4.1
தரவுத்தள அடிப்படைகள் (Database Basics)
தரவுகளைச் சேமித்து வைக்கப் பரவலாகப்
பயன்படுத்தப்படுவது ‘உறவுநிலை மாதிரியத்தை’ அடிப்படையாகக் கொண்ட தரவுக் கட்டமைப்பு
முறையாகும். உறவுநிலைத் தரவுத்தளம் அட்டவணைகள், வினவல்கள், அறிக்கைகள் போன்ற
பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாகும். தரவுத்தள மாதிரியங்கள் பற்றியும், தரவுத்தளத்தின்
உட்கூறுகள் பற்றியும் அறிந்து கொள்வதுடன், அக்செஸ் மென்பொருளில் ஒரு தரவுத்தளத்தை
உருவாக்கும் வழிமுறையையும் இப்பாடப் பிரிவில் தெரிந்து கொள்வோம்.
4.1.1
தரவுத்தள மாதிரியங்கள்
தொடக்க காலங்களில் தரவுகளைச் சேமிக்கத்
துளையிட்ட அட்டைகளும் (Punched Cards), காந்த நாடாக்களும் (Magnetic Tapes)
பயன்படுத்தப்பட்டன. அவற்றில் வரிசை முறையில்தான் தகவலைத் தேடிப்பெற முடியும்.
அதன்பிறகு நேரடி அணுகல் சேமிப்புச் சாதனங்களான (Direct Access Storage Devices)
காந்த வட்டுகள் (Magnetic Discs) பயன்பாட்டுக்கு வந்தன. இவற்றை மிகவும் பலனுள்ள
முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் முதல் தரவுத்தள மேலாண்மை முறைமையை
உருவாக்கியவர் சார்லஸ் பேக்மேன் (Charles Bachman) என்பவராவார்.
தரவுகளைக் குறிப்பிட்ட கட்டமைப்பில்
சேமித்து வைத்தால்தான் அவற்றை மேலாண்மை செய்வதும் தேவையான தகவலைத் தேடிப்
பெறுவதும் எளிதாக இருக்கும். காலப்போக்கில் தரவுகளைச் சேமிக்கப் பல்வேறு
கட்டமைப்பு முறைகள் நடைமுறைக்கு வந்தன. அவை ‘தரவுத்தள மாதிரியங்கள்’ (Database
Models) எனப்படுகின்றன. அவற்றை நான்காக வகைப்படுத்தலாம்:
(1)
தட்டை மாதிரியம் (Flat Model):
நெடுக்கை, கிடக்கைகளாக
அமைந்த ஒற்றை இருபரிமாண அணியில் (Two-Dimensonal Array) தரவுகளைக்
கொண்டிருக்கும். ஒரு நெடுக்கையில் அமைந்த அனைத்துத் தரவு மதிப்புகளும்
ஒரே தரவினத்தைச் (Data Type) சார்ந்தவையாக இருக்கும். ஒரு கிடக்கை,
தொடர்புடைய தரவு மதிப்புகளைக் கொண்டிருக்கும். தொடக்ககாலத் தரவுத்தளங்கள்
இத்தகைய ஒற்றை அட்டவணையாகவே இருந்தன. |
(2)
படிநிலை மாதிரியம் (Hierarchical Model):
இது தலைகீழான மரம் போன்ற
கட்டமைப்பைக் கொண்டது. வேரில் தொடங்கி ஏடுகள் கிளைகளாகப் பரவிக் கிடக்கும்.
