2.0 பாட முன்னுரை

அலுவலகப் பணிகளைத் தானியக்கமாக்கத் தேவைகளை நிறைவேற்றிட அலுவலகப் பயன்பாட்டுக் கூட்டுத் தொகுப்பு (Office Application Suite) மென்பொருள் தேவை எனப் பார்த்தோம். கூட்டுத் தொகுப்பு என்பது பல்வேறு வகைப்பட்ட மென்பொருள் தொகுப்புகளை உள்ளடக்கியதாகும். அலுவலகக் கூட்டுத் தொகுப்புகள் குறிப்பாக, சொல்செயலி (Word Processor), விரிதாள் (Spreadsheet), தரவுத்தளம் (Database), முன்வைப்பு (Presentation), மின்னஞ்சல் (E-mail) ஆகிய மென்பொருள்களைக் கொண்டிருக்கும்.

பல்வேறு மென்பொருள் நிறுவனங்கள் அலுவலகக் கூட்டுத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளன. மைக்ரோசாஃப்டின் ‘எம்எஸ் ஆஃபீஸ்’, சன் மைக்ரோ சிஸ்டத்தின் ‘ஸ்டார் ஆஃபீஸ்’, ஓப்பன் ஆஃபீஸ்.ஆர்கின் ‘ஓப்பன் ஆஃபீஸ்’ ஆகியவை அவற்றுள் சில. தமிழ் உட்பட இந்திய மொழிகள் பலவற்றிலும் அலுவலகக் கூட்டுத் தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் உலக அளவில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுவது மைக்ரோசாஃப்டின் ‘எம்எஸ் ஆஃபீஸ்’ கூட்டுத் தொகுப்பாகும்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தொடர்ந்து தன்னுடைய மென்பொருளைப் புதுப்பித்துப் புதிய பதிப்புகளை வெளியிட்டு வருகிறது. 2007-ஆம் ஆண்டில் ‘எம்எஸ் ஆஃபீஸ் 2007’ என்னும் பதிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முந்தைய பதிப்பு ‘எம்எஸ் ஆஃபீஸ் 2003’ ஆகும். எம்எஸ் ஆஃபீஸ் கூட்டுத் தொகுப்பு, ‘வேர்டு’ என்னும் சொல்செயலி, ‘எக்செல்’ என்னும் விரிதாள், ‘அக்செஸ்’ என்னும் தரவுத்தளம், ‘பவர்பாயின்ட்’ என்னும் முன்வைப்பு, ‘அவுட்லுக்’ என்னும் மின்னஞ்சல் உட்படப் பல்வேறு பயன்பாட்டு மென்பொருள் தொகுப்புகளை உள்ளடக்கியதாகும்.

இவற்றுள் ‘வேர்டு’ என்னும் சொல்செயலி, ஆவணங்களைக் கையாள்வதற்கான மென்பொருளாகும். ஒருபக்கக் கடிதம் முதல் ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் வரை எத்தகைய ஆவணங்களையும் உருவாக்கலாம். ஓர் ஆவணத்தைப் பக்க வாரியாக அச்சிடலாம். உரை, பத்தி, பக்கம் ஆகியவற்றை வடிவமைத்து ஆவணத்துக்கு அழகு சேர்க்கலாம். சொற்பிழை, இலக்கணப் பிழைகளைக் கண்டறிந்து திருத்தலாம். படங்கள், அட்டவணைகளை உள்ளிணைக்கலாம். மடலில் முகவரிகளை உள்ளிணைத்து சுற்றறிக்கைகள் தயாரிக்கலாம். ஆவணங்களைப் பிறர் படிக்க, திருத்த முடியாதவாறு கடவுச்சொல் (Password) மூலம் பாதுகாக்கலாம். மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் 2003 கூட்டுத் தொகுப்பில் உள்ள ‘வேர்டு 2003’ மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட வசதிக் கூறுகளை இந்தப் பாடத்தில் கற்றுக் கொள்வோம்.