2.5 தொகுப்புரை

 • முதன்முதலில் உருவாக்கப்பட்ட கணிப்பொறி சொந்தக் கணிப்பொறி அன்று. கணிப்பொறி வரலாறு தொடங்கி ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழித்தே சொந்தக் கணிப்பொறிகள் பயன்பாட்டுக்கு வந்தன.
 • தொடக்ககாலக் கணிப்பொறிகளில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை பெருமுகக் கணிப்பொறிகள் (Mainframe Computers) மற்றும் குறுமுகக் கணிப்பொறிகள் (Mini Computers) ஆகும். இவற்றைக் ‘கணிப்பொறி’ எனச் சொல்வதைவிட ‘ஒரு கணிப்பொறி அமைப்பு’ எனக் கூறுவதே பொருந்தும்.
 • குறுமுக, பெருமுகக் கணிப்பொறி அமைப்பில் ஒரே நேரத்தில் பலநூறு, பல்லாயிரம் பயனர்கள் பணியாற்ற முடியும். எனவே இவற்றைப் ’பல்பயனர் கணிப்பொறி முறைமை’ என்று அழைப்பர்.
 • மெய்யான பொருளில் குறுமுக, பெருமுகக் கணிப்பொறி அமைப்பைக் ‘கணிப்பொறிப் பிணையம்’ என அழைக்க முடியாது எனினும் ஒரே நேரத்தில் பலநூறு பயனர்கள் பணியாற்றுகின்ற காரணத்தால் இதனைக் கணிப்பொறிப் பிணையங்களுக்கான முன்னோடி எனலாம்.
 • குறுமுக, பெருமுகக் கணிப்பொறி அமைப்பில் செயலாக்க உறுப்புகள் அனைத்தும் மையக் கணிப்பொறியிலேயே இருக்கும். செயலாக்கப் பணிகள் அனைத்தும் மையக் கணிப்பொறியிலேயே நடைபெறும். முனையங்களில் திரையகம், விசைப்பலகை, தகவல் தொடர்புச் சாதனம் மட்டுமே இருக்கும். மையக் கணிப்பொறியின் மையச் செயலி மற்றும் நினைவகத்தை முனையங்கள் நேரப் பகிர்வு முறையில் பயன்படுத்திக் கொள்ளும்.
 • முனையங்களில் பணியாற்றும் பயனர்களின் உரிமைகளும் சலுகைகளும் வரம்புக்கு உட்பட்டதாகும். மிகக் குறைந்த அளவு சுதந்திரமே உண்டு. பயனர்கள் தமக்குள்ளே மின்னஞ்சல் மூலமாகத் தகவல் தொடர்பு கொள்வது போன்ற சில சலுகைகளே வழங்கப்பட்டிருக்கும்.
 • அனைத்துச் செயலாக்கங்களும் மையக் கணிப்பொறியிலே நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதால் அது மீத்திறன் கொண்டதாய் இருக்க வேண்டும். அதனை நிர்வகிக்கும் முறைமை நிர்வாகியும் மிகுந்த திறைமையுடைவராய் இருக்க வேண்டும்.
 • தரவுத்தளம், பயன்பாட்டு மென்பொருள்களை மையக் கணிப்பொறியில் மட்டுமே நிறுவினால் போதும். தரவுப் பராமரிப்பு, தரவுப் பாதுகாப்பு ஆகியவற்றை எளிதாகச் செய்ய முடியும். அத்துமீறல்களுக்கு எதிரான அரண்களை அமைப்பது எளிது.
 • கோப்பு வழங்கி - கணுக்கள் அமைப்புமுறையில் ஒரு சக்தி வாய்ந்த மையக் கணிப்பொறியுடன் குவியம் (Hub), தொடர்பி (Switch) போன்ற பிணைய இணைப்புக் கருவிகள் மூலம் பல கிளைக் கணிப்பொறிகள் பிணைக்கப்பட்டிருக்கும். மையக் கணிப்பொறி கோப்பு வழங்கி (File Server) என்றும் கிளைக் கணிப்பொறிகள் கணுக்கள் (Nodes) என்றும் அழைக்கப்படும். மையப்படுத்திய தரவுத் தளத்தின் தகவல்களைப் பகிர்ந்துகொண்டு பல பயனர்கள் ஒரே நேரத்தில் பணியாற்ற இந்த அமைப்புமுறை மிகவும் ஏற்றதாக இருந்தது.
