-
தகவலைத் தேடியலைந்த காலம் முற்றிலுமாய்
மாறிவிட்டது. இன்றைய தகவல் யுகத்தில் தேவைக்கும் அதிகமாகவே தகவல்கள்
குவிந்து கிடக்கின்றன.
-
தகவலை நுகர்வோர் அதன் பயனை
எளிதில் துய்க்க வேண்டுமெனில், நுகர்வோருக்குப் புரியும் வகையில்
குறிப்பிட்ட கட்டமைப்பில் தகவலை முறைப்படுத்தி ஒழுங்கமைத்து வழங்க
வேண்டும்.
-
தகவல் கட்டுமானம் என்ற சொல்லை
முதன்முதலாகப் பயன்படுத்தியவர் ரிச்சர்டு சவுல் உர்மன் (Richard
Saul Wurman) என்னும் கட்டடக்கலை நிபுணர். தகவல்களைத் திரட்டி
அவற்றை ஒழுங்கமைத்து, எளிதாகப் பொருளுணரும் வகையில் வழங்கும் நுட்பங்களைப்பற்றி
நூல்கள் வெளியிட்டுள்ளார்.
-
உர்மனுக்குப் பிறகு தகவல் கட்டுமானம்
என்னும் கருத்துருவை வளர்த்தெடுத்த பெருமை லூயிஸ் ரோசன்ஃபெல்டு
(Louis Rosenfeld), பீட்டர் மார்வல்லி (Peter Morville) என்னும்
இரு நூலக அறிவியலாளர்களாவர்.
-
தகவல் கட்டுமானம் என்பது கட்டடக்
கட்டுமானத்தைப் பெரிதும் ஒத்துள்ளது. குடியிருக்கும் மக்களின்
வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப குடியிருப்பின் கட்டுமானம்
வடிவமைக்கப்பட வேண்டும். அதேபோல்¢ நுகர்வோருக்குத் தகவல் முழுமையாகச்
சென்று சேர வேண்டுமெனில் அவற்றை முறைப்படி ஒழுங்கமைத்து சிறப்பாக
வடிவமைத்து வழங்க வேண்டும்.
-
தகவல் கட்டுமானி என்பவர், தகவல்களை
வகைப்படுத்தி ஒழுங்கமைத்துப் படிப்போர் தாம் விரும்பியவாறு எளிதில்
தேடிப் படித்து அறிந்துகொள்ளும் வகையில் தகவலின் கட்டமைப்பை அல்லது
வரைபடத்தை உருவாக்குபவர். ஒரு சிக்கலான சூழ்நிலையில், கிடைக்கும்
தகவல் குவியலிலிருந்து சாரங்களைப் பிழிந்தெடுத்து, அச்சாரங்களைப்
பயனாளர் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக அழகியல் வெளிப்பாட்டோடு
வழங்க வேண்டியது தகவல் கட்டுமானியின் கடமை.
-
அகராதியாயினும் கலைக்களஞ்சியமாயினும்
வேறெந்தத் தகவல் திரட்டாயினும் ஒரு தகவலை மிக எளிதாய்த் தேடிக்
கண்டறியும் வகையிலேயே அவற்றில் தகவல்கள் ஒழுங்கமைக்கப்படுகின்றன.
தகவல் ஒழுங்கமைப்பு முறைகளை ஐந்தாக வகைப்படுத்தலாம்: (1) இடம்
(Location). (2) அகரவரிசை (Alphabet). (3) காலம் (Time). (4) வகைப்பாடு
(Category). (5) அடுக்கு வரிசை (Hierarchy).
-
உலக நாடுகளைப் பற்றிய தகவல்
தொகுப்பு எனில் கண்டங்களின் அடிப்படையில் (Location) தகவல்கள்
ஒழுங்கமைக்கப்படலாம். அகராதிகள் அனைத்தும் அகரவரிசைப்படியே (Alphabet)
ஒழுங்கமைக்கப்படுகின்றன. வரலாற்று நூல்களிலும் வாழ்க்கை வரலாறுகளிலும்
தகவல்கள் கால (Time) அடிப்படையில் ஒழுங்கமைக்கப்படுகின்றன. நூலகங்களில்
நூல்களின் ஒழுங்கமைப்பு வகைப்பாட்டின் (Category) அடிப்படையில்
அமைகிறது. நாடுகளின் தகவல்கள் மக்கள்தொகை, இடப் பரப்பளவு, தனிநபர்
வருமானம் அல்லது எழுத்தறிவு அடிப்படையில் தொகுக்கப்படுமாயின் அது
அடுக்கு வரிசை (Hierarchy) ஒழுங்கமைப்பு முறையையே சாரும்.
