5.2 தகவல் பரிமாற்றம்

    தகவல் பரிமாற்றம் என்பது இரண்டு வகையில் நடைபெறலாம். முதல்வகை தனிப்பட்ட இருவருக்கிடையே நடைபெறும் தகவல்பரிமாற்றம். கடிதப் போக்குவரத்து, தொலைபேசி உரையாடல் ஆகியவற்றைக் கூறலாம். இரண்டாவது வகை ஒருவர் வெளியிடும் தகவலை ஒரே நேரத்தில் பலரும் பெற்றுப் பயனடைவது. செய்தித்தாள்கள் பத்திரிகைகளை இவ்வகையில் அடக்கலாம். இந்த இருவகையான தகவல் பரிமாற்றங்களுமே இணையச் சேவைகளாக நமக்குக் கிடைக்கின்றன. உலகத்தின் வெவ்வேறு மூலைகளில் வசிக்கும் இருவர் தமக்கிடையே இணையம் வழியாகக் கடிதங்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். எவ்வளவு தொலைவு ஆயினும் கடிதம் முகவரிதாரருக்கு உடனடியாகச் சென்று சேரும். உடனே அவர் பதில் அனுப்பலாம். அடுத்த வினாடியே அக்கடிதம் இவருக்குக் கிடைத்துவிடும். கடிதப் போக்குவரத்துக்குக் கட்டணம் எதுவுமில்லை. அதுபோலவே இணையம் வழியாகவே இருவர் பேசிக் கொள்ளவும் முடியும். அவ்வாறு பேசிக் கொள்ளும்போது ஒருவர் உருவத்தை மற்றவர் தம் கணிப்பொறித் திரையில் காணவும் முடியும். அனேகமாக அச்சில் வெளியிடப்படும் அனைத்து செய்தித்தாள்களும் பத்திரிகைகளும் இணையத்திலும் வெளியிடப்படுகின்றன. இணையத்தில் மட்டுமே வெளியிடப்படும் பத்திரிகைகளும் ஏராளமாய் உள்ளன. இவை பற்றியெல்லாம் இந்தப் பாடப் பிரிவில் விரிவாகப் படிப்போம்.

5.2.1 மின்னஞ்சல் (E-mail)

    மின்னஞ்சல் சேவை என்பது இணையம்வழி நடைபெறும் கடிதப் போக்கு வரத்தைக் குறிக்கிறது. மின்னஞ்சல் சேவையைப் பல்வேறு நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத் தக்க சில:

(1) ஜீமெயில் - கூகுள் நிறுவனம் - www.gmail.com
(2) ஹாட்மெயில் - மைக்ரோசாஃப்ட் நிறுவனம் - www.hotmail.com
(3) யாகூமெயில் - யாகூ நிறுவனம் - www.yahoomail.com
(4) ஏஓஎல்மெயில் - அமெரிக்கா ஆன்லைன் - www.aol.com
(5) ரீடிஃப்மெயில் - ரீடிஃப் நிறுவனம் - www.rediffmail.com

     ஹாட்மெயில் உலகின் முதல் இலவச இணைய மின்னஞ்சல் சேவை. இந்தியாவைச் சேர்ந்த சபீர் பாட்டியா உருவாக்கியது. 1997-இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கியது. யாகூ நிறுவனம் ஒய்மெயில் (ymail), ராக்கெட்மெயில் (rocketmail) என்னும் மின்னஞ்சல் சேவைகளையும் வழங்குகிறது. இவைதவிர இன்னும் ஏராளமான நிறுவனங்களும் இணையத்தில் மின்னஞ்சல் சேவையை வழங்கி வருகின்றன.

     மின்னஞ்சல் பயன்படுத்த விரும்புபவர் மேற்கண்ட மின்னஞ்சல் சேவை நிறுவனம் ஒன்றின் வலையகம் நுழைந்து, தனக்கென ஒரு மின்னஞ்சல் கணக்கை உருவாக்க வேண்டும். பெயர், வயது, முகவரி, பிறந்த நாள், பணி, தொலைபேசி எண் போன்ற சில விவரங்களை ஒரு படிவத்தில் நிறைவு செய்து சமர்ப்பித்தால் ஒரு மின்னஞ்சல் முகவரி (email address) உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் முகவரிக்காக நீங்கள் தேர்வு செய்யும் பெயர் மற்றும் சேவையை வழங்கும் நிறுவனத்தின் வலையகப் பெயரையும் கொண்டதாக இருக்கும். [email protected] என்பதுபோல அம்முகவரி அமையும். நீங்கள் தேர்வுசெய்யும் பெயரில் ஏற்கெனவே ஒருவர் முகவரி பெற்றிருந்தால் வேறு பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு மின்னஞ்சல் முகவரி பெறும் செயல்பாடு ‘ஒப்பமிடல்’ (Sign Up) என்றழைக்கப்படுகிறது.

