-
அலுவலகப்
பணிகளைக் கணிப்பொறி மயமாக்கும் போக்குப் பரவி வருகிறது. குறிப்பாகக்
கணிப்பொறிப் பிணையங்களின் பயன்பாடு அலுவலகச் செயல்பாடுகளில் அதிகம் உணரப்படுகிறது.
-
அலுவலகத்
தானியக்கமாக்கத்தில் மூன்று குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள்: (1)
தாளில்லா அலுவலகம் (2) ஆளில்லா அலுவலகம்
(3) அலுவலகம் இல்லா அலுவலகம். இவற்றைக்
கணிப்பொறிப் பிணையங்களே சாத்தியமாக்கியுள்ளன.
-
ஓர் அலுவலகத்தின்
பல்வேறு பணிப்பிரிவுகளிலுள்ள கணிப்பொறிகளும் மற்றும் மேலதிகாரிகளின்
கணிப்பொறிகளும் ஒரு கணிப்பொறிப் பிணையத்தில் பிணைக்கப்பட்டு, அலுவலகத்
தகவல்கள் அனைத்தும் மையப்படுத்தபபட்ட தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்
எனில் தாள்களையும் பேரேடுகளையும் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது.
-
அலுவலகங்களில்
கணிப்பொறிப் பிணையத்தையும் உரிய மென்பொருள்களையும் பயன்படுத்துவோம் எனில்
அலுவலகங்களில் தாள்களின் பயன்பாடு குறைவதுடன், மனித உழைப்புப் பெருமளவு
மிச்சமாகி, ஆள்களின் தேவையும் குறைந்து போகும்.
-
ஓர் அலுவலர்
அலுவகம் செல்ல முடியாத நாட்களில், அன்று கட்டாயம் முடிக்க வேண்டிய பணிகளை
வீட்டிலிருந்தபடியே செய்து முடிக்கக்கூடிய முன்னேற்றமும் பிணையத் தொழில்நுட்பத்தினால்
ஏற்பட்டுள்ளது.
-
அலுவலகப்
பணியாளர்களின் பணி நியமனம் தொடங்கிப் பதவி ஓய்வு வரயிலான அனைத்துத் தகவல்களைப்
பராமரிப்பது, பணியாளர்களின் ஊதியம், படிகள், ஊக்கத் தொகை, போனஸ், முன்பணம்,
கடன்கள், வைப்புநிதி, வருமான வரி போன்ற தரவுகளைப் பிழையின்றிப் புதிப்பிப்பது
ஆகிய பணிகள் அனைத்தையும் செவ்வனே நிறைவேற்ற, அலுவலகத்தின் பல பணிப்பிரிவுக்
கணிப்பொறிகளை ஒன்றிணைத்த பிணையம் பேருதவி புரிகிறது.
-
கிளை
அலுவலகங்களுக்கு அறிவிக்கைகள், ஆணைகள், வழிமுறைகள், வழிகாட்டுதல்கள்,
விதிமுறைகள் ஆகியவற்றை உடனுக்குடன் அனுப்பி வைத்தல், கிளை அலுவலகங்களிலிருந்து
குறிப்பிட்ட காலக்கெடுவுகளில் அறிக்கைகளைப் பெறுதல் போன்ற பணிகளைக் கால
விரையமின்றி விரைவாகச் செய்து முடிப்பதில் கணிப்பொறிப் பிணையங்கள் பெரும்பங்கு
வகிக்கின்றன.
-
தரவுச்
சேமிப்பு (Data Storage), தரவுப் புதுப்பித்தல்
(Data Update), தரவு ஒத்திசைவு (Data
Integrity), தரவுப் பாதுகாப்பு (Data Security)
ஆகியவற்றுக்குப் பிணைய அமைப்பே சரியான தீர்வு. குறிப்பாகப் பிணைய அமைப்பு
முறையில் தரவு மிகைப்பு (Data Redundancy)
தவிர்க்கப்படுகிறது.
-
இன்றைக்குக்
கணிப்பொறிப் பிணையங்களின் அனைத்துப் பலன்களையும் முழுமையாக உள்வாங்கிக்
கொண்டவை வணிக நிறுவனங்களே. பிணையத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வணிக நிறுவனங்களின்
தேவைகளே வித்திட்டன எனில் மிகையாகாது.
