4.4
கணினி முறைமை (Computer System)
கண்ணால் காண்கின்ற, கையால் தொட்டு
அறியக் கூடிய பருப்பொருள் உறுப்புகளை வன்பொருள் என்கிறோம். கணினியின் உறுப்புகளான
நுண்செயலி, நினைவகம், திரையகம், வட்டகம், விசைப்பலகை, சுட்டி ஆகியவற்றை வன்பொருள்
என்கிறோம். இந்த வன்பொருள்கள் மின்சாரம் வழங்கியவுடன் தாமாகச் செயல்படா.
மனிதன் உட்செலுத்தும் ஆணைகளின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன.
எந்தவொரு பணியை முடிக்கவும் என்ன
செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்று
கணினிக்குப் படிப்படியாக உணர்த்த வேண்டும். இவற்றை ‘ஆணைகள்’ (Instructions)
என்கிறோம். ஒரு குறிப்பிட்ட செயலை முடிப்பதற்கான ஆணைகளின் தொகுதியை ‘நிரல்’
(Program) என்கிறோம். கணினியை இயக்கவும், கட்டுப்படுத்தவும், நாம் நினைத்தபடி
வேலைவாங்கவும், கணினிக்குள் செலுத்தப்படும் நிரல்களின் தொகுப்பை ‘மென்பொருள்’
(Software) என்கிறோம்.
வன்பொருள் உறுப்புகளும் அவற்றை
ஆட்டுவிக்கின்ற மென்பொருளும் இணைந்தே கணினி உருவாகிறது. மென்பொருள் இணையாத
வண்பொருள் பயனற்றது - (Hardware Without Software Useless), வன்பொருளுடன்
இணையாத மென்பொருள் பொருளற்றது - (Software without Hardware Meaningless).
தாய்க்கு அத்தகுதியை வழங்குபர் தந்தை, தந்தைக்கு அப்பெருமையைப் பெற்றுத்
தருவது தாய். உயிரின்றி உடல் தனித்து நடமாட முடியாது. உடலின்றி உயிர் தனித்து
நிலவ முடியாது. தாய்-தந்தை இணைபோல உடல்-உயிர் பிணைப்புபோல, வன்பொருளும் மென்பொருளும்
ஒன்று இன்னொன்றைப் பொருளுடையதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்கும் நிரப்பிகள் (Complements)
ஆகும். ‘வன்’, ‘மென்’ என இருப்பதால் ஒன்றுக்கொன்று எதிரானவை என்று கருதக்கூடாது.
அந்த வகையில் பார்த்தால் வன், மென் என்னும் சொற்கள் சற்றும் பொருத்த மற்றவை
எனலாம்.
கணினியை ஒரு தனித்த சாதனம் என்று
கூறுவதைவிட ஒரு முறைமை (System) எனக் கூறுவதே பொருந்தும் ஒரு முறைமையின்
பொதுவான பண்புக் கூறுகளை ஏற்கெனவே நாம் அறிந்துள்ளோம் முறைமையின் பண்புக்
கூறுகளைக் கணினியும் கொண்டுள்ளது. கணினி மூன்று முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளது.
உள்ளீட்டகம்
(Input Unit) |
வெளியீட்டகம்
(Output Unit) |
மையச் செயலகம்
(Central Processing Unit) |
கணினிச் செயலாக்கத்துக்குத் தரவுகளையும்
ஆணைகளையும் உட்செலுத்த உள்ளீட்டகம் உதவுகிறது. நமக்குத் தேவையான விடையைப்
புரியும் வடிவில் வெளியீட்டகத்தில் கணினி வெளிப்படுகிறது. தரவுகளைச் செயலாக்கி
வேண்டி தகவலைப் பெற மையச் செயலகம் உதவுகிறது. மையச் செயலகம் என்பது நுண்செயலி,
நினைவகம், சேமிப்பகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
கணினியின் மூன்று பகுதி தற்காலத்தில்
பயன்படுத்தப்படுகின்ற பல்வேறு வன்பொருள் கருவிகள் பற்றி அடுத்துவரும் பிரிவுகளில்
படிப்போம்.
