-
பல கணிப்பொறிகள்
ஒன்றாகப் பிணைக்கப்பட்டு ஒரு குழுவாக இயங்கும் அமைப்பைக் ‘கணிப்பொறிப்
பிணையம்’ எனக் கூறலாம். தனித்த கணிப்பொறி சாதிக்க முடியாதவற்றைக் ‘கணிப்பொறிப்
பிணையம்’ சாதித்துக் காட்டுகிறது
-
பிணயங்களினால் கிடைக்கப்பெறும்
பலன்களை நான்கு பிரிவுகளில் அடக்கலாம்: (1) கணிப்பொறிகளுக்கிடையே தகவல்
பரிமாற்றம் (2) கணிப்பொறி களின் வன்பொருள், மென்பொருள் மற்றும் தரவு
வளங்களைப் பகிர்ந்தல். (3) தகவல் பராமரிப்பும் பாதுகாப்பும் எளிமையாகும்.
(4) மனித உழைப்புப் பெருமளவு மிச்சமாகும். நிறுவனத்தின் ஒட்டுமொத்தப்
பணித்திறன் அதிகரிக்கும்.
-
மையக் கணிப்பொறி
எதுவும் இல்லாத, அனைத்துக் கணிப்பொறிகளும் நிகர் உரிமை பெற்ற பிணையத்தை
உருவாக்க முடியும். ஒரு மையக் கணிப்பொறியுடன் நூற்றுக் கணக்கான கணிப்பொறிகளைப்
பிணைத்து மையக் கணிப்பொறியின் கட்டுப்பாட்டில் பிற கணிப்பொறிகள் செயல்படுமாறு
அமைக்க முடியும். இந்த இரண்டு முறைகளும் கலந்த மூன்றாவது முறையிலும்
கணிப்பொறிப் பிணையத்தை நிறுவ முடியும்.
-
ஒரு பிணையத்தில்
கணிப்பொறிகளை ஒன்றோடொன்று பிணைக்கின்ற ‘இணைப்புமுறை’ (Topology) வேறுபடலாம்.
பாட்டை (Bus), வளையம் (Ring), நட்சத்திரம் (Star), வலைப்பின்னல் (Mesh),
கலப்பு (Hybrid), மரவுரு (Tree), படிநிலை (Hierarchial), கலநிலை (Cellular)
போன்ற பல்வேறு இணைப்பு முறைகள் உள்ளன.
-
பிணையத் தகவல் பரிமாற்றத்துக்கு
மூன்று வகையான ஊடகங்கள் பயன்படுகின்றன. (1) செப்புக் கம்பிகள் (Copper
Wires). (2) ஒளியிழை வடங்கள் (Optical Fibre Cables). (3) கம்பியில்லா
ஊடகம் (Wireless Media).
-
செப்புக் கம்பி வடங்கள் இருவகைப்படும்:
(1) இணையச்சு வடங்கள் (Co-axial Cable). (2) முறுக்கிய இணை வடங்கள் (Twisted
Pair Cable). முறுக்கிய இணை வடங்களைவிட இணையச்சு வடங்கள் அதிவேகமாகத்
தகவல் பரிமாறக் கூடியவை. அதிக தொலைவுக்கும் பயன்படக் கூடியவை.
-
தற்காலத்தில் முறுக்கிய இணை வடங்களே
பெருமளவு பயன்படுத்தப் படுகின்றன. முறுக்கிய இணை வடங்களில் இருவகை உள்ளன:
(1) உறையிடா முறுக்கிய இணை (Unshielded Twisted Pair - UTP). (2) உரையிட்ட
முறுக்கிய இணை (Shielded Twisted Pair - STP).
-
செப்பு வடங்களோடு ஒப்பிடுகையில் ஒளியிழைவடங்கள்
பலவகையிலும் மேம்பட்டவை: அலைக்கற்றை (Bandwidth) அதிகம். எடை குறைவானவை.
துருப் பிடிப்பதில்லை. ஒளிக்கசிவு ஏற்படுவதில்லை. அதிக வேகத்தில் தகவலை
அனுப்பி வைக்க முடியும். தொலைதூரத் தகவல் பரிமாற்றத்துக்கு மிகவும் ஏற்றது.
மின்தூண்டல், மின்காந்த இடையீடு, மின்தடங்களினால் பாதிப்பு ஆகிய குறைபாடுகள்
கிடையாது. தகவலை இடையிட்டு ஒட்டுக் கேட்க முடியாது.
