-
மின்னணுத்
தொழில்நுட்பமும், கணிப்பொறித் தொழில்நுட்பமும் மிகவும் வளர்ச்சி பெற்றுவிட்டன.
கற்பிக்கும் முறைகளிலும் மாற்றங்கள் வந்துவிட்டன. பாடங்களுக்கான குறிப்புகளையும்
படங்களையும் கணிப்பொறி மென்பொருள் உதவியுடன் படவில்லைகளில் (Slides)
தயாரித்து வைத்துக் கொண்டு, படங்காட்டி (Projector) மூலமாக, பெரிய திரையில்
ஒன்றன்பின் ஒன்றாகக் காட்டி, ஆசிரியர் விளக்கிச் சொல்லும் முறை ‘முன்வைப்பு’
(Presentation) என்று அழைக்கப்படுகிறது.
-
மைக்ரோசாஃப்ட்
ஆஃபீஸ் கூட்டுத் தொகுப்பில் ‘பவர்பாயின்ட்’ (Powerpoint) என்னும் முன்வைப்பு
மென்பொருள் ஓர் அங்கமாக விளங்குகிறது. கணிப்பொறியில் அதிக அனுபவம் இல்லாதோரும்
இந்த மென்பொருளில் எளிதாக முன்வைப்புகளை உருவாக்கலாம்.
-
முன்வைப்புகளின்
அடிப்படையாக விளங்குபவை ‘சிலைடு’ என அறியப்படும் படவில்லைகளாகும். படவில்லை
என்பது கணிப்பொறித் திரை அளவிலான ஒரு சட்டகம். சொல்லவரும் கருத்தைச்
சிறுசிறு தலைப்புகளாகப் பிரித்து, ஒவ்வோர் உள்-தலைப்பையும் ஒரு படவில்லையில்
அமைத்து முன்வைப்பினை உருவாக்க வேண்டும்.
-
சொல்லவரும்
கருத்தை மிகக் குறைந்த நேரத்தில் சொல்லிவிட வேண்டும். அதே வேளையில் விவரங்கள்
தௌ¢ளத் தெளிவாய் விளக்கப்பட வேண்டும். பார்வையாளர்கள் கவனம் சிதறாமல்
ஈடுபாட்டுடன் கருத்துகளை உள்வாங்கிக் கொள்ளும் வகையில் கருத்துகள் விளக்கப்பட
வேண்டும். எனவே கருத்துரையாளர்களுக்கு ‘முன்வைப்பு’ கட்டாயத் தேவையாகும்.
-
பள்ளி
ஆசிரியர்கள், கருத்தரங்குப் பேச்சாளர்கள், ஆய்வறிஞர்கள், வணிக நிறுவன
முகவர்கள் ஆகியோருக்கு முன்வைப்புகள் பெரிதும் பயன்படுகின்றன.
-
முன்வைப்பு
முகப்புப் படவில்லையையும், முடிவுப் படவில்லையையும் கொண்டிருக்கும்.
ஒரு முன்வைப்பில் பத்து முதல் நாற்பது படவில்லைகள்வரை இருக்கலாம்.
-
முன்வைப்பினைப்
பார்வையிட ஐந்து வகையான காட்சிமுறைகள் உள்ளன. (1) இயல்புக் காட்சிமுறை:
முன்வைப்பினை உருவாக்கப் பயன்படுகிறது. (2) படவில்லை வரிசையாக்கக் காட்சிமுறை:
படவில்லைகளை முன்பின்னாக மாற்றியமைக்கலாம். (3) குறிப்புரைப் பக்கக்
காட்சிமுறை: படவில்லையில் இடம்பெற்றுள்ள விவரங்களைப் பற்றிய விளக்கக்
குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்ளலாம். (4) உள்ளடக்கத் தொகுப்புக் காட்சிமுறை:
முன்வைப்பின் முழு உள்ளடக்கத்தையும் ஒட்டுமொத்தமாய் நோக்கிடப் பயன்படுகிறது.
(5) படவில்லைத் திரைக்காட்சி: பார்வையாளர்களுக்குக் காட்டப்படுவது.
-
படவில்லைக்
காட்சியின்போது முந்தைய, அடுத்த அல்லது குறிப்பிட்ட படவில்லைக்குச் செல்ல
முடியும். தற்காலிகமாய்த் திரையைக் கருப்பாக அல்லது வெண்மையாய் ஆக்க
முடியும். படவில்லையில் உள்ள சில விவரங்களைக் குறியிட்டுக் காட்டி விளக்கம்
அளிக்கப் பேனா அல்லது ஒளிர்வூட்டியைத் (Highlighter) தருவித்துக் கொள்ள
முடியும். பாதியிலேயே முன்வைப்புக் காட்சியை முடித்துக் கொள்ள முடியும்.
