4.0 பாட முன்னுரை

கணிப்பொறிப் பிணையங்களின் பல்வேறு வகைகளைப் பற்றி முந்தைய பாடத்தில் விரிவாகப் படித்தோம். ஒவ்வொரு வகைப் பிணையமும் வெவ்வேறு வகையான தேவைகளை நிறைவேற்றுகின்றன. மிகச் சிறிய அளவிலான தனிப்பரப்புப் பிணையம் ஒரு தனிநபரின் தேவையை மட்டுமே நிறைவு செய்கிறது. அதே வேளையில் உலகமெங்கும் பரந்து கிடக்கும் வைய விரிவலைப் பிணையமோ உலக மக்கள் அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இடைப்பட்ட ஏனைய பிணையங்கள் சிறிய பெரிய நடுத்தர நிறுவனங்களின் பெருமளவு தேவைகளைக் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

எந்தவோர் அரசுத் துறை ஆயினும், எந்தவொரு தனியார் நிறுவனம் ஆயினும், சமூகத்தின் எந்தவோர் அமைப்பாயினும் அலுவலகப் பணிகள் தவிர்க்க முடியாதவை. மரபு வழிப்பட்ட வழிமுறைகளில் அலுவலகப் பணிகளைக் கவனித்துக் கொள்வதற்கும் அப்பணிகளைக் கணிப்பொறி வழியாக நிறைவேற்றுவதற்கும் இடையே உள்ள வேற்பாட்டை நாம் நன்கறிவோம். அலுவலகப் பணிகளைக் கணிப்பொறி மயமாக்கும் போக்குப் பரவி வருகிறது. குறிப்பாகக் கணிப்பொறிப் பிணையங்களின் பயன்பாடு அலுவலகச் செயல்பாடுகளில் அதிகம் உணரப்படுகிறது.

கணிப்பொறிப் பிணையத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் ஊற்றுக்கண்களாய்த் திகழ்ந்தவை, உலகளாவிய பொருளாதார வளர்ச்சிப் போக்கில் ஏராளமாய்ப் பெருகி வளர்ந்த வணிக நிறுவனங்களும், அவற்றுக்கு இடையே நிலவிய போட்டியும்தாம்! ஒன்றை மற்றது முந்த வேண்டுமெனில் வணிக நடவடிக்கையில் நாள்தோறும் புதியன புகுத்த வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. வணிகச் செயல்பாடுகளில் புகுத்த வேண்டிய புதியனவற்றுள் கணிப்பொறிப் பிணையங்கள் முதலிடம் வகிக்கின்றன என்பது கண்கூடு. எனவே கணிப்பொறிப் பிணையப் பயன்பாடுகளில் வணிகப் பயன்பாடுகள் முக்கிய இடம் வகிக்கின்றன.

கல்வித்துறைப் பயன்பாடுகளில் கணிப்பொறிப் பிணையங்களின் முக்கியத்துவம் இன்னும் அந்த அளவுக்கு உணரப்படவில்லை எனினும் இன்றைக்குக் கணிப்பொறிப் பிணையங்களைக் கல்வித்துறையின் முன்னேற்றத்துக்குப் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது கல்வியாளர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

இன்றைக்கு இந்தியாவில் பல மாநிலங்களும் மின்-அரசாண்மையில் முதன்மையான கவனம் செலுத்தி வருவதைப் பார்க்கிறோம். மின்-அரசாண்மையில் குறிப்பாக அரசின் அன்றாட நிர்வாகத்தில் கணிப்பொறிப் பிணையங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. இவ்வாறு பல்வேறு பிரிவுகளில் கணிப்பொறிப் பிணையங்களின் பயன்பாட்டை இப்பாடத்தில் விரிவாகக் காண்போம்.