 • வழங்கியில் ’பிணைய இயக்க முறைமை’ இயங்கும். கணுக்களில் தனியான இயக்க முறைமை இருக்க வேண்டியதில்லை. ‘சேய்மை இயக்கம்’ (Remote Booting) முறையில் கணுக்கள் இயக்கப்படும்.
 • தரவுத்தளமும் பயன்பாட்டு மென்பொருள்களும் வழங்கிக் கணிப்பொறியிலேயே இருப்பதால் தரவுப் படியாக்கம் (Data Backup), தரவுப் பாதுகாப்பு (Data Protection), பயன்பாட்டு மென்பொருள்களைப் புதுப்பித்தல் போன்ற பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இந்த அமைப்பு முறையில் செயலாக்கப் பணிகளை கணுக்களே மேற்கொள்வதால் வழங்கிக்கு அதிகமான வேலைப்பளு இல்லை.தரவுத்தளமும் பயன்பாட்டு மென்பொருள்களும் வழங்கிக் கணிப்பொறியிலேயே இருப்பதால் தரவுப் படியாக்கம் (Data Backup), தரவுப் பாதுகாப்பு (Data Protection), பயன்பாட்டு மென்பொருள்களைப் புதுப்பித்தல் போன்ற பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இந்த அமைப்பு முறையில் செயலாக்கப் பணிகளை கணுக்களே மேற்கொள்வதால் வழங்கிக்கு அதிகமான வேலைப்பளு இல்லை.எனவே பல்பயனர் அமைப்பு முறையில் இருந்ததுபோல மையக் கணிப்பொறி திறன்மிக்கதாய் இருக்க வேண்டிய தேவைதில்லை.
 • கோப்பு வழங்கி முறையில் பல்பயனர் அமைப்பு முறையில் இருந்ததை விடப் பயனர்களுக்கு அதிகமான சுதந்திரமும் சலுகைகளும் இருந்தன.
 • ஒவ்வொரு கணுவின் கோரிக்கையின் பேரிலும் கோப்புகளைக் கணுக்களுக்கு அனுப்பித் திரும்பப் பெறவேண்டியிருப்பதால் பிணையப் போக்குவரத்து அதிகமாக இருக்கும். மேலும் புதிய கணுக்களைச் சேர்க்கவும் கணுக்களைப் பராமரிக்கவும் செலவு அதிகமாகும்.
 • ‘நிகர்களின் பிணைய’ (Peer-to-Peer Network) அமைப்புமுறையில் தனித்தியங்கும் சொந்தக் கணிப்பொறிகள் பிணைய அட்டை, இணைப்பி, குவியம், கம்பிவடம் ஆகியவற்றின் மூலம் இணைக்கப்படும். மையப்படுத்தப்பட்ட திறன்மிக்க வழங்கிக் கணிப்பொறியோ, பிற கணிப்பொறிகளைக் கட்டுப்படுத்தும் விலைமிகுந்த பிணைய இயக்க முறைமையோ, சம்பளம் அதிகம் கேட்கும் பிணைய நிர்வாகியோ தேவையில்லை. அனைத்துக் கணிப்பொறிகளும் சம உரிமையோடு பிணையத்தில் பங்கு கொள்கின்றன.
 • நிகர்களின் கணிப்பொறி அமைப்பில் ஒரு கணிப்பொறியிலுள்ள தகவலை அக்கணிப்பொறியின் உரிமையளர் அனுமதியுடன் பிறர் பகிர்ந்து கொள்ள முடியும். கடவுச்சொல் மூலம் தகவலை அணுக அனுமதி தரமுடியும். தகவல்கள் மட்டுமின்றி, ஒரு கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள குறுவட்டகம், அச்சுப்பொறி, வருடி, இணைய இணைப்பு போன்றவற்றையும் பிற பயனர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். செலவு குறைந்த பிணையம் என்பதால் ‘ஏழைகளின் பிணையம்’ என்றும் அழைக்கப்படும்.
