2.3 நுகர்வி - வழங்கி அமைப்புமுறை
பல்பயனர் அமைப்பு முறையில் மையக் கணிப்பொறியே அனைத்துப் பணிகளையும் செய்யும். கிளைக் கணிப்பொறிகளுக்கு பணியெதுவும் இல்லை. அதே வேளையில் எவ்விதச் சுதந்தரமும் இல்லை. கோப்பு வழங்கி - கணுக்கள் முறையில் அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் கணுக்களே செய்கின்றன. பிணையப் போக்குவரத்து அதிகம். இந்த இரண்டு முறைகளுக்கும் இடைப்பட்ட முறையே நுகர்வி - வழங்கி (Client - Server) அமைப்பு முறையாகும். வேலைப்பளுவை வழங்கியும் நுகர்வியும் பகிர்ந்து கொள்கின்றன. கிளைக் கணிப்பொறிகளுக்கு அதிகமான சுதந்திரம் உண்டு. தற்காலச் சொந்தக் கணிப்பொறிகளையே வழங்கியாகவும் நுகர்வியாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். வழங்கிக் கணிப்பொறி சற்றே கூடுதல் திறனுள்ளதாக இருந்தால் போதும். இந்த அமைப்புமுறை பிணைய வளர்ச்சிப் போக்கில் ஒரு முக்கியமான வளர்ச்சிக் கட்டம் ஆகும். இன்று உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்துள்ள ’இணையம்’ (Internet) இந்த அமைப்புமுறையின் நீட்சியே. இந்தப் பிணைய அமைப்பினைப் பற்றி இப்பாடப் பிரிவில் சுருக்கமாகக் காண்போம்
2.3.1
நுகர்வியும் வழங்கியும்
மையமாய் விளங்கும் வழங்கிக் கணிப்பொறியில் தனிச்சிறப்பான ’வழங்கி இயக்க முறைமையும்’ (Server Operating System) மையப்படுத்தப்பட்ட தரவுத்தளமும் (Centralised Database) நிறுவப்பட்டிருக்கும். கிளைக் கணிப்பொறிகளான நுகர்விக் கணிப்பொறிகள், நிலைவட்டு, நுண்செயலி, நினைவகம் ஆகிய அனைத்தும் பெற்றுத் தனித்தியங்கும் ஆற்றலுள்ள கணிப்பொறிகள் ஆகும். அவற்றில் தனித்தியங்கும் இயக்க முறைமையும், தரவுகளைக் கையாளவல்ல பயன்பாட்டு மென்பொருள்களும் நிறுவப்பட்டிருக்கும். தனிப்பட்ட தரவுகளையும் தனிப்பட்ட பயன்பாட்டு மென்பொருள்களையும் வைத்துக் கொள்ளவும் முடியும்.
நுகர்விகள் வழங்கியைச் சாராமல், வழங்கியின்
கட்டுப்பாட்டில் இல்லாமல் தனித்துச் செயல்படும் சுதந்திரம் கொண்டவை. வழங்கிக்
கணிப்பொறியிலுள்ள தரவுகளைப் பயன்படுத்திக் கொள்ளும் தேவை ஏற்படும்போது மட்டுமே
நுகர்விகள் வழங்கிக்குக் கோரிக்கைகளை அனுப்பி வைக்கின்றன. வழங்கிக்கும் நுகர்விக்கும்
இடையே உள்ள உறவு, மருத்துவருக்கும் நோயாளிக்கும், வழக்குரைஞருக்கும் அவரது
கட்சிக் காரருக்கும் இடையே உள்ள உறவுமுறை போன்றதாகும். தேவையான காலத்தில்
மட்டுமே நுகர்விகள் வழங்கியின் கட்டுப்பாட்டுக்குள் இயங்குகின்றன. நுகர்வி
- வழங்கி அமைப்பு முறையில் தரவுத்தளத்தைக் கொண்டுள்ள மையக் கணிப்பொறி ’பின்னிலை
வழங்கி’ (Back End Server) எனவும், பயனர் பயன்படுத்தும் கிளைக் கணிப்பொறி
‘முன்னிலை நுகர்வி’ (Front End Client) எனவும் அழைக்கப்படுகின்றன. இத்தகைய
அமைப்புமுறையில் முதன்முதலாக வெளியிடப்பட்ட இயக்க முறைமை ‘விண்டோஸ் என்டி
செர்வர்’ (Windows NT Server) ஆகும்.
