-
அலுவலகங்களிலும் வணிக
நிறுவனங்களிலும் அன்றாடக் கணக்கு வழக்கு களைப் பராமரிக்கவும், புள்ளி
விவரங்களை ஆய்வுசெய்து உகந்த முடிவுகள் மேற்கொள்ளவும், தரவுகளை ஒப்பிட்டு
முடிவெடுக்க ஏதுவாக அவற்றை வரைபட வடிவில் முன்வைக்கவும் விரிதாள் மென்பொருள்
பயன்படுகிறது.
-
உலக அளவில் பெருமளவில்
பயன்படுத்தப்படும் விரிதாள் மென்பொருள் ‘எக்செல்’, மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ்
கூட்டுத்தொகுப்பின் ஓர் அங்கமாகும்.
-
எக்செல் ஆவணங்களுக்கு
‘பணிப்புத்தகம்’ என்று பெயர். பணிப்புத்தகம் பல பணித்தாள்களைக் கொண்டது.
பணித்தாள் என்பது கிடக்கைகளும் நெடுக்கைகளும் கொண்ட மிகப்பரந்த தாள்
பரப்பாகும். கிடக்கைகள் 1, 2, 3,.. என வரிசையெண்களைக் கொண்டிருக்கும்.
நெடுக்கைகள் A, B, C, ... என ஆங்கில அகரவரிசை எழுத்துகளைத் தலைப்பாகக்
கொண்டிருக்கும்.
-
‘மைக்ரோசாஃப்ட் எக்செல்
2003' மென்பொருளில் ஒரு பணித்தாளில் மொத்தம் 65536 கிடக்கைகளும், 256
நெடுக்கைகைகளும் (A முதல் IV வரை) உள்ளன. கிடக்கையும் நெடுக்கையும் சந்திக்கும்
கட்டப் பகுதி கலம் (Cell) எனப்படும். புலத் தலைப்பும் கிடக்கை எண்ணும்
சேர்ந்து கலத்தின் பெயராய் அமையும், A1, B5, AB27 என்பது போல்.
-
பணித்தாளில் எழுத்துவகை,
எண்வகை, வாய்பாடு, செயல்கூறு ஆகிய நான்கு வகையான தரவுகளை உள்ளிடலாம்.
கூட்டல், கழித்தல், பெருக் கல், வகுத்தல் போன்ற கணிதக் குறியீடுகளடங்கிய
கணக்கீடு ‘வாய்பாடு’ எனப்படுகிறது. கணக்கீடுகளுக்கென SUM(), AVERAGE()
என ஏராளமான செயல்கூறுகள் எக்செல்லில் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. கலங்களில்
வாய்பாடு, செயல்கூறுகளை = என்னும் நிகர்க்குறியிட்டு உள்ளிட வேண்டும்.
-
பணிப்புத்தகம் எனப்படும்
எக்செல் கோப்பு .xls என்னும் வகைப்பெயரைக் கொண்டிருக்கும். கோப்பினைச்
சேமிப்பது, திறப்பது, மூடுவது அனைத்தும் வேர்டு மென்பொருளில் உள்ளது
போலவேதான்.
-
பணித்தாள் கீற்றின்மீது
வலது சொடுக்கிடத் தோன்றும் பட்டியில் புதிய பணித்தாள் சேர்க்க, பணித்தாளை
நீக்க, பணித்தாளின் பெயரை மாற்ற, பணித்தாளை வேறிடத்துக்கு நகர்த்த அல்லது
நகலெடுக்க எனப் பணித்தாள்களைக் கையாள்வதற்கான பல்வேறு கட்டளைகள் உள்ளன.
-
தரவுகளில் ஏதேனும் மாற்றம்
செய்தால் அத்தரவுகளை உட்படுத்திச் செயல்கூறு, வாய்பாடு மூலம் பெறப்பட்ட
கூட்டல், கழித்தல் தொகைகள் அதற்கேற்ப தாமாகவே மாறிப்போகும்.
