6.3
காட்சிக்கு எழிலூட்டல்
ஒரு படவில்லையில் ஒரு தலைப்பின்
கீழ் மூன்று விவரங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன என்று வைத்துக் கொள்வோம்.
எடுத்துக் காட்டாக, ‘வன்பொருள்’ என்ற தலைப்பின் கீழ் முறைமைச் சாதனங்கள்,
உள்ளீட்டுச் சாதனங்கள், வெளியீட்டுச் சாதனங்கள் ஆகியவை பட்டியல் இடப்பட்டுள்ளன.
முன்வைப்பாளர் வன்பொருள் பற்றி விளக்கும்போது முதல் சுட்டிச் சொடுக்கில்
‘முறைமைச் சாதனம்’ என்பது மட்டும் தோன்ற வேண்டும். அதைப்பற்றி விளக்கிச்
சொல்லிய பிறகு சுட்டியைச் சொடுக்க, ‘உள்ளீட்டுச் சாதனங்கள்’ என்பது தோன்ற
வேண்டும். அதைப்பற்றி விளக்கியபின் ‘வெளியீட்டுச் சாதனங்கள்’ தோன்ற வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு விவரமாகத் தோன்றச் செய்தால்தான் பார்வையாளருக்கு ‘அடுத்து
என்ன?’ என ஆர்வம் ஏற்படும். மொத்தமாகக் காண்பித்துவிட்டால் ஒன்றைப்பற்றி
விளக்கிக் கொண்டிருக்கும் போது அடுத்ததைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பார்.
சுட்டிச் சொடுக்கில் ஒவ்வொரு விவரமும் தோற்றமளிக்கும்போது அசைவூட்டத்துடன்
தோன்றச் செய்ய முடியும்.
அதேபோல, சுட்டிச் சொடுக்கில் அடுத்தடுத்த படவில்லை தோன்றும்போது, உயிரோட்டத்துடன் தோன்றச் செய்யலாம். குறிப்பிட்ட நேரங்கழித்துத் தானாகவே படவில்லை மாறும்படி செய்யவும் வழியுள்ளது. பார்வையாளரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் முன்வைப்புக் காட்சிக்கு இத்தகைய எழிலூட்டும் வழிமுறைகளை இப்பாடப் பிரிவில் காண்போம்.
6.3.1
அசைவூட்ட வகை (Animation Scheme) தேர்ந்தெடுத்தல்
ஒவ்வொரு படவில்லைக்கும் ஓர் அசைவூட்ட
வகையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். அப்படவில்லையின் தலைப்பு குறிப்பிட்ட
அசைவூட்டத்தைப் பெறும். அதிலுள்ள பிற உரைப்பகுதிகள் அனைத்தும் ஒரே மாதிரியான,
அவ்வகைக்குரிய முன்னியல்பு (Default) அசைவூட்டத்தைக் கொண்டிருக்கும்.
முன்வைப்பு வடிவாக்கச் சாளரத்தில்
அசைவூட்டம் அமைக்க வேண்டிய படவில்லையைத் தருவித்துக் கொள்ளுங்கள். பட்டிப்
பட்டையில் Slide Show -> Animation Schemes... தேர்ந்தெடுங்கள். வலப்பக்கம்
Slide Design பணிப்பாளம் தோன்றும். Apply to selected slides என்ற தலைப்பில்
No Animation தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். அதன் கீழே Subtle,
Moderate, Exiting ஆகிய தலைப்புகளில் பல்வேறு அசைவூட்ட வகைகள் பட்டியலிடப்பட்டிருக்கும்.
அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். கீழேயுள்ள AutoPreview என்னும் தேர்வுப்
பெட்டியில் சரிக்குறி இடப்பட்டு இருக்குமெனில் தேர்ந்தெடுத்த அசைவூட்டம்
படவில்லையில் உடனே நிகழ்த்திக் காட்டப்படும். இல்லையேல் Play பொத்தானை அழுத்தி
அசைவூட்டத்தைப் பார்வையிடலாம். திரைக்கட்சியாகவும் பார்க்கலாம். Apply to
All Slides பொத்தானை அழுத்தி அதே அசைவூட்டத்தை அனைத்துப் படவில்லை களுக்கும்
அமைத்துக் கொள்ள முடியும்.