    மின்னஞ்சல் முகவரி பெற்ற எவரும் மின்னஞ்சல் முகவரியுடைய வேறெவருக்கும் இணையம் வழியே மடல் அனுப்பலாம். இருவரும் ஒரே சேவை நிறுவனத்தில் முகவரி பெற்றிருக்க வேண்டிய தேவையில்லை. மூன்று சொற்கள் கொண்ட ஒரு முகவரி உலகில் ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டுகிறது. மரபுவழி கடிதப் போக்குவரத்தில் நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும்போதுதான் உங்களுக்கு வரும் கடிதங்களைப் பார்வையிட முடியும். ஆனால் மின்னஞ்சல் போக்குவரத்தில் உலகில் எந்த நாட்டில் எந்த நகரில் இருந்தாலும் உங்கள் அஞ்சல் பெட்டியைத் திறந்து உங்களுக்கு வரும் கடிதங்களைப் பார்வையிடலாம்.

     மின்னஞ்சல் சேவை பல்வேறு வசதிகளையும் வழங்குகிறது. மடலோடு சேர்த்து கோப்புகள், படங்கள், பாடல்கள், நிகழ்படங்கள் ஆகியவற்றை உடனிணைப்பாக (Attachment) அனுப்பி வைக்க முடியும். உங்களுக்கு வரும் மடலுக்கு உடனே பதில் (Reply) அனுப்பலாம். உங்களுக்கு வந்த மடலை வேறொருவருக்குத் திருப்பி அனுப்பலாம் (Forward). மடலை அச்சிட்டுக் கொள்ளலாம் (Print). படித்து முடித்த மடல்களை அழித்துவிடலாம் (Delete). கடிதத்தை முன்பே தயாரித்து வைத்துக் கொண்டு (Draft) பின்னொரு நாளில் அனுப்பலாம். அனுப்பிய மடல்களைச் சேமித்து வைக்கலாம். குறிப்பிட்ட முகவரியிலிருந்து மடல் வராமல் தடுக்கலாம் (Block). உங்கள் மடல்களைப் பார்வையிட முடியாத காலங்களில் முன்தயாரிக்கப்பட்ட பதிலைத் (Automated Vocation Reply) தானாகவே அனுப்பி வைக்கும்படி செய்யலாம். உங்களுக்கு மடல் வரும்போது உங்கள் செல்பேசியில் தகவல் (Alert Message) வரச் செய்யலாம்.

    மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள உங்களிடம் கணிப்பொறியும், இணைய உலாவி மென்பொருளும், இணைய இணைப்பும், மின்னஞ்சல் முகவரியும் இருந்தால் போதும். இப்போது செல்பேசி வழியாகவே மின்னஞ்சல் அனுப்பும், பெறும் வசதிகளும் வந்துவிட்டன. மின்னஞ்சல் போக்குவரத்துக்கு விடுமுறை நாட்கள் கிடையா. இரவு பகல் எந்த நேரமும் செயல்படும்.

5.2.2 அஞ்சல் குழுக்கள் (Mailing Lists)

மின்னஞ்சல் சேவை நிறுவனங்கள் மின்னஞ்சல் குழுக்களை உருவாக்கிக் கொள்வதற்கான வசதிகளையும் வழங்குகின்றன. பல்வேறு நாடு, நகரங்களில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஓர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், ஒரே வகுப்பில் பயிலும் மாணவர்கள், ஓர் அடுக்ககக் குடியிருப்பின் உரிமையாளர்கள், ஒரு சங்கத்தின் உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு மின்னஞ்சல் குழுவை (Mailing List) உருவாக்கிக் கொள்ளலாம். குழுவுக்கு ஒரு பெயர் இருக்கும். அதுவே குழுவுக்கான பொது மின்னஞ்சல் முகவரியாகும். குழுவுக்கு ஒரு கட்டுப்பாட்டாளரை (Moderator) நியமித்துக் கொள்ளலாம். எவரும் உறுப்பினராக இணைந்து கொள்ளும்படியான ‘திறந்த குழு’வாகவோ, அனுமதி பெற்றவரே உறுப்பினர் ஆக முடியும் என்கிற ‘மூடிய குழு’வாகவோ இருக்கலாம். உறுப்பினர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டும் என்பதே நிபந்தனை.,/p>

