வணிக நடவடிக்கை என்பது பொருளுற்பத்தி
நிறுவனம் எனில் மூலப் பொருட்களைக்
கொள்முதல் செய்தல் (Purchase), பொருளுற்பத்தி
செய்தல் (Production), உற்பத்தி செய்த பொருட்களை
கிடங்குகளில் இருப்புவைத்தல் (Inventory), விளம்பரம்
செய்தல் (Advertising), சந்தைகளை உருவாக்குதல்
(Marketing), சந்தையின் தேவைக்கேற்பப் பொருட்களை விற்பனை நிலையங்களுக்கு
அனுப்பி வைத்தல் (Delivery),
சில்லறை விற்பனையில் ஈடுபடுதல்
(Sales), உற்பத்தியை விரிவுபடுத்துதல், புதிய பொருட்களை உற்பத்தி
செய்யத் திட்டமிடல், சந்தைகளை விரிவாக்குதல், வாடிக்கையாளர்களைத் தக்கவைத்தல்
- இன்னும் இவை தொடர்பான பல்வேறு செயல்பாடுகளையும் உள்ளடக்கியதாகும். சேவைகளை
வழங்கும் நிறுவனம் (Service Providing Company)
ஆயினும் இதே போன்ற பணிப்பிரிகளைக் கொண்டிருக்கும்.
பெரிய நிறுவனங்களில் கொள்முதல்,
உற்பத்தி, சரக்கிருப்பு, விற்பனை என ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பணிப்பிரிவுகள்
இருக்கும். இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எனவே இவற்றுக்கிடையே தொடர்ந்து
தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும். பணிப்பிரிவுகளில் வேலைகளை எளிமைப்படுத்தக்
கணிப்பொறிகளைப் பயன்படுத்த வேண்டும். தரவுத்தளங்களில் தரவுகளைச் சேமித்துக்
கையாள வேண்டும். நான்கு பிரிவுகளுக்கும் பொதுவான தரவுகள் மையப்படுத்தப்பட்ட
தரவுத்தளத்தில் பராமரிக்கப்படவேண்டும். அனைத்துப் பிரிவுக் கணிப்பொறிகளும்
ஒன்றிணைக்கப்பட்ட கணிப்பொறிப் பிணையமே இத்தேவைக்கான ஒரே தீர்வாகும்.
வணிக நடவடிக்கைகளில் பிணையங்களின்
பயன்பாடு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. (1)
பணிப்பிரிவுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் நிகழ்நிலை யில் (On-line)
நடைபெறுவதால் கால விரையம் தவிர்க்கப்படுகிறது. (2)
ஒரே தகவலை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் சேமிக்க வேண்டிய தேவை தவிர்க்கப்
படுகிறது. (3) தரவுகளில் முழுமையான ஒத்திசைவு
நிலவுகிறது. (4) முறைகேடுகள் தவிர்க்கப்படுகின்றன.
(5) மேனிலை மேலாண்மை அமைப்புக்குச் சரியான
தகவல்கள், சரியான நேரத்தில் கிடைத்துவிடுகின்றன. மேலாண்மைப்பணி எளிமையாகிறது.
4.2.2
வாடிக்கையாளர் சேவை (Customer Service)
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு
மறைமுகமாக உதவும் காரணிகளுள் இரண்டைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்: (1)
விளம்பரம் (2) வாடிக்கையாளர் சேவை. இன்றைய
வணிகச் சூழலில் எவ்வளவு செல்வாக்குப் பெற்ற நிறுவனம் ஆயினும் தன்னிலையைத்
தக்கவைத்துக் கொள்வதற்கே பெருமளவு விளம்பரங்களை வெளியிட வேண்டியுள்ளது. விளப்பரப்
பணிகளில் கணிப்பொறிப் பிணையத்தின் பங்கு எதுவும் கிடையாது. ஆனால் வாடிக்கையாளர்
சேவையைப் பொறுத்தவரைப் பிணையங்களின் பங்கு குறிப்பிடத் தக்கதாகும். ஒரு நகருக்குள்
செயல்படும் நிறுவனம் எனில் அந்நகரின் பல பகுதிகளிலும் வாடிக்கயாளர் சேவை
மையங்களை (Customer Service Centres) நிறுவுகின்றன.
நாடு முழுக்கச் செயல்படும் நிறுவனம் எனில் சேவை மையங்களும் நாடு முழுக்க
நிறுவப்படுகின்றன. குறிப்பாகச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இத்தகைய மையங்களை
நிறுவுகின்றன. பிற நிறுவனங்கள் தம் கிளை அல்லது விற்பனை நிலையங்களிலேயே இத்தகைய
வாடிக்கையாளர் சேவைப் பிரிவுகளைக் கொண்டுள்ளன.