-
வணிக
நிறுவனங்களில் கொள்முதல், உற்பத்தி, சரக்கிருப்பு, விற்பனை ஆகிய பணிப்பிரிவுகளுக்கிடையே
தொடர்ந்து தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும். நான்கு பிரிவுகளுக்கும்
பொதுவான தரவுகள் மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தில் பராமரிக்கப்படவேண்டும்.
அனைத்துப் பிரிவுக் கணிப்பொறிகளும் ஒன்றிணைக்கப் பட்ட கணிப்பொறிப் பிணையமே
இத்தேவைக்கான ஒரே தீர்வாகும்.
-
வணிக
நடவடிக்கைகளில் பிணையங்களைப் பயன்படுத்துவதால் பணிப்பிரிவுகளுக்கு இடையேயான
தகவல் பரிமாற்றத்தில் கால விரையம் தவிர்க்கப்படுகிறது. தரவுகளில் முழுமையான
ஒத்திசைவு நிலவுகிறது. முறைகேடுகள் தவிர்க்கப் படுகின்றன. மேனிலை மேலாண்மை
அமைப்புக்குச் சரியான தகவல்கள், சரியான நேரத்தில் கிடைத்துவிடுகின்றன.
மேலாண்மைப்பணி எளிமையாகிறது.
-
வாடிக்கையாளர்கள்
சேவை மையங்களிலுள்ள பிணைய அமைப்பினால் பெறப்படும் பலன்கள்: (1)
நிறுவனத்தின் நிகழ்நேரத் தகவல்கள் (Real-time
Informations) வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் கிடைக்கிறது.
(2) வாடிக்கை யாளர்களின் விண்ணப்பங்களை
தலைமை நிறுவனம் காலத் தாழ்வின்றிப் பரிசீலிக்க முடிகிறது. (3)
வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணங்கள் நிறுவனக் கணக்கில்
உடனே சேர்க்கப்படுகின்றன. (4) வாடிக்கையாளர்களின்
சேவை அழைப்புகள், குறைகள், புகார்கள் உரிய பணிப்பிரிவுகளுக்கு உடனுக்குடன்
அனுப்பி வைக்கப்படுகின்றன.
-
வங்கிகள்
கணிப்பொறிப் பிணையங்களின் பயன்பாடுகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு
பலன் பெறுகின்றன.
-
நாடு
முழுக்கச் செயல்படும் வங்கிக் கிளைகள் அனைத்தும் கணிப்பொறிப் பிணையத்தால்
இணைக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் கிளையில்
மட்டுமின்றி வேறெந்தக் கிளையிலும் எந்தக் கிளையிலும் பணம் போடலாம். பணம்
எடுக்கலாம்.
-
இணைய
வங்கிச் சேவை என்பது கணிப்பொறிப் பிணையம் வழங்கியுள்ள கொடையாகும். வாடிக்கையாளர்கள்
தம் வீட்டிலிருந்தபடியே இணைய இணைப்பு மூலமாக வங்கியின் பிணையத்தை அணுகித்
தம் கணக்கிலிருந்து பணத்தை இன்னொரு வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம். பல்வேறு
சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்தலாம். வைப்புத் தொகைக் கணக்குகளைத்
தொடங்கலாம். காசோலைப் புத்தகம், காசோலைகளை நிறுத்தி வைத்தல், கேட்புக்
காசோலை, பற்று அட்டை, முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கான கோரிக்கைகளை அனுப்பி
வைக்கலாம். பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்.
-
வங்கிகளின்
வளர்ச்சியில் தானியங்குக் காசாளி எந்திரம் (Automatic
Teller Machine - ATM) பெரும்பங்கு வகிக்கின்றது. கன்னியாகுமரி
வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ள ஒருவர் காஷ்மீரில் பயணம் செய்யும்போது
அங்குள்ள ஏடீஎம்மில் பணம் எடுத்துக் கொள்ள முடியும்.
-
தொடக்கக்
கல்வியில் கணிப்பொறியின் பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது. எனினும்
சில கல்வி நிறுவனங்கள் மழலை வகுப்புகளில் பயிலும் குழந்தைகளுக்கு கணிப்பொறிகளின்
வாயிலாகப் பல்லூடகத் (Multi-media) தொழில்நுட்பம்
மூலம் பயிற்றுவிக்கும் முறையைப் பின்பற்றி வருகின்றன.
