3.2
நிறுவனக் கட்டமைப்பு முறைகள் (Types of Organisational Structure)
நிறுவன வகைப்பிரிவுகளைப் பார்த்தோம்.
எந்தவகை நிறுவனம் ஆயினும் அதற்கென ஒரு கட்டமைப்பு இருக்கும். வகைப்பிரிவுக்கேற்ப
கட்டமைப்பு வேறுபடலாம். குறிப்பாக, நிறுவனத்தின் அளவைப் பொறுத்துக் கட்டமைப்பு
வேறுபடும். அதேபோல, ஒருநாட்டு நிறுவனமா பன்னாட்டு நிறுவனமா என்பதைப் பொறுத்துக்
கட்டமைப்பு மாறுபடும். மற்றபடி நோக்கம், செய்பொருள், உடைமையைப் பொறுத்துக்
கட்டமைப்பில் பெருமளவு வேறுபாடு இருப்பதில்லை.
ஒரு நிறுவனத்தின் கட்டமைப்பு முறை, (1) பணி (2) செய்பொருள் (3) வாடிக்கையாளர் (4) புவிப்பிரிவு ஆகிய நான்கில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அமையலாம். ஒன்றுக்கு மேற்பட்டவை ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த கலப்புக் கட்டமைப்பாகவும் இருக்கலாம். பெரிய நிறுவனங்கள் அத்தகைய கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.
3.2.1
பணி சார்ந்த கட்டமைப்பு (Function Oriented Structure)
ஒரேயொரு பொருளை மட்டுமே தயாரித்து
விற்பனை செய்யும் ஒரு நடுத்தர நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். அந்த நிறுவனம்
மேசைக் கணிப்பொறிகளை (Desktop Computers) மட்டுமே விற்பனை செய்வதாகக் கொள்வோம்.
இந்த நிறுவனத்தின் கட்டமைப்பு பல்வேறு பணிப்பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும்.
(அ)
உற்பத்தி (Production):
கணிப்பொறியின்
உதிரிப் பாகங்களைக் கொண்டு கணிப்பொறிகளைத் தயாரித்துத் தருவது. |
(ஆ)
விற்பனை (Sales):
தயாரிக்கப்பட்ட
கணிப்பொறிகளை விற்பனை செய்வது. |
(இ)
சந்தைப்படுத்தல் (Marketing):
பழைய
வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துப் புதிய வாடிக்கையாளர்களை உருவாக்கி
விற்பனையை அதிகரிப்பது. |
(ஈ)
நிதி (Finance):
கொள்முதல்,
விற்பனை, பணியாளர்களின் ஊதியம், வங்கிக் கடன் போன்ற கணக்கு வழக்குகளைக்
கவனித்துக் கொள்வது. |
(உ)
பணியாளர் (Personnel):
பணிக்கு
ஆட்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளித்துப் பணியமர்த்தல், பணியாளர்களின்
பதவி உயர்வு, பதவி ஓய்வு போன்றவற்றைக் கவனித்துக் கொள்ளுதல். |
தேவைக்கேற்ப இன்னும் சில பணிப்பிரிவுகளையும்
வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு பணிப்பிரிவிலும் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள்,
துணை மேலாளர்கள், மேலாளர்கள் இருப்பர். அனைத்துப் பிரிவுகளையும் கண்காணித்து
வழிநடத்தும் ஒரு மேல்நிலை மேலாண்மை அமைப்பும் இருக்கும்.
3.2.2
செய்பொருள் சார்ந்த கட்டமைப்பு (Product Oriented Structure)
மேசைக் கணிப்பொறி மட்டுமின்றி
வழங்கிக் கணிப்பொறிகள் (Servers), மடிக் கணிப்பொறிகள் (Laptop Computers),
அச்சுப்பொறிகள் (Printers) ஆகிய வற்றையும் விற்பனை செய்கின்ற ஒரு பெரிய நிறுவனத்தை
எடுத்துக் கொள்வோம். இந்த நிறுவனத்தில் மேசைக் கணிப்பொறிப் பிரிவு, வழங்கிப்
பிரிவு, மடிக்கணிப்பொறிப் பிரிவு, அச்சுப்பொறிப் பிரிவு என ஒவ்வொருவகை விற்பனைப்
பொருளுக்கும் ஒரு தனிப்பிரிவு இருக்கும். பைக், ஆட்டோ, கார், வேன் எனப் பல்வகை
வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலும் இந்த அமைப்பே இருக்கும்.
உற்பத்திப் பிரிவு, விற்பனைப்
பிரிவு, சந்தைப்படுத்தல் பிரிவு ஆகிய பணிப் பிரிவுகள் ஒவ்வொருவகை விற்பனைப்
பொருளுக்கும் தனித்தனியாகவோ அனைத்துக்கும் பொதுவாகவோ இருக்கலாம். நிதிப்பிரிவும்,
பணியாளர் பிரிவும் நிறுவனம் முழுமைக்கும் பொதுவானதாக இருக்கும்.
