5.6

தொகுப்புரை

 
  • அன்றாட வாழ்க்கையின் தேவைகளை நிறைவு செய்கின்ற பல்வேறு சேவைகள் இணையத்தில் இலவசமாய்க் கிடைக்கின்றன.

  • மனித குலம் இதுவரை திரட்டிய அறிவுக் களஞ்சியம் முழுக்க இணையத்தில் கலைக் களஞ்சியங்கள், ஆவணக் காப்பகங்கள், ஆலோசனை மையங்கள் என்னும் பல்வேறு வடிவங்களில் சேமிக்கப்பட்டுள்ளது.

  • புகழ்வாய்ந்த ‘என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா’ கலைக்களஞ்சியம் www.britannica.com உட்பட பல்வேறு கலைக் களஞ்சியங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. http://www.encyclopedia.com என்னும் வலையகம் 49 கலைக் களஞ்சியங்கள், 73 அகராதிகள் மற்றும் சொற்களஞ்சியங்களிலிருந்து தகவலைத் தேடித் தரும்.

  • ‘விக்கிப் பீடியா’ (Wikipedia) இணையத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்ற இலவசக் கலைக்களஞ்சியம் ஆகும். இதில் தமிழ் உட்பட உலகின் 265 மொழிகளில் தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. எவர் வேண்டுமானாலும் தகவல்கள் தரலாம். திருத்தம் செய்யலாம். http://ta.wikipedia.org என்னும் வலையகத்தில் தமிழில் தகவல்களைத் தேடிப் பெறலாம்.

  • வில்லியம் சேக்ஷ்பியர், http://shakespeare.mit.edu, வேர்ட்ஸ்வொர்த் http://www.wordsworthvariorum.com போன்ற உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளின் அனைத்துப் படைப்புகளும் இணையத்திலுள்ள ஆவணக் காப்பகங்களில் சேமிக்கப்பட்டுள்ளன. http://www.marxists.org என்னும் வலையகத்தில் கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் ஆகியோரின் அனைத்துப் படைப்புகளுடன் உலகின் 40 மொழிகளில் 400 ஆசிரியர்கள் மார்க்ஸியம் பற்றி எழுதியுள்ள நூல்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.

  • ’இணைய ஆவணக் காப்பகத்தில்’ http://www.archive.org உலகப் புகழ்பெற்ற நூல்கள், படங்கள், நிகழ்படங்கள், பேச்சுரைகள், இசைப்பாடல்கள், கணிப்பொறி மென்பொருள்கள் சேமிக்கப்பட்டுள்ளன. http://www.online-literature.com என்னும் வலையகத்தில் ஆன்டன் செக்காவ், பைரன், டார்வின், டால்ஸ்டாய், கீட்ஸ், மாக்ஸிம் கார்க்கி போன்ற 260 படைப்பாளிகளின் 2874 நூல்கள் சேமிக்கப்பட்டுள்ளன.

  • ‘மதுரைத் திட்டப்பணி’யின்படி சங்க இலக்கியங்கள் தொடங்கி இக்கால இலக்கிய நூல்கள் வரை எண்ணற்ற தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகள் இணையத்தில் http://www.projectmadurai.org.vt.edu சேமிக்கப்பட்டுள்ளன.

  • வாழ்வின் பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வுதரும் ஆலோசனை மையங்கள் இணையத்தில் இருக்கின்றன. http://www.ecounselling.com என்னும் வலையகத்தில் காதல், திருமணம், குடும்பம், உடல்நலம், உணவுப் பழக்கம், குடிப்பழக்கம், கோபம், குழந்தைநலம், மன அழுத்தம், மணமுறிவு, பணம், இழப்பு, கவலை தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கின்றன.

  • இரண்டு வகையாக இணையத்தில் தகவலைத் தேடிப் பெறலாம்: (1) தேவையான தகவல் எந்த வலையகத்தில் இருக்கிறது என்பதை அறிந்திருப்பின் அந்த வலையகத்தில் நுழைந்து, அங்குள்ள தொடுப்புகள் மூலம் தேடலாம். (2) கூகுள், யாகூ, லைவ்சர்ச், ஆஸ்க் போன்ற ஏதேனும் ஒரு தேடுபொறியின் வலையகம் சென்று, குறிப்பிட்ட சொல் அல்லது சொல்தொடரைத் தந்து தேடலாம்.

