|
6.1
முன்வைப்பின் அடிப்படைகள்
பார்வையாளர்களுக்குச் சொல்லவரும்
கருத்தைத் தௌ¢ளத் தெளிவாய் முன்வைக்கப் பயன்படுவது, கணிப்பொறி மென்பொருளில்
உருவாக்கப்படும் ‘முன்வைப்பு’ ஆகும். முன்வைப்புகளின் அடிப்படையாக விளங்குபவை
‘சிலைடு’ என அறியப்படும் படவில்லைகளாகும். படவில்லை என்பது கணிப்பொறித் திரை
அளவிலான ஒரு சட்டகம். சொல்லவரும் கருத்தைச் சிறு சிறு தலைப்புகளாகப் பிரித்து,
ஒவ்வொரு உள்-தலைப்பையும் ஒரு படவில்லையில் அமைத்து, அதற்கான விவரங்களைச்
சிறு சொல்தொடர் களாகப் பட்டியல்போலத் தரலாம். படவில்லையில் உரைப்பகுதி மட்டுமின்றித்
தேவையான இடங்களில் அட்டவணை, படங்களையும் சேர்த்துக் கொள்ள முடியும். முதலில்
முன்வைப்பின் தேவையையும் பயன்பாடுகளையும் அறிந்துகொண்டு, பிறகு முன்வைப்பின்
அமைப்புமுறையையும், வடிவாக்கக் கூறுகளையும் இப்பாடப் பிரிவில் காண்போம்.
6.1.1
முன்வைப்பின் தேவையும் பயன்பாடும்
பார்வையாளர்களுக்குக் கருத்துகளை
முன்வைப்பதற்குக் காலத்தின் தேவையாக உருவானதே கணிப்பொறி வழியான ‘முன்வைப்பு’
ஆகும். இன்றைய காலச் சூழலில் எங்கும் வேகம் எதிலும் வேகம் தேவைப்படுகிறது.
எல்லாரும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். பொறுமையாக உட்கார்ந்து கதை கேட்க
எவரும் தயாராக இல்லை. எனவே, சொல்லவரும் கருத்தை மிகக் குறைந்த நேரத்தில்
சொல்லிவிட வேண்டும். அதே வேளையில் விவரங்கள் தௌ¢ளத் தெளிவாய் விளக்கப்பட
வேண்டும். பார்வையாளர்கள் கவனம் சிதறாமல் ஈடுபாட்டுடன் கருத்துகளை உள்வாங்கிக்
கொள்ளும் வகையில் அட்டவணைகள், படங்கள், வரைபடங்கள் மூலமாகக் கருத்துகள் விளக்கப்பட
வேண்டும். எனவே கருத்துரையாளர்களுக்கு ‘முன்வைப்பு’ கட்டாயத் தேவையாகும்.
கணிப்பொறி வழியான முன்வைப்பு எங்கெல்லாம்,
எதற்கெல்லாம், யாருக்கெல்லாம் பயன்படுகிறது எனப் பார்ப்போம்:
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்குப் பாடங்களை
விளக்கிச் சொல்ல ஆசிரியர்கள் பெருமளவு முன்வைப்புகளைப் பயன்படுத்திக்
கொள்ள முடியும்.
-
மாணவர்களுக்குச் செய்முறைப்
பயிற்சிகளை விளக்குவதற்கு அசைவூட்டம், ஒலி, ஒளிக் காட்சிகளுடன்
கூடிய முன்வைப்புகள் பயன்படும்.
-
கருத்தரங்குகளில் பேச்சாளர்கள்
குறைந்த நேரத்தில் நிறைந்த கருத்துகளை விளக்கிச் சொல்ல முன்வைப்பு
சிறந்த கருவியாகும்.
-
ஆய்வரங்குகளில் ஆய்வறிஞர்கள்
தம் ஆய்வுக் கருத்துகளைச் சக ஆய்வாளர்களுக்குத் தெள்ளத் தெளிவாய்
விளக்கிக் கூற முன்வைப்பு உதவுகிறது.