தலைப்புத் தவிர்த்த பிற உரைப்பகுதிகள்
ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறான அசைவூட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டுமெனில் அடுத்த
பத்தியில் குறிப்பிட்டுள்ள வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். தலைப்பு உட்படப்
படவில்லையிலுள்ள ஒவ்வோர் உரைப்பகுதிக்கும் விருப்பப்படி வெவ்வேறான அசைவூட்டம்
தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டுமெனில் அசைவூட்ட வகையில் No Animation தேர்ந்தெடுத்துக்
கொண்டு, அடுத்த பத்தியில் குறிப்பிட்டுள்ள வழிமுறையைப் பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொரு படவில்லைக்கும் முன்னியல்பு அசைவூட்ட வகை No Animation -ஆகத்தான்
இருக்கும்.
6.3.2
விருப்பப்படி அசைவூட்டம் (Custom Animation) அமைத்தல்
முன்வைப்பில் முதல் படவில்லையைத்
திறந்து வைத்துக் கொள்ளுங்கள். பட்டிப் பட்டையில் Slide Show -> Custom
Animation... தேர்ந்தெடுங்கள். வலப்பக்கம் Custom Animation பணிப்பாளம் தோன்றும்.
முதல் படவில்லையில் Computer Basics என்ற உரைப்பகுதியின் மீது சொடுக்கவும்.
வலப்பக்கப் பணிப்பாளத்தில் Add Effects என்னும் பொத்தான் ஒளிர்வுபெறும்.
அப்பொத்தானை அழுத்த ஒரு பட்டி விரியும். அதில் Entrance தேர்ந்தெடுக்க, ஒரு
கிளைப்பட்டி விரியும். அதில் சில அசைவூட்ட வகைகளின் பட்டியல் இருக்கும்.
கடைசியில் இருக்கும் More Effects... தேர்ந்தெடுக்கவும். ஒரு தனிச் சாளரத்தில்
Basic, Subtle, Moderate, Exiting ஆகிய தலைப்புகளில் பல்வகைப்பட்ட அசைவூட்டங்களின்
பட்டியல் கிடைக்கும். அவற்றுள் உங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து
OK பொத்தானை அழுத்த வேண்டும். Preview Effect என்னும் தேர்வுப் பெட்டியில்
சரிக்குறி இடப்பட்டிருப்பின் அசைவூட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனே அது நிகழ்த்திக்
காட்டப்படும்.
வலப்பக்கப் பணிப்பாளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட
அசைவூட்டமும், அதன் பண்பும் (இருப்பின்), அசைவூட்டம் நிகழ்த்தப்படும் வேகமும்
குறிக்கப்பட்டிருக்கும். பண்பினையும் வேகத்தையும் நம் விருப்பப்படி மாற்றியமைக்க
முடியும். பொதுவாக வேகத்தை Medium என அமைத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
Start என்பதில் On Click என இருப்பதை மாற்ற வேண்டியதில்லை. Remove பொத்தானை
அழுத்தி ஏற்கெனவே தேர்ந்தெடுத்த அசைவூட்டத்தை நீக்கிவிட்டு, வேறு அசைவூட்டத்தை
அமைத்துக் கொள்ளவும் வழியுள்ளது.
படவில்லையில் அடுத்துள்ள உரைப்பகுதியைத் தேர்ந்தெடுத்து மேற்கண்டவாறே அசைவூட்டம் அமைக்க வேண்டும். இவ்வாறாக படவில்லையில் உள்ள ஒவ்வோர் உரைப்பகுதிக்கும் அசைவூட்டம் அமைத்தபின் அடுத்த படவில்லையைத் தேர்ந்தெடுத்து அதிலுள்ள உரைப்பகுதிகளுக்கும் அசைவூட்டம் அமைக்கலாம். படவில்லைகளில் பொட்டிட்ட பட்டியலில் (Bulletted Lists) இடம்பெற்றுள்ள ஒவ்வோர் உரைப்பகுதிக்கும் வெவ்வேறான அசைவூட்டம் அமைக்க முடியும். ஆனால், ஒரு பட்டியலில் உள்ள அனைத்து உரைப்பகுதிகளும் ஒரே மாதிரியான அசைவூட்டம் பெற்றிருந்தால்தான் பார்க்க அழகாக இருக்கும்.