 • நுகர்வி - வழங்கி (Client - Server) அமைப்புமுறை பிணைய வளர்ச்சிப் போக்கில் ஒரு முக்கியமான வளர்ச்சிக் கட்டம் ஆகும். இன்று உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்துள்ள ’இணையம்’ (Internet) இந்த அமைப்பு முறையின் நீட்சியே.
 • நுகர்வி - வழங்கி முறையில் மையமாய் விளங்கும் வழங்கிக் கணிப்பொறியில் தனிச்சிறப்பான ’வழங்கி இயக்க முறைமையும்’ (Server Operating System) மையப்படுத்தப்பட்ட தரவுத்தளமும் (Centralised Database) நிறுவப்பட்டிருக்கும். கிளைக் கணிப்பொறிகளான நுகர்விக் கணிப்பொறிகள், நிலைவட்டு, நுண்செயலி, நினைவகம் ஆகிய அனைத்தும் பெற்றுத் தனித்தியங்கும் ஆற்றலுள்ளவை ஆகும்.
 • நுகர்விகள் வழங்கியைச் சாராமல், வழங்கியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனித்துச் செயல்படும் சுதந்திரம் கொண்டவை. வழங்கிக் கணிப்பொறி யிலுள்ள தரவுகளைப் பயன்படுத்திக் கொள்ளும் தேவை ஏற்படும்போது மட்டுமே நுகர்விகள் வழங்கிக்குக் கோரிக்கைகளை அனுப்பி வைக்கின்றன. வழங்கிக்கும் நுகர்விக்கும் இடையே உள்ள உறவு, மருத்துவருக்கும் நோயாளிக்கும், வழக்குரைஞருக்கும் அவரது கட்சிக் காரருக்கும் இடையே உள்ள உறவுமுறை போன்றதாகும்.
 • வழங்கி - நுகர்வி அமைப்பு முறையில் வழங்கியும் நுகர்வியும் தமக்குள்ளே வேலைப் பிரிவினை செய்து கொள்கின்றன. எந்தப் பணியை வழங்கி செய்ய வேண்டும், எந்தப் பணியை நுகர்வி செய்ய வேண்டும் என்பது வரயறுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டும் தத்தமது பணிகளை நிறைவேற்றுவதால் வேலை விரைவாக நடந்து முடிந்து விடுகிறது. பிணையப் போக்குவரத்தும் அதிகமாவதில்லை.
 • நுகர்வி - வழங்கி முறையில் முந்தைய முறைகளில் இருந்த சிறப்புத் தன்மைகள் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன.
 • வழங்கிக் கணிப்பொறிக்கு அதிகம் செலவில்லை. நுகர்விகள் அனைத்தும் தனித்தியங்கும் திறனுள்ள கணிப்பொறிகள் என்பதால் அவற்றுக்கான செலவு அதிகமாகும். பயன்பாட்டு மென்பொருள்களைப் புதுப்பிக்க வேண்டுமெனில் அனைத்து நுகர்விக் கணிப்பொறிகளிலும் புதுப்பிக்க வேண்டும். தனித்தியங்கும் நுகர்விகளில் பணியாற்றும் பயனர்களின் கவனக் குறைவால் நுகர்விகளைத் தொற்றும் நச்சுநிரல்கள் (Virus Programs) வழங்கிக் கணிப்பொறியையும் அதிலுள்ள தரவுகளையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
 • நுகர்வி - வழங்கி இரட்டை அடுக்கு முறையில் பயன்பாட்டு மென்பொருள் கள் அடங்கிய நுகர்விகள் ‘கொழுத்த நுகர்விகள்’ என்றும் பயன்பாட்டு மென்பொருள்களுக்கென தனியான வழங்கியைக் கொண்ட மூன்றடுக்கு முறையில் நுகர்விகள் ‘மெல்லிய நுகர்விகள்’ என்றும் அழைக்கப்படும்.
