|
2.2 கோப்பு வழங்கி - கணுக்கள் அமைப்புமுறை
1980-களில் நுண்கணிப்பொறிகள் என்று அழைக்கப்பட்ட சிறிய, விலைகுறைந்த சொந்தக் கணிப்பொறிகள் பெருமளவு பயன்பாட்டுக்கு வந்தன. மிகப்பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய நடுத்தர வணிக நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் கூட கணிப்பொறிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். நிறுவனச் செயல்பாடுகள், அலுவலகப் பணிகள் காரணமாக ஒரு நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் கணிப்பொறிகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இத் தேவையை நிறைவுசெய்யப் பிணைய அமைப்புமுறை நடைமுறைக்கு வந்தது. பிணைய இணைப்புக்கான வன்பொருள், மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன. ஒரு சக்தி வாய்ந்த மையக் கணிப்பொறியுடன் பல சொந்தக் கணிப்பொறிகள் பிணைக்கப்பட்டன. குவியம் (Hub), தொடர்பி (Switch) போன்ற பிணைய இணைப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. மையக் கணிப்பொறி கோப்பு வழங்கி (File Server) என்று அழைக்கப்பட்டது. கிளைக் கணிப்பொறிகள் கணுக்கள் (Nodes) என்று அழைக்கப்பட்டன. இந்த அமைப்பு முறையில் கிளைக் கணிப்பொறிகளுக்குக் கூடுதல் சுதந்திரம் இருந்தது. மையப்படுத்திய தரவுத் தளத்தின் தகவல்களைப் பகிர்ந்துகொண்டு பல பயனர்கள் ஒரே நேரத்தில் பணியாற்ற இந்த அமைப்புமுறை மிகவும் ஏற்றதாக இருந்தது. இதன் அமைப்புமுறை, செயல்பாடு, நிறை குறைகளை இப்பாடப் பிரிவில் காண்போம்.
2.2.1
கோப்பு வழங்கி, கணுக்களின் அமைப்பும் செயல்பாடும்
கணுக்களில் நுண்செயலி உண்டு. நினைவகம்
உண்டு. நிலைவட்டுத் தேவையில்லை. தேவையெனில் பொருத்திக் கொள்ளலாம். கணுக்களின்
கோரிக்கையின் அடிப்படையில் கோப்பு வழங்கி கோப்புகளை அனுப்பி வைக்கும். தரவுச்
செயலாக்கப் பணிகளை கணுக்களே செய்யும். புதுப்பிக்கப்பட்ட கோப்பு வழங்கிக்கே
திருப்பி அனுப்பப்படும். அனைத்துப் பயனர்களின் கோப்புகளையும் பாதுகாத்துப்
பராமரிக்கும் பணிகளை கோப்பு வழங்கி செய்யும். பிணைய நிர்வாகியின் மேற்பார்வையிலும்
கட்டுப்பாட்டிலும் கோப்பு வழங்கியும் பயனர்களும் இருப்பர்.
கோப்பு வழங்கியில் பிணைய இயக்க
முறைமை இயங்கும். கணுக்களில் தனியான இயக்க முறைமை இருக்க வேண்டியதில்லை.
‘சேய்மை இயக்கம்’ (Remote Booting) முறையில் கணுக்கள் இயக்கப்படும். கணுக்களில்
நிலைவட்டினைப் பொறுத்தி, தனித்த இயக்கமுறையை நிறுவிக் கொள்ளவும் முடியும்.
அவ்வாறுள்ள கணுக்களை இயக்கும்போது வழங்கியிலிருந்து சேய்மை இயக்க முறையிலா,
நிலைவட்டிலுள்ள இயக்க முறையிலிருந்தா எனக் கேட்கச் செய்து, விரும்பியவாறு
இயக்கிக் கொள்ள முடியும். நிலைவட்டிலிருந்து இயக்கினால் கணுக்களைப் பிணையக்
கணிப்பொறியாகப் பயன்படுத்தாமல் தனித்த கணிப்பொறியாகப் பயன்படுத்திக் கொள்ள
முடியும்.
2.2.2
நிறை குறைகள்
தரவுத்தளமும் பயன்பாட்டு மென்பொருள்களும்
வழங்கிக் கணிப்பொறியிலேயே இருக்கும். எனவே தரவுப் படியாக்கம் (Data Backup),
தரவுப் பாதுகாப்பு (Data Protection), பயன்பாட்டு மென்பொருள்களைப் புதுப்பித்தல்
போன்ற பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இந்த அமைப்பு முறையில் செயலாக்கப்
பணிகளை கணுக்களே மேற்கொள்வதால் வழங்கிக்கு அதிகமான வேலைப்பளு இல்லை. எனவே
பல்பயனர் அமைப்பு முறையில் இருந்ததுபோல மையக் கணிப்பொறி திறன்மிக்கதாய் இருக்க
வேண்டிய தேவைதில்லை. மேலும் பல்பயனர் அமைப்பு முறையில் இருந்ததைவிடப் பயனர்களுக்கு
அதிகமான சுதந்திரமும் சலுகைகளும் இருந்தன. ஒரு பயனர் பிற பயனரின் தரவுகளிலும்
பணிகளிலும் தலையிட முடியாத வகையில் போதுமான பாதுகாப்பு இருந்தது. ஒவ்வொரு
கணுவின் கோரிக்கையின் பேரிலும் கோப்புகளைக் கணுக்களுக்கு அனுப்பித் திரும்பப்
பெறவேண்டியிருப்பதால் பிணையப் போக்குவரத்து அதிகமாக இருக்கும். மேலும் புதிய
கணுக்களைச் சேர்க்கவும் கணுக்களைப் பராமரிக்கவும் செலவு அதிகமாகும்.
