6.0 பாட முன்னுரை கணிப்பொறி பலவகையிலும் மனிதனைவிட மேம்பட்டு இருக்கிறது. வேகமாகத் துல்லியமாகக் கணக்கீடுகளைச் செய்துமுடிக்கும்; அதிகமான தகவலை நினைவு வைத்துக் கொள்ளும்; எவ்வளவு நேரம் வேலை செய்தாலும், ஒரே வேலையை எத்தனைமுறை செய்தாலும் மனிதனைப்போல் முணுமுணுக்காமல், சலிப்படை யாமல், விருப்பு வெறுப்பின்றிச் செயல்படும். ஆனாலும் கணிப்பொறிக்குத் தன்னறிவு கிடையாது. மனிதனைப்போல் சிந்திக்கும் ஆற்றல் கிடையாது. மனிதன் என்ன செய்யச் சொல்கிறானோ அதைமட்டுமே செய்யும். அந்த வகையில் கணிப்பொறியைப் பரமார்த்த குருவின் ஐந்தாவது சீடன் என்பர். பரமார்த்த குரு குதிரையில் செல்ல, மட்டி, மடையன், முட்டாள், மூடன் என்னும் நான்கு சீடர்களும் பின்தொடர்கின்றனர். குருவின் தலைப்பாகை கீழே விழ அதை நால்வரும் எடுத்துத் தராமலே செல்கின்றனர். குரு கடிந்துகொள்ள, “கீழே விழுந்ததை எடுத்து வரும்படி நீங்கள் சொல்லவில்லையே” என்கின்றனர். “இனி எது கீழே விழுந்தாலும் எடுத்துவர வேண்டும்” என ஆணையிட, அவ்வாறே சீடர்களும் தலைப்பாகையோடு சேர்த்துக் குதிரைச் சாணத்தையும் அள்ளி வருகின்றனர். குரு மீண்டும் கடிந்து கொண்டு, கீழே விழுவதில் எதையெல்லாம் எடுக்க வேண்டும் என ஒரு பட்டியல் தருகிறார். சற்றுத் தூரம் சென்றதும் குதிரை, குருவைக் கீழே தள்ளிவிட்டு ஓட, சீடர்கள் பட்டியலில் குறிக்கப்பட்ட குருவின் பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு, குருவைப் பள்ளத்திலேயே விட்டுச் செல்கின்றனர். குரு தன்னைத் தூக்கிவிடவில்லையே என்று சினங்கொண்டு கூச்சலிட, சீடர்களோ, “இந்தப் பட்டியலில் தங்கள் பெயர் இல்லையே” எனப் பணிவுடன் தெரிவித்தனர். இவர்களைப் போலத்தான் கணிப்பொறியும் செயல்படும். கணிப்பொறி என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே நன்கு சிந்தித்துப் பட்டியலிட்டுத் தரவேண்டியது மனிதனின் பொறுப்பாகும். ஒரு வீடு கட்டுவதற்கு முன்பாக ஒரு திட்டப்படம் தயாரித்துக் கொள்கிறோம். ஒரு நிகழ்ச்சியை நடத்தும்போது எந்த வரிசையில் என்ன செய்யவேண்டும் என்பதை நிகழ்ச்சி நிரலாக எழுதி வைத்துக் கொள்கிறோம். அதுபோல, ஒரு சிக்கலைத் தீர்க்கக் கணிப்பொறி மொழியில் நிரலை எழுதும் முன்பாக, முதலில் சிக்கல் தீர்வுக்கான தீர்வுநெறியை (Algorithm) வரையறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து, தீர்வுநெறியைச் செயல்படுத்தும் வழிமுறையைப் பாய்வுப் படமாக வரைந்து கொள்ளலாம். அல்லது போலிக் குறிமுறையாக எழுதிக் கொள்ளலாம். அதனடிப்படையில் நிரல் எழுதுவதும், சரிபார்ப்பதும் எளிது. இத்தகைய சிக்கல் தீர்க்கும் நுட்பங்களையும், கணிப்பொறி மொழியின் அடிப்படைக் கட்டளை அமைப்புகளையும் இந்தப் பாடத்தில் காண்போம். |