|  
   2.4  இணையத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 
 
 தொலை தகவல் தொடர்பு (Telecommunication) மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் (Information Technology) ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக பிணையத் தொழில்நுட்பத்திலும் மாபெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. சிறுசிறு அலுவலகங்களிலும் சிறிய, நடுத்தர, பெரிய வணிக நிறுவனங்களிலும் கணிப்பொறிப் பிணையங்கள் நிறுவப்பட்டன. ஒரு வளாகத்துக்குள் இயங்கும் குறும்பரப்புப் பிணையங்கள் (Local Area Network) மட்டுமின்றி, நாடு தழுவிய விரிபரப்புப் பிணையங்களும் (Wide Area Network) மிகப்பெரும் அளவில் வளர்ச்சி கண்டன. தனித்துச் செயல்பட்டு வந்த சொந்தக் கணிப்பொறிகளைக் கூட நினைத்த மாத்திரத்தில் பிணையத்தில் இணைத்துச் செயல்படுத்த முடியும் என்பதால் நுகர்வி - வழங்கிப் பிணைய அமைப்பு முறையே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிணையத் தரப்பாடாக அமைந்தது. பிணையத்தில் நிரந்தரமாக இணைக்கப்படாத கணிப்பொறிகூட தேவையானபோது பிணையத்திலுள்ள தகவலைப் பெறமுடியும் என்கிற நிலை கணிப்பொறிப் பிணையத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தது. 
      நாடளாவிய பிணையங்கள் உலகளாவிய பிணையத்துக்கு 
        வழிவகுத்தன. மிகப்பரந்த ஒற்றைப் பிணையத்துக்குப் பதிலாக, பல்வேறு பிணையங்களை 
        ஒன்றிணைத்துப் பிணையங்களின் பிணையம் (Network of Networks) என்னும் உத்தி 
        கண்டறியப்பட்டது. உலகமெங்கிலும் பரந்து கிடந்த பல்லாயிரம் பிணையங்களை ஒன்றிணைக்கும் 
        தேவை ஏற்பட்டது. ‘இணையம்’ (Internet) உருவானது. கணிப்பொறிப் பிணையங்களின் 
        வளர்ச்சிப் போக்கில் முக்கிய திருப்புமுனை என்ற நோக்கில் இணையத்தின் தோற்றம், 
        வைய விரிவலையின் (World Wide Web) உருவாக்கம், இணையத்தின் இன்றைய வளர்ச்சி 
        ஆகியவைபற்றி இப்பாடப் பிரிவில் காண்போம். 
       2.4.1 
        இணையம் தோன்றிய கதை 
 
