5.1
கணினியும் மென்பொருளும்
மின்னணுச் சில்லுகளும் (Chips)
திரையகமும் (Manitor), விசைப் பலகையும் (Keyboard) ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு
வன்பொருள் குமுமம், கணினி எனச் செல்வாக்குப் பெற்று விளங்கக் காரணமாகத் திகழ்வது
மென்பொருள் என்பதை அறிவோம். மென்பொருள் என்றால் என்ன என்கிற விளக்கத்தையும்
அதன் வகைப்பாடுகளையும் விளக்கமாகக் காண்போம்.
5.1.1
மென்பொருள் என்றால் என்ன?
மென்பொருள் என்றால் என்ன என்பது
பற்றியும், கணினி இயங்க அதன் தேவை பற்றியும் சென்ற பாடத்தில் சுருக்கமாகப்
பார்த்தோம். அத்தகவலின் விளக்கத்தை இங்கே விரிவாகக் காண்போம்.
உங்கள் வீட்டில் ஒரு வேலைக்காரப்
பையன் இருக்கிறான். அவன் அதே பகுதியில் பிறந்து வளர்ந்தவன், படித்தவன். அப்பகுதியில்
உள்ள அஞ்சல் நிலையம் சென்று ஓர் அஞ்சல் அட்டை வாங்கிவர அவரைப் பணிக்கிறீர்கள்.
“ஓர் அஞ்சல் அட்டை வாங்கி வா” என்று மட்டும் சொன்னால் போதும். ஆனால், கிராமத்திலிருந்து
ஒரு பையனை அழைத்து வந்து வேலைக்கு வைத்துள்ளீர்கள். அவனை அஞ்சல் அட்டை வாங்கிவர
அனுப்ப வேண்டும். அவனிடம் அஞ்சல் நிலையத்துக்குச் செல்கின்ற பாதையை விளக்கிக்
சொல்ல வேண்டும். நகரத்தின் போக்குவரத்து நெரிசலில் அவன் எவ்வாறு எச்சரிக்கையோடு
சாலையைக் கடந்து செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும். அதன்பிறகே அவனைப்
பணிக்க வேண்டும் அந்த வேலைக்காரப் பையன் சற்றே மக்குப் பையனாக இருந்து, நீங்கள்
கொடுக்கின்ற வேலையும் சிக்கலானதாக இருக்கும் எனில், அவனுக்கு அந்த வேலையைப்
பற்றியும், அதை முடிக்க வேண்டிய முறைகளைப் பற்றியும் வரிவாகவும் விளக்கமாகவும்
அறிவுறுத்த வேண்டும். வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெற்று, பெங்களூர் செல்ல
ரயில் பயணத்துக்கு முன்பதிவு செய்யச் சொல்கிறீர்கள். “இந்த வண்டியில் இடம்
இல்லையேல் அந்த வண்டியில், இந்த வகுப்பில் இல்லையேல் அந்த வகுப்பில் பயணச்சீட்டுப்
பதிவுசெய்” என்றெல்லாம் விளக்கமாகச் சொல்ல வேண்டியிருக்கும்.
ஆறறவு பெற்ற மனிதனிடம் ஒரு வேலை
வாங்குவதற்கே இவ்வளவு விளக்கமும் அறிவுரையும் அறிவுறுத்தமும் தேவைப்படுகிறது
எனில், உயிரும் உணர்வும் அறிவும் ஆற்ற ஜடப்பொருளாய்க் கிடக்கும் வன்பொருளிடம்
வேலை வாங்கவேண்டும் எனில், வேலை வாங்குபவர் மிகவும் திறமை பெற்றவராய் விளங்க
வேண்டும். ஓர் எந்திர மனிதனைச் சாலையைக் கடககச் செய்வதற்கு “பத்திரமாகச்
சாலையைக் கடந்துபோ” என்று சொன்னால் போதாது.
சாலையைக் கடக்கும் முன் வலப்பக்கம் பார்.
|
வாகனங்கள் வந்து கொண்டிருந்தால் காத்திரு. |
வாகனம் எதுவும் வராத போது, |
சாலையில் மஞ்சள் கோடுவரை கடந்துசெல். |
இப்போது இடப்பக்கம் பார். |
வாகனங்கள் வந்துகொண்டிருந்தால் காத்திரு. |
வாகனம் எதுவும் வராதபோது |
சாலையைக் கடந்துச் செல். |
இவ்வாறு, தெளிவாக, படிப்படியாக
எடுத்துரைக்க வேண்டும். கணினியிடம் எந்தவொரு வேலை வாங்கவும், கணினிக்குப்
புரிகின்ற மொழியில், மேற்கண்டவாறு ஆணைகளை (Instructions) வழங்க வேண்டும்.