4.4.1
உள்ளீட்டுச் சாதனங்கள் (Input Devices)
கணினியில் தரவுகளையும் ஆணைகளையும்
உள்ளீடு செய்வதற்கு விசைப்பலகை, சுட்டி உட்பட பல்வேறு வகையான கருவிகள் பயன்பாட்டில்
உள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
விசைப்பலகை
(Keyboard)
மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் உள்ளீட்டு விதனம் விசைப்பலகை ஆகும். பல்வேறு
வடிவமைப்பிலான விசைப்பலகைகள் இருந்த போதிலும், குவெர்ட்டி (QWERTY) வகை விசைப்பலகையே
நிலைபெற்றுள்ளது. ‘குவெர்ட்டி’ என்பது விசைப்பலகையில் முதல் வரிசையிலுள்ள
எழுத்துகள் ஆகும். அகரவரிசை எழுத்துகள், எண்கள், நிறுத்தற் குறிகள், கணிதக்
குறியீடுகள், பிற சிறப்புக் குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. ஓர் ஆவணத்தில்
தகவலைப் பதிவுசெய்யப் பயன்படும் திருத்து விசைகளும் (Edit Keys) மற்றும்
சில கட்டுப்பாட்டு விசைகளும் உள்ளன. இவைதவிர பணிவிசைகள் (Function Key) எனப்படும்
சிறப்பு விசைகளும் F1 முதல் F12 வரை மேல்வரிசையில் இடம் பெற்றுள்ளன.
தொடக்க காலங்களில் 84 விசைகளும் கொண்ட விசைப்பலகையே பயன்பாட்டில் இருந்தது.
பிறகு 101 விசைகள் கொண்ட விசைப்பலகைகள் உருவாக்கப்பட்டன. இப்போது 104, 110
விசைகள் கொண்டுள்ள விசைப் பலகைகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கணினியில்
இசைப்பாடல் கேட்டும் போதும், திரைப்படம் காணும் போதும் பயன்படக் கூடிய சிறப்பு
விசைகள் கொண்ட ‘பல்லூடக விசைப்பலகை’ (Multimedia Keyboard), இணையத்தில் உலாவரும்
போது பயன்படும் சிறப்பு விசைகள் கொண்ட ‘இணைய விசைப்பலகை’ (Internet Keyboard)
ஆகியவையும் பயன்பாட்டில் உள்ளன. கணினியோடு வயர்மூலம் இணைப்பு இல்லாமல் செயல்படும்
வயரிலா விசைப்பலகைகளும் (Wireless Keyboard) வந்துவிட்டன.
சுட்டி
(Mouse)
இன்றைய மேசைக் கணினிகளில் பெருமளவு பயன்படும் உள்ளீட்டுச் சாதனம். சிறியதாய்,
வால்போன்ற வயர் இணைப்புடன் இருந்ததால் ஆங்கிலத்தில் ‘மவுஸ்’ எனப் பெயரிட்டனர்.
மேசையின் மீதுள்ள திண்டின்மீது அங்கும் இங்கும் மெல்ல நகர்த்தினால், அதன்
அடிப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கோளம் உருளும். அப்போது கணினித் திரையில்
ஓர் அம்புக்குறி அங்கும் இங்கும் நகரும். இந்த அம்புக் குறியைத் திரையிலுள்ள
குறிப்பிட்ட படச் சின்னம் (Icon) அல்லது பட்டித்தேர்வு (Menu Option) மீது
நகர்த்தி, சுட்டியின் தலைப்பகுதியிலுள்ள பொத்தானை அழுத்தக் குறிப்பிட்ட நிரலை
இயக்கலாம்; கோப்புறைகளைத் (Folders) திறந்து பார்க்கலாம்; ஆவணங்களைத் திறந்து
படிக்கலாம். ஆவணத்தில் விவரங்களைப் பதிவு செய்யும் பணிதவிர பிற பணிகள் அணைத்தையும்
சுட்டிச் சொடுக்கு மூலமே நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
தலைப்பகுதியில் இரண்டு பொத்தான், மூன்று பொத்தான் சுட்டிகள் உள்ளன. நடுப்பொத்தானுக்குப்
பதிலாகச் சிறிய உருளை உள்ள சுட்டிகள் இப்போது பெருமளவு பயன்பாட்டில் உள்ளன.
கண்ணாடித் தண்டின்மீது ஒளிக்கதிரில் இயங்கும் ஒளிவச் சுட்டி (Optical Mouse),
வயர் இணைப்பின்றிச் செயல்படும் வயரிலாச் சுட்டி (Wireless Mouse) ஆகியவையும்
புழக்கத்தில் உள்ளன. மடிக் கணினிகளில் ‘கோளச் சுட்டி’ (Track Ball) பயன்படுத்தப்படுகிறது.
வரைபட்டிகைக் கணினிகளில் தொடுசுட்டி (Touch Mouse) உள்ளது. குறிப்பிட்ட செவ்வகப்
பகுதியில் விரலால் தடவினால் போதும். திரையில் அம்புக்குறி நகரும்.