 மனித வாழ்க்கையைப் பற்றிய பயமே புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலுகிறது என்பது வரலாற்று உண்மை என்ற போதிலும் இணையத்துக்கான வித்தும் அச்சத்தின் அடிப்படையில் போடப்பட்டதே என்பது சற்றே வியப்பிக்குரிய செய்திதான். 1957-ஆம் ஆண்டில் அன்றைய சோவியத் யூனியன் ஸ்புட்னிக் என்னும் ஆளில்லா செயற்கைக்கோளை விண்ணில் பறக்கவிட்டு விந்தை புரிந்தது. இது தமக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக் கான ஆய்வாக இருக்குமோ என்ற அச்சம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. விண்வெளி ஆய்வில் தாம் பின்தங்கிவிடக் கூடாது என்கிற அக்கறையும் அமெரிக்காவுக்கு இருந்தது. எனவே அப்போதைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஐசன்ஹோவர் ஓர் ஆராய்ச்சி அமைப்பை உருவாக்க உடனடியாக ஆணை பிறப்பித்தார். அந்த ஆய்வமைப்பு ‘ஆர்ப்பா’ (ARPA - Advanced Research Project Agency) என்றழைக்கப்பட்டது. 
’ஆர்ப்பா’வின் முதல் நோக்கம் சோவியத் யூனியனைப் போன்று விண்கலனை ஏவிப் பரிசோதனை செய்வதே. 1958-ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் ‘எக்ஸ்புளோரர்’ விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகப் பறக்கவிடப்பட்டது. இதே வேளையில் அமெரிக்க இராணுவப் பாதுகாப்புத் துறையில் தகவல் தொடர்புக்குக் கணிப்பொறியைப் பயன்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. விண்வெளிப் பயண ஆய்வில் ஈடு பட்டிருந்த ’ஆர்ப்பா’ ஆய்வு மையத்திடம் அமெரிக்க இராணுவத் துறையில் கணிப்பொறியின் பயன்பாட்டை மேம்படுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டது. 1962-இல் டாக்டர் ஜே.சி.ஆர்.லிக்லைடர் தலைமையில் இப்பணி தொடங்கியது. 
கணிப்பொறிப் பிணையங்கள், கணிப்பொறி வழியான தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் ’ஆர்ப்பா’ கவனம் செலுத்தியது. ஒரு புதுவகையான கணிப்பொறிப் பிணையத்தை நிறுவுவது ‘ஆர்ப்பா’வின் திட்டமாக இருந்தது. எதிரி நாட்டுடன் போர்மூண்டு, எதிரிகளின் குண்டு வீச்சில் பிணையத்தின் ஒருபகுதி சிதைந்து போனாலும் பிணையத்தின் மீதிப் பகுதி எவ்விதச் சிக்கலுமின்றிச் செயல்பட வேண்டும். இதுபோன்ற, அதாவது இன்றைய ’இணையம்’ போன்ற ஒரு பிணையத்தை வடிவமைக்கும் முயற்சியில் அமெரிக்காவின் ‘ரேண்டு’ (Rand) நிறுவனமும் ஈடுபட்டிருந்தது. 1965-இல் அதற்கான ஒரு மாதிரிக் கட்டமைப்பை வெளியிட்டது. இதே கோட்பாடுகளின் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1968-இல் இங்கிலாந்து நாட்டின் தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் (National Physics Laboratary) இதுபோன்ற பிணையத்தின் மாதிரியத்தைச் சோதனை முறையில் அமைத்துக் காட்டியது. 
      இத்தகைய ஆய்வுகளின் உச்சகட்டமாய் ‘ஆர்ப்பா’வின் 
        முயற்சியால் 1969-இல் இராணுவப் பயன்பாட்டுக்கென அமெரிக்காவில் நான்கு மாநிலங்களில் 
        செயல்பட்டு வந்த கணிப்பொறிப் பிணையங்கள் இணைக்கப்பட்டு ‘ஆர்ப்பாநெட்’ (ARPANet) 
        நிறுவப்பட்டது. ஆர்ப்பாநெட்டே பிற்கால இணையத்தின் முன்னோடிப் பிணைய அமைப்பாகும். 
        பாஸ்டனில் எம்ஐடீயில் (MIT - Massachusetts Institute of Technology) பட்டப்படிப்புப் 
        படித்துக் கொண்டிருந்த மாணவர் லியோனார்டு கிளெய்ன்ராக் ஆர்ப்பாநெட்டின் மூலமாக 
        இரு சேய்மைக் கணிப்பொறிகளுக்கு இடையே முதல் தகவல் பரிமாற்றத்தை நடத்திக் 
        காட்டினார். இவரே ’இணையத்தின் தந்தை’ (Father of Internet) என்று போற்றப்படுகிறார். 
       2.4.2 
        இணையத்தின் வளர்ச்சி 
 