இவ்வாறு ஒரு சிறிய பணியைச் செய்து முடிப்பதற்குரிய படிப்படியான ஆணைகளின்
தொகுதியை நிரல் (Program) என்கிறோம்.
“ஐந்தையும் மூன்றையும் கூட்டிச்
சொல்லும் பணியைக் கணினியைச் செய்விக்க ஒரு சிறிய நிரல் போதும். ஆனால் இன்றைக்கு
கணினி மூலம் நாம் செய்து முடிக்கும் பணிகள் இதைப் போன்ற சிறிய பணிகள் அல்ல.
பொதுவாக மனிதனால் செய்வதற்கு எளிதாக இல்லாத, மிகவும் சிக்கலான பணிகளைச் செய்து
முடிப்பதற்கே கணினியைப் பயன்படுத்துகிறோம். அத்தகைய பணிகளைச் செய்ய ஒரு சிறிய
நிரல் போதாது. மிகப்பெரிய நிரலாக எழுதி, அது சரியாகச் செயல்படுகிறதா என்பதைப்
பரிசோதித்துப் பார்ப்பது கடினம். எனவே, சிக்கலான பெரிய பணியைச் சிறு சிறு
பணிக் கூறுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பணிக் கூறையும் ஒரு சிறிய நிரலின் மூலம்
நிறைவேற்றி முடிப்பதே எளிதானது. அவ்வாறு ஒரு சிக்கலான பணியைக் கணினி மூலம்
செய்து முடிப்பதற்கான நிரல்களின் தொகுப்பையே மென்பொருள்
(Software) என்று அழைக்கிறோம்.
5.1.2
உயிரூட்டுவதும் பயன்கூட்டுவதும்
கணினிக்கு மின்சாரத்தை வழங்கியதும்,
அதாவது கணினியை இயக்கியதும், தன்னுடைய பாகங்கள் அனைத்தையும் பரிசோதனை செய்தபின்,
பயனர் (User) இடும் பணிகளைச் செய்வதற்குத் தயார் நிலையில்
இருப்பதைத் தெரிவிக்கிறது. அதன்பிறகு, கணினியில், ஏற்கனவே சேமித்து வைத்துள்ள
ஓர் ஆவணத்தைத் திறந்து படிக்கலாம். அதில் திருத்தங்கள் செய்து அச்சிடலாம்.
புதிய ஆவணம் ஒன்றை விசைப்பதிவு (Type-in) செய்து சேமிக்கலாம். அலுவலக ஊழியர்களின்
சம்பளப் பட்டியலையும், வருமான வரிக்கணக்கையும் தயார் செய்யலாம். நிறுவனத்தின்
உற்பத்தி, விற்பனை, சரக்கிருப்பு மற்றும் ஆண்டிறுதி லாப-நட்ட அறிக்கையையும்
தயாரிக்கலாம்.
கணினி உயிரூட்டி, கணினிப் பாகங்களின்
இயக்கத்தை மேற்பார்வையிட்டு, கணினியுடன் இணைக்கப்பட்ட புறச்சாதனங்களின் செயல்பாடுகளை
கண்காணித்து, பயனர் இடும் பணிகளை முறைப்படி செய்து முடிப்பதற்குமான மென்பொருள்
கணினியில் நிரந்தரமாகப் பதிவுசெய்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு கணினியை விலை
கொடுத்து வாங்கும்போது இந்த மென்பொருளும் சேர்த்தே வழங்கப்படுகிறது. கணினியை
இயக்குவதற்கும், கணினியில் ஏராளமான தகவல்களைச் சேமித்து வைத்துக் கையாளவும்,
வேறுபல பயன்பாடுகளை (Applications) இயக்குவதற்கும் இந்த மென்பொருள் இருக்க
வேண்டியது கட்டாயத் தேவையாகும். இந்த மென்பொருளை இயக்க முறைமை
(Operating system) என்கிறோம். இது பற்றி விரிவாகப் பிறகு காண்போம்.
