3.3 மேலாண்மை அடுக்குகள் (Management Levels) ஒரு நிறுவனம் மென்மேலும் வளர்ச்சிபெற சிறந்த மேலாண்மை அமைப்பைப் பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை அமைப்பு என்பது நிறுவனத்தின் தலைவர் தொடங்கி அனைத்து மட்டங்களிலுமுள்ள கண்காணிப்பளர்கள், மேலாளர்கள், இயக்குநர்கள், செயலதிகாரிகள், கணக்காளர்கள் போன்ற நிர்வாகிகள் அனைவரையும் உள்ளடக்கியதாகும். ஆனால் ஊழியர்கள் அல்லது பணியாளர்கள் (Workers) எனப்படுவோர் மேலாண்மை அமைப்பின் அங்கமாகக் கருதப்படார். சுருக்கமாகச் சொல்வதெனில், நிறுவனச் செயல்பாட்டில் ஏதேனும் ஒரு நடவடிக்கையில் தீர்மானிக்கும் அல்லது முடிவெடுக்கும (Decision Making)¢ அதிகாரம் பெற்றவரே மேலாண்மை அமைப்பின் அங்கமாகக் கருதப்படுவார். பொதுவாக மேலாண்மை அமைப்புப் பல்வேறு அடுக்குகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அடுக்கில் உள்ளவர்க்கும் ஒரு பொறுப்பு கொடுக்கப் பட்டிருக்கும். கீழ் அடுக்கில் உள்ளவர் தம் பொறுப்புகளைச் செவ்வனே நிறைவேற்றுகிறாரா என்பதை அதன் மேலடுக்கில் உள்ளவர் கவனித்து வருவார். இந்த அடுக்கு முறையின் உச்சியில் நிறுவனத்தின் தலைவர் அல்லது உடைமையாளர் இருப்பார். பொதுவாக, மேலாண்மை அமைப்பை மூன்று அடுக்குகளாகப் பிரிக்கலாம்:
ஒவ்வோர் அடுக்கும் பல உட்பிரிவுகளைக் கொண்டிருக்கலாம். ஒரே அடுக்கில் பல இணை அடுக்குகள் இருக்க முடியும். மனிதபலம், சந்திப்புகள், எடுக்கும் முடிவுகள் அடிப்படையில் மேலாண்மை அடுக்குகளைப் பிரமிடு அமைப்பில் நோக்கலாம். ![]()
பெரும்பாலான நிறுவனங்களில் மேல்நிலை மேலாண்மை என்பது இயக்குநர்களின் குழுவையும் (Board of Directors) அக்குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதன்மைத் தலைமை அதிகாரி (Chief Executive Officer - CEO) அல்லது மேலாண்மை இயக்குநரையும் (Managing Director - MD), துணைத் தலைவர்களையும் (Vice-Presidents) கொண்டிருக்கும். இந்த அடுக்கு, நிறுவனத்தின் தலைவரையும் உள்ளடக்கியதாகும். இங்கே தலைவர் எனக் குறிப்பிடுவது நிறுவனத்தின் உடைமையாளர் அல்லது முதலாளியையும் குறிக்கும். நிறுவனம் தொடர்பான அதிமுக்கிய முடிவுகளை (Strategic Decisions) மேல்நிலை மேலாண்மையே எடுக்கும். நிறுவனத்தின் உள்ளார்ந்த குறிக் கோள்களையும் நோக்கங்களையும் திட்டங்களையும் இவர்களே முடிவு செய்வர். நிறுவன விரிவாக்கம், பிற நிறுவனத்தை வாங்குதல், வேறு வணிகத்தில் முதலீடு போன்ற முடிவுகளை இவர்களே மேற்கொள்வர். நோக்கங்களை நிறைவேற்றிட நிறுவனத்தின் பல்வேறு பணிப்பிரிவினருக்கு இலக்குகளை வரையறுப்பதும், அவர்களைக் கண்காணிப்பதும் இவர்கள் வேலையன்று. நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாடுகளில் தலையிடார். இவர்கள் அடிக்கடி