ஒவ்வோர் ஏடும் அதன் தாய் ஏட்டைச் சுட்டும் ஒரு மேல்நோக்கிய தொடுப்பைக்
(Link) கொண்டிருக்கும். ஒவ்வொரு நிலைமட்டத்திலும் உள்ள ஏடுகளைக் குறிப்பிட்ட
வரிசையில் (Order) வைத்திருக்க ஏதுவாக ஒரு வரிசைமுறைப் புலத்தையும்
(Sort Field) கொண்டிருக்கும். நார்த் அமெரிக்கன் ராக்வெல் நிறுவனம்
உருவாக்கிய தரவுத்தள முறைமை படிநிலை மாதிரியத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
பின்னாளில் ஐபிஎம் நிறுவனம் தன்னுடைய ஐஎம்எஸ் மென்பொருள் தயாரிப்புகளில்
பயன்படுத்திக் கொண்டது. |
(3)
பிணைய மாதிரியம் (Network Model):
ஒவ்வோர் ஏடும் அடுத்த
ஏட்டினைச் சுட்டுகின்ற தொடுப்பினைக் கொண்டிருக்கும். ஏடுகளுக்கு இடையேயான
உறவுகளை சுட்டுகள் (Pointers) மூலம் கண்டறியலாம். இந்தச் சுட்டுகள்
பிணைய அமைப்பின் கணு எண்களாக அல்லது வட்டு முகவரிகளாக இருக்கலாம்.
பெரும்பாலான பிணையத் தரவுத்தளங்கள் படிநிலை மாதிரியத்தின் ஏதேனும்
ஒரு வடிவத்தைக் கொண்டிருக்கும். கொடாசில் (CODASYL) நிறுவனம் சார்லஸ்
பேக்மேன் வரையறுத்த கருத்துருக்களின் அடிப்படையில் பிணைய மாதிரியத்தை
உருவாக்கியது. |
(4)
உறவுநிலை மாதிரியம் (Relational Model):
டாக்டர் இ.எஃப்.காட்
(Codd) 1970-இல் இதனை முன்வைத்தார். கண்டிப்பான பன்னிரண்டு விதிமுறைகளை
(Codd’s Rules) வகுத்தார். உறவுநிலை மாதிரியத்தின் அடிப்படைத் தரவுக்
கட்டமைப்பு நெடுக்கை, கிடக்கைகளாய் அமைந்த அட்டவணை (Table) ஆகும்.
இது தட்டை மாதிரியத்தின் அட்டவணை போன்றதே. ஆனால் உறவுநிலைத் தரவுத்தளம்
என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல்வேறு அட்டவணை களையும் அவற்றின்
உறவுமுறைகளையும் குறிக்கிறது. நெடுக்கையைப் ‘புலம்’ (Field) அல்லது
பண்புக்கூறு (Attribute) என்பர். கிடக்கையை ‘ஏடு’ (Record) என்பர்.
அட்டவணைகள் கண்டிப்பாக மூன்று விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைய வேண்டும்
என்பது டாக்டர் காடின் கருத்தாகும். அட்டவணையில் நெடுக்கைகளின் வரிசைமுறை
முக்கியமில்லை. ஓர் அட்டவணையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஏடுகள் ஒரே புல
மதிப்புகளைக் கொண்டவையாய் இருக்கக் கூடாது. ஓர் ஏட்டில் ஒவ்வொரு புலமும்
ஒற்றை மதிப்பையே கொண்டிருக்க வேண்டும். |
கருத்தியலாக மட்டுமே விவாதிக்கப்பட்டு
வந்த உறவுநிலை மாதிரியம் 1976-இல் பெர்க்கிலியில் மைக்கேல் ஸ்டோன்பிரேக்கரின்
‘இன்கிரஸ்’ (Ingres) தரவுத்தளத்திலும், ஐபிஎம்மின் ‘சிஸ்டம்-ஆர்’ திட்டப்பணியிலும்
பரிசோதிக்கப் பட்டது. 1980-இல் முதன்முதலில் வணிக ரீதியில் வெளியிடப்பட்ட
‘உறவுநிலைத் தரவுத்தள மேலாண்மை முறைமைகள்’ (Relational Database Management
Systems - RDBMS), ‘ஆரக்கிள்’ மற்றும் ‘டிபி2’ ஆகும். இவை பெருமுக (Mainframe)
மற்றும் குறுங்கணிப்பொறிகளில் (Mini Computers) யூனிக்ஸ் இயக்க முறைமையில்
செயல்பட்டன. இவற்றைத் தொடர்ந்து, சொந்தக் கணிப்பொறிகளில் டாஸ் இயக்க முறைமையில்
செயல்படும் ‘டி’பேஸ்’ வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது. டிபேஸைத் தொடர்ந்து
‘ஃபாக்ஸ்புரோ’ மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கியது. இன்றைக்கும் பலர்
டி’பேஸ், ஃபாக்ஸ்புரோ மென்பொருள்களை மிகவும் விரும்பிப் பயன்படுத்தி வருகின்றனர்.