குழுவின் உறுப்பினரோ, வெளியார் ஒருவரோ குழுவின் பெயருக்கு அனுப்பும் மடல் உறுப்பினர்கள் அனைவருக்கும் போய்ச் சேரும். அம்மடலுக்கு ஒருவர் அனுப்பும் பதிலும் உறுப்பினர்கள் அனைவருக்கும் கிடைக்கும். குழுவுக்கு வரும் மடல்கள் கட்டுப்பாட்டாளரின் தணிக்கைக்குப் பிறகே உறுப்பினர்களுக்குக் கிடைக்கும்படி செய்யலாம். குறிப்பிட்ட தேதியில் உறுப்பினர்களுக்கு நினைவூட்டல் கடிதங்கள் தானாகவே அனுப்பப்படுமாறு கட்டுப்பாட்டாளர் குழு அஞ்சலைத் தகவமைக்க முடியும். குழுவுக்குள் பரிமாறிக் கொள்ளப்படும் மடல்கள் தவிரக் கோப்புகள், ஆவணங்கள், படங்கள், நிகழ்படங்கள் ஆகியவற்றையும் சேவையாளரின் வலையகத்தில் சேமித்து வைக்கலாம். அவற்றை உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும் பார்வையிட்டுக் கொள்ளலாம். குழு உறுப்பினர்கள் நேரில் கூடி விவாதிக்கத் தேவையின்றி, தமக்குள்ளே கருத்துப் பரிமாற்றம் செய்து முடிவுகள் மேற்கொள்ள உதவும் இச்சேவை இணையம் வழங்கும் இலவசச் சேவையாகும்.

5.2.3 செய்திப் பரிமாற்றம் (Instant Messaging)

தகவல் பரிமாற்றத்துக்கு மின்னஞ்சலும், அஞ்சல் குழுக்களும் பயன்பட்ட போதிலும் அவையெல்லாம் நிகழ்-நேர (Real-Time) தகவல் பரிமாற்றமாக இரா. நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலைப் பெறுபவர் உடனே பார்வையிடலாம். அல்லது பல நாட்கள் பார்க்காமலே இருந்துவிடலாம். எனவே உடனடிப் பதிலைப் பெற வேண்டிய தகவல் பரிமாற்றத்துக்கு மின்னஞ்சல் பயன் தராது. உடனடிச் செய்திப் பரிமாற்ற (Instant Messaging) சேவை இக்குறையைப் போக்குகிறது. இச்சேவை உரை அடிப்படையிலான (text based) நிகழ்-நேரத் தகவல் பரிமாற்ற சேவையாகும்.

பெரும்பாலும் மின்னஞ்சல் சேவையை வழங்கும் நிறுவனங்கள் இச்சேவையையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இணையத்தில் முதன்முதலாக இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் ‘ஐசிகியூ’ (ICQ - I Seek You என்பதைக் குறிக்கிறது) என்ற பெயரில் இச்சேவையை அறிமுகப்படுத்தினர். இன்றைக்கும் இதனைப் பலர் பயன்படுத்துகின்றனர். இது தவிர இன்றைக்குப் பெரும்பாலோர் பயன்படுத்தும் மென்பொருள்களுள் சில:

(1) யாகூ! மெசஞ்சர் (Yahoo! Messenger)
(2) விண்டோஸ் லைவ் மெசஞ்சர் (Windows Live Messenger)
(3) கூகுள் டாக் (Google Talk)
(4) ஸ்கைப் (Skype)

உடனடிச் செய்திப் பரிமாற்றத்தில் ஈடுபட விரும்பும் இருவரும் தத்தம் கணிப்பொறிகளில் இச்சேவைக்குரிய மென்பொருளை நிறுவ வேண்டும். செய்திப் பரிமாற்றத்தில் ஈடுபடப் போகும் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளைக் குறிப்பிட்டு முதலில் மென்பொருளைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். நண்பர்கள் ஒப்புதல் அளித்தபின் அவர்கள் பெயர் பட்டியலில் சேரும். கணிப்பொறியை இணையத்தில் இணைத்துக் கொண்டு, செய்திப் பரிமாற்ற மென்பொருளை இயக்க வேண்டும். அந்த நேரத்தில் அதே மென்பொருளை இயக்கிவைத்துக் கொண்டு இணையத்தில் உலாவரும் நண்பர்களின் பட்டியல் காண்பிக்கப்படும். நீங்கள் உரையாட விரும்பும் நண்பரைத் தேர்ந்தெடுத்தால் அத்தகவல் உங்கள் நண்பருக்குக் கிடைக்கும். பிறகு இருவரும் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடலாம். உரை வடிவில் தகவலைத் தட்டச்சிட்டு அனுப்ப, அவர் அதற்கான பதிலை உரைவடிவில் அனுப்பி வைப்பார். அவர் பதில் உங்கள் கணிப்பொறித் திரையில் தோன்றும். மீண்டும் உங்கள் கருத்தை அனுப்பலாம். இவ்வாறு தொடர்ந்து தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடலாம். உடனடிச் செய்திப் பரிமாற்றம், தெரிந்தவர்களுக்கு இடையே தனிப்பட்ட முறையில் நடைபெறுவது. அயலார் எவரும் கலந்துகொள்ளவோ குறுக்கிடவோ ஒட்டுக் கேட்கவோ முடியாது.