-
வணிக நிறுவனங்கள் தம் உற்பத்திப்
பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த முன்வைப்புகளைப்
பயன்படுத்துகின்றனர்.
|
6.1.2
முன்வைப்பின் அமைப்புமுறை
படவில்லைகளின் தொகுப்பே முன்வைப்பாகும்.
முன்வைப்புப் பெரும்பாலும் இரண்டுக்கு மேற்பட்ட படவில்லைகளைக் கொண்டிருக்கும்.
பொதுவாக, ஒரு முன்வைப்பு, முதல் படவில்லையாகத் தலைப்பு (Title) அல்லது வரவேற்புப்
(Welcome) படவில்லையையும், கடைசிப் படவில்லையாக முடிவு (End) அல்லது நன்றிப்
(Thanks) படவில்லையையும் கொண்டிருக்கும். இடைப்பட்ட படவில்லைகள் உரைப்பகுதியை
மட்டுமோ, படம், அட்டவணை அல்லது வரைபடம் மட்டுமோ, இரண்டும் கலந்த தகவல்களையோ
கொண்டிருக்கலாம். படவில்லைகளில் ஒலி (Sound), அசைவூட்டப் படம் (Animated
Picture), நிகழ்படம் (Video) ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு அவற்றைப் படவில்லைக்
காட்சியின்போது இயக்கிக் காட்டலாம்.
சொல்லவரும் கருத்தை உள்-தலைப்பிட்டுச்
சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வோர் உள்-தலைப்புக்கும்
ஒரு படவில்லை எனப் பகுத்துக் கொள்ள வேண்டும். ஒரு முன்வைப்பில் மிக அதிகப்படியான
படவில்லைகள் இருக்கக் கூடாது. மிகச் சுருக்கமாக இரண்டு மூன்று படவில்லைகளில்
முடித்துவிடவும் கூடாது. பத்து முதல் நாற்பது படவில்லைகள் வரை இருக்கலாம்.
படவில்லைகளை முன்பின்னாக இல்லாமல்,
குழப்பமின்றி ஆற்றொழுக்கு போலச் சரியான வரிசையில் அமைக்க வேண்டும். ஒரு படவில்லையில்
ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகள் இடம்பெறக் கூடாது. அதேபோல் ஒரு குறிப்பிட்ட
விவரம் அல்லது விவரப் பட்டியல் ஒன்றுக்கு மேற்பட்ட படவில்லைகளில் தொடர்வதைக்
கூடுமானவரை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாமல் தொடர்வதாயின், ‘தொடரும்...’,
‘தொடர்ச்சி...’ போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
முன்வைப்பைக் காட்சிப்படுத்தும்போது,
சுட்டியைச் சொடுக்குகையில் அடுத்தடுத்த படவில்லைகள் தோன்றும்படி செய்யலாம்.
அல்லது குறிப்பிட்ட நேரங்கழித்துத் தானாகவே படவில்லை மாறும்படி செய்யலாம்.
கருத்துரையாளர் விளக்கவுரை வழங்கும் முன்வைப்புகளில் படவில்லை மாறுகையைத்
தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது நல்லது. விளக்கவுரைகள் ஒலிப்பதிவு
செய்யப்பட்டு, முன்வைப்பின் பின்புலமாகச் சேர்க்கப்படுமாயின், அதிலுள்ள படவில்லைகள்
குறிப்பிட்ட நேரத்தில் தாமாகவே மாறிக் கொள்ளுமாறு அமைக்கலாம்.
படவில்லைகளின் மாறுகையின்போது
விதவிதமான ஓசைகளை இடம்பெறச் செய்ய முடியும். சிக்கலான நுட்பமான கருத்து விளக்கங்களில்
வித விதமான ஓசைகள், இசைத்துணுக்குகள் பார்வையாளர்களின் கவனத்தைச் சிதறச்
செய்யும். எனவே கருத்தாழம் மிக்க முன்வைப்புகளில் பின்புல ஒலி, இசைத் துணுக்குகளைத்
தவிர்த்தல் நல்லது.