கட்டாயமாக இருக்க வேண்டிய மென்பொருள்
தவிர, பயனரின் தேவைகளுக்கு ஏற்ப பிற மென்பொருள்களையும் வாங்கி கணினியில்
நிரந்தரமாகப் பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியும. வீட்டில், பள்ளி, கல்லூரிகளில்,
அலுவலகங்களில், வணிக நிறுவனங்களில் பயன்படுத்தக் கூடிய பல்வேறு பயன்பாடுகளுக்குத்
தேவையான மென்பொருள்களை, மென்பொருள் நிறுவனங்கள் உருவாக்கி, வட்டுகளில் பதிவு
செய்து விற்பனை செய்கின்றன. இவற்றைப் பயன்பாட்டு மென்பொருள் என்கிறோம்.
இத்தகைய மென்பொருள்களை எத்தனை வேண்டுமானாலும் கணினியில் வைத்துக் கொள்ளலாம்.
இவை எதுவுமே இல்லாமல் இயக்க முமைமையுடன் மட்டுமே கணினியைப் பயன்படுத்தவும்
முடியும்.
5.1.3
தொகுப்பும் கூட்டுத் தொகுப்பும்
ஒரு பயன்பாட்டு மென்பொருள் என்பது
பல்வேறு கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, ஆவணங்களை
உருவாக்கி அச்சிட உதவும் ஒரு மென்பொருள், தலைப்புகளையும் பத்திகளையும் வடிவமைத்தல்,
பக்கங்களையும் அத்தியாயங்களையும் ஒருங்கமைத்தல், எழுத்துப்பிழை, சொற்பிழை,
இலக்கணப் பிழைகளைக் கண்டறிந்த திருத்துதல் போன்ற பல்வேறு கூறுகளைக் கொண்ட
ஒரு தொகுப்பாக இருக்கும். எனவே, இது போன்ற தொகுப்பு மென்பொருளைப் பயன்பாட்டுத்
தொகுப்பு (Application Package) என்று பெயரிட்டு அழைப்பது மரபு.
ஓர் அலுவலகத்தில் பல்வகைப்பட்ட
பணிகள் நடைபெறுகின்றன. அலுவலகத்தின் கடிதப் போக்குவரத்து மற்றும் ஆவணப் பரிமாற்றம்,
சம்பளக் கணக்கு, வரவு-செலவுக் கணக்கு, வருமான வரிக்கணக்கு மற்றும் லாப-நட்டக்
கணக்கு போன்ற நிதி கணக்கியல் (Finance and Accounting) பணிகள்; பொருள் உற்பத்தி,
விற்பனை, சரக்கிருப்பு போன்ற தரவுகளின் அடிப்படையில் மேலாண்மைக்கு உதவும்
அறிக்கைகளைத் தயார் செய்தல்; ஒரு திட்டப் பணி பற்றிய கருத்துகளை பார்வையாளர்களுக்கு
முன்வைத்தல்-இத்தகைய ஒவ்வொரு பணிக்கும் ஒரு பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு
இருக்கின்றது. இதுபோல் ஓர் அலுவலகத்துக்குத் தேவையான பயன்பாட்டுத் தொகுப்புகள்,
தனித்தனியே உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன், அவை அனைத்தும் ஒங்கிணைக்கப்பட்டு,
ஒரு கூட்டுத் தொகுப்பாகவும் (Suite) வெளியிடப்படுகிறது. இது, அலுவலகக்
கூட்டுத் தொகுப்பு (Office Suite) என்று அழைக்கப்படுகிறது.
பல பயன்பாட்டுத் தொகுப்புகள்
ஒருங்கிணைக்கப்பட்டு கூட்டுத் தொகுப்பாக வெளியிடப்படுவதில் பல்வேறு நன்மைகள்
உள்ளன. அனைத்து பயன்பாடுகளுக்கும் பொதுவாக விளங்கும் சில மென்பொருள் கருவிகளை
(Software Tools) பயன்படுத்திக் கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, எழுத்துப்பிழைகளையும்
இலக்கணப் பிழைகளையும் பரிசோதித்துத் திருத்துதல் (Spelling and Grammar check)
அனைத்துப் பயன்பாடுகளிலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கருவி ஆகும். ஒரு
தொகுப்பில் உள்ள தரவுகளை (Data) இன்னொரு தொகுப்பில் பயன்படுத்திக் கொள்ள
முடியும். ஆவண உருவாக்கத் தொகுப்பில் தயாரிக்கப்பட்ட ஓர் ஆவணத்தை, பணியாளர்களின்
தரவுத்தளத்தில் (Employee Database) உள்ள பணியாளர்களின் முகவரிகளுக்குத்
தனித்தனியே அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய முடியும்.
