1.0 பாட முன்னுரை தனிமரம் தோப்பாவதில்லை. தனிமனிதன் சமூகம் ஆவதில்லை. மரங்கள் சேர்ந்து தோப்பாகும்போது மனித சமூகம் பலன் அடைகிறது. மனிதர்கள் சேர்ந்து சமூகம் ஆகும்போது மனித வாழ்க்கை பொருளுடையதாகிறது. தனிமனிதன் சாதிக்க முடியாத வற்றைச் சமூகம் சாதித்துக் காட்டுகிறது. தனித்த கணிப்பொறி, ‘பிணையம்’ (Network) ஆவதில்லை. தனித்த கணிப்பொறிகள் பல பிணைக்கப்பட்டுப் ‘பிணையம்’ ஆகும்போது, ‘சமூகம்’ போலச் சக்தி வாய்ந்ததாகி விடுகிறது. தனித்த கணிப்பொறி சாதிக்க முடியாதவற்றைக் ‘கணிப்பொறிப் பிணையம்’ சாதித்துக் காட்டுகிறது. கோப தாபங்கள், சண்டை சச்சரவுகள் இல்லாத ‘கணிப்பொறிச் சமூகம்’ மனித சமூகத்துக்கு மகத்தான சக்தியை வழங்குகிறது. கடந்த நூற்றாண்டின் இறுதியில் கணிப்பொறித் தொழில்நுட்பமும் (Computer Technology) தகவல் தொடர்புத் தொழில்நுட்பமும் (Communication Technology) மாபெரும் வளர்ச்சியைக் கண்டன. இவ்விரண்டு தொழிநுட்பங்களின் சங்கமத்தில் உருவான ‘தகவல் தொழில்நுட்பம்’ (Information Technology) கடந்த பத்தாண்டுகளில் முன்கணித்துச் சொல்ல முடியாத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது கண்கூடு. இதன் காரணமாய் மனிதர்களுக்கு இடையேயான ‘தகவல் தொடர்பு’ (Communication) எண்ணிப் பார்க்க முடியாத எல்லைகளைத் தொட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பமும் தகவல் தொடர்பும் கண்டுள்ள இத்தகைய சாதனைகளுக்குக் காரணமாக விளங்குபவை ‘கணிப்பொறிப் பிணையங்கள்’ (Computer Networks) என்று கணித்துக் கூறுவதில் கடுகளவும் மிகையில்லை. கணிப்பொறிப் பிணையங்களின் பல்வேறு பரிமாணங்களை இத்தொகுதியில் இனிவரும் பாடங்களில் பயில இருக்கிறோம். கணிப்பொறிப் பிணையம் என்றால் என்ன (What?), கணிப்பொறிப் பிணையங்கள் எதற்காக வேண்டும் (Why?), அவற்றை நிறுவுவது எவ்வாறு (How?) என்பதை முதலில் அறிந்து கொள்வோம். அடுத்துப் பிணையங்களில் கணிப்பொறிகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் நடைபெறுவதற்கான ஊடகங்கள் (Media) பற்றித் தெரிந்து கொள்வோம். கணிப்பொறிப் பிணையங்களில் கணிப்பொறிகளைப் பிணைக்கவும், கணிப்பொறிப் பிணையங்களை விரிவாக்கவும், ஓன்றுக்கு மேற்பட்ட பிணையங்களை இணைக்கவும் தேவையான வன்பொருள்கள் பற்றியும், கணிப்பொறிப் பிணையங்களுக்கான இயக்க முறைமை (Operating System), தகவல் தொடர்பு நெறிமுறைகள் (Communication Protocols) மற்றும் பிணையச் சேவைகளுக்கான வழங்கி, நுகர்வி மென்பொருள்கள் (Server Client Software) பற்றியும் இப்பாடத்தில் கற்றுக் கொள்வோம். |