-
கணிப்பொறி
மூலமாக எந்தவொரு செயலைச் செய்து முடிக்கவும் ஏதேனும் ஒரு கணிப்பொறி மொழியில்
நிரல் (Program) எழுதிச் செயல்படுத்த வேண்டும். நேரடியாக நிரலை எழுதுவது
சற்றே கடினமான செயல். எனவே நிரல் எழுதும் முன்பாகச் சில முன்னேற்பாடுகளைச்
செய்துகொள்ள வேண்டும்.
-
முதலில்
சிக்கலைத் தெளிவாக வரையறுக்க வேண்டும். அதற்கான உள்ளீடு, வெளியீடு, செயலாக்கம்
ஆகியவற்றை முடிவுசெய்ய வேண்டும். அவற்றின் அடிப்படையில் சிக்கல் தீர்க்கும்
தீர்வுநெறியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு சிக்கலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட
தீர்வுநெறிகள் இருப்பின் சிறந்ததையே தேர்வு செய்ய வேண்டும்.
-
தருக்க
ரீதியான படிநிலைகளில் நெறிப்படுத்தி வரையறுக்கப்பட்ட வழி முறைகளைக் கொண்ட,
சிக்கலைத் தீர்ப்பதற்கான செயல்முறையே ‘தீர்வுநெறி’ (Algorithm) எனப்படும்.
தீர்வுநெறியின் படிநிலைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.
குழப்பமின்றிச் செயல்படுத்தும்படித் தெளிவாய் இருக்க வேண்டும். குறிப்பிட்ட
நினைவுப் பகுதியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்து முடிக்கும்படி
இருக்க வேண்டும்.
-
தீர்வுநெறி
கணிப்பொறி நிரல் எழுதுவதை எளிமைப்படுத்துகிறது. நிரல் சரியாகச் செயல்படுமா
என்பதைத் தீர்வுநெறியைப் பரிசோதித்துப் பார்ப்பதன்மூலம் அறிந்துகொள்ள
முடியும்.
-
ஒரு
சிக்கலுக்கான தீர்வைப் பாய்வுப் படமாக வரைய முடியும். பாய்வுப் படம்,
உள்ளீடு, வெளியீடு, செயலாக்கம், தீர்மானித்தல் ஆகியவற்றை உருவகிக்கும்
பட வடிவங்களைக் கொண்டு வரையப்படுவதாகும்.
-
பாய்வுப்
படம் சிக்கல் தீர்வுக்கான செயல்முறையைத் தெளிவாக வெளிப்படுத்தும்; பாய்வுப்
படம் துல்லியமானது; நமது எண்ணங்களை சரியாக உருவகப்படுத்துகிறது; கணிப்பொறி
நிரலைக் குழப்பமின்றி எழுத வழிகாட்டுகிறது.
-
நீண்ட
செயல்முறை அல்லது கணக்கீடுகளுக்குப் பாய்வுப் படம் பல பக்கங்களில் இருக்கும்.
அதைப் புரிந்துகொள்வது கடினம். எனவே பெரிய கணக்கீடுகளுக்குப் பெரும்பாலும்
பாய்வுப் படங்களைப் பயன்படுத்துவ தில்லை.
-
ஒரு
சிக்கலுக்கான தீர்வைப் போலிக் குறிமுறையிலும் எழுதிக் காட்ட முடியும்.
போலிக் குறிமுறையின் சொல்தொடர்கள் ஆங்கில மொழித் தொடருக்கும் கணிப்பொறி
மொழிக் கட்டளைகளுக்கும் இடைப்பட்டதாக இருக்கும்.
-
பாய்வுப்
படத்தில் வடிவங்கள் மூலம் உணர்த்துகின்ற செயல்முறையின் தொடக்கம், முடிவு,
உள்ளீடு, வெளியீடு, செயலாக்கத்தில் ஒப்பீடு, தீர்மானித்தல், திரும்பச்
செய்தல் ஆகிய அனைத்துக்கும் இணையான போலிக் குறிமுறைக் கட்டளைகள் உள்ளன.
-
போலிக்
குறிமுறையில் மிகச்சில தொடரமைப்புகளே உள்ளன. அவையும் மிகச் சிறியவை.
ஆனாலும் அவற்றைக் கொண்டே அனைத்துச் செயல் முறைகளையும் எழுதிவிட முடியும்.
போலிக் குறிமுறையின் கட்டளைகளை எளிதில் புரிந்துகொள்ள முடியும். போலிக்
குறிமுறையை அடிப்படையாகக் கொண்டு கணிப்பொறி மொழியில் நிரல் எழுதுவது
எளிது.
-
கணிப்பொறியில்
செயல்படுத்தப்படும் உயர்நிலை மொழிகள் ஒவ்வொன்றும் தனக்கெனத் தனி இலக்கணத்தைக்
கொண்டுள்ளன என்றபோதிலும் அனைத்து மொழிகளும் குறிப்பிட்ட சில கட்டளை அமைப்புகளையே
கொண்டுள்ளன.
-
கணிப்பொறி
மொழிகளின் அடிப்படைக் கட்டளை அமைப்புகளைப் பொதுவாக, வரிசைமுறை அமைப்பு,
கிளைபிரித்தல், பன்முறைச்செயல் என மூன்றாக வகைப்படுத்தலாம். ஒவ்வொரு
வகைப்பிரிவிலும் உட்பிரிவுகள் உள்ளன.
-
அடுத்தடுத்து
நிறைவேற்றப்படும் கட்டளைகள் ஒன்றன்கீழ் ஒன்றாய் வரிசையாக இடம்பெறுவதை
வரிசைமுறை அமைப்பு என்கிறோம்.
-
நிபந்தனை
அடிப்படையில் கிளைவழிச் செலுத்தும் கட்டளை அமைப்பை (1) ஒருவழிக் கிளை
(2) இருவழிக் கிளை (3) பலவழிக் கிளை என மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
-
ஒரு
நிபந்தனை சரியாக இருக்கும்வரை குறிப்பிட்ட செயல்பாட்டினை திரும்பத் திரும்பப்
பலமுறை செயல்படுத்துவது ‘பன்முறைச் செயல்’ எனப்படும். குறிப்பிட்ட செயல்பாட்டைத்
திரும்பத் திரும்ப எத்தனை முறை செயல்படுத்துவது என்பது முன்கூட்டியே
அறியப்படுமாயின், அதனை ‘வரம்பறிந்த பன்முறைச் செயல்' (Definite Iteration)
என்றும், எத்தனைமுறை என்பது முன்கூட்டியே அறிய முடியாதெனில், அதனை ‘வரம்பறியாப்
பன்முறைச் செயல்’ (Indefinite Iteration) என்றும் வகைப்படுத்துவர்.