-
ஒழுங்கமைப்புத் திட்டமுறை (Scheme)
என்பது தகவல் தொகுப்பின் உள்ளடக்க விவரங்களுக்¢கு இடையேயான பொதுவான
பண்பியல்புகளை (shared characteristics of content items) வரையறுக்கிறது.
அவையே விவரங்களின் தருக்கரீதியான வகைப்பாடுகளைத் தீர்மானிக்கின்றன.
-
ஒழுங்கமைப்புக் கட்டமைவு (Structure)
என்பது உள்ளடக்க விவரங்களுக்¢கு இடையேயான உறவுநிலைகளின் வகைகளை
(types of relationships between content items) வரையறுக்கிறது.
-
ரோசன்ஃபெல்டும், மார்வல்லியும்
‘வைய விரிவலைக்கான தகவல் கட்டுமானம்’ (Information Architecture
for World Wide Web) என்ற தங்கள் நூலில், ஒரு வலையகத்தில் எவ்வாறு
தகவலை வழங்குவது, அந்த வலையகத்தின் பக்கங்களுக்கிடையேயான தொடர்புகளை
எப்படி அமைப்பது, பார்வையாளர்கள் பக்கங்களுக்கிடையே தத்தம் போக்கில்
உலா வர எவ்வாறு அனுமதிப்பது அல்லது நெறிப்படுத்துவது என்பதைப்
பற்றியெல்லாம் மிக விரிவாக விளக்கியுள்ளனர்.
-
உலகமெங்கிலும் பரவிக் கிடக்கும்
பல்லாயிரக் கணக்கான கணிப்பொறிப் பிணையங்கள் ஒன்றாகப் பிணைக்கப்பட்ட
ஒரு மாபெரும் ‘பிணையங்களின் பிணையமே’ (Network of Networks) இணையம்
ஆகும்.
-
மீத்தொடுப்புகளால் தொடர்புபடுத்தப்பட்ட
மீவுரை ஆவணங்களைக் கொண்ட ஒரு சிறப்புவகைப் பிணையமான வைய விரிவலை¢
இனணையத்தின் அங்கமாய் இருந்தது. இன்றைக்கு இணையம் முழுமையுமே வைய
விரிவலை ஆகிவிட்டது.
-
மீத்தொடுப்புகள் நிறைந்த அழகிய
முகப்புப் பக்கத்தையும் மீத்தொடுப்புகள் மூலம் சுட்டப்படும் வலைப்பக்கங்களைக்
கொண்ட தகவல் தொகுப்பே வலையகம் ஆகும். இணையத்தில் நிறுவனங்கள் பலவும்
வாடிக்கையாளர்களின் வசதிக்கென வலையகங்கள் அமைத்துத் தகவல்களை வழங்குகின்றன.
-
ரோசன்ஃபெல்டும் மார்வல்லியும்
தாம் எழுதிய ‘வைய விரிவலைக்கான தகவல் கட்டுமானம்’ (Information
Architecture for World Wide Web) என்னும் நூலில் வலையக வடிவாக்கம்
பற்றித் தெளிவாக விளக்கியுள்ளனர்.
-
முதலில் வலையகத்தின் குறிக்கோளையும், கோட்பாட்டையும்
தெளிவுபடுத்திக்கொண்டு, அதன் உள்ளடக்கம், அது செயல்படும் தன்மை
ஆகியவற்றை நிர்ணயிக்க வேண்டும். பயனர்கள் தகவலை எவ்வாறு தேடி அறிவார்கள்
என்பதற்கேற்ப தகவல் ஒழுங்கமைப்பு, வழிச்செலுத்தல், வகைப்படுத்தல்,
தேடல் முறைகள் ஆகியவற்றை வரையறுக்க வேண்டும். என்ன தேடுகிறோம்
எங்கு இருக்கும் என்பதைத் தெரிந்து தேடுவோர், தேடும் தகவல் பற்றித்
தெளிவின்றி, அத்தகவல் கிடைக்குமா என்பதும் தெரியாமல் மேம்போக்காகத்
தேடுவோர் ஆகிய இருவகையினருக்கும் பயன்படும் வகையில் தகவல் கட்டுமான
நுட்பங்களுடன் வலையகத்தை வடிவமைக்க வேண்டும்.