மைக்ரோசாஃப்டின் அக்செஸும் உறவுநிலைத் தரவுத்தளமே.
4.1.2
தரவுத்தளத்தின் உட்கூறுகள்
பொதுவாக அட்டவணைகளின் தொகுப்பே
தரவுத்தளம் என்றபோதிலும், தரவுத்தள மேலாண்மை மென்பொருளில் உருவாக்கப்படும்
தரவுத்தளமானது பல்வேறு உட்கூறுகளைக் கொண்டுள்ளது. அக்செஸ் மென்பொருளில் தரவுத்
தளத்தின் உட்கூறுகளாய் அமைந்துள்ளவை:
(1)
அட்டவணைகள் (Tables):
தரவுகள் இவற்றில்தாம்
சேமிக்கப்படுகின்றன. |
(2)
வினவல்கள் (Queries):
இவை உண்மையில் வினவல்
மொழிக் கட்டளைகள். எனினும் இவற்றின் வெளிப்பாடு, பெரும்பாலும் அட்டவணை
அல்லது அட்டவணைகளிலிருந்து குறிப்பிட்ட நிபந்தனைக்குட்பட்ட ஏடுகளின்
தொகுப்பாக இருக்கும். |
(3)
படிவங்கள் (Forms):
அட்டவணைகளில் தகவலை
உள்ளீடு செய்யவும், குறிப்பிட்ட நிபந்தனைக்குட்பட்ட தகவல்களை வெளியிடவும்
அழகான வரைகலை இடைமுகத்தை (Graphiccal Interface) வழங்குகின்றன. படிவம்,
வரைபடமாகவும் (Chart), ஆய்ந்தறி அட்டவணயாகவும் (Pivot Table) இருக்கலாம். |
(4)
அறிக்கைகள் (Reports):
அட்டவணைகளில் சேமிக்கப்பட்ட
தரவுகளைத் தொகுத்து வெளியிடுபவை. இவை பெரும்பாலும் அச்சிடப்பட்டு மேலாண்மை
அமைப்பில் பொறுப்பு வகிப்பவர்கள் முடிவுகள் எடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
வரைபடங்களும், ஆய்ந்தறி அட்டவணைகளும் அறிக்கையில் அடங்கும். |
(5)
பக்கங்கள் (Pages):
தரவுத்தள அட்டவணைகளின்
தகவலை இணையத்தில் வெளியிடவும், இணையம் வழியாக தரவுகளை உள்ளீடு செய்திடவும்
பயன்படக் கூடிய வலைப்பக்கங்கள் இவை. |
(6)
குறுநிரல்கள் (Macros):
படிவங்களைப் பயன்படுத்துகையில்
பயனரின் நடவடிக்கைக்கு ஏற்பச் செயல்படும் சின்னச் சின்ன நிரல்கள்.