-
கல்லூரிகளிலும்
பல்கலைக் கழகங்களிலும் கணிப்பொறிப் பிணையங்களைப் பெருமளவு பயன்படுத்திக்
கொள்ள முடியும். பெரும்பாலான பொறியியல், மேலாண்மைக் கல்வி நிறுவனங்களும்
பல்கலைக் கழகங்களும் பெருமளவு இல்லையெனினும் ஓரளவுக்கேனும் பயன்படுத்திக்
கொள்கின்றன. தரம்மிக்க முன்னணிக் கல்வி நிறுவனங்கள் சில பிணையத் தொழில்நுட்பத்தை
நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன.
-
கல்லூரி
அல்லது பல்கலைக் கழகத்தின் அனைத்து துறைகளும் ஒரு குறும்பரப்புப் பிணையத்தைக்
கொண்டிருக்கும். அத்தனை குறும்பரப்புப் பிணையங்களும் ஒரு வளாகப் பிணையத்தில்
இணைக்கப்பட்டிருக்கும். வளாகம் முழுக்க ‘வைஃபி’ மண்டலமாக இருக்கும்.
கல்லூரிப் பாடங்களும், பாட விளக்கங்களும், அவற்றுக்கான ‘முன்வைப்புகளும்’
(Presentations) பிணையத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.
மாணவர்கள் வளாகத்துக்குள் எங்கிருந்தும் மடிக் கணிப்பொறி மூலம் கல்லூரிப்
பிணையத்தை அணுகிப் பாடங்களைப் பெற முடியும்.
-
ஆசிரியர்
கணிப்பொறி உதவியுடன் பாடம் நடத்துவார். பிணையத்தில் சேமிக்கப்பட்டுள்ள,
பாடத்தோடு தொடர்புடைய பல்வேறு தகவல்களையும் தேடியெடுத்து விளக்கிக் கூறுவார்.
மாணவர்கள் பாடத்தைக் கவனித்தால் போதும். ஏடுகளில் மிகுதியாகக் குறிப்பெடுக்க
வேண்டிய தேவையில்லை.
-
மாணவர்கள்
ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு திட்டப்பணியைத் (Projects)
தேர்ந்தெடுக்க வேண்டும். திட்டப்பணியை ஏறத்தாழ ஓர் ஆய்வறிக்கை போலவே
தயார் செய்ய வேண்டும். திட்டப்பணிக்கான கருத்துருவைத் தேர்ந்தெடுக்கவும்,
அதற்கான விவரங்களைத் திரட்டவும் மணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருப்பது
கல்லூரிப் பிணையமும் இணையமும் ஆகும்.
-
இன்றைய
சூழலில் எந்தத் துறையில் எந்தப் பாடப் பிரிவில் ஆய்வுப் பணியை மேற்கொள்ளும்
மாணவரும் கணிப்பொறி, கணிப்பொறிப் பிணையங்கள், இணையம் ஆகியவற்றின் உதவியின்றித்
தம் ஆய்வறிக்கையைத் தயார் செய்துவிட முடியாது.
-
அரசு
நிர்வாகம், அரசாங்க நடவடிக்கைகள், அரசுத் துறைகளுக்கு இடையேயான தகவல்
பரிமாற்றம், பொதுமக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையேயான தொடர்புகள்
அனைத்தையும் கணிப்பொறிப் பிணையங்கள் வழியாக நிறைவேற்றும் நடைமுறையே மின்-அரசாண்மை
எனப்படுகிறது.
-
மின்-அரசாண்மையினால்
அரசாங்க நடவடிக்கைகளில் கால விரையம் தவிர்க்கப்படும். அரசுக்கும் மக்களுக்கும்
இடையிலான இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவர். ஊழலும் முறைகேடுகளும் குறையும்.
அரசின் திட்டங்களினால் மக்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
அரசு நிர்வாகத்தில் காலகாலமாய் இருந்துவரும் சிவப்பு நாடாத்துவக் கேடுகள்
பலவும் களையப்படும்.