3.2.3
வாடிக்கையாளர் சார்ந்த கட்டமைப்பு (Customer Oriented Structure)
சில நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின்
வெவ்வேறு பிரிவினர்க்கென தனித்தனி பணிப்பிரிவுகள் இருப்பதுண்டு. சில மருத்துவ
மனைகளில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கென தனித்தனிப் பிரிவுகள்
இருப்பதைக் காணலாம். புத்தகங்கள், பத்திரிகைகள் வெளியிடும் பெரிய பதிப்பகங்கள்
பொது, ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் போன்ற தனித்தனி வாசகர் குழுக்களுக்கென
புத்தகங்கள், பத்திரிகைகளை வெளியிடுகின்றன. வெவ்வேறு வகை வெளியீடுகளுக்கென
தனித்தனி ஆசிரியர் குழுக்கள், விளம்பர மேலாளர்கள் போன்ற பணிப்பிரிவுகளை வைத்திருப்பர்.
விற்பனை, நிதி, பணியாளர் மேலாண்மை போன்றவை தனித்தனியாகவோ பொதுவாகவோ இருக்கலாம்.
உடனணி (readymade) ஆடைகள் தயாரிப்பு
மற்றும் விற்பனை நிறுவனங்கள் இதுபோன்ற கட்டமைப்பைக் கொண்டிருக்க முடியும்.
வடிக்கையாளர் அடிப்படையில் அமைந்த கட்டமைப்பை வேறொரு கோணத்தில் நோக்கினால்
செய்பொருள் அடிப்படையிலான கட்டமைப்பாகவும் தோற்றமளிக்கும்.
3.2.4
புவிப்பிரிவு சார்ந்த கட்டமைப்பு (Geography Oriented Structure)
வெவ்வேறு நகரங்களில் கிளைகளைக்
கொண்டுள்ள நிறுவனங்கள், ஒவ்வொரு கிளையையும் தனி நிறுவனம் போலவே நடத்துமெனில்
அதனை இப்பிரிவில் அடக்கலாம். மற்றபடி ஒரு நிறுவனம் அதன் உற்பத்தி, விற்பனை,
நிதி போன்ற பணிப்பிரிவுகளை வெவ்வேறு நகரங்களில் வைத்திருந்தாலோ, வெவ்வேறு
செய்பொருள் அமைப்புகளை வேறு வேறு நகரங்களில் வைத்திருந்தாலோ அத்தகைய நிறுவனத்தை
இப்பிரிவில் அடக்க முடியாது.
பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்கள்
பல்வேறு நாடுகளில் தம் கிளைகளை நிறுவியுள்ளன. ஒவ்வொரு நாட்டிலுமுள்ள கிளைகளை
தனி நிறுவனம் போலவே நடத்தி வருகின்றன. எனவே அத்தகைய நிறுவனங்கள் இக் கட்டமைப்பில்
வருகின்றன. ஆனாலும், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள கிளை நிறுவனம், தம்மளவில் பணிப்பிரிவு
சார்ந்த கட்டமைப்பையோ செய்பொருள் சார்ந்த கட்டமைப்பையோ கொண்டிருக்கும். ஒட்டுமொத்த
நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் புவிப்பிரிவு சார்ந்த கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.
பன்னாட்டு நிறுவனங்கள் போன்ற மிகப்பெரும் நிறுவனங்களில் இவ்வாறு ஒன்றுக்குள்
ஒன்றாக ஒன்றுக்கு மேற்பட்ட கட்டமைப்புகள் கலந்தே இருக்கும் என்பதை நினைவில்
கொள்க.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
நிறுவனங்களை எவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்?
|
2. |
நிறுவன வகைப்பிரிகளைப்
பட்டியலிடுக. |
3. |
பொதுத்துறை
/ தனியார்துறை - வேறுபடுத்துக. |
4. |
இலாப
நோக்கின்றிச் செயல்படும் நிறுவனங்களைக் கூறுக. |
5. |
பொருள்
விற்பனை / சேவை வழங்கல் - வேறுபடுத்துக. |
6. |
நிறுவனக்
கட்டமைப்பு முறைகளை எவ்வாறு வகைப்படுத்தலாம்? |
7. |
பணிசார்ந்த
நிறுவனக் கட்டமைப்பை விளக்குக. |
8. |
செய்பொருள்
சார்ந்த கட்டமைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. |
9. |
வாடிக்கையாளர்
சார்ந்த கட்டமைப்புக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக. |
10. |
பன்னாட்டு
நிறுவனங்களின் புவிப்பிரிவு சார்ந்த கட்டமைப்பை விளக்குக. |
|