5.1.4
இடைப்பொருள்
கணினியின் வன்பொருள்களைப் பற்றிப்
படிக்கும்போது, ரோம் (ROM - Read Only Memory) என்னும் அழியா நினைவகம் (Non-Volatile
Memory) பற்றிப் படித்தோம். ரோம் என்பது ஒரு மின்னணுச் சில்லு (chip). இதில்
பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள், மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னும் அழிந்து
போகாமல் நிரந்தரமாக இருக்கும். இந்த சில்லுவில்தான் மின்சாரத்தை வழங்கியதும்
கணினி இயக்கத்தைத் தொடக்கி வைக்கும் நிரல் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்தச்
சில்லுவை உற்பத்தி செய்யும் போதே இதில் நிரல்களை உட்பொதித்து வைத்திருப்பர்.
ஆக, இந்த ரோம் சில்லுவை வெறும் வன்பொருள் என்று வரையறுக்க
முடியாது. நிரலை கொண்டிருப்பினும் சில்லுவை மென்பொருள்
வகையில் உட்படுத்த முடியாது. வன்பொருளும் மென்பொருளும் பிரிக்க முடியாமல்
ஒருங்கிணைந்துள்ள இச்சில்லுவை இடைப்பொருள் (Firm ware)
என்றழைக்கின்றனர்.
5.1.5
மென்பொருள் வகைகள்
நிரல்களின் தொகுப்பு
எனவும், இயக்க முறைமை எனவும், பயன்பாட்டுத் தொகுப்பு
எனவும், கூட்டுத் தொகுப்பு எனவும் மென்பொருளின் பல்வேறு
பரிணாமங்களைப் பார்த்தோம். என்றாலும், கணினி மென்பொருளை முப்பெரும் பிரிவுகளில்
அடக்கலாம்.
1. |
முறைமை மென்பொருள் (System
Software) |
2. |
பயன்பாட்டு மென்பொருள் (Application
Software) |
3. |
கணினி மொழி மென்பொருள் (Computer Language
Software) |
கணினி மொழி மென்பொருளை முறைமை
மென்பொருளில் உள்ளடக்கி, மென் பொருள்களை முறைமை மென்பொருள், பயன்பாட்டு
மென்பொருள் என இருபெரும் பிரிவுகளில் வகைப்படுத்துவாரும் உளர்.
முறைமை மென்பொருள் என்பது
இயக்க முறைமை (Operating System) மென்பொருளையும், இயக்க முறைமையோடு உள்ளிணைக்கப்
பட்ட முறைமைப் பயன்கூறு (System Utility) மென்பொருள்களையும் உள்ளடக்கியதாகும்.
இயக்க முறைமை என்பது கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய
மென்பொருள் எனப் பார்த்தோம். முறைமைப் பயன்கூறுகள், இயக்க முறைமையின் செயல்
எல்லையை விரிவாக்குகின்ற கூடுதல் நிரல்களாகும் (Additional Programs). அவை
இல்லாமலும் கணினியை இயக்க முடியும்.
பயன்பாட்டு மென்பொருள்களை, வீட்டுப்
பயன்பாடுகள், அலுவலகப் பயன்பாடுகள், வணிகமுறைப் பயன்பாடுகள், இணையப் பயன்பாடுகள்
என மேலும் உட்பிரிவுகளாக வகைப்படுத்த முடியும். இவை தனித்த நிரல்களாகவும்,
பயன்பாட்டுத் தொகுப்பாகவும், தொகுப்புகள் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டுத் தொகுப்பாகவும்
வெளியிடப்படுகின்றன.
கணினியைச் செயல்பட வைக்கும் ஆணைகளை
வழங்க - அதாவது கணினியோடு உறவாட - கணினி மொழிகள் பல உருவாக்கப்பட்டுள்ளன.
மனிதனுக்கு எளிதில் புரியும் கணினி மொழி ஆணைகளையும் நிரல்களையும் கணினிக்கும்
புரியும் வண்ணம் எந்திர மொழியில் மொழிபெயர்த்துத் தரும் மென்பொருள்களை கணினி
மொழி மென்பொருள் என வகைப்படுத்துகிறோம். இத்தகைய மொழி-பெயர்ப்பிகளை
(Language Translators) , சில்லுமொழி பெயர்ப்பி (Assembler), ஆணை பெயர்ப்பி
(Interpreter), நிரல் பெயர்ப்பி (Complier) என மேலும் வகைப்படுத்தலாம்.
மேற்கண்டவாறு வகைப்படுத்தப்படும்
மென்பொருள்களின் ஒவ்வொரு வகைப் பிரிவு பற்றியும் இனிவரும் பத்திகளில் விரிவாகக்
காண்போம்.
|