ஒளிப்பேனா
(Light Pen)
பெயருக்கு ஏற்ப பேனா வடிவில் இருக்கும். கையகக் கணினி; உள்ளங்கைக் கணினி,
வரைபட்டிகைக் கணினி ஆகியவற்றில் ஒளிப்பேனா உள்ளீட்டுக் கருவியாய்ப் பயன்படுகிறது.
திரையின் மீதுள்ள சின்னத்தை அல்லது பட்டித் தேர்வைத்தொட்டு நிரலை இயக்க முடியும்
; கோப்புறையைத் திறக்க முடியும் ; ஆவணத்தைத் திறக்க முடியும். தாளில் பேனா
கொண்டு எழுதுவது போலவே, திரையில் எழுதுவதன் மூலம் ஆவணத்தில் விவரங்களைப்
பதியவும் முடியும்.
வருடி
(Scanner)
அச்சிட்ட ஆவணத்தை அல்லது ஒரு படத்தை வருடியின் கண்ணாடித் தாளில் வைத்து மூடி
அத்தகவலை கணினித் தகவலாய் மாற்றி, கணினியில் ஒரு கோப்பாகச் சேமிக்க முடியும்.
அச்சிடப்பட்ட ஒரு நூலை மீண்டும் கணினியில் விசைபதிவு (Typing) செய்யாமல்,
வருடி மூலமாக அப்படியே கணினிக் கோப்பாக மாற்றிவிட முடியும். அதில் திருத்தங்கள்
செய்து, புதியன சேர்த்து, அடுத்த பதிப்பை வெளியிட முடியும்.
காந்த
மையெழுத்துப் படிப்பி (Magnetic Ink character Reader)
தனிச் சிறப்பான காந்த மையில் அச்சிட்ட விவரங்கள் மீது இக்கருவியால் வருடினால்,
அந்த விவரத்தைப் படித்து, கணினிக்கு உள்ளீடாகத் தரும். வங்கிகளில் காசோலைகளைப்
படித்தறிய இக்கருவி பயன்படுகிறது.
பட்டைக்
குறிமுறை படிப்பி (Bar Code Reader)
சிறப்பு அங்காடியில் அனைத்துப் பொருள்களையும் பொட்டலத்தில் போட்டு அதன்மீது
சிறிய சிட்டையை (Lable) ஒட்டியிருப்பார்கள். அச்சிட்டையில் செவ்வக அமைப்பில்,
வெவ்வேறு தடிமன் அளவுகளில், கறுப்புப் பட்டைக் கோடுகள் காணப்படும். இக்கோடுகள்
பொருளின் குறியெண், விலையைக் குறிக்கின்றன. இதன்மீது ஒரு சிறிய கருவியைக்
கொண்டு வருடி அத்தகவலை கணினிக்குள் செலுத்த முடியும். அல்லது அக்கோடுகளை
ஒரு கருவியிலுள்ள உணரி (Sensor) முன் காண்பித்தாலே போதும். கணினி அப்பொருளுக்கான
விலைச் சிட்டையைத் தயாரித்து விடும்.
குறி உணர்ந்து
படிப்பி (Mark Sense Reader)
சில சிறப்புவகை அட்டைகளில் பென்சில் அல்லது பேனாவால் குறியிட்ட தகவலை அடையாளம்
கண்டு கணினிக்கு அளிக்கும். அட்டையில் எந்த இடத்தில் குறி உள்ளது என்பதைப்
பொறுத்துத் தகவல் வேறுபடும். எடுத்துக்காட்டாக, போட்டித் தேர்வுகளில், கொடுக்கப்பட்ட
நான்கு பதில்களில் சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் முறையில் அமைந்த விடைத்தாள்களைத்
திருத்த இக்கருவி பயன்படுகிறது.
பிற கருவிகள்
இப்போதெல்லாம் குரலாணைகளைக் கணினி புரிந்து கொள்கிறது. ஒலிவாங்கியில் (Mike)
பேசுவதை அப்படியே கணினி ஆவணமாய் மாற்றித் தருகிறது. பேச்சு, பாட்டு ஆகியவற்றைக்
கணினிக் கோப்பாகச் சேமிக்கலாம். எனவே ஒலிவாங்கியும் உள்ளீட்டுக் கருவியே.
