4.0 பாட முன்னுரை

இன்றைய காலகட்டத்தில், அரசுத் துறைகளும், அரசுத்துறை நிறுவனங்களும், மிகப்பெரும் வணிக நிறுவனங்களும் ஏராளமான தகவல்களைச் சேமித்து வைத்துக் கையாள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தொலைதொடர்பு நிறுவனங்கள் பலகோடி வாடிக்கையாளர்களின் விவரங்களைச் சேமித்து வைக்க வேண்டியுள்ளது. இரயில் போக்குவரத்துத் துறை பல இலட்சம் பயணிகளின் விவரங்களைக் கையாள வேண்டியுள்ளது. வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை வணிகத்தில் ஈடுபட்டுள்ள முகைமைகள் இன்னும் இதுபோன்ற பல்வேறு அமைப்புகள் அன்றாட நடவடிக்கைகளில் ஏராளமான தகவல்களைக் கையாள்கின்றன. இவர்களுக்கெல்லாம் கணிப்பொறி கைகொடுக்கிறது. எண்ணிப் பார்க்க முடியாத ஏராளமான தரவுகளைச் சேமித்து வைத்துக்கொண்டு, தேவையான தகவலைத் தேவையான நேரத்தில் தேடிப்பெற முடியும் என்பது கணிப்பொறியின் சிறப்புக்கூறுகளுள் மிகவும் முக்கியமானதாகும்.

கணிப்பொறியில் தரவுகளைச் சேமித்து வைத்துக் கையாளும் அமைப்பை ‘தரவுத்தளம்’ (Database) என்கிறோம். தரவுத்தளங்களைக் கையாளும் மென்பொருள் ‘தரவுத்தள மேலாண்மை முறைமை’ எனப்படுகிறது. தரவுத்தளத் தின் அடிப்படையாய் விளங்குபவை அட்டவணைகளாகும். தொடர்புடைய தரவுகளை ஒரே அட்டவணையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட அட்டவணைகளிலோ சேமித்து வைக்க முடியும். அட்டவணைகளில் தரவுகளை உள்ளீடு செய்யப் படிவங்கள் (Forms) பயன்படுத்தப்படுகின்றன. கட்டமைவு வினவல் மொழி (Structured Query Language) தரவுத்தள மென்பொருளின் உள்ளிணைந்த கூறாக விளங்குகிறது. அட்டவணைகளையும், அட்டவணைகளில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளையும் கையாள வினவல் மொழிக் கட்டளைகள் பயன்படுத்தப் படுகின்றன. சேமிக்கப்பட்டுள்ள தரவுகளிலிருந்து தேவையான தகவலைத் தேடிப் பெறவும், தரவுகளைச் சேர்க்க, நீக்க, மாற்றியமைக்கவும் வினவல்கள் பயன்படுகின்றன. தரவுகளின் அடிப்படையில் அறிக்கைகள், வரைபடங்கள் ஆகியவற்றை உருவாக்கவும் தரவுத்தள மென்பொருளில் வசதிகள் உள்ளன.

மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் கூட்டுத் தொகுப்பில் ‘அக்செஸ்’ (Access) என்னும் தரவுத்தள மேலாண்மை மென்பொருள் ஓர் அங்கமாக விளங்குகிறது. வினவல் மொழியில் புலமை இல்லாதோரும் இந்த மென்பொருளில் எளிதாகப் பணியாற்றலாம். ‘மைக்ரோசாஃப்ட் அக்செஸ் 2003’ வழிநின்று, அட்டவணை கள், வினவல்கள், படிவங்கள் ஆகியவற்றை உருவாக்கிக் கையாளும் வழி முறைகளை இப்பாடத்தில் கற்றுக் கொள்வோம்.