  • மின்னஞ்சல் என்பது இணையம்வழி நடைபெறும் கடிதப் போக்குவரத்தைக் குறிக்கிறது. இணையத்தில் ஜீமெயில், யாகூமெயில், ஹாட்மெயில் எனப் பல்வேறு இலவச மின்னஞ்சல் சேவைகள் உள்ளன. மின்னஞ்சல் பயன்படுத்த விரும்புபவர் முதலில் ஒரு மின்னஞ்சல் சேவை வலயகத்தில் தனக்கென ஒரு மின்னஞ்சல் கணக்கை உருவாக்க வேண்டும். [email protected] mailto:[email protected] என்பதுபோல மூன்று சொல் மின்னஞ்சல் முகவரி கிடைக்கும். இது உலகில் உங்களைத் தனித்து அடையாளம் காட்டும்.

  • மின்னஞ்சல் சேவை பல்வேறு வசதிகளையும் வழங்குகிறது. மடலோடு சேர்த்துக் கோப்புகள், படங்கள், பாடல்கள், நிகழ்படங்கள் ஆகியவற்றை உடனிணைப்பாக (Attachment) அனுப்பலாம். மின்னஞ்சல் போக்குவரத்துக்கு விடுமுறை நாட்கள் கிடையா. இரவு பகல் எந்த நேரமும் செயல்படும்.

  • மின்னஞ்சல் முகவரியுள்ள பலரும் சேர்ந்து ஒரு மின்னஞ்சல் குழுவை (Mailing List) உருவாக்கிக் கொள்ளலாம். குழுவின் பெயருக்கு அனுப்பப்படும் மடல், உறுப்பினர்கள் அனைவருக்கும் போய்ச் சேரும். அம்மடலுக்கு ஒருவர் அனுப்பும் பதிலும் உறுப்பினர்கள் அனைவருக்கும் கிடைக்கும். குழு உறுப்பினர்கள் நேரில் கூடி விவாதிக்கத் தேவையின்றி, தமக்குள்ளே கருத்துப் பரிமாற்றம் செய்து முடிவுகள் மேற்கொள்ளலாம்.

  • உடனடிச் செய்திப் பரிமாற்றம் (Instant Messaging) உரை அடிப்படையிலான (text based) நிகழ்-நேரத் தகவல் பரிமாற்ற சேவையாகும். அதற்கான மென்பொருளை உங்கள் கணிப்பொறியில் நிறுவி மின்னஞ்சல் முகவரியுள்ள உங்கள் நண்பர்களின் பட்டியலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் இணையத்தில் உலாவரும் நண்பர்களுடன் உரையாடலில் ஈடுபடலாம். இருவரும் முகம்பார்த்துப் பேசிக்கொள்ளும் வசதியும் உள்ளது.

  • தொலைபேசிச் சேவையையும் இணையம் வழங்குகிறது. கணிப்பொறி-கணிப்பொறி, கணிப்பொறி-தொலைபேசி, தொலபேசி-தொலைபேசி என மூன்று வகையான இணையம்வழி உரையாடல்கள் சாத்தியம். பின்னிரண்டும் கட்டண அடிப்படையில் வழங்கப்படுகின்றன. மூன்றாவது வகை இந்தியாவில் சட்ட ரீதியாக அனுமதிக்கப்படவில்லை.

  • இணையத்தில் வெளியிடப்படும் செய்தித்தாள்களும் பத்திரிகைகளும் மின்னிதழ்கள் (e-zines) எனப்படும். பெரும்பாலான செய்தி வலையகங்கள் தமிழ்ப் பதிப்புகளையும் கொண்டுள்ளன. இணையச் செய்தித்தாள்கள் நிமிடத்துக்கு நிமிடம் புதுப்பிக்கப்படுகின்றன. எனவே சுடச்சுடச் செய்திகளை அறிந்து கொள்ள முடியும். அச்சில் வெளியிடப்படும் பத்திரிகைகளில் பெரும்பாலானவை இணையத்திலும் வெளியிடப்படுