5.3 கல்வி, வேலைவாய்ப்பு

கல்வி, வேலை வாய்ப்புகளைத் தேடிக் கண்டறிய இணையம் துணைபுரிகிறது. பெரும்பாலும் அனைத்துப் பல்கலைக் கழகங்களும் வலையகம் வைத்துள்ளன. பல்கலைக் கழகம் வழங்கும் படிப்புகள், கட்டணம், தேர்வு அட்டவணை, விண்ணப்பப் படிவங்கள் போன்ற தகவல்கள் வலையகங்களில் வெளியிடப் படுகின்றன. சில பல்கலைக் கழகங்கள் இணையம் வழியாகவே சில படிப்புகளை வழங்குகின்றன. பாடங்கள், தேர்வுகள் அனைத்தும் இணையம் வழியாகவே நடைபெறும். இணையம்வழிப் படிப்பு மற்றும் நேர்முகப் பயிற்சி இரண்டும் கலந்த படிப்புகளும் உள்ளன. இந்திய அரசின் இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகம் www.ignou.ac.in இத்தகைய படிப்புகளை வழங்குகின்றது. முற்றிலும் இணையம் வழியாகவே செயல்படும் மெய்நிகர் பல்கலைக் கழகங்களும் (Virtual Universities) உள்ளன. மேலும் தாமாகவே படித்து அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புவோருக்கு உதவும் வகையில் பல்வேறு படிப்புகளுக்கான நிகழ்நிலைப் பாடப்பயிற்சிகள் (Online Tutorials) இணையத்தில் இலவசமாகக் கிடைகின்றன. படித்து முடித்தபின் வேலை தேட உதவும் வேலைவாய்ப்பு வலையகங்கள் ஏராளமாய் இணையத்தில் உள்ளன. வேலைக்கு ஆள் வேண்டுவோர் இணையம்வழி விளம்பரம் செய்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கவும் இணையம் உதவுகிறது. இவற்றைப் பற்றியெல்லாம் இப்பாடப் பிரிவில் விரிவாக அறிந்து கொள்வோம்.

5.3.1 இணையப் பல்கலைக் கழகங்கள் (Virtual Universities)

மெய்நிகர் பல்கலைக் கழகம் எனப்படும் இணையப் பல்கலைக் கழகங்களில் குறிப்பிட்ட பாட வகுப்பில் சேர விண்ணப்பிப்பது, கட்டணம் செலுத்துவது, பாடங்களைப் பெறுவது, சொற்பொழிவு, நிகழ்படம், முன்வைப்புகளின் மூலம் பாடங்கள் நடத்துவது, மாணவர்கள் பாடங்களைக் கேட்டு, ஐயங்களுக்கு விளக்கம் பெறுவது, தேர்வு எழுதுவது அனைத்தும் இணையம் வழியாகவே நடைபெறும். ஒரு வகுப்பில் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயில்வர். தொலைதூர நாடுகளில் வசிப்போர் கடல்கடந்து சென்று பயில வேண்டிய தேவையில்லை. வசிக்கும் இடத்திலேயே வீட்டில் இருந்தபடியே படித்துப் பட்டம் பெற முடியும். தொலைநிலைக் கல்வியை விடவும் இது எளிதானது.

தமிழ்நாட்டு அரசின் ’தமிழ் இணையப் பல்கலைக் கழகம்’ (Tamil Virtual University), பிற நாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் தமிழ் பயில விரும்பும் ஆர்வலர்கள் படித்துப் பயன்பெறப் பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது. தமிழ் மொழியில் முதல் வகுப்பு தொடங்கி, சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்புவரை பயில முடியும். வேறு வழிகளில் தமிழ் படித்துப் பட்டம் பெற வாய்ப்பில்லாத பிற நாடுகளில் வாழும் தமிழ்மக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இளங்கலைத் தமிழியல் (B.A. Tamilology) படித்துப் பட்டம்பெற தமிழ் இணையப் பல்கலைக் கழகம் வாய்ப்பளிக்கிறது. www.tamilvu.org என்னும் வலையகத்தில் இதற்கான விவரங்களை அறியலாம்.

5.3.2 நிகழ்நிலைப் பாடப்பயிற்சிகள் (Online Tutorials)

பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் படிக்கின்ற அனைத்துப் பாடங்களுக்கும் நிகழ்நிலைப் பாடப்பயிற்சிகள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற அனைத்துப் பாடங்களுக்கும் தொடக்கநிலை, இடைநிலை, உயர்நிலைப் படிப்புகளுக்கான பாடப்பயிற்சிகளில் படங்கள், வரைகலை, அசைவூட்டம், நிகழ்படம் உள்ளிட்ட பல்லூடக (multimedia) முறையில் அமைந்த பாட விளக்கங்களைக் காணலாம். பாடங்களின் முடிவில் பயிற்சி வினாக்கள் உண்டு. வினா வங்கி உண்டு. வினாடி வினாத் தேர்வுகள் உண்டு. வினாக்களுக்குப் பதில் தந்து உங்களுடைய தகுதியை அளவிட்டுக் கொள்ளலாம்.

கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற வழக்கமான பாடங்கள் மட்டுமின்றி, நவீனத் தொழில்நுட்பங்களான கணிப்பொறியியல், உயிரித் தொழில்நுட்பம், உயிரி வேதியியல், உயிரித் தகவலியல், நானோ தொழில்நுட்பம் போன்ற பாடங்களுக்குக்கூட இணையத்தில் பாடப்பயிற்சிகள் உள்ளன. தேடுபொறி மென்பொருளில் “Physics Online Tutorials” என்னும் சொல்தொடரை உள்ளிட்டுத் தேடினால் இயற்பியலில் பாடப்பயிற்சிகளை வழங்கும் library.thinkquest.org போன்ற வலையகங்கள் பட்டியலிடப்படும். அவற்றுள் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துப் படித்துக் கொள்ளலாம். கணிப்பொறியியலில் கணிப்பொறி மொழிகளான சி-மொழி, சி++ மொழி, ஜாவா மொழி போன்றவற்றை நாமாகவே கற்றுக் கொள்வதற்கு எளிய பாடப் பயிற்சிகள் உள்ளன. வலையகம் வடிவமைக்க வேண்டுமா? செய்முறைப் பயிற்சிகளோடு கூடிய பாடங்கள் உள்ளன.

5.3.3 வேலைதேடலும் வேலைக்கு ஆள்தேடலும்

இணையம் ஒரு சிறந்த வேலைவாய்ப்பு அலுவலகமாகச் செயல்படுகிறது எனக் கூறினால் மிகையாகாது. உங்கள் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பினைத் தேடித்தரும் வலையகங்கள் ஏராளமாய் இணையத்தில் உள்ளன. படித்து முடித்து வேலை தேடுவோர், வேலையில் இருந்துகொண்டே இன்னும் சிறந்த வேலைக்கு முயல்வோர் முதலில் ஒரு வேலைவாய்ப்பு வலையகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பெயர், வயது, முகவரி, கல்வித் தகுதி, அனுபவம், எதிர்பார்க்கும் சம்பளம் போன்ற விவரங்களை வலையகத்தில் வெளியிட வேண்டும். தகுதி வாய்ந்த ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கும் நிறுவனம் உங்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பினை அனுப்பி வைக்கும். இதேபோல வேலைக்கு ஆள்தேடும் நிறுவனங்களும் தமக்குத் தேவைப்படும் ஆட்கள் பற்றி இதுபோன்ற வலையகங்களில் விளம்பரம் செய்வர். வேலைவாய்ப்பு வலையகங்களுள் குறிப்பிடத்தக்க சில:

(1) www.naukri.com (2) in.jobs.yahoo.com
(3) www.jobsdb.com (4) www.jobsahead.com
(5) www.monsterindia.com (6) www.timesjobs.com
(7) www.jobsearch.co.in (8) www.placementindia.com
 

இத்தகைய வலையகங்களில் துறை வாரியாக, மாநிலம் மற்றும் நகரம் வாரியாக, தகுதி வாரியாக வேலையிடங்களைத் தேடிக் கண்டறிய முடியும். வேலைக்கு ஆள்தேடும் நிறுவனத்தினர் இதுபோன்ற வலையகங்களை அவ்வப்போது பார்வையிட்டுக் கொண்டே இருப்பர்.