 1971-இல் ஆர்ப்பநெட்டில் இணைக்கப்பட்ட கணுக்கள் (Nodes) எனப்படும் பிணைய மையங்களின் எண்ணிக்கை பதினைந்தாக உயர்ந்தது. 1972-இல் முப்பது கணுக்களாக வளர்ச்சி பெற்றது. ஆர்ப்பாநெட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை அமெரிக்காவின் எந்த மூலையிலிருந்தும் கணிப்பொறித் தொடர்பு மூலம் பெற முடியும் என்பது நடத்திக் காட்டப்பட்டது. அடுத்தகட்ட வளர்ச்சியாக, அரசின் வெவ்வேறு துறைகள், பல்கலைக் கழகங்கள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் தங்கள் பிணையங்களை ஆர்ப்பாநெட்டில் இணைத்துக் கொண்டன. அடுத்ததாக, அமெரிக்காவில் மிகவும் சக்தி வாய்ந்த  கணிப்பொறிகளையும் கணிப்பொறிப் பிணையங்களையும் அமைத்துச் செயல்பட்டு வந்த சமூகக் குழுக்கள் தத்தம் பிணையங்களை ஆர்ப்பாநெட்டுடன் இணைத்துக் கொண்டன. இதன் காரணமாய் ஆர்ப்பாநெட்டின் இராணுவத் தன்மை குறையத் தொடங்கியது. 1983-இல் ஆர்ப்பாநெட்டிலிருந்து இராணுவப் பிணையம் ‘மில்நெட்’ (Milnet) என்ற பெயரில் தனியாகப் பிரிந்து சென்றது. ஆர்ப்பாநெட் பொதுப் பிணையமாய் நீடித்தது. 
அறிவியல் ஆய்வுக்கென அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் நிறுவனம் (National Science Foundation) என்எஸ்எஃப்நெட் (NSFNet) என்னும் பிணையத்தை நிறுவியது. இதில் ஐந்து மீத்திறன் கணிப்பொறி மையங்கள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சேமிக்கப்பட்டிருந்த தகவல் மூலாதாரங்களை அமெரிக்காவிலுள்ள எந்தவொரு கல்வி நிலையமும், ஆய்வுக் கூடமும் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. 1984-இல் ஆர்ப்பாநெட்டைப் போன்றே நாடளாவிய தன் சொந்தப் பிணையக் கட்டமைப்பை நிறுவியது. ஒவ்வொரு வட்டாரத்திலும் செயல்பட்ட கணிப்பொறி மையங்கள் அருகிலுள்ள என்எஸ்எஃப்நெட்டின் மீத்திறன் கணிப்பொறி மையத்துடன் இணைக்கப்பட்டன. 
      1988-ஆம் ஆண்டில் என்எஸ்எஃப்நெட் புதுப்பிக்கப்பட்டது. 
        அது மேலும் மேலும் வளர்ச்சிபெற, ஆர்ப்பநெட் தன் முக்கியத்துவத்தை இழந்தது. 
        ஆர்ப்பாநெட்டில் இணைக்கப்பட்டிருந்த பல கணிப்பொறிப் பிணையங்கள் என்எஸ்எஃப்நெட்டில் 
        இணைந்தன. 1990-இல் ஆர்ப்பாநெட் மறைந்தது. என்எஸ்எஃப்நெட் புதிய இணையமாகப் 
        பரிணமித்தது. அரசுத் துறையினரும், அரசு சார்ந்த நிறுவனங்களும், அறிவியல் 
        ஆய்வுக்கூடங்களும் மட்டுமே அங்கம் வகித்த பிணையத்தைச் சாதாரணக் குடிமக்களும் 
        உலாவரும் இணையத்தை உருமாற்றிய பெருமை என்எஸ்எஃப்நெட்டையே சாரும்.  
        2.4.3 
        வைய விரிவலை (World Wide Web) 
       