-
வானலை, நுண்ணலை, அகச்சிவப்புக் கதிர்,
லேசர் கதிர் ஆகியவை தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
-
வானலையின் குறிப்பிட்ட அலைவரிசையை
(2.45 GHz) கணிப்பொறிப் பிணையம் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் பயன்படுத்துவதற்காக
சீமென்ஸ், இன்டெல், டொஷீபா, மோட்டோரோலோ போன்ற நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கிய
தரப்பாட்டினை ‘புளூடூத் தொழில்நுட்பம்’ என அழைக்கின்றனர். இத்தொழில்நுட்பம்
கணிப்பொறிப் பிணையம் மற்றும் செல்பேசிச் சாதனங்களில் இன்றைக்குப் பெருமளவு
பயன்படுத்தப்படுகிறது.
-
கணிப்பொறிகளைப் பிணையத்தில் இணைப்பதற்கு
வடங்கள், செருகுதுளைகள், இணைப்பிகள், குவியம், பிணைய இடைமுக அட்டை ஆகிய
வன்பொருள்கள் தேவைப்படுகின்றன. முறுக்கிய இணை வடங்களுக்கு ஆர்ஜே-45,
இணையச்சு வடங்களுக்கு பிஎன்சி வகை செருகுதுளைகளும் இணைப்பிகளும் பயன்படுத்தப்
படுகின்றன.
-
இரண்டுக்கு மேற்பட்ட கணிப்பொறிகளை
மையப்படுத்தி இணைக்கக் குவியம் (Hub) பயன்படுகிறது. முனைப்பிலாக் குவியம்,
முனைப்புக் குவியம், நுண்ணறிவுக் குவியம் என மூவகைக் குவியங்கள் உள்ளன.
முனைப்புக் குவியம், குறிகைகளைத் திறன்மிகுத்து. மீட்டுருவாக்கி அனுப்பி
வைக்கின்றன. முனைப்பிலாக் குவியம் அவ்வாறின்றி அப்படியே அனுப்பி வைக்கும்.
நுண்ணறிவுக் குவியம் தகவலை இலக்குக் கணிப்பொறிக்கு மட்டுமே அனுப்பும்.
மற்ற இரண்டும் அனைத்து கணிப்பொறிகளுக்கும் அனுப்பி வைக்கும்.
-
பிணையத்தில் இணைக்கப்படும் கணிப்பொறிகளில்
‘நிக்’ (NIC - Network Interface Card) எனப்படும் பிணைய இடைமுக அட்டை
கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ‘நிக்’ அட்டை ஒவ்வொன்றும் தனக்கே
உரிய தனித்த முகவரியைக் கொண்டுள்ளன. இவ்வெண் ஆறு பைட்டுகளால் (48 பிட்டுகளால்)
ஆனது. ‘நிக்’ அட்டையின் இந்த அடையாள எண் ‘ஊடக அணுகல் கட்டுப்பாட்டு முகவரி’
(Media Access Control Address), சுருக்கமாக ‘மேக் முகவரி’ (MAC Address)
என்று அழைக்கப்படுகிறது.
-
ஒரு பிணையத்தின் பரப்பை அதிகமாக்கி
விரிவுபடுத்த வலுவூட்டி (Repeater), இணைவி (Bridge), தொடர்பி (Switch)
ஆகிய வன்பொருள் கருவிகள் பயன்படுகின்றன.
-
எந்தவோர் ஊடகத்திலும் குறிப்பிட்ட
தொலைவு வரையே குறிகைகள் வலுவிழப்பு (Attenuation) இன்றிப் பயணிக்கும்.
அத்தொலைவையும் தாண்டிச் செயல்படும் ஒரு கணிப்பொறியைப் பிணையத்தில் இணைக்க
இடையிடையே வலுவூட்டிகளைப் பயன்படுத்த வேண்டும்.
-
ஒரு பிணையத்தின் இரண்டு கிளைப்பிரிவுகளை
(Segments) இணைக்க இணைவி பயன்படுகிறது.
-
ஒரு பிணையத்திலுள்ள கணிப்பொறிகளை
ஒருங்கிணைக்கக் குவியத்தைப் போலவும், ஒரு பிணையத்தின் கிளைப்பிரிவுகளை
ஒருங்கிணைக்க இணைவியைப் போலவும் தொடர்பியைப் பயன்படுத்தலாம்.