2.3.2
வழங்கியும் நுகர்வியும் செயல்படும் முறை
செயலாக்கப் பணிகளைப் பொறுத்த மட்டில் வழங்கி - நுகர்வி அமைப்புமுறை முந்தைய அமைப்பு முறைகளிலிருந்து மாறுபட்டது. தரவுகளைக் கையாள்வதில் வழங்கியும் நுகர்வியும் தமக்குள்ளே வேலைப் பிரிவினை செய்து கொள்கின்றன. எந்தப் பணியை வழங்கி செய்ய வேண்டும், எந்தப் பணியை நுகர்வி செய்ய வேண்டும் என்பது வரயறுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டும் தத்தமது பணிகளை நிறைவேற்றுவதால் வேலை விரைவாக நடந்து முடிந்து விடுகிறது. பிணையப் போக்குவரத்தும் அதிகமாவதில்லை.
மூன்று வெவ்வேறு சூழ்நிலைகளில் வழங்கியும்
நுகர்வியும் எப்படிச் செயல்படுகின்றன எனப் பார்ப்போம். (1) ஒரு கோப்பிலுள்ள
தரவுகளை ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் பார்வையிட நுகர்வி விரும்புகிறது.
இந்தக் கோரிக்கையைப் பெற்ற வழங்கி, கோப்பிலுள்ள தரவுகளை நுகர்விக்கு வழங்கும்
பொறுப்பை மட்டுமே நிறைவேற்றுகிறது. பயனர் விரும்பியவாறு குறிப்பிட்ட வடிவமைப்பில்
திரையிடும் வேலையை நுகர்வி மென்பொருளின் உதவியுடன் நுகர்விக் கணிப்பொறியே
செய்து முடிக்கிறது. (2) ஒரு கோப்பிலுள்ள குறிப்பிட்ட தகவலை இன்னொரு கோப்பில்
எடுத்தெழுத வேண்டியுள்ளது. நுகர்வி இக்கோரிக்கையை வழங்கிக்கு அனுப்பி வைக்கும்.
வழங்கி இப்பணியைத் தானே செய்து முடிக்கும். (3) வழங்கியில் ஓர் அட்டவணையிலுள்ள
வாடிக்கையாளர்களின் தகவல்களை அகரவரிசைப் படுத்தி குறிப்பிட்ட வடிவமைப்பில்
அச்சிட விரும்பும் ஒரு பயனர் இக்கோரிக்கையை வழங்கிக்கு அனுப்பி வைக்கிறார்.
தரவுத் தளத்திலிருந்து தகவலை எடுத்து அகர வரிசைப்படுத்தி நுகர்விக்கு அனுப்பிவைக்கும்
பணியை வழங்கி செய்கிறது. வழங்கியிலிருந்து பெறப்பட்ட தகவலை குறிப்பிட்ட வடிவமைப்பில்
அச்சிடும் பணியை நுகர்வி கவனித்துக் கொள்கிறது. பயனரின் தேவையை வழங்கியும்
நுகர்வியும் வேலைப்பிரிவினை செய்து நிறைவேற்றி வைக்கின்றன.