-
பணிப்புத்தகம் முழுமையுமோ,
குறிப்பிட்ட பணித்தாள்களையோ, பணித் தாளில் குறிப்பிட்ட ஒரு பகுதியையோ
அச்சிட முடியும். அச்சிடும் முன்பாக, அச்சிடும் பகுதியைத் தேர்ந்தெடுத்து,
அது எவ்வாறு அச்சிடப்படும் என்பதை முன்காட்சியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
விரும்பியவாறு அச்சிடுவதற்கான வசதிகள் முன்காட்சிச் சாளரத்தில் வழங்கப்பட்டுள்ளன.
-
பணித்தாளில் கிடக்கைகளின்
உயரத்தையும் நெடுக்கைகளின் அகலத்தையும் கூட்டவோ குறைக்கவோ முடியும்.
-
கலங்களில் உள்ளிடப்பட்டுள்ள
எண்வகை, எழுத்துவகைத் தரவுகளைப் பல விதமாக வடிவமைத்துக் கொள்ள முடியும்.
பதின்மப் புள்ளியிட்ட எண்களின் துல்லியம் எத்தனை இலக்கங்கள் இருக்க வேண்டும்
என்பதை நிர்ணயிக்கலாம். தேதி, நேரம் மற்றும் பிற எண்வகைத் தரவுகளையும்
விருப்பப்படி வடிவமைத்துக் கொள்ளலாம். கலத்தினுள் தரவின் ஓரச் சீர்மையை
பலவாறாக அமைத்துக் கொள்ளவும் வசதிகள் உள்ளன.
-
ஒரு கலத்திலுள்ள எண்மதிப்பு
குறிப்பிட்ட வரம்பைவிடக் குறைந்தால் அல்லது கூடினால் அது வேறு எழுத்துருவில்
அல்லது வேறு நிறத்தில் மாறிவிட வேண்டும் என வரையறுக்க முடியும். இதனை
‘நிபந்தனை வடிவமைப்பு’ என்கிறோம்.
-
பணித்தாளின் ஒரு பகுதியை
வெட்டி அல்லது நகலெடுத்து அதே பணித்தாளில் வேறிடத்தில் அல்லது வேறு பணித்தாளில்
ஒட்டவைத்துக் கொள்ளலாம். வெட்டி/நகலெடுத்து ஒட்டும் பகுதியில் வாய்பாடு
அல்லது செயல்கூறு மூலம் பெறப்பட்ட மதிப்புகள் இடம்பெற்றிருப்பின், வாய்பாடு,
செயல்கூறுகளில் இடம்பெற்றுள்ள கலங்கள் அனைத்தையும் சேர்த்தே வெட்டி /
நகலெடுத்து ஒட்ட வேண்டும்.
-
வாய்பாடு, செயல்கூறு
மூலம் பெறப்பட்ட மதிப்புகளை வெட்டி/ நகலெடுத்து மதிப்புகளாகவே ஒட்டவும்,
கிடக்கையை நெடுக்கையாகவும் நெடுக்கையைக் கிடக்கையாகவும் மாற்றி ஒட்டிக்
கொள்ளவும் சிறப்பு ஒட்டுதல் பயன்படுகிறது.
-
வரைபடங்களில் பல்வேறு
வகைகள் உள்ளன. குறிப்பிட்ட வகைத் தரவுக்கு குறிப்பிட்ட வகை வரைபடமே ஏற்றதாக
இருக்கும்.
-
காலம், இடம் அல்லது
வகைப்பாட்டு வாரியான மதிப்புகளை ஒப்பிட ‘பட்டை வரைபடம்’ ஏற்றது. செங்குத்துப்
பட்டை வரைபடம் ‘நெடுக்கை வரைபடம்’ என்றும் அழைக்கப்படும். காலம், இடம்
அல்லது வகைப்பாட்டு வாரியாக ஒன்றுக்கு மேற்பட்ட கூறுகளின் கூட்டு மதிப்பை
ஒப்பிட ‘அடுக்குப்பட்டை வரைபடம்’ ஏற்றது. ஒரு முழுமை மதிப்பில் ஒவ்வொரு
கூறுகளும் எவ்வளவு பங்கு என்பதைத் தெளிவுபடுத்த ‘வட்ட வரைபடம்’ ஏற்றது.