-
தொடர்பி ஒரு தொலைபேசி இணைப்பகம் போலச்
செயல்படுகிறது. பிணையத்தில் தகவல் தொடர்புகொள்ள விரும்பும் இரு கணிப்பொறிகளுக்கு
இடையே தொடர்பினை ஏற்படுத்தித் தருகிறது. ஒரே நேரத்தில் வெவ்வேறு இரு
கணிப்பொறிகளுக்கு இடையே பல தொடர்புகள் சாத்தியம். அலைக்கற்றை, தொடர்புகளுக்குப்
பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எனவே பிணையத்தின் தகவல் போக்குவரத்துக்
கையாள் திறன் அதிகரிக்கிறது.
-
தனித்தனியாகச் செயல்படும் ஒன்றுக்கு
மேற்பட்ட பிணையங்களை இணைத்துப் பரந்த பிணையத்தை உருவாக்க இணைவி (Bridge),
திசைவி (Router), நுழைவி (Gateway) ஆகிய வன்பொருள் கருவிகள் பயன்படுகின்றன.
-
ஒரே இணைப்புமுறை (Topology) கொண்ட
பிணையங்களை இணைக்க இணைவி பயன்படுகிறது. வெவ்வேறு இணைப்புமுறை கொண்ட,
ஒரே வகையான நெறிமுறையில் செயபடும் பிணையங்களை இணைக்கத் திசைவி உகந்த
கருவியாகும். வெவ்வேறு வகையான கட்டுமானம் கொண்ட பிணையங்களை இணைக்கவும்,
முற்றிலும் வேறுபட்ட நெறிமுறைகளின் (Protocols) அடிப்படையில் செயல்படும்
பிணையங்களை இணைக்கவும் ‘நுழைவி’ (Gateway) எனப்படும் சிறப்புவகைத் திசைவி
பயன்படுகின்றது.
-
பிணையத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெற
தேவைப்படும் மென்பொருள்களுள் பிணைய இயக்க முறைமை (Network Operating
Systems), தகவல் தொடர்பு நெறிமுறைகள் (Communication Protocols), ஒவ்வொரு
பிணையப் பயன்பாடுகளுக்குமான வழங்கி, நுகர்வி மென்பொருள்கள் (Server,
Client Software) முக்கியமானவ.
-
மையக் கணிப்பொறியின் கட்டுப்பாட்டில்
செயல்படும் பிணையங்களில் அத்தகைய மையக் கணிப்பொறியில் ‘பிணைய இயக்க முறைமை’
நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
-
ஒரு பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள
இரண்டு கணிப்பொறிகள் தகவல் பரிமாறிக் கொள்ள வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை
உள்ளடக்கிய மென்பொருளே ‘நெறிமுறை’ (Protocol) எனப்படுகிறது.
-
பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு
கணிப்பொறிகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்ற வழிமுறைகள் அடுக்குகளாகப்
(Layers) பிரிக்கப்பட்டு அணுகப்படுகின்றன. உலகத் தரப்பாட்டு அமைப்பு
(International Standard Organisation - ISO), பிணையத் தகவல் தொடர்புக்கெனத்
‘திறந்தநிலை முறைமைகளின் ஒன்றிணைப்பு’ (Open Systems Interconnection
- OSI) என்னும் ஏழடுக்கு மாதிரியத்தைப் (Model) பரிந்துரைத்தது. பிணையத்
தகவல் பரிமாற்றம் பற்றி உருவாக்கப்பட்ட கருத்துருக்கள் அனைத்துக்கும்
இம்மாதிரியமே அடிப்படையாக அமைந்தது. ஒவ்வோர் அடுக்கிலும் குறிப்பிட்ட
பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. ஒவ்வோர் அடுக்கிலும் குறிப்பிட்ட நெறிமுறைகள்
செயல்படுகின்றன. ’டீசிபீ/ஐபீ’ என்பது தலையாய தகவல் தொடர்பு நெறிமுறை
ஆகும்.
-
கோப்புப் பரிமாற்றம் (File Transfer),
வலையுலா (Web Browsing), மின்னஞ்சல் (E-Mail), உடனடிச் செய்திப் பரிமாற்றம்
(Instant Messenger), செய்திக் குழுக்கள் (News Groups), அஞ்சல் குழுக்கள்
(Mailing List), அரட்டை (Chat) போன்ற பல்வேறு வகையான பிணையச் சேவைகளை
வழங்கும் மையக் கணிப்பொறியில் அந்தந்த சேவைக்குரிய வழங்கி மென்பொருள்
நிறுவப்பட்டிருக்க வேண்டும். அந்தந்தச் சேவையை நுகர்வதற்கு நுகர்விக்
கணிப்பொறிகளில் உரிய நுகர்வி மென்பொருள் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.