      அமெரிக்காவில் இணையத்தின் வளர்ச்சி 
        இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் இன்னொரு 
        முக்கியமான ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. கணிப்பொறியில் ஓர் ஆவணத்தைப் 
        படித்துக் கொண்டிருக்கும்போது அடிக்கோடிட்ட ஒரு சொல்லின்மீது சுட்டியால் 
        சொடுக்கினால் அது தொடர்பான கட்டுரை உங்கள் கணிப்பொறித் திரையில் விரியும். 
        இவ்வாறு, தொடர்புடைய தகவல் குறிப்புகளை ஒன்றோடொன்று பிணைக்க மீவுரைத் (Hyper 
        Text) தொழில்நுட்பம் பயன்படுகிறது. மீவுரை ஆவணத்திலுள்ள மீத்தொடுப்பு (Hyper 
        Link) சுட்டுகின்ற வேறோர் ஆவணம் அதே கணிப்பொறியில் இருக்க வேண்டிய தேவையில்லை. 
        பிணையத்தில் இணைக்கப்பட்ட எந்தக் கணிப்பொறியில் அது எந்த நாட்டில் இருந்தாலும் 
        அதனைத் தேடித்தரும் வல்லமை மீத்தொடுப்புக்கு உண்டு. 
      1990-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து 
        நாட்டின் ஐரோப்பிய துகள் இயற்பியல் ஆய்வுக் கூடத்தில் (European Laboratory 
        for Particle Physics - CERN) மீவுரைத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான 
        முதல் பிணையத்தை டிம் பெர்னர்ஸ்-ல¦ என்னும் ஆங்கில அறிவியலாளர் நிறுவினார். 
        இப்பிணயத்தின் வழங்கிக் கணிப்பொறி ‘வலை வழங்கி’ (Web Server) என அழைக்கப்பட்டது. 
        மீவுரை ஆவணங்களடங்கிய வலை வழங்கிகள் உலகெங்கும் நிறுவப்பட்டன. ஏற்கெனவே இணையத்தில் 
        சேமித்து வைக்கப்பட்ட தகவல்கள் மீத்தொடுப்புத் தகவல்களாக மாற்றப்பட்டன. உலகெங்கும் 
        செயல்பட்ட வலை வழங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வைய விரிவலை (World Wide Web) 
        உருவாக்கப்பட்டது. வைய விரிவலை என்னும் மிகப்பரந்த பிணையம் 1992-இல் இணையத்தின் 
        ஓர் அங்கமாக இணைக்கப்பட்டது. இணைய வரலாற்றில் இது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 
        இன்றைக்கு இணையமே வைய விரிவலை, வைய விரிவலையே இணையம் ஆகும். ’வைய விரிவலை’ 
        சுருக்கமாக ‘வலை’ (Web) என்றே அழைக்கப்படுகிறது. எனவே ’வலை’ என்பதும் இணையத்தையே 
        குறிக்கிறது. 
      வைய விரிவலைப் பிணையம் ‘நுகர்வி 
        - வழங்கி’ அமைப்புமுறையில் இயங்கும் பல்லாயிரம் பிணையங்கள் இணைக்கப்பட்ட 
        ஒரு மாபெரும் கணிப்பொறிப் பிணையம் ஆகும். இணையத்தில் தம் தகவல்கள் இடம்பெற 
        வேண்டும் என விரும்புவோர் அவற்றை மீவுரை ஆவணங்களில் பதிவு செய்து, இணையத்தில் 
        பிணைக்கப்பட்டுள்ள வலை வழங்கிகளில் சேமித்து வைக்கின்றனர். இத்தகவலைப் பெற 
        விரும்புவோர் தம் கணிப்பொறியை தொலைபேசித் தொடர்பு அல்லது அகல்கற்றை (Broadband) 
        இணைப்பு மூலம் இணையத்தில் பிணைத்துக் கொண்டு, இணைய உலாவி (Internet Browser) 
        என்னும் நுகர்வி மென்பொருளின் உதவியுடன் தகவலைத் தம் கணிப்பொறித் திரையில் 
        கண்டு பயன்பெறுகின்றனர். பயனர் விரும்பும் ஆவணங்களைத் தேடித்தரும் வேலையைத் 
        தேடு பொறி (Search Engine) என்னும் நிரல் செய்து முடிக்கின்றது. குறிப்பிட்ட 
        வலை வழங்கியில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட ஆவணத்தைத் தேடிப்பெற யூஆர்எல் 
        (URL - Universal/Unique Resource Lacator) என்னும் முகவரி முறை பயன்படுகிறது. 
        பிணையங்களின் பரிணாம வளர்ச்சியில் இணையம் ஓர் உச்சகட்டப் பரிமாணம் என்றால் 
        மிகையாகாது. 
          
      
         
          |      
            தன் மதிப்பீடு : வினாக்கள் - I | 
         
         
          |  
             1.  | 
           நுகர்வி - வழங்கி அமைப்பு முறையில் நுகர்வி, வழங்கியின் அமைப்பினை விளக்குக.    | 
            | 
         
         
          |   2.  | 
          மூன்று வேறு சூழ்நிலைகளில் நுகர்வியும் வழங்கியும் செயல்படும் முறையினை விளக்கிக் கூறுக. | 
            | 
         
         
          |  
             3.  | 
          நுகர்வி 
            - வழங்கி அமைப்பு முறையின் குறை-நிறைகள் யாவை? | 
            | 
         
         
          |   4.  | 
          மூன்றடுக்குக் கட்டுமான அமைப்புமுறை எவ்வாறு செயல்படுகின்றது?   | 
            | 
         
         
          |   5.  | 
          இணையத்தின் தோற்றத்தைச் சுருங்கக் கூறுக. | 
            | 
         
		 
          |  
             6.  | 
          இணையத்தின் வளர்ச்சியை விளக்கிக் கூறுக. | 
            | 
         
		 
          |  
             7.  | 
          வைய 
            விரிவலை பற்றி விளக்கம் தருக. | 
           
             | 
         
        
       |