2.3.3
நிறை - குறைகள்
பல்பயனர் அமைப்பு முறையில் மேற்கண்ட மூன்று சூழ்நிலைகளிலும் அனைத்துப் பணிகளையும் மையக் கணிப்பொறியே செய்கிறது. கோப்பு வழங்கி - கணுக்கள் முறையில் மேற்கண்ட பணிகள் அனைத்தையும் நுகர்விக் கணிப்பொறியே செய்கிறது. நுகர்வி - வழங்கி முறையில் மட்டுமே கோரிக்கைக்கு ஏற்றவாறு வேலையை இரண்டும் பகிர்ந்து செய்கின்றன. மற்ற இரு அமைப்புகளிலும் உள்ள அதே வகையான தரவுப் பாதுகாப்பு, தரவுப் பராமரிப்பு, பயனர் கட்டுப்பாடுகள் இந்த முறையிலும் உள்ளன. சுருக்கமாகச் சொல்வதெனில், முந்தைய இரு முறைகளிலும் இருந்த சிறப்புத் தன்மைகள் இதில் ஒருங்கே கிடைக்கப் பெறுகின்றன. நுகர்விகள் தனித்தும் செயல்பட்டுக் கொள்ளலாம், தரவுகளைத் தம் விருப்பப்படி கையாளலாம் என்பது போன்ற சுதந்திரங்கள் இருப்பதால் தற்காலத்தில் இந்த அமைப்புமுறையே பெரிதும் வரவேற்கப்படுகிறது. பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நுகர்வி - வழங்கி முறையில் வழங்கிக்
கணிப்பொறிக்கு அதிகம் செலவில்லை. நுகர்விகள் அனைத்தும் தனித்தியங்கும் திறனுள்ள
கணிப்பொறிகள் என்பதால் அவற்றுக்கான செலவு அதிகமாகும். பயன்பாட்டு மென்பொருள்களைப்
புதுப்பிக்க வேண்டுமெனில் அனைத்து நுகர்விக் கணிப்பொறிகளிலும் புதுப்பிக்க
வேண்டும். இதற்கு ஆகும் நேரமும் செலவும் அதிகம். சேய்மை இடங்களில் நிறுவப்பட்டுள்ள
நுகர்விகளின் வன்பொருள்கள் மென்பொருள்களைப் பராமரிப்பது கடினமான பணியாகும்.
தனித்தியங்கும் நுகர்விக் கணிப்பொறிகளில் பணியாற்றும் பயனர்களின் கவனக் குறைவால்
நுகர்விகளைத் தொற்றும் நச்சுநிரல்கள் (Virus Programs) வழங்கிக் கணிப்பொறியையும்
அதிலுள்ள தரவுகளையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
2.3.4
பல்லடுக்குக் கட்டுமானங்கள் (Multitier Architecture)
நுகர்வி - வழங்கி அமைப்புமுறையில் காலப் போக்கில் பல்வித மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளன. பயன்பாட்டு மென்பொருள்கள் அனைத்தையும் கொண்ட விலை உயர்ந்த நுகர்விகள் ‘கொழுத்த நுகர்விகள்’ (Fat Clients) என்று அழைக்கப்படுகின்றன.வழங்கி - கொழுத்த நுகர்விகள் என்கிற ’இரண்டு அடுக்கு’ (Two Tier) அமைப்பு முறைக்குப் பதிலாக, ‘மூன்று அடுக்கு’ (Three Tier) அமைப்பு முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
வழங்கி இயக்க முறைமை, தரவுத்தளம் ஆகியவை ஒரு மையக் கணிப்பொறியிலும், பயன்பாட்டு மென்பொருள்கள் ‘பயன்பாடு வழங்கி’ (Application Server) எனப்படும் வேறொரு மையக் கணிப்பொறியிலும் நிறுவப்பட்டிருக்கும். இந்த அமைப்பு முறைக்கான பயன்பாட்டு மென்பொருள்கள் தனிச்சிறப்பான முறையில் இருகூறாக வடிவமைக்கப்பட்டவை. ஒரு கூறு ’வழங்கி மென்பொருள்’ (Server Software) எனவும், இன்னொரு கூறு ‘நுகர்வி மென்பொருள்’ (Client Software) எனவும் அழைக்கப்படும். இவற்றுள் வழங்கிக் கூறுகள் பயன்பாடு வழங்கிக் கணிப்பொறியில் நிறுவப்பட்டிருக்கும். நுகர்விக் கூறுகள் நுகர்விக் கணிப்பொறியில் நிறுவப்பட்டிருக்கும். இத்தகைய நுகர்விகள் ‘மெல்லிய நுகர்விகள்’ (Thin Clients) என்று அழைக்கப்படுகின்றன.
வழங்கி இயக்க முறைமை ஒரு மையக் கணிப்பொறியிலும், தரவுத்தளம் வேறொரு மையக் கணிப்பொறியிலும், பயன்பாட்டு மென்பொருள்கள் இன்னொரு மையக் கணிப்பொறியிலும் நிறுவப்பட்டுள்ள பல்லடுக்குக் கட்டுமான நுகர்வி - வழங்கி பிணைய அமைப்புமுறைகளும் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
|