6.4 போலிக் குறிமுறை (Pseudo Code)

ஒரு சிக்கல் தீர்வுக்கான செயல்முறையை அல்லது ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளைப் பாய்வுப் படமாக வரைந்து காட்டுவதற்குப் பதிலாகப் போலிக் குறிமுறை மூலமாக எழுதியும் காட்டலாம்.

தீர்வுநெறியின் செயல்முறைகளை தமிழ் ஆங்கிலம் போன்ற இயற்கை மொழியிலேயே எழுதுகிறோம். கணிப்பொறி நிரலில் உயர்நிலைக் கணிப்பொறி மொழிக் கட்டளைகளை எழுதுகிறோம். ஆனால் போலிக் குறிமுறையின் சொல்தொடர்கள் ஆங்கில மொழித் தொடருக்கும் கணிப்பொறி மொழிக் கட்டளைகளுக்கும் இடைப்பட்டதாக இருக்கும்.

போலிக் குறிமுறையில் இடம்பெறும் கட்டளைகள் எந்தக் குறிப்பிட்ட கணிப்பொறி மொழியின் இலக்கணத்துக்கும் உட்படாதவை. எனினும் அதன் கட்டளைகள் கணிப்பொறி மொழிக் கட்டளைகள் போன்றே தோற்றமளிக்கும். கணிப்பொறி நிரலின் கட்டளைகளைக் ‘குறிமுறை’ (Code) என்றும் கூறுவர். கணிப்பொறி உயர்நிலை மொழி நிரலின் குறிமுறைபோலத் தோற்றமளிப்பதால் ‘போலிக் குறிமுறை’ (Pseudo Code) எனப் பெயர்பெற்றது. போலிக் குறிமுறைக் கட்டளைகளையும், சில சிக்கல்களுக்கான போலிக் குறிமுறைகளையும், போலிக் குறிமுறையின் பயன்களையும் இப்பாடப் பிரிவில் காண்போம்.

6.4.1 போலிக் குறிமுறைக் கட்டளைகள்

பாய்வுப் படத்தில் வடிவங்கள் மூலம் உணர்த்துகின்ற செயல்முறையின் தொடக்கம், முடிவு, உள்ளீடு, வெளியீடு, செயலாக்கத்தில் ஒப்பீடு, தீர்மானித்தல், திரும்பச் செய்தல் ஆகிய அனைத்துக்கும் இணையான போலிக் குறிமுறைக் கட்டளைகள் உள்ளன. அவற்றைக் கீழே காண்க:

1) start, end
2) if <condition> then <commands>
3) if <codition> then <commands> else <commands>
4) for <from value> to <to value> do <commands>
5) while <condition> do <commands>

தமிழில் இவ்வாறு எழுதலாம்:

1)
தொடங்கு, முடித்திடு
2)
நிபந்தனை <நிபந்தனை> எனில் <கட்டளை>
3)
நிபந்தனை <நிபந்தனை> எனில் <கட்டளை> இல்லையெனில் <கட்டளை>
4)
மதிப்பு <தொடக்க மதிப்பு> இதுவரை <இறுதி மதிப்பு> செய்க <கட்டளை>
5)
என்றிருக்கும்வரை <நிபந்தனை> செய்க <கட்டளை>

இந்த நான்கைந்து கட்டளை அமைப்புகளைக் கொண்டே அனைத்துச் செயல்முறைகளையும் எழுதிவிட முடியும் என்பதே போலிக் குறிமுறையின் சிறப்புக் கூறாகும்.

6.4.2 தீர்வுநெறியும் போலிக் குறிமுறையும்

ஒரு சிக்கலுக்கான தீர்வுநெறியை அடிப்படையாகக் கொண்டு பாய்வுப் படமும் வரையலாம், போலிக் கூறிமுறையும் எழுதலாம் எனப் பார்த்தோம். மூன்று எண்களின் சராசரி காணல், மூன்று எண்களில் பெரியது காணல், ஓர் எண் பகா எண்ணா எனக் காணல் ஆகிய மூன்று சிக்கல்களுக்குப் பாய்வுப் படம் வரைந்துள்ளோம். அத்தீர்வுகளை போலிக் குறிமுறையில் எழுதிப் பார்ப்போம்.

(1) மூன்று எண்களின் சராசரி காணல்:

start
read A, B, C
S = A + B + C
D = S / 3
print D
end

(2) மூன்று எண்களில் பெரியது காணல்:

start
read A, B, C
if A > B then
(
if A > C then
print A
else
print C
)
else
(
if B > C then
print B
else
print C
)
end

(3) ஓர் எண் பகாஎண்ணா எனக் காணல்:

start
read n
M = HN
D = 2
while D < M do
(
if D divides N
( print ‘N is not a prime!’
goto end
)
D = D + 1
)
print ‘N is a prime!’
end

போலிக் குறிமுறைகளை அவற்றுக்குரிய பாய்வுப் படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கவும்.

6.4.3 போலிக் குறிமுறையின் சிறப்புகள்

போலிக் குறிமுறையின் சிறப்புக் கூறுகளைக் கீழ்க்காணுமாறு பட்டியலிடலாம்:

  • தீர்வுநெறியிலுள்ள ஆங்கிலத் தொடர்கள் நீளமாக இருக்கும்; துல்லியமாக இருக்காது. கணிப்பொறி மொழிகளில் கட்டளைத் தொடர்கள் கறாராக இலக்கணப்படி அமைய வேண்டும். போலிக் குறிமுறையில் இந்த இரண்டு உறுத்தல்களும் கிடையாது.
  • மிகச்சில தொடரமைப்புகளே உள்ளன. அவையும் மிகச் சிறியவை. ஆனாலும் அவற்றைக் கொண்டே அனைத்துச் செயல்முறைகளையும் எழுதிவிட முடியும்.
  • ஒரே தொடரில் பல கூற்றுகளை ஒன்றிணைக்க வழக்கமான அடைப்புக் குறிகளை வழக்கமான பொருளில் பயன்படுத்த முடியும். உள்தள்ளல் (Indentation) மூலமாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுகளை ஒன்றுசேர்க்க முடியும்.
  • போலிக் குறிமுறையின் கட்டளைகளை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
  • போலிக் குறிமுறையை அடிப்படையாகக் கொண்டு கணிப்பொறி மொழியில் நிரல் எழுதுவது எளிது.