3.0 பாட முன்னுரை

நிறுவனங்கள் பலவகைப்படும். அரசு நிறுவனங்கள் - தனியார் நிறுவனங்கள்; இலாப (Profit) நோக்கோடு செயல்படும் நிறுவனங்கள் - இலாப நோக்கின்றிச் சேவை நோக்கோடு செயல்படும் நிறுவனங்கள்; சிறிய நிறுவனங்கள் - பெரிய நிறுவனங்கள். இவ்வாறு நிறுவனங்களைப் பல்வேறு வகையாகப் பிரிக்கலாம். எந்தவகை நிறுவனம் ஆயினும், ஒவ்வொரு நிறுவனமும் ஒரு குறிப்பிட்ட அகக்கட்டமைப்பைக் கொண்டுள்ளன. நிறுவனத்தின் வகைக்கேற்ப அக் கட்டமைப்பு அமைகிறது. நிறுவனத்தின் பல்வேறு பணிப் பிரிவுகளை (Sections) உள்ளடக்கிய ஒட்டுமொத்த அமைப்பையே அகக்கட்டமைப்பு என்கிறோம்.

எந்தவொரு நிறுவனத்தையும் நிர்வகிக்க ஒரு மேலாண்மை அமைப்பு கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்பு அந்நிறுவனத்தின் அகக்கட்டமைப்புக்கு ஏற்ப அமைகிறது. சிறிய நிறுவன மாயினும் அதனை மேலாண்மை செய்ய ஓர் அமைப்பு இருக்க வேண்டும். அந்த அமைப்பு, நிறுவனத்தின் உரிமையாளரான ஒற்றை நபராகவும் இருக்கலாம். தகுந்த முறையில் மேலாண்மை செய்யப்படாத நிறுவனம் வளர்ச்சியின்றி முடங்கிப் போகும், நட்டப்பட்டு மூடப்பட்டுவிடும்.

பொதுவாக மேலாண்மை அமைப்பு பல்வேறு அடுக்குகளைக் கொண்டிருக்கும். ஒவ்வோர் அடுக்கிலுமுள்ள மேலாளர்கள் அதன் மேலடுக்கில் உள்ள மேலாளர்களின் நெறியுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறார்கள். கீழடுக்கில் உள்ள மேலாளர்களைக் கண்காணித்து வழிநடத்துகின்றனர். இவ்வாறு நெறியுறுத்தலும் வழிநடத்தலும் நிறுவனத்தின் முன்வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையிலும், முன்குறிக்கப்பட்ட இலக்குகள் மற்றும் அவற்றை அடைவதற்கான வழிமுறைகளை ஒட்டியும் அமைகின்றன.

மேலாண்மை அமைப்பு செவ்வனே செயல்படவும் அதன்மூலம் நிறுவனம் திட்டமிட்டபடி முன்னேற்றம் காணவும், சிறந்த மேலாண்மைத் தகவல் முறைமை (Management Information System) இன்றியமையாதது ஆகும். மேலாண்மைத் தகவல் முறைமை பல கூறுகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பணிப்பிரிவுக்கும் ஒவ்வொரு மேலாண்மை அடுக்குக்கும் உதவும் வகையில் இருக்கும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, மேலாண்மைத் தகவல் முறைமைகளைச் செழுமைப் படுத்தியுள்ளது; எளிமைப்படுத்தியுள்ளது என்றும் கூறலாம்.

நிறுவனத்தின் வகைப்பிரிவுகள், கட்டமைப்புகள், மேலண்மை அமைப்புகள் மற்றும் மேலாண்மைத் தகவல் முறைமைகள் பற்றி விரிவாக இப்பாடத்தில் காண்போம்.