-
கணிப்பொறிப்
பிணையங்கள் வழியே ’நிகழ்படக் கருத்தரங்கு’ (Video
Conferencing) மூலம் தலைமைச் செயலர் மாவட்ட ஆட்சியர்களுடன் நினைத்த
நேரத்தில் கூட்டம் நடத்திக் கலந்தாலோசிக்க முடியும். மாவட்ட ஆட்சியர்கள்
இருந்த இடத்தில் இருந்தவாறே தலைமைச் செயலருடன் கலந்தாலோசனை செய்து மாவட்ட
நிர்வாகம் தொடர்பான உடனடி முடிவுகளை எடுக்க முடிகிறது.
-
சட்டம்
ஒழுங்கு தொடர்பாகக் காவல்துறை அதிகாரிகள் கலந்தாலோசித்து உடனுக்குடன்
முடிவெடுத்துச் செயல்படக் கணிப்பொறிப் பிணையங்களும் அதன் வழியிலான தகவல்
பரிமாற்றமும் வழிவகுத்துள்ளன.
-
வருவாய்த்
துறை, விற்பனை வரித் துறை, வணிக வரித் துறை போன்ற நிதி வளங்களைக் கையாளும்
அரசுத் துறைகளில் கணிப்பொறிப் பிணையங்களின் பயன்பாடு முக்கிய விளைவுகளை
ஏற்படுத்துகின்றன. அரசு, சரியான முடிவுகள் எடுப்பதற்குச் சரியான தகவல்கள்
சரியான நேரத்தில் கிடைக்கப் பெறுகின்றன.
-
அரசின்
ஆணைகள், திட்டங்கள், அறிவிப்புகள், அரசிதழ் அறிவிக்கைகள் (Gezette
Notifications), ஒப்பந்தப்புள்ளிகள் (Tenders)
அனைத்தும் உடனுக்குடன் இணையத்தில் அரசு வலையகத்தில் வெளியிடப்படும்.
பொதுமக்கள் சமூக இணைய மையத்திலிருந்து அவற்றைப் பார்வையிட முடியும்.
-
பொதுமக்கள்
அரசுத் திட்டங்களின் தகவல்களை அறிவது மட்டுமின்றி, தங்கள் குறைகளையும்,
புகார்களையும், முறையீடுகளையும் மாவட்ட ஆட்சியர்க்கு அனுப்பி வைக்க முடியும்.
தமது முறையீட்டின் மீது அரசு எடுத்துவரும் நடவடிக்கையின் விவரங்களை இணைய
மையம் வழியே அறிந்து கொள்ள முடியும். அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய
முறைப்படியான விண்ணப்பப் படிவங்களைத் தேடி அலைய வேண்டியதில்லை. இணையம்
வழியே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
-
தமிழ்நாட்டில்
நகராட்சி, மாநகராட்சிப் பணிகளும் கணிப்பொறி மயமாக்கப்பட்டு வருகின்றன.
பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் கணிப்பொறி மூலமே வழங்கப்படுகின்றன. மாநகராட்சிக்குச்
செலுத்த வேண்டிய வீட்டுவரி, குடிநீர் வடிகால் வரியத்துக்குச் செலுத்த
தண்ணீர்வரி போன்றவற்றை வீட்டிலிருந்தபடியே இணையம் வழியாகச் செலுத்த வசதி
செய்யப்பட்டுள்ளது.
-
நில ஆவணங்கள்
அனைத்தும் கணிப்பொறி ஆவணங்களாக மாற்றப்பட்டு கணிப்பொறிப் பிணையங்களில்
சேமிக்கப்பட்டுள்ளன. ஒரு நில விற்பனை நடைபெறும்போது, நிலப்பதிவு அலுவலகத்தில்
விவரங்கள் அனைத்தும் பெரிய பேரேடுகளில் எழுதி வைக்கப்படுவதற்குப் பதிலாகக்
கணிப்பொறியில் சேமிக்கப்படுகின்றன. அனைத்துச் சார்பதிவாளர் அலுவலகங்களும்
கணிப்பொறிப் பிணையத்தில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. எனவே எந்தச் சார்பதிவு
அலுவலகக் கணிப்பொறியிலும் எந்த நிலத்தைப் பற்றிய விவரத்தையும் பெறமுடியும்.
-
ஒரு நாட்டின்
சுதந்திர ஜனநாயகக் குடியரசு மின்-அரசாண்மை மூலமே மெய்யான மக்கள் குடியரசாக
மலர்கிறது.