உடனடிச் செய்திப் பரிமாற்றம் என்பது இயல்பாக இருவருக்கு இடையே நடைபெறும் உரைவழித் தகவல் பரிமாற்றமாக உருவான போதிலும், இன்றைக்கு அதில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடுவோர் வலைப் படப்பிடிப்பி (Web Camera) மூலம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, ஒலிவாங்கி, ஒலிபெருக்கி உதவியுடன் இருவரும் பேசிக் கொள்ளும் வசதிகளும் செய்திப் பரிமாற்ற மென்பொருள்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டுக்கு மேற்பட்டோர் குழுவாகத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும் வழியுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற்ற செய்திப் பரிமாற்றத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளவும் வசதியுள்ளது. இன்றைக்குச் செல்பேசிகளில் உடனடிச் செய்திப் பரிமாற்ற வசதி வந்துவிட்டது

5.2.4 தொலைபேசி

உடனடிச் செய்திப் பரிமாற்றத்தில் உள்ள ஒரு பலவீனம், நீங்கள் செய்தி பரிமாற விரும்பும் நேரத்தில் உங்கள் நண்பரும் இணையத்தில் இணைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். ஆனால் தொலைபேசிச் சேவையில் அத்தகைய குறைபாடு இல்லை. நீங்கள் விரும்பும் நேரத்தில் உங்கள் நண்பரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிக் கொள்ள முடியும். இணையம்வழித் தொலைபேசித் தொடர்பு மூன்று வகையில் கிடைக்கிறது:

(1) கணிப்பொறி-கணிப்பொறி: நாம் ஏற்கெனவே பார்த்தபடி, பேச விரும்பும் இருவரும் ஒரே நேரத்தில் தத்தம் கணிப்பொறியை இணையத்தில் இணைத்துக் கொண்டு, உடனடிச் செய்திப் பரிமாற்ற மென்பொருளின் உதவியுடன், ஒலிவாங்கி மற்றும் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி உரையாடிக் கொள்ள முடியும். இவ்வசதி இலவசமாகவே கிடைக்கிறது.

(2) கணிப்பொறி-தொலைபேசி: உங்கள் கணிப்பொறியை இணையத்தில் இணைத்துக் கொண்டு, வெளிநாட்டில் உள்ள உங்கள் நண்பரின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பேசுகின்ற வசதியைச் சில செய்திப் பரிமாற்ற மென்பொருள்கள் வழங்குகின்றன. இவ்வசதி கட்டண அடைப்படை யிலேயே வழங்கப்படுகிறது. ஆனால் நேரடித் தொலைபேசிக் கட்டணத்தைவிட மிகவும் குறைவாகும். இணைய உலா மையங்களில் இச்சேவையைப் பெறலாம். நம் நாட்டிலுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பேசும் வசதி கிடையாது.

    (3) தொலைபேசி-தொலைபேசி: அமெரிக்காவில் ஒரு தொலைபேசி இணைப்பைப் பெற்று, அந்த எண்ணை வேறொரு நாட்டில் பயன்படுத்த முடியும். அகல்கற்றை (Broadband) இணைய இணைப்புக்கான இணக்கியில் (Modem) தொலைபேசிக் கருவியைப் பொருத்திக் கொண்டு, அமெரிக்காவில் உள்ள தொலைபேசி எண்ணை அழைத்துப் பேசலாம். அமெரிக்காவிலுள்ள ஒரு தொலைபேசியிலிருந்து இங்குள்ள தொலைபேசியை அழைத்துப் பேச முடியும். இது உள்ளூர்த் தொலைபேசி அழைப்பாகவே கருதப்படும். தொலைபேசி உரையாடல் இணையக் கட்டமைப்பு வழியாகவே பயணிக்கும். ‘வாய்ப்’ (VoIP - Voice over Internet Protocol) எனப்படும் இரு தொலைபேசிகளுக்கு இடையேயான இணையத் தொலைபேசி சேவை இந்தியாவில் இன்னும் சட்டரீதியாக அனுமதிக்கப்படவில்லை.