இவை ‘விசுவல் பேசிக்’ மொழியில் எழுதப்படுகின்றன. |
(7)
நிரல்கூறுகள் (Modules):
அக்செஸ் மென்பொருளின்
அடிப்படையில் ஒரு நிறுவனத்துக்குத் தேவையான ஒரு பயன்பாட்டு மென்பொருளை
உருவாக்கும்போது, செயல்கூறுகள் (Functions) மற்றும் செயல்முறைகள் (Procedures)
அடங்கிய நீண்ட நிரல்களை எழுத வேண்டியிருக்கும். அவை அக்செஸ் தரவுத்தளத்தின்
அங்கமாய்ச் சேமிக்கப்படுகின்றன. |
அக்செஸில் தரவுத்தளம், அட்டவணைகள்,
வினவல்கள், படிவங்கள் ஆகிய வற்றை உருவாக்கிக் கையாளும் வழிமுறைகளை இனிவரும்
பாடப்பிரிவுகளில் படிக்க இருக்கிறோம். அறிக்கைகள் மற்றும் வரைபடங்களை உருவாக்கிக்
கையாளும் வழிமுறைகளை அடுத்த பாடத்தில் கற்போம்.
4.1.3
தரவுத்தள உருவாக்கம்
அக்செஸ் மென்பொருளில் ஒரு தரவுத்தளத்தை
உருவாக்குவது எப்படி எனப் பார்ப்போம். உங்கள் கணிப்பொறியில் விண்டோஸ் எக்ஸ்பீ
இயக்க முறைமை யும் மைக்ரோ சாஃப்ட் ஆஃபீஸ் 2003 மென்பொருளும் நிறுவப்பட்டுள்ளதாகக்
கருதிக் கொள்வோம். விண்டோஸ் எக்ஸ்பீ பணிப்பட்டையில் (Task Bar),
Start
-> All Programs -> Microsoft Office -> Microsoft Office Access
2003
தேர்ந்தெடுங்கள். அக்செஸ் மென்பொருளின்
சாளரம் விரியும். ஏற்கெனவே நாம் பார்த்த வேர்டு, எக்செல் மென்பொருள்களின்
இடைமுகங்களிலிருந்து மாறுபட்டு இருக்கும். தலைப்புப் பட்டை, பட்டிப் பட்டை
ஆகியவை மட்டுமே இருக்கும். File -> New... தேர்ந்தெடுத்து, வலப்பக்கம்
தோன்றும் பட்டையில் Blank database... தேர்ந்தெடுங்கள். புதிய கோப்பினைச்
சேமிக்கும் உரையாடல் பெட்டி தோன்றும். நாம் உருவாக்க இருக்கும் தரவுத்தளத்துக்கு
ஒரு பெயர் தந்து சேமிக்க வேண்டும். File name என்ற கட்டத்தில் முன்னியல்பாக
db1.mdb என்ற பெயர் இருக்கும். அந்த இடத்தில் Office என்ற பெயரைத் தந்து,
Create பொத்தானை அழுத்துங்கள். Office.mdb என்ற பெயரில் My Documents கோப்புறையில்
அக்செஸ் கோப்பாகச் சேமிக்கப்படும். mdb என்ற வகைப்பெயர் microsoft database
என்பதைக் குறிக்கிறது. கோப்பு சேமிக்கபட்ட அதே வேளையில் அக்செஸ் சாளரத்தினுள்
Office தரவுத்தளத்தின் சாளரம் தோன்றும்.
படம்
4.1 தரவுத்தளச் சாளரம் |
தரவுத்தளச் சாளரத்தில் தலைப்புப்
பட்டைக்குக் கீழே கருவிப் பட்டை உள்ளது. இடப்பக்கம் Objects என்பதன் கீழ்
தரவுத்தளத்தின் உட்கூறுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இச்சாளரத்தின் வழியாகத்தான்
அட்டவணைகள், வினவல்கள், படிவங்கள் ஆகியவற்றை உருவாக்கிக் கையாள வேண்டும்.
எப்படி என்பதை அடுத்த பாடப் பிரிவில் காண்போம். இப்போதைக்கு File -> Exit
தேர்ந்தெடுத்து அக்செஸ் சாளரத்தை மூடி விடுங்கள்.
|