கூடிப் பேசி முடிவெடுக்க வேண்டிய தேவையில்லை. நிறுவனத்தின் அடிப்படையான கருதுகோள்கள் தொடர்பான மிகமுக்கிய முடிவுகளை எப்போதேனும் தேவையேற்படும்போது மேற்கொண்டால் போதும். இடைநிலை மேலாண்மை என்பது, பல்வேறு பணிப்பிரிவுகளின் மேலாளர்கள் (Managers), துணை மேலாளர்களை (Assistant Managers) உள்ளடக்கியதாகும். மேல்நிலை மேலாண்மை வரையறுக்கும் நிறுவனத்தின் குறிக்கோளை எட்டுவதற்கான செயல்நுட்ப முடிவுகளை (Tactical Decisions) மேற்கொள்வது இடைநிலை மேலாண்மையின் இன்றியமையாத பணியாகும். உற்பத்தி, விற்பனை, நிதி ஆகியவற்றில் மேல்நிலை மேலாண்மை வரையறுக்கும் இலக்குகளை எட்டுவதற்குத் திட்டமிடலும், பல்வேறு பணிப்பிரிவினருக்குப் பணி இலக்குகளை நிர்ணயித்து, அவற்றைச் செய்துமுடிப்பதற்கான செயல்நுட்பங் களை வகுத்துக் கொடுப்பதும் இவர்களின் வேலையாகும். அவ்வப்போது கூடி அதுவரை அடைந்த பலன்களை மதிப்பீடு செய்வதும், தேவைப்படின் பணி இலக்குகளை மறுநிர்ணயம் செய்வதும் இவர்களின் பணியாகும். நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாடுகளில் இவர்கள் தலையிடுவதில்லை. பணியாளர்கள் இந்த வேலையை இப்படிச் செய்ய வேண்டும் என வரையறுத்துக் கூறுவதும் இவர்களின் வேலையில்லை. ஆனாலும் கீழ்நிலை மேலாண்மையின் ஒத்துழைப்பின்றி மேல்நிலை மேலாண்மையின் முடிவுகளை செயலாக்கிக் காட்ட முடியாது. மேல்நிலை, கீழ்நிலை மேலாண்மை அமைப்புகளின் இறுக்கங்களுக்கு ஈடுகொடுக்க வேண்டிய இக்கட்டான நிலை இடைநிலை மேலாண்மைக்கு எப்போதும் உண்டு. கீழ்நிலை மேலாண்மை என்பது நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் வேலை செய்யும் பணியாளர்களின் (Workers) உடனடி மேலாளர்கள், கண்காணிப்பாளர்களைக் கொண்டது. இடைநிலை மேலாண்மை வகுத்துக் கொடுத்த இலக்குகளின்படி ஆற்ற வேண்டிய செயல்பாடுகளைத் திட்டமிடுவதும் அவற்றைச் செய்து முடிப்பதற்கான வழிமுறைகளை வரையறுத்துக் கொடுப்பதும் இவர்களின் பணியாகும். அன்றாடப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றச் செயல்பாட்டு முடிவுகளை (Operational Decisions) மேற்கொள்வதும் அவற்றை உடனுக்குடன் நடைமுறைப்படுத்துவதும் கீழ்நிலை மேலாண்மையின் தலையாய பணியாகும். ஒவ்வொரு நாளும் எந்த எந்திரத்தை இயக்குவது, எந்த எந்திரத்துக்கு ஓய்வு கொடுப்பது, எத்தனை பணியாளர்களுக்கு விடுப்புக் கொடுப்பது, அப்படிக் கொடுத்தால் எவருக்கெல்லாம் கூடுதல் பணிநேரம் (Overtime) வழங்குவது என்பதுபோன்ற முடிவுகளை இவர்களே எடுக்க வேண்டும். நிறுவனம் மேல்நிலைக்கு முன்னேறிச் செல்லக் கீழ்நிலை மேலாளர்களின் பங்களிப்பு மிகவும் இன்றியாதது ஆகும். |