5.2.5 செய்தித்தாள்கள், பத்திரிகைகள்

காலையில் எழுந்தவுடன் செய்தித்தாள் படிக்கிறோம். அன்று நடைபெறும் நிகழ்வுகளைப் பற்றி அடுத்த நாள் செய்தித்தாளில்தான் தெரிந்து கொள்ள முடியும். 15 நாட்களுக்கு முன்பு வெளியான ஒரு செய்தியைத் தேடியெடுத்துப் படிக்க வேண்டுமெனில் அவ்வளவு எளிதாக முடியாது. வார, மாத இதழ்களும் ஏராளமாக அச்சில் வெளியிடப்படுகின்றன. ஒரேயொரு கட்டுரையைப் படிக்க வேண்டுமென்றாலும் முழுப் பத்திரிகையையும் வாங்கியாக வேண்டும்.

அச்சில் வெளியிடப்படுவது போன்றே இணையத்தில் செய்தித்தாள்களும் வார, மாதப் பத்திரிகைகளும் வெளியிடப்படுகின்றன. அவற்றை மின்னிதழ்கள் (e-zines) என்று அழைக்கின்றனர். சில குறிப்பிட்ட தொழில்நுட்ப, ஆய்வு இதழ்கள் தவிரப் பெரும்பாலான இணைய இதழ்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. இணையச் செய்திதாள்களில் குறிப்பிடத்தக்க சில:

(1) கூகுள் நியூஸ் - http://news.google.co.in
(2) யாகூ நியூஸ் - http://in.news.yahoo.com
(3) எம்எஸ்என் நியூஸ் - http://news.in.msn.com
(4) சைஃபி நியூஸ் - http://www.sify.com/news
(5) ரீடிஃப் நியூஸ் - http://www.rediff.com/news

பெரும்பாலான செய்தி வலையகங்கள் தமிழ்ப் பதிப்புகளையும் கொண்டுள்ளன. இணையச் செய்தித்தாள்களின் சிறப்புக்கூறு என்னவெனில் அவை செய்திகள் வரவர நிமிடத்துக்கு நிமிடம் புதுப்பிக்கப்படுகின்றன. எனவே இணையச் செய்தித்தாள்களில் சுடச்சுடச் செய்திகளை அறிந்து கொள்ள முடியும். இணைய இதழ்களில் அரசியல், பொருளாதாரம், வணிகம், அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, பொழுதுபோக்கு எனத் தலைப்பு வாரியாகச் செய்திகள் தரப்படுவதால் நாம் விரும்பும் செய்திகளை மட்டும் படித்துக் கொள்வது எளிது. குறிப்பிட்ட செய்தியையோ, பழைய செய்திகளையோ தேடிப் படிக்க வசதி உள்ளது. செய்திகளை அச்சிட்டுக் கொள்ளலாம். உங்கள் நண்பருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம்.

அச்சில் வெளியிடப்படும் செய்தித்தாள்களில் பெரும்பாலானவை இணையத்திலும் வெளியிடப்படுகின்றன. தினமணி, தினகரன், தினத்தந்தி, தினமலர், இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற செய்தித்தாள்கள் இணையத்திலும் கிடைகின்றன. குமுதம், விகடன், கல்கி, மங்கையர் மலர், ஃபிரன்ட் லைன், இந்தியா டுடே போன்ற வார, மாத இதழ்களும் இணையத்தில் வெளியிடப்படுகின்றன. முழு இதழையும் படிக்கக் கட்டணம் செலுத்த வேண்டும்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
இணையத்தில் கிடைக்கும் கலைக்களஞ்சியங்கள் பற்றிக் குறிப்பு வரைக.
2.
இணையத்தில் இருக்கும் ஆவணக் காப்பகங்கள் சிலவற்றைக் கூறுக.
3.
இணையத்திலுள்ள ஆலோசனை மையங்கள் எவ்வாறு உதவுகின்றன?
4.
இணையத்தில் தகவல் தேடும் வழிமுறைகள் யாவை?
5.
மின்னஞ்சல் வழங்கும் வசதிகளை எடுத்துக் கூறுக.
6.
அஞ்சல் குழுக்கள் எவ்வாறு செயல்படுகின்றன?
7.
உடனடிச் செய்திப் பரிமாற்றம் எவ்வாறு செயல்படுகிறது?
8.
இணையம்வழித் தொலைபேசி உரையாடல் சாத்தியமா?
9.
இணையத்தில் வெளியிடப்படும் செய்தித்தாள்கள் பற்றி விளக்குக.