இதுபோன்ற வாடிக்கையாளர் சேவை மையங்களில்
மேற்கொள்ளப்படும் பணிகள் சில: (1) வாடிக்கையாளர்களுக்கு
நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் அல்லது சேவைகள் பற்றிய தகவல்களை வழங்குதல்.
(2) விற்பனைப் பொருட்கள் அல்லது சேவை களைப்
பெற விரும்பும் வாடிக்கையாளர்களிடமிருந்து அதற்கான விண்ணப்பங்களைப் பெறுதல்.
(3) முன்பணம், சேவைக் கட்டணம், தவணைப் பணம்
போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளல். (4) வாடிக்கையாளர்களின்
சேவை அழைப்புகள், குறைகள், புகார்கள் ஆகியவற்றைப் பதிவு செய்தல். இத்தகைய
பணிகள் அனைத்துக்கும் கணிப்பொறிப் பிணையங்கள் இன்றியமையாதவை.
வாடிக்கையாளர்கள் சேவை மையங்களிலுள்ள
கணிப்பொறிகள் அனைத்தும் நிறுவனப் பிணையத்தோடு இணைக்கப்பட்டிருக்கும். இத்தகைய
பிணைய அமைப்பினால் பெறப்படும் பலன்கள்: (1)
நிறுவனத்தின் நிகழ்நேரத் தகவல்கள் (Real-time Informations)
வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் கிடைக்கிறது. (2)
வாடிக்கை யாளர்களின் விண்ணப்பங்களை தலைமை நிறுவனம் காலத் தாழ்வின்றிப் பரிசீலிக்க
முடிகிறது. (3) வாடிக்கையாளர்களிடமிருந்து
வசூலிக்கப்படும் கட்டணங்கள் நிறுவனக் கணக்கில் உடனே சேர்க்கப்படுகின்றன.
(4) வாடிக்கையாளர்களின் சேவை அழைப்புகள், குறைகள்,
புகார்கள் உரிய பணிப்பிரிவுகளுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதுபோன்ற சேவைகளினால் வாடிக்கையாளர்கள் திருப்தி அடைகின்றனர். இப்போதைய வாடிக்கையாளர்கள்
தக்கவைத்துக் கொள்ளப் படுகின்றனர். சேவைகளின் சிறப்பை அறிந்து புதிய வாடிக்கையாளர்கள்
தேடி வருகின்றனர். விற்பனை பெருகுகிறது. இலாபம் அதிகரிக்கிறது. நிறுவனம்
வளர்கிறது. இவற்றுக்கெல்லாம் அடிப்படையாய்க் கணிப்பொறிப் பிணையங்களே விளங்குகின்றன.
பிணையங்களின் வழியாகச் செயல்படும்
வாடிக்கையாளர் சேவை மையங்களை நிறுவன வளர்ச்சிக்காக நன்கு பயன்படுத்திக் கொள்ளும்
நிறுவனங்களுள் தொலைபேசித் துறை நிறுவனங்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மைய அரசின் பாரத் சஞ்சார் நிகம் (Bharat Sanchar Nigam
Ltd - BSNL) அமைத்துள்ள வாடிக்கையாளர் சேவை மையங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
பிஎஸ்என்எல் வழங்கும் அனைத்துச் சேவைகளையும் வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில்
பெற்றுக் கொள்ள முடிகிறது. முன்பெல்லாம் புதிய தொலைபேசிக்கு விண்ணப்பிக்க
நீங்கள் எந்தப் பகுதியில் வசிக்கிறீர்களோ அப்பகுதி அலுவலகத்தில்தான் விண்ணப்பிக்க
முடியும். தொலைபேசி இடமாற்றம் மற்றும் பிற தொலைபேசிச் சேவைகளைப் பெறுவதற்கும்
அப்படித்தான். ஆனால் இப்போது நீங்கள் எப்பகுதியிலுள்ள வாடிக்கையாளர் மையத்திலும்
விண்ணப்பிக்கலாம். கணிப்பொறிப் பிணையங்கள் இதனைச் சாத்தியமாக்கியுள்ளன.
கணிப்பொறிப் பிணையங்களின் வணிகப் பயன்பாடுகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாய் வங்கியை எடுத்துக் கொள்வோம். வங்கிகள் கணிப்பொறிப் பிணையங்களின் பயன்பாடுகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு பலன் பெறுகின்றன. நாடு முழுக்கச் செயல்படும் கிளைகள் அனைத்தும் கணிப்பொறிப் பிணையத்தால் இணைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் கிளையில் மட்டுமின்றி வேறெந்தக் கிளையிலும் தம் கணக்குகளைக் கையாள முடிகிறது. எந்தக் கிளையிலும் பணம் போடலாம். பணம் எடுக்கலாம்.
