6.0 பாட முன்னுரை பள்ளிக் கூடத்தில் கல்லூரியில் ஆசிரியர் பாடம் நடத்துவதற்குக் கரும்பலகையைப் பயன்படுத்துகிறார். விளக்கிச் சொல்ல வேண்டிய பாடத் தலைப்புகளைக் கரும்பலகையில் எழுதுகிறார். மாணவர்கள் குறித்துக் கொள்ள வேண்டிய பாடக் குறிப்புகளையும் எழுதிப் போடுகிறார். சில பாடங்களைப் படம் வரைந்து விளக்குகிறார். கரும்பலகை நிறைந்துவிட்டால் அதனை அழித்துவிட்டு எழுத வேண்டியுள்ளது. படங்களை வரையவும் பாடக் குறிப்புகளை எழுதவும் எழுதியவற்றை அழிக்கவும் சிறுது நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. இந்த நேரத்தில் மாணவர்கள் சத்தமிடவும் குறும்புகள் செய்யவும் வழியேற்படுகிறது. மின்னணுத் தொழில்நுட்பமும், கணிப்பொறித் தொழில்நுட்பமும் மிகவும் வளர்ச்சி பெற்றுவிட்டன. கற்பிக்கும் முறைகளிலும் மாற்றங்கள் வந்துவிட்டன. வகுப்பில் நடத்த வேண்டிய பாடங்களுக்கான குறிப்புகளையும் படங்களையும் கணிப்பொறி மென்பொருள் உதவியுடன் படவில்லைகளில் (Slides) முதலிலேயே தயாரித்து வைத்துக் கொண்டு, படங்காட்டி (Projector) மூலமாக, பெரிய திரையில் ஒன்றன்பின் ஒன்றாகக் காட்டி, ஆசிரியர் விளக்கிச் சொல்ல முடியும். இவ்வாறு படவில்லைகள் மூலம் கருத்துகளை விளக்கிச் சொல்லும் முறை ‘முன்வைப்பு’ (Presentation) என்று அழைக்கப்படுகிறது. முன்வைப்புகளை உருவாக்குவதற்கான மென்பொருள் அலுவலகக் கூட்டுத் தொகுப்பின் அங்கமாகவே இணைக்கப்பட்டுள்ளது. படவில்லைகளை அழகுற வடிவமைத்துப் படக்காட்சிக்கு எழிலூட்ட இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளன. திரைப்படங்களின் தொடக்கத்தில் கலைஞர்களின் பெயர்கள் ஆடி அசைந்து நகர்ந்து வருவதைப் போன்று, முன்வைப்பில் படவில்லைகளில் இடம்பெறும் உறுப்புகள் அசைவூட்டம் (Animation) பெற்று அசைந்துவரச் செய்யலாம். படவில்லைகளில் அட்டவணைகள், படங்கள், வரைபடங்கள், வரைகலைப் படங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கருத்து விளக்கத்துக்குத் தெளிவூட்டலாம். ஒலி (Sound), நிகழ்படம் (Video) மூலமாகவும் முன்வைப்புக்குச் செறிவூட்டலாம். மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் கூட்டுத் தொகுப்பில் ‘பவர்பாயின்ட்’ (Powerpoint) என்னும் முன்வைப்பு மென்பொருள் ஓர் அங்கமாக விளங்குகிறது. கணிப்பொறியில் அதிக அனுபவம் இல்லாதோரும் இந்த மென்பொருளில் எளிதாக முன்வைப்புகளை உருவாக்கலாம். ‘மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் பவர்பாயின்ட் 2003’ வழிநின்று, முன்வைப்புகளை உருவாக்கி, வடிவமைத்துக் கையாளும் வழிமுறைகளை இப்பாடத்தில் கற்றுக் கொள்வோம். |