6.3.3
படவில்லை மாறுகை (Slide Transition)
ஒவ்வொரு படவில்லையும் திரையில்
தோன்றும்போது மிகச் சாதாரணமாய்த் தோன்றாமல் உயிரோட்டத்துடன் தோன்றுமாறு செய்யப்
‘படவில்லை மாறுகை’ என்னும் வசதி வாய்ப்பளிக்கிறது. முன்வைப்பு வடிவாக்கச்
சாளரத்தில் முதல் படவில்லையில் இருந்துகொண்டு Slide Show -> Slide Transition...
தேர்ந்தெடுங்கள். படவில்லைமீது வலது சொடுக்கிட்டுவரும் பட்டியிலும் இதனைத்
தேர்ந்தெடுக்கலாம். வலப்பக்கம் Slide Transition பணிப்பாளம் தோன்றும். மாறுகைகளின்
பட்டியலில் No Transition தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். பட்டியலில்
ஒரு மாறுகையைத் தேர்ந்தெடுங்கள். உடனே அம்முறைப்படி படவில்லை தோன்றுவது நிகழ்த்திக்
காட்டப்படும்.
ஒவ்வொரு மாறுகையும் எவ்வாறு தோற்றமளிக்கும்
என்பதைப் பார்வையிட்டு, இறுதியில் விருப்பமான மாறுகையைத் தேர்ந்தெடுத்துக்
கொள்ளவும். பட்டியலின் கீழே Modify transition என்பதன் கீழ் Speed என்ற கட்டத்தில்
மாறுகையின் வேகத்தை நிர்ணயிக்க முடியும். Medium என்பதைத் தேர்ந்தெடுப்பது
பொருத்தமாக இருக்கும். படவில்லை தோன்றும்போது குறிப்பிட்ட ஒலித்துணுக்கை
ஒலிக்கச் செய்யவும் வழியுள்ளது. Sound என்ற கட்டத்தில் உள்ள பட்டியலில் ஏதேனும்
ஓர் ஒலித்துணுக்கைத் தேர்ந்தெடுத்துப் பாருங்கள். அவ்வொலியுடன் படவில்லை
தோன்றுவதைக் காணலாம். Loop until next sound என்னும் தேர்வுப் பெட்டியில்
சரிக்குறியிட்டு, அதே ஒலித்துணுக்கைத் தொடர்ந்து ஒலிக்குமாறும் செய்யலாம்.
Advance slide என்ற தலைப்பின்
கீழே On mouse click என்ற தேர்வுப் பெட்டியில் சரிக்குறி இடப்பட்டிருக்கும்.
சுட்டிச் சொடுக்கில் படவில்லை மாறும் என்பது இதன் பொருளாகும். சுட்டியைச்
சொடுக்காவிட்டாலும், குறிப்பிட்ட நேரங்கழித்துப் படவில்லை தானாகவே மாறும்படியும்
செய்யலாம். Automatically after என்னும் தேர்வுப் பெட்டியில் சரிக்குறி இட்டு,
அதன்கீழ் எத்தனை நிமிடம்/வினாடி கழித்து மாற வேண்டும் என்பதைக் குறிப்பிட
வேண்டும். இவ்வாறாக, ஒவ்வொரு படவில்லைக்கும் மாறுகை, ஒலி, தேவையெனில் நேரம்
ஆகியவற்றை அமைத்தபின், முன்வைப்பினை முழுமையாக ஒருமுறை இயக்கிப் பார்க்கவும்.
திருப்தி ஏற்பட்டவுடன், முன்வைப்பினைச் சேமித்துக் கொள்ளவும்.
|