-
முன்வைப்பின்
படவில்லைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். ஒவ்வொரு படவில்லையாக முன்னியல்பான
வடிவமைப்பில் தயாரிக்க வேண்டும். அடுத்துப் படவில்லைகளுக்குப் பின்புலக்
காட்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்புலக் காட்சியின் வண்ணக் கலவையை
விரும்பியவாறு மாற்றியமைத்துக் கொள்ளலாம். அதன்பிறகு, உரைப்பகுதிகளை
அழகுற வடிவமைக்க வேண்டும்.
-
படவில்லைகளுக்கு
அசைவூட்ட வகையைத் தேர்ந்தெடுக்கலாம். படவில்லையின் தலைப்பும், பிற உரைப்பகுதிகளும்
முன்னியல்பான அசைவூட்டத்தைக் கொண்டிருக்கும். ஒவ்வோர் உரைப்பகுதிக்கும்
விருப்பப்படி அசைவூட்டம் அமைத்துக் கொள்ளவும் வழியுள்ளது.
-
படவில்லைகள்
தோன்றும்போது உயிரோட்டத்துடன் தோன்றப் படவில்லை மாறுகையைத் தேர்ந்தெடுக்க
வேண்டும். படவில்லை தோன்றும்போது குறிப்பிட்ட ஒலித்துணுக்கை ஒலிக்கச்
செய்யலாம். சுட்டிச் சொடுக்கில் படவில்லை மாறும்படி செய்யலாம். சுட்டியைச்
சொடுக்காவிட்டாலும் குறிப்பிட்ட நேரங்கழித்துப் படவில்லை தானாகவே மாறும்படி
செய்யலாம்.
-
சொற்களையும்
சொல்தொடர்களையும் முன்னியல்பான எழுத்து வடிவங்களில் அமைப்பதைவிட ஓவியம்
போன்ற கலையெழுத்துகளில் அமைத்தால் பார்க்க அழகாக இருக்கும். குறிப்பாக
முகப்பு, முடிவு, உட்பிரிவு படவில்லைத் தலைப்புகளை கலையெழுத்தில் அமைக்கலாம்.
கலையெழுத்தைப் பெரிதாக்க, சிறிதாக்க, வடிவம், வண்ணத்தை மாற்ற வசதிகள்
உள்ளன.
-
படவில்லையில்
தேவையான இடங்களில் அட்டவணையைச் சேர்த்துக் கொள்ளலாம். அட்டவணையின் கரைகள்,
குறுக்குக் கோடுகளின் தடிமன், நிறம் மற்றும் கிடக்கைகளின் உயரம், நெடுக்கைகளின்
அகலம் ஆகியவற்றை விரும்பியவாறு மாற்றியமைத்துக் கொள்ளலாம். அட்டவணையில்
விவரங்களை உள்ளிட்டு, அவற்றின் எழுத்துரு, உருவளவு, நிறம் ஆகியவற்றை
வடிவமைக்க முடியும்.
-
படவில்லைகளில்
தேவையான இடங்களில் படங்களைச் சேர்ப்பது முன்வைப்புக்கு மேலும் மெருகூட்டுவதாய்
அமையும். ‘மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் 2003’ மென்பொருளில் உள்ளிணைக்கப் பட்டுள்ள
வகை வாரியான துணுக்குப் படங்களையோ (Clip Art), கோப்பு வடிவில் சேமிக்கப்பட்டுள்ள
எந்தவொரு படத்தையுமோ படவில்லையில் சேர்க்க முடியும்.
-
‘மைக்ரோசாஃப்ட்
ஆஃபீஸ் 2003’ மென்பொருளில் உள்ளிணைக்கப் பட்டுள்ள ஏராளமான ஒலி (Sound)
மற்றும் அசைவூட்டப் படத் (Animated GIF) துணுக்கு அல்லது கோப்பாகச் சேமித்து
வைத்துள்ள பேச்சு, இசை, பாடல் வடிவிலான ஒலித்துணுக்கு, நிகழ்படம் அல்லது
திரைப்படக் காட்சியைப் படவில்லையில் சேர்த்துக் கொள்ள முடியும்.