6.1.3
முன்வைப்பின் வடிவாக்கக் கூறுகள்
ஒரு முன்வைப்பைத் தயாரிப்பதில்
அடங்கியுள்ள பல்வேறு படிநிலைகளை ‘வடிவாக்கக் கூறுகள்’ என்னும் இப்பத்தியில்
காண இருக்கிறோம்:
(1)
திட்டமிடல்:
முன்வைப்பில் எத்தனை
படவில்லைகள் இடம்பெறப் போகின்றன, அவற்றில் என்னென்ன விவரங்கள் இடம்பெற
வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட வேண்டும். தேவையெனில் தாளில் குறித்து
வைத்துக் கொள்ளலாம். |
(2)
படவில்லைகளைத் தயாரித்தல்:
முகப்புப் படவில்லை
தொடங்கி ஒவ்வொரு படவில்லையாக விவரங்களை உள்ளிட்டுத் தயாரிக்க வேண்டும்.
படவில்லைகளை உருவாக்கும்போதே உரைப்பகுதியின் எழுத்துரு, உருவளவு, நிறம்,
அசைவூட்டம் ஆகியவற்றை அமைக்க வேண்டியதில்லை. முன்னியல் பான வடிவமைப்பிலேயே
அனைத்துப் படவில்லைகளையும் உருவாக்கலாம். அதன்பிறகு படவில்லைகளை விருப்பப்படி
வடிவமைத்துக் கொள்ளலாம். |
(3) பின்புலக் காட்சி தேர்ந்தெடுத்தல்:
முன்னியல்பாகப் படவில்லைகள்
வெண்ணிறப் பின்புலத்தில் கருப்புநிற எழுத்துகளைக் கொண்டிருக்கும்.
பவர்பாயின்ட் மென்பொருளில் ஏராளமான எழிலூட்டும் பின்புலக் காட்சிகள்
உள்ளிணைக்கப்பட்டுள்ளன. அவை ‘வடிவாக்க வார்ப்புருக்கள்’ (Design Templates)
எனப்படுகின்றன. ஒவ்வொரு படவில்லைக்கும் வெவ்வேறு பின்புலக் காட்சிகளை
அமைத்துக் கொள்ள முடியும் என்ற போதிலும், அனைத்துப் படவில்லைகளுக்கும்
ஒரே பின்புலத்தைத் தேர்ந்தெடுப்பது முன்வைப்புக்கு அழகூட்டும். |
(4) பின்புல வண்ணம் (Background Color Scheme) தேர்ந்தெடுத்தல்:
பின்புலக் காட்சிக்கு
முன்னியல்பான வண்ணமே அழகாய் இருக்கும். எனினும் நாம் விரும்பும் வண்ணத்தைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் வழியுள்ளது. குறிப்பாக, வெண்மைநிறப் பின்புலக்
காட்சிகள் சிலவற்றுக்கு நாம் வேறு நிறக்கலவையைத் தேர்ந்தெடுத்துக்
கொள்ளலாம். |
(5)
உரைப்பகுதி வடிவமைப்பு (Text Formatting):
உள்ளிணைக்கப்பட்டுள்ள
பின்புல வார்ப்புருவில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தவுடனே, படவில்லைகளில்
உள்ளீடு செய்த உரைப்பகுதிகளின் எழுத்துரு, உருவளவு, நிறம் அனைத்தும்
பின்புலக் காட்சிக்குப் பொருத்தமாய் மாறிப்போகும். அவற்றை அப்படியே
ஏற்றுக் கொள்ளலாம். தேவையெனில் உரைப்பகுதிகளை பின்புலக் காட்சிக்கு
ஏற்றவாறு உங்கள் விருப்பப்படி வடிவமைத்துக் கொள்ளலாம். பின்புலக் காட்சியின்
வண்ணத்தை மாற்றினால் எழுத்துகளின் நிறம் மாறாது என்பதைக் கவனத்தில்
கொள்க. |
(6)
அசைவூட்ட வகையைத் (Animation Scheme) தேர்ந்தெடுத்தல்:
ஒவ்வொரு படவில்லை தோன்றும்போதும்
அதன் தலைப்பு குறிப்பிட்ட அசைவூட்டத்துடன் தோன்றுமாறு அமைக்கலாம்.
