5.5 பொழுதுபோக்கு

மனித வாழ்க்கையில் பொழுதுபோக்கு இன்றியமையாத இடம் வகிக்கிறது. பொழுதுபோக்கு என்பது மனிதர்க்கு மனிதர் மாறுபடும். இசையில் மிகுந்த ஈடுபாடு உள்ளோர்க்கு இசையே வாழ்க்கை. மற்றவர்க்கு அது பொழுதுபோக்காக இருக்கலாம். அதுபோலவே பிறவும். உடல்நலனில் அக்கறை உள்ளவர்க்கு விளையாட்டு பொழுதுபோக்கு. வெளியே சென்று விளையாட முடியாதவர்கள் கேரம், சதுரங்கம், சீட்டுக்கட்டு போன்ற உள்ளரங்க விளையாட்டுகளில் (Indoor Games) ஆர்வம் காட்டுவர். வேறு சிலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விருப்பம் கொண்டிருப்பர். திரைப்படங்கள் பார்ப்பது, திரைப்படப் பாடல்களைக் கேட்பது பலரது பொழுதுபோக்காக இருப்பதைக் காண்கிறோம். இன்னும் சிலர் இருக்கிறார்கள். குறிக்கோளின்றி மனதில் தோன்றியபடி அரட்டை அடித்தே பொழுதைப் போக்குவர். இங்கே குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில் இத்தகைய பொழுதுபோக்குகள் அனைத்துமே இணையத்தில் கிடைக்கின்றன. இன்னொரு நண்பர் இருக்க வேண்டிய தேவை இல்லை. கணிப்பொறியும் இணைய இணைப்பும் இருந்தால் போதும். மிக எளிதாகப் பொழுது போய்விடும். எப்படி என்பதைப் பார்ப்போம்.

5.5.1 விளையாட்டுகள்

இணையத்தில் ஏராளமான வலையகங்கள் இலவச விளையாட்டுகளை வழங்குகின்றன. இணையத்தில் இருந்தபடியே விளையாடிக் கொள்ளலாம். பதிவிறக்கி (download) உங்கள் கணிப்பொறியில் நிறுவி விளையாடிக் கொள்கிற விளையாட்டுகளும் உள்ளன. இணைய விளையாட்டுகள் பலதரப்பட்டவை. அவற்றை நான்கு பெரும்பிரிவுகளில் உள்ளடக்கலாம்:

  1. ஒருவரே விளையாடும் விளையாட்டுகள்
  2. இருவர் விளையாடும் விளையாட்டுகள். எதிர்த் தரப்பில் கணிப்பொறியே உங்களுக்கு எதிராய் விளையாடும்.
  3. இருவர் விளையாடும் விளையாட்டுகள். இணையத்தில் அதே நேரத்தில் அதே வலையகத்தில் இணைத்துக் கொண்டுள்ள வேறொருவர் உங்களுக்கு எதிராக விளையாடுவார்.
  4. பலர் விளையாடும் விளையாட்டுகள்.

சதுரங்கம், சைனீஸ் செக்கர், மாரியோ, சாலிடர், பிரிட்ஜ், சூடோக்கு, பைக், கார் பந்தயம், புதையல் தேடல், இளவரசியை மீட்டல் போன்ற விளையாட்டுகள் மிகவும் செல்வாக்குப் பெற்றவை. வழக்கமான கால்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கோல்ஃப், ஆக்கி, பேஸ்பால், பில்லியர்ட்ஸ், கிரிக்கெட் பொன்ற விளையாட்டுகளும் உள்ளன. இணைய விளையாட்டுகளை அவற்றின் தன்மை கருதிப் பல வகயினங்களாகப் பிரிக்கலாம். சில முக்கிய வகையினங்கள்:

(1) பழமையான விளையாட்டுகள் (Classical Games)
(2) சாகச விளையாட்டுகள் (Adventure Games)
(3) பந்தய விளையாட்டுகள் (Racing Games)
(4) குறிவைத்துச் சுடும் விளையாட்டுகள் (Shooting Games)
(5) புதிர் விளையாட்டுகள் (Puzzle Games)
(6) பலகை விளையாட்டுகள் (Board Games)
(7) சீட்டு விளையாட்டுகள் (Card Games)

மேற்கண்ட விளையாட்டுகளில் தொடக்கநிலை, இடைநிலை, உயர்நிலை, வல்லுநர் எனப் பல நிலைகள் (Difficulty Levels) இருக்கும். உங்களின் முன் அனுபவத்துக்கு ஏற்ற நிலையைத் தேர்ந்தெடுத்து விளையாடலாம். இணைய விளையாட்டில் முன்பின் அறிமுக இல்லாத முகம் தெரியாத வேற்று நாட்டினர் ஒருவருடன் விளையாடுவது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இணையத்தில் இலவச விளையாட்டுச் சேவையை வழங்கும் சில வலையகங்கள்:

(1) http://www.internetgames247.com
(2) www.halftimegames.com
(3) www.net-games.biz
(4) www.addictinggames.com

5.5.2 பாடல்கள், திரைப்படங்கள்

ஓய்வு நேரத்தில் வானொலியில் பாட்டுக் கேட்கிறோம். தொலைக்காட்சியில் திரைப்படங்கள் பார்க்கிறோம். வேறுபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்கிறோம். இவை அனைத்துமே இணையத்தில் கிடைக்கின்றன. தமிழ்த் திரைப்படப் பாடல்களை வழங்குவதற்கென்றே தனிச்சிறப்பான வலையகங்கள் உள்ளன. அவற்றுள் சில:

(1) www.tamilbeat.com
(2) www.tamilmp3world.com
(3) www.thenisai.com

அதுபோலவே தமிழ்த் திரைப்படங்களை வழங்கும் வலையகங்களும் உள்ளன. அவற்றுள் சில:

(1) www.tamilmovie.com
(2) http://www.tamilmovies.net
(3) http://tamil.galatta.com

சில வலையகங்கள் தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழிப் படங்கள், பாடல்களையும் வழங்குகின்றன. வேறுசில, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளையும் நெடுந்தொடர்களின் காட்சிகளையும் வழங்குகின்றன. ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை என்றேனும் ஒருநாள் நீங்கள் பார்க்க முடியாமல் போனாலும் கவலை இல்லை. அதனைப் பின்னொரு நாளில் இணையத்தில் பார்த்துக் கொள்ளலாம். கட்டண அடிப்படையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நிகழ்நேரத்தில் வழங்கும் வலையகங்களும் உள்ளன.

5.5.3 இணைய அரட்டை (Internet Chat)

குறிப்பிட்ட பொருள்பற்றிக் கருத்துப் பரிமாற்றம் செய்வதை விவாதம் அல்லது கலந்துரையாடல் என்கிறோம். ஆனால் நோக்கமின்றி மனம் போன போக்கில் பேசிக் கொண்டிருப்பதை ‘அரட்டை’ என்கிறோம். இத்தகைய அரட்டைக்கு இணையம் உதவுகிறது. இணைய அரட்டை தொடக்கத்தில் ‘ஐஆர்சி’ (IRC -Internet Relay Chat) என்ற பெயரில் உருவானது. ஃபின்லாந்தில் 1988 ஆகஸ்டில் ஜார்க்கோ ஓய்கரினென் என்பவர் ஐஆர்சியை உருவாக்கினார். ‘அரட்டை வழங்கி’ (Chat Server) என்னும் சிறப்புவகை வலை வழங்கி பயன்படுத்தப்படுகிறது. பயனர் தமது கணிப்பொறியில் ‘அரட்டை நுகர்வி’ (Chat Client) மென்பொருளை நிறுவிக் கொள்ள வேண்டும். இணையத்தில் அரட்டைச் சேவையைப் பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அவற்றுள் முக்கியமான சில:

(1) ஈஎஃப்நெட் - www.efnet.org
(2) ஐஆர்சிநெட் - www.ircnet.org
(3) குவாக்நெட் - www.quakenet.org
(4) அண்டர்நெட் - www.undernet.org

அரட்டை நுகர்வி மென்பொருளை இயக்கியதும், இணையத்தில் ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரட்டைக் குழுக்கள் ’அரட்டை அறைகள்’ (Chat Rooms) அல்லது ‘அரட்டைத் தடங்கள்’ (Chat Channels) என்ற பெயரில் பட்டியலிடப்படும். அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அரட்டையில் பங்கேற்கலாம். அரட்டையில் பங்கேற்போர் ஒரு புனைப்பெயரைச் சூட்டிக் கொள்ள வேண்டும்.

இணையத் தொலைபேசி, மின்னஞ்சல், உடனடிச் செய்திப் பரிமாற்றத்தில் பெரும்பாலும் இருவரே பங்கேற்கின்றனர். இணைய அரட்டையில் பலபேர் பங்கேற்கின்றனர். அஞ்சல் குழுக்கள், செய்திக் குழுக்களில் பலர் பங்கேற்கின்ற போதிலும் அவை நிகழ்-நேரத் தகவல் பரிமாற்றம் அல்ல. இணைய அரட்டை பலரிடையே நடக்கும் உரை வடிவிலான நிகழ்-நேரத் தகவல் பரிமாற்றம் ஆகும். உடனடிச் செய்திப் பரிமாற்ற சேவையில் தற்போது குழுத் தகவல் பரிமாற்றத்துக்கும் வழியுள்ளதால் அரட்டை போலவே பயன்படுத்தப்படுகிறது. என்றாலும் உடனடிச் செய்திப் பரிமாற்றத்தில் முன்பே அறிமுகமானவர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். ஆனால் இணைய அரட்டையில் முற்றிலும் அறிமுகம் இல்லாதவர்களே பங்கேற்கின்றனர்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
இணையப் பல்கலைக் கழகங்களின் செயல்பாட்டை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
2.
நிகழ்நிலைப் பாடப்பயிற்சிகள் பற்றி எடுத்துக் கூறுக.
3.
வேலை தேட இணையம் எவ்வாறு உதவுகிறது?
4.
இணையத்தில் செய்திக் குழுக்கள் எவ்வாறு செயல்படுகின்றன?

5.

வலைப்பதிவுகள் எவ்வாறு பயன்படுகின்றன?

6.

மின்வெளிச் சமூகக் குழுக்களின் சிறப்பு யாது? ?
7.
இணையத்தில் விளையாட்டு உண்டா? விளக்குக.
8.
இணைய அரட்டை பற்றிக் குறிப்பு வரைக.