகள் சிலவற்றைக் கூறுக.
2.
தகவல் திரட்டுகளில் பின்பற்றப்படும் ஒழுங்கமைப்பு முறைகள் யாவை?
3.
ஒவ்வொன்றுக்கும் ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
4.
ஒழுங்கமைப்புத் திட்டமுறைகள், கட்டமைவுகள் என்றால் என்ன?
5.
ஒழுங்கமைப்புக் கட்டமைவுகள் எத்தனை வகைப்படும்? விளக்குக.
6.
வைய விரிவலை என்பது யாது?
7.
வலையகம் பற்றி எடுத்துக் காட்டுடன் விளக்குக.
8.
மீத்தொடுப்பு பற்றிச் சிறு குறிப்பு வரைக.
9.
வலையகத் தகவல் கட்டுமானியின் தலையாய பணிகளாவன?
10.
வலையகத்தில் தகவல் தேடுவோரில் இருவகையினர் எப்படித் தேடுவர்?