இக்காலத்தில் வங்கிகள் இணையத்
தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. பெரும்பாலான வங்கிகள் இணையம்
வழியாகச் செயல்படும் ‘புற இணைய’ (Extranet)
அமைப்புகளைக் கொண்டுள்ளன. புற இணையம் செயல்படும் முறையை ஏற்கெனவே அறிவோம்.
இப்பிணையத்தை வங்கிப் பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் அணுக முடியும். நாடு
முழுக்கப் பரவிக் கிடக்கும் வங்கிக் கிளைகள் இணையம் வழியே தம் வங்கியின்
புற இணைய அமைப்பை அணுகி வாடிக்கையாளர்களுக்கு நாடு தழுவிய சேவையை வழங்க முடிகிறது.
அதே வேளையில் வாடிக்கையாளர்களும் தம் வீட்டிலிருந்தபடியே இணைய இணைப்பு மூலமாக
வங்கியின் பிணையத்தை அணுகித் தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது.
தம் கணக்கிலிருந்து பணத்தை இன்னொரு வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம். தொலைபேசி,
ஆயுள் காப்பீடு போன்ற பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்தலாம். வைப்புத்
தொகைக் கணக்குகளைத் தொடங்கலாம். காசோலைப் புத்தகம், காசோலைகளை நிறுத்தி வைத்தல்,
கேட்புக் காசோலை, பற்று அட்டை, முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கான கோரிக்கைகளை
அனுப்பி வைக்கலாம். பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கலாம், விற்கலாம். இவற்றை
‘இணைய வங்கிச் சேவை’ (Internet Banking) என்கின்றனர்.
இணைய வங்கிச் சேவை என்பது கணிப்பொறிப் பிணையம் வழங்கியுள்ள கொடையாகும்.
வங்கிகளின் வளர்ச்சியில் தானியங்குக்
காசாளி எந்திரம் (Automatic Teller Machine - ATM)
பெரும்பங்கு வகிக்கின்றது. வாடிக்கையாளர்கள் தம் வங்கிக் கணக்கிலிருந்து
பணம் எடுக்கத் தொலைவிலுள்ள வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. மிக அருகில்
இருக்கும் ஏடீஎம் சென்று ’பற்று அட்டை’ (Debit Card)
மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம். தம் வங்கியின் ஏடீஎம் அருகில் இல்லையெனில்,
அருகிலுள்ள வேறெந்த வங்கியின் ஏடீஎம்மிலும் பணம் எடுத்துக் கொள்ள முடியும்.
குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில் கன்னியாகுமரி வங்கிக் கிளையில் கணக்கு
வைத்துள்ள ஒருவர் காஷ்மீரில் பயணம் செய்யும்போது அங்குள்ள ஏடீஎம்மில் பணம்
எடுத்துக் கொள்ள முடியும். ஏடீஎம் வழியாகப் பணம் எடுப்பது மட்டுமின்றி, பணம்
போடுதல், கணக்கின் இருப்புத் தொகை அறிதல், சில பொதுச் சேவைகளுக்கான கட்டணங்களைச்
செலுத்துதல் போன்ற சேவைகளும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றன. ஏடீஎம்
கட்டமைப்புக் கணிப்பொறிப் பிணையங்களின் ஒரு பரிமாணமே.
எந்தவொரு வங்கியிலும் கணக்கு வைத்துக்
கொள்ளாதோரும் கையில் பணம் இல்லாத நிலையிலும் ’கடன் அட்டை’ (Credit
Card) மூலமாகக் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடிகிறது. பிறகு
குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தைச் செலுத்திவிட்டால் போதும். இத்தகைய வசதிகளையும்
கணிப்பொறிப் பிணையங்களே சாத்தியமாக்கியுள்ளன. வங்கிச் சேவைகளைப் போலவே கணிப்பொறிப்
பிணையங்களின் பயன்பாட்டை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் இன்னொரு துறை
இரயில் போக்குவரத்துத் துறையாகும். இரயில்வே துறையின் புற இணைய அமைப்பினால்
வாடிக்கையாளர்கள் பெறும் பயன்களை அனைவரும் அறிவோம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
அலுவலகத் தானியக்கமாக்கத்தில் பிணையங்கள் எவ்வாறு பயன்படுகின்றன?
|
|
2. |
அலுவலக நிர்வாகம் பிணையங்களினால் எவ்வாறு மேம்படுகிறது? |
|
3. |
பிணையங்களின் தரவுத்தளப் பயன்பட்டை விளக்குக. |
|
4. |
வணிக நடவடிக்கைகளில் பிணையங்கள் வகிக்கும் பங்கு யாது? |
|
5. |
பிணையங்களின் உதவியுடன் வாடிக்கையாளர் சேவைகளைத் திறம்பட வழங்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக. |
|
6. |
வங்கிச் செயல்பாடுகளில் பிணையங்களின் பங்களிப்பை விளக்கி வரைக. |
|