 • வழங்கி இயக்க முறைமை ஒரு மையக் கணிப்பொறியிலும், தரவுத்தளம் வேறொரு வழங்கியிலும், பயன்பாட்டு மென்பொருள்கள் இன்னொரு வழங்கியிலும் நிறுவப்பட்டுள்ள பல்லடுக்குக் கட்டுமான நுகர்வி - வழங்கி பிணைய அமைப்புமுறைகளும் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
 • மனித வாழ்க்கையைப் பற்றிய பயமே புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலுகிறது. இணையத்துக்கான வித்தும் அச்சத்தின் அடிப்படையில் போடப்பட்டதே.
 • 1957-ஆம் ஆண்டில் அன்றைய சோவியத் யூனியன் ஸ்புட்னிக் செயற்கைக் கோளை விண்ணில் பறக்கவிட்டதும், இது அமெரிக்காவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையாக இருக்குமோ என்ற அச்சத்தில் ‘ஆர்ப்பா’ (ARPA - Advanced Research Project Agency) என்னும் ஆய்வமைப்பை நிறுவியது.
 • போர்மூண்டு, எதிரிகளின் குண்டு வீச்சில் ஒருபகுதி சிதைந்து போனாலும் மீதிப் பகுதி எவ்விதச் சிக்கலுமின்றிச் செயல்படக்கூடிய ஒரு பிணையத்தை உருவாக்க ஆர்ப்பா திட்டமிட்டது. 1969-இல் ஆர்ப்பாநெட் உருவானது.
 • ஆர்ப்பாநெட்டின் மூலமாக இரு சேய்மைக் கணிப்பொறிகளுக்கு இடையே முதல் தகவல் பரிமாற்றத்தை நடத்திக் காட்டிய லியோனார்டு கிளெய்ன்ராக் என்பவரே ’இணையத்தின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.
 • ஆர்ப்பாநெட்டின் மறைவுக்குப்பின், அறிவியல் ஆய்வுக்கென அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் நிறுவனம் (National Science Foundation) நிறுவிய என்எஸ்எஃப்நெட் (NSFNet) என்னும் பிணையமே இணையமாகப் பரிணாம வளர்ச்சி பெற்றது.
 • சுவிட்சர்லாந்து நாட்டின் ஐரோப்பிய துகள் இயற்பியல் ஆய்வுக் கூடத்தில் (European Laboratory for Particle Physics - CERN) டிம் பெர்னர்ஸ்-ல¦ மீவுரைத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 1990-இல் உருவாக்கிய பிணையம் வைய விரிவலையாக வடிவம் பெற்றது.
 • வைய விரிவலை என்னும் மிகப்பரந்த பிணையம் 1992-இல் இணையத்தின் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டது. இன்றைக்கு இணையமே வைய விரிவலை, வைய விரிவலையே இணையம் ஆகும்.
 • இணையம் என்பது பிணையங்களின் பிணையம் ஆகும். இணையத்தில் பிணைக்கப்பட்டுள்ள வலை வழங்கிகளில் மீத்தொடுப்புகள் கொண்ட மீவுரை ஆவணங்களில் தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயனர்கள் இணைய இணைப்பு மூலம் தம் கணிப்பொறியை இணையத்தில் பிணைத்துக் கொண்டு ‘இணைய உலாவி’ என்னும் நுகர்வி மென்பொருளின் உதவியுடன் தம் கணிப்பொறித் திரையில் கண்டு மகிழ்கின்றனர்.
 • பயனர் விரும்பும் ஆவணங்களைத் தேடித்தரும் வேலையைத் தேடு பொறி (Search Engine) என்னும் நிரல் செய்து முடிக்கின்றது. குறிப்பிட்ட வலை வழங்கியில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட ஆவணத்தைத் தேடிப்பெற யூஆர்எல் (URL - Universal/Unique Resource Lacator) என்னும் முகவரி முறை பயன்படுகிறது. பிணையங்களின் பரிணாம வளர்ச்சியில் இணையம் ஓர் உச்சகட்டப் பரிமாணம் ஆகும்.