ஏற்றம் இறக்கம் கொண்ட ஒரு நிகழ்வின் தொடர்ச்சியான போக்கினைச் சுட்டிக்காட்ட
‘கோட்டு வரைபடம்’ ஏற்றது.
-
வரைபடத்தை மூன்று சுட்டிச்
சொடுக்கில் உருவாக்கி விடலாம். முதலில் வரைபடத்துக்கான தரவுத் தொகுதியைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். வரைபடக் கருவிப்பட்டையை வரவழைத்து,
உகந்த வரைபட வகையைத் தேர்ந்தெடுத்தால் உடனே வரைபடம் உருவாக்கப்பட்டுவிடும்.
-
வரைபடம் பல உறுப்புகளைக்
கொண்டது. வரைபடப் பரப்பு, வரைபரப்பு, இரு அச்சுகள், இரு அச்சுகளின் பெரிய,
சிறிய கட்டக் கோடுகள், வரைபடம் மற்றும் இரு அச்சுகளின் தலைப்புகள், மதிப்பு
நிறக்குறிப்பு போன்ற வரைபடத்தின் உறுப்புகள் மீது இரட்டைச் சொடுக்கிட்டு
அவற்றின் நிறம் போன்றவற்றை நம் விருப்பப்படி வடிவமைத்துக் கொள்ளலாம்.
-
அடிப்படைத் தரவுகளில்
மாற்றம் செய்தால், அதற்கேற்ப உடனடியாகத் தானாகவே வரைபடத்தில் மாற்றம்
நிகழும். அதேபோல வரைபடத்தில் மதிப்புப் பகுதியில் மாற்றம் செய்தால் அட்டவணையில்
தரவு மாறிப்போகும் என்பது எக்செல்லின் சிறப்புக்கூறு.
-
பணித்தாளில் கிடக்கை,
நெடுக்கையாகக் குறிப்பிட்ட கட்டமைப்பில் அமையும் தரவுத் தொகுதியே அட்டவணை
எனப்படும். அட்டவணையில் ஏடுகளைப் புல மதிப்புகளின் அடிப்படையில் ஏறுமுகம்
அல்லது இறங்கு முகமாக வரிசைப்படுத்தலாம். அதற்கான பொத்தான்கள் அடிப்படைக்
கருவிப் பட்டையில் உள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட புலங்களின் அடிப்படை யிலும்
(அதிக அளவாக மூன்று புலங்கள்) ஏடுகளை வரிசைப்படுத்தலாம்.
-
குறிப்பிட்ட நிபந்தனைக்கு
உட்பட்ட ஏடுகளை மட்டும் பிரித்தெடுக்க வடிகட்டிகள் பயன்படுகின்றன. வடிகட்டிகள்
தானியங்கு வடிகட்டிகள், உயர்நிலை வடிகட்டிகள் என இரு வகைப்படும்.
-
குறிப்பிட்ட புலத்தில்
குறிப்பிட்ட மதிப்பு இருக்கும் ஏடுகளை மட்டும் வடிகட்டிப் பார்வையிடத்
‘தானியங்கு வடிகட்டி’ பயன்படுகிறது. குறிப்பிட்ட மதிப்பைவிடக் கூடக்
குறைய இருக்கும் ஏடுகளை வடிகட்டவும் ஒன்றுக்கு மேற்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்ட
ஏடுகளை வடிகட்டவும் உயர்நிலை வடிகட்டியைப் பயன்படுத்த வேண்டும். தானியங்கு
வடிகட்டியில் சாத்திய மாகும் அனைத்தும் உயர்நிலை வடிகட்டியில் சாத்தியமே.
உயர்நிலை வடிகட்டியில் வடிகட்டப்படும் ஏடுகளை வேறிடத்தில் பதிய முடியும்.
-
அட்டவணையில் சேமிக்கப்பட்டுள்ள உதிரியான தரவுகளைத்
தொகுத்து ஆய்ந்தறி அட்டவணையை உருவாக்க மூன்று படிநிலைகள் கொண்ட வழிகாட்டி
உள்ளது.