5.0 பாட முன்னுரை அண்மைக்காலம் வரை கணிப்பொறியை மனிதனின் அன்றாடப் பணிகளில் உதவிடும் ஒரு கருவியாகத்தான் பயன்படுத்தி வந்தோம். ஆனால் இணையத்தின் வருகை கணிப்பொறிப் பயன்பாட்டின் இலக்கணத்தையே மாற்றிவிட்டது. மனித வாழ்க்கைக்கு உதவிடும் கருவியாய் இருந்த நிலைமாறி மனித வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் திருப்பு முனையாய் ஆகிவிட்டது. நாம் இதுவரை பின்பற்றி வந்த பண்பாட்டு நடைமுறைகள், வாழ்க்கைச் சிந்தனைகள், அன்றாட நடவடிக்கைகள் இவையனைத்தையும் அப்படியே புரட்டிப் போடும் வல்லமை பெற்றதாய் ’இணையம்’ விளங்குகிறது. மனிதர்களின் நடைமுறை வாழ்க்கையில் பல தேவைகள் இருக்கின்றன. அத் தேவைகளை நிறைவேற்றப் பல்வேறு சாதனங்களும், நிறுவன அமைப்புகளும் உள்ளன. எடுத்துக்காட்டாகக் கல்வி கற்கக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் உள்ளன. மேலும் அறிவை வளர்த்துக் கொள்ள நூலகங்கள் உள்ளன. வேலை தேடிப்பெற வேலைவாய்ப்பு அலுவலகங்கள் உதவுகின்றன. நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளச் செய்தித்தாள்கள் கிடைக்கின்றன. கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள, விவாதிக்கக் கருத்தரங்குகள், அரட்டையடிக்க நண்பர்கள் குழாம் உள்ளன. தொலைதூரத்தில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களுடன் தொடர்பு கொள்ள அஞ்சல் நிலையங்கள் உதவுகின்றன. உடனடித் தகவல் பரிமாற்றத்துக்குத் தொலைபேசி இருக்கிறது. மருத்துவ ஆலோசனைக்கு மருத்துவர், சட்ட ஆலோசனைக்கு வழக்குரைஞர் உள்ளனர். பொழுதுபோக்குக்குப் பத்திரிகைகள், விளையாட்டு அரங்குகள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படக் கொட்டகைகள் எங்கும் உள்ளன. ஆனால், வீட்டிலுள்ள கணிப்பொறியை இணையத்தில் இணைத்துக் கொண்டால் இருந்த இடத்திலேயே இத்தனை வசதிகளும் கிடைத்துவிடும் - அதாவது இணையமே கல்லூரியாய், நூலகமாய், கருத்தரங்காய், வேலைவாய்ப்பு அலுவலகமாய், அஞ்சல் நிலையமாய், வானொலியாய், தொலைக்காட்சியாய், விளையாட்டு அரங்கமாய் விளங்குகிறது - என்பது நம்ப முடியாத உண்மையாகும். அன்றாட வாழ்க்கையின் தேவைகளை நிறைவு செய்கின்ற பல்வேறு சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன. குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில் அத்தகைய சேவைகளில் பெரும்பாலானவை கட்டணம் எதுவுமின்றி இலவசமாகக் கிடைக்கின்றன. குறிப்பாகத் தகவல் களஞ்சியங்கள், மின்னஞ்சல் தொடர்பு, உடனடிச் செய்திப் பரிமாற்றம், இணைய அரட்டை போன்ற சேவைகள் இலவசமே. பெரும்பாலான செய்தித்தாள்கள், பத்திரிகைகள், பாடல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணைய விளையாட்டுகளும் இலவசமாகக் கிடைக்கின்றன. இணையம் வழங்கும் இதுபோன்ற சேவைகள் பற்றி இப்பாடத்தில் விரிவாக அறிந்து கொள்வோம். |