குறுகிய எல்லைகளுக்குள் செயல்படும்
குறும்பரப்புப் பிணையங்களின் வளர்ச்சிக்கு இந்த அமைப்புமுறை மிகவும் உகந்ததாக
இருந்தது. தொடக்க காலங்களில் நாவெல் (Novell) நிறுவனம் தயாரித்து வெளியிட்ட
‘நாவெல் நெட்வேர்’ (Novell Netware) என்னும் பிணைய இயக்க முறைமை மிகவும்
செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது.
2.2.3
நிகர்களின் பிணைய அமைப்பு (Peer-to-Peer Network)
ஓர் அலுவலகத்தில் வெவ்வேறு பிரிவுகளில்
பத்துக் கணிப்பொறிகளைத் தனித் தனியே பயன்படுத்தி வருவதாக வைத்துக் கொள்வோம்.
இவர்கள் சில தகவல்களைத் தமக்குள்ளே பரிமாறிக் கொள்ளக் குறுவட்டு, பேனாச்
சேமிப்பகங் களில் நகலெடுத்துப் பயன்படுத்துவர். தனித்தியங்கும் பத்து சொந்தக்
கணிப்பொறிகளையும் பிணைய அட்டை, இணைப்பி, குவியம், கம்பிவடம் ஆகியவற்றின்
மூலம் இணைத்து ஒரு பிணையத்தை நிறுவிட முடியும். திறன்மிக்க மையக் கணிப்பொறியோ,
பிற கணிப்பொறிகளைக் கட்டுப்படுத்தும் விலைமிகுந்த பிணைய இயக்க முறைமையோ,
சம்பளம் அதிகம் கேட்கும் பிணைய நிர்வாகியோ தேவையில்லை. பத்துக் கணிப்பொறிகளும்
சம உரிமையோடு பிணையத்தில் பங்கு கொள்கின்றன. எனவே இத்தகைய பிணைய அமைப்புமுறை
‘நிகர்களின் பிணையம்’ (Peer-to-Peer Network) என்று அழைக்கப்படுகிறது. செலவு
குறைந்த பிணையம் என்பதால் ‘ஏழைகளின் பிணையம்’ (Poorman’s Network) என்றும்
அழைப்பர். இப்பிணையத்தில் பத்துப் பதினைந்து கணிப்பொறிகளுக்கு மேல் இணைக்க
முடியாது.
பிணையத்திலுள்ள ‘நிகர்கள்’ (Peers)
தனித்து இயங்கிக் கொள்ளலாம். அவற்றில் சொந்தக் கணிப்பொறி இயக்க முறைமையே
இருக்கும். குறிப்பாக ’விண்டோஸ்’ இயக்க முறைமை மிகவும் ஏற்றது. தரவுத்தளம்,
பயன்பாட்டு மென்பொருள்களைத் தனித்தனியே வைத்துக் கொள்ளலாம். பிற கணிப்பொறியிலுள்ள
தகவல் தேவையெனில் வட்டுகளில் நகலெடுக்கத் தேவையின்றி பிணைய இணைப்பு வழியே
அத்தகவலைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு கணிப்பொறியிலுள்ள தகவலை அக்கணிப்பொறியின்
உரிமையளர் அனுமதித்தால் மட்டுமே பிறர் பகிர்ந்து கொள்ள முடியும். மேலும்
அனுமதிக்கப்படும் தகவல்கள் மட்டுமே பிற பயனர்களுக்குக் கிடைக்கும். கடவுச்சொல்
மூலம் தகவலை அணுக அனுமதி தரமுடியும். தகவல்கள் மட்டுமின்றி, ஒரு கணிப்பொறியில்
இணைக்கப்பட்டுள்ள குறுவட்டகம், அச்சுப்பொறி, வருடி, இணைய இணைப்பு போன்றவற்றையும்
பிற பயனர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஓர் அலுவலகத்தில் பணியாற்றும்
பலரும் தமக்குள்ளே இணைந்து பணியாற்ற இடம் தருவதால் இத்தகு பிணையத்தைப் ‘பணிக்குழு’
(Work Group) அமைப்புமுறை என்றும் அழைப்பர்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
பெருமுகக் கணிப்பொறிகள்
பற்றிச் சுருக்கமாய் விளக்குக. |
|
2. |
பல்பயனர் கணிப்பொறி
அமைப்பில் பயனரின் உரிமைகளும் சலுகைகளும் யாவை? |
|
3. |
பெருமுக, குறுமுகக்
கணிப்பொறி முறைமைகளின் குறை நிறைகள் யாவை? |
|
4. |
கோப்பு வழங்கி
- கணுக்கள் பிணைய அமைப்பின் செயல்பாட்டினை விளக்குக. |
|
5. |
கோப்பு வழங்கி
- கணுக்கள் அமைப்புமுறையின் நிறை குறைகளைக் கூறுக. |
|
6. |
நிகர்களின்
பிணைய அமைப்பினை விளக்குக. |
|
|