தானியங்கு காசாள் பொறி (Automatic Teller Machine - ATM), கடன் அட்டை / பற்று
அட்டை படிப்பி (Credit / Debit Card Readers), சூட்டிகை அட்டை படிப்பி (Smart
Card Reader) ஆகியவையும் ஒருவகையில் உள்ளீட்டுக் கருவிகளே.
4.4.2
வெளியீட்டுச் சாதனங்கள் (Output Devices)
கணினி, கணித்துச் சொல்லும் விடைகளைப்
பயனர்களுக்குப் புரியும் வண்ணம் வெளியிட, வெளியீட்டுச் சாதனங்கள் பயன்படுகின்றன.
கணினியோடு பிரிக்க முடியாத அங்கமாக இணைந்திருக்கும் திரையகம் (Monitor),
அலுவலகக் கணினிகளில் கட்டாயமாக இணைக்கப்பட்டிருக்கும் அச்சுப்பொறி (Printer)
உட்படப் பல்வேறு வெளியீட்டுச் சாதனங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
திரையகம்
(Monitor)
தொடக்க காலங்களில் கறுப்பு -
வெள்ளைத் திரையகங்களே பயன்பாட்டில் இருந்தன. இவற்றை ஒற்றை நிறத்திரையகம்
(Monochrome Monitor) என்றும் கூறுவர். வெள்ளை அல்லது இளம்பச்சை நிறத்தில்
எழுத்துகள் தோற்றமளிக்கும். இப்போது வண்ணத் திரையகங்கள் பல அளவுகளில் கிடைக்கின்றன.
15 அங்குல, 17 அங்குல மூலைவிட்டமுள்ளவைப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
வண்ணத் திரையகங்கள் இஜிஏ, விஜிஏ, எஸ்விஜிஏ, அனலாக், டிஜிட்டல் எனப் பல்வேறு
கட்டங்களைக் கடந்து வந்துள்ளன.
தொலைக்காட்சிப் பெட்டிபோலத் தோற்றமளிக்கும்
திரையகங்கள் ‘சிஆர்டீ’ (CRT- Cathod Ray Tube) வகையைச் சேர்ந்தவை. மடிக்
கணினிகளில் இருக்கும் தட்டை வடிவத் திரையகங்கள் ‘எல்சிடி’ (LCD - Liquid
Crystral Display) வகையைச் சேர்ந்தவை. இப்போது மேசைக் கணினிக்கும் தட்டை
வடிவத் திரையகம் பயன்படுத்தப் படுகிறது.
வெளியீட்டுக் கருவியாக மட்டுமின்றி
உள்ளீட்டுக் கருவியாகவும் செயல்படும் ‘தொடு திரைகள்’ (Touch Screens) இப்போது
புழக்கத்தில் உள்ளன. திரையில் தோன்றும் சின்னங்களை அல்லது பட்டித் தேர்வை
விரலால் தொட்டுணர்த்தினால் போதும். கணினி புரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்படும்.
ஏடீஎம் (ATM) மற்றும் ரயில் முன்பதிவு நிலையங்களில் இத்தகைய திரையகங்களைக்
காணலாம்.
மென்பொருள் வெளிப்பாடுகளைப் பயனர்க்குக்
காட்டுவதோடு மட்டுமின்றி, கணினியில் உள்ளீடு செய்யும் விவரங்களையும் ஆணைகளையும்
கூட திரையில் காட்டும். ஆவணங்களில் உள்ளீடு செய்து நிரந்தரமாகச் சேமிக்கும்
முன்பாக அல்லது அச்சிடும் முன்பாகத் திருத்தங்கள் செய்து கொள்ள முடிகிறது.
ஆணையை இயக்கும் முன்பாக அதிலுள்ள பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம். கணினியின்
செயலாக்கப் பணிகளைக் கண்காணிக்கும் கருவியாகவும் திரையகம் விளங்குகிறது.
அச்சுப்பொறி
(Printer)
கணினியில் தரவுகளை அலசி உருவாக்கப்படும்
அறிக்கைகளையும், ஆவணங்களையும் தாளில் அச்சிட்டுப் பாதுகாக்க அச்சுப்பொறி
பயன்படுகிறது. அச்சுப்பொறிகளில் பலவகை உள்ளன. அவற்றை தொட்டச்சுப் பொறிகள்
(Impact Printers), தொடா அச்சுப் பொறிகள் (Non - Impact Printers) என இரு
பிரிவாகப் பிரிக்கலாம்.