அதன் கீழுள்ள உரைப்பகுதிகள் முன்னியல்பான அசைவூட்டத்தைப் பெறும். ஒவ்வொரு
படவில்லைக்கும் வெவ்வேறு அசைவூட்ட வகையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள
முடியும். ஒரு படவில்லை யில் தலைப்பின் கீழுள்ள அனைத்து உரைப்பகுதிகளும்
ஒரே மாதிரியான அசைவூட்டத்தைக் கொண்டிருக்கும். தலைப்புத் தவிர பிற
விவரங்களுக்கு விருப்பப்படி அசைவூட்டம் அமைத்துக் கொள்ள வழியுள்ளது. |
(7)
விருப்பப்படி அசைவூட்டம் (Custom Animation) அமைத்தல்:
ஒரு படவில்லை முழுவதையும்
ஒரு குறிப்பிட்ட அசைவூட்ட வகைக்குள் கட்டுப்படுத்தி விடாமல், ஒரு படவில்லையில்
உள்ள ஒவ்வோர் உரைப்பகுதியும் மற்றும் பிற உறுப்புகளும் வெவ்வேறு அசைவூட்டத்துடன்
தோன்றுமாறு செய்யலாம். ஒன்று அசைந்து, மற்றது சுழன்று, இன்னொன்று பறந்து
வருமாறு அசைவூட்டம் அமைக்க முடியும். |
(8)
படவில்லை மாறுகை (Slide Transition) நிர்ணயித்தல்:
சுட்டியைச் சொடுக்கும்போதோ
குறிப்பிட்ட நேரங்கழித்துத் தாமாகவோ அடுத்தடுத்த படவில்லைகளைத் தோன்றச்
செய்யலாம். ஒவ்வொரு படவில்லையும் வெறுமனே சட்டெனத் தோன்றாமல், மேலிருந்து
கீழிறங்குவதுபோல், கீழிருந்து மேலேறுவதுபோல், புள்ளியிலிருந்து விரிவதுபோல்,
மையத்திலிருந்து திறப்பதுபோல் - இவ்வாறு பல்வேறு வகையில் தோன்றுமாறு
செய்யலாம். ஒவ்வொரு படவில்லைக்கும் வெவ்வேறு மாறுகை முறையை அமைத்துக்
கொள்ள முடியும். மாறுகையின்போது குறிப்பிட்ட ஒலித்துணுக்கு ஒலிக்குமாறு
செய்ய முடியும். |
(9)
படவில்லை எண், தேதி/நேரம் சேர்த்தல்:
ஒவ்வொரு படவில்லையிலும்
அடிப்பகுதியில் படவில்லையின் எண், அன்றைய தேதி/நேரம், நிறுவனத்தின்
பெயர் போன்ற விவரங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். |
(10)
குறிப்புரை சேர்த்தல்:
முன்வைப்பினைப் பார்வையாளர்களுக்குக்
காட்சிப் படுத்துகையில் ஒவ்வொரு படவில்லையைக் காண்பிக்கும் போதும்
என்ன வெல்லாம் பேச வேண்டும் என்பதைச் சுருக்கமாகக் குறித்து வைத்துக்
கொள்ள முடியும். ஒவ்வொரு படவில்லைக்கும் கீழே ‘குறிப்புரைப் பக்கம்’
(Notes Page) என அதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. படவில்லைக் காட்சியின்போது
குறிப்புரைப் பக்கம் திரையில் காட்சியளிக்காது. |
|