தொட்டச்சுப் பொறிகளில், மைதடவிய
நாடா மீது புடைத்த எழுத்து வடிவம் அல்லது கூர்மையான ஊசி முனைகளால் அழுத்திப்
பின்னால் இருக்கும் தாளில் எழுத்துகள் பதியப் படுகின்றன. இவற்றுள், ஒரு நேரத்தில்
ஓரெழுத்தை மட்டுமே அச்சிடும் ‘எழுத்து அச்சுப்பொறிகள்’ (Character Printers)
என்று இரண்டு வகைகள் உள்ளன. புள்ளியணி அச்சுப்பொறி (Dot - Matrix Printers),
டெய்சி சக்கர அச்சுப்பொறி (Daisy Wheel Printer) ஆகியவை எழுத்து அச்சுப்
பொறிகள் ஆகும். சங்கிலி அச்சுப்பொறி (Chain Printer), உருளை அச்சுப்பொறி
(Dram Printer) ஆகியவை வரி அச்சுப் பொறிகளாகும்.
தொடா அச்சுப் பொறிகளில் மைத்துளி
அல்லது மைத்துகள்களைத் தூவி எழுத்துகள் அல்லது படங்கள் தாளில் பதியப் படுகின்றன.
அச்சு முனைகள் நேரடியாகத் தாளைத் தொடுவதில்லை. இதிலும் இரண்டு வகை உள்ளன.
மைபீச்சு அச்சுப்பொறிகளில் (Inkject Printers) மிகச் சிறிய துளையுடைய அச்சு
முனைகள் வழியாக மைத்துளிகள் பீச்சப்பட்டு தாளில் எழுத்துகளும் படங்களும்
பதியப்படுகின்றன. இன்றைக்கு விற்பனையில் உள்ள அச்சுப் பொறிகளிலேயே இவ்வகை
அச்சுப் பொறிகளே விலை மலிவானவை. ஆனால் தாளில் ஒரு பக்கம் அச்சிட ஆகும் செலவு
வேறெந்த அச்சுப் பொறிகளையும் விட அதிகம். ஒளி அச்சுப் பொறிகளில் (Laser Printers)
லேசர் ஒளிக்கதிரை ஊடுருவச் செய்து, மைத்துகள்களைத் தாளில் தூவி எழுத்துகளும்
படங்களில் பதியப்படுகின்றன. பிற அச்சுப் பொறிகளைவிடவும் மிகவும் தெளிவான
அச்சு நகல்களை இது வழங்குகிறது. ஆனால், பிறவற்றைவிட விலை அதிகம். ஒருபக்கம்
அச்சிட ஆகும் செலவு புள்ளியணியைவிட அதிகம். மைபீச்சியை விடக் குறைவு.
வரைவி
(Plotter)
பெரும்பாலும் கட்டட மற்றும் பொறியில்
வரைபடங்களை அச்சிடப் பயன்படுகிறது. மிகப்பெரிய மேசை அளவிலான தாளில்கூட அச்சிட
முடியும். பலவண்ணத்தூரிகைகள் வைக்கப்பட்டிருக்கும். கணினியின் கட்டளைக்கேற்ப
அத்தூரிகைகளைக் கைபோன்ற அச்சு முனைகள் எடுத்து வரையும். இவற்றின் விலை மிக
அதிகம் (பல லட்சங்கள்).
ஒலிபெருக்கிகள்
(Speakers)
கணினியில் இசைப்பாடல்களைக் கேட்டு
மகிழ முடிகிறது. திரைப்படங்களைக் கண்டு களிக்க முடிகிறது. உரையாடலும் பாடலும்
ஒலிபெருக்கிகள் வழியாகவே வெளிப்படுகிறது. ஓர் ஆவணத்திலுள்ள விவரங்களைப் படித்துக்
காட்டச் சொன்னால் கணினி படித்துக் காட்டுகிறது. படித்துக் காட்ட ஆண் குரல்
அல்லது பெண் குரல் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உலகின்
எங்கோ ஒரு மூலையில் இருப்பவரின் பேச்சைக் கணினி வழியாகக் கேட்க முடியும்.
எனவே கணினியுடன் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகளையும் ஒருவகையில் வெளியீட்டுக்
கருவியாகவே கொள்ள வேண்டும்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
உலகின் முதல்
கணினி எது? |
2. |
சொந்தக் கணினியின்
வகைகள் யாவை? |
3. |
எவை
வன்பொருள் எனப்படுகின்றன? |
4. |
மடிக்கணினி என்று
ஏன் அழைக்கப்படுகிறது? |
5. |
இன்றைய
மேசைக் கணினியில் பெருமளவில் பயன்படுத்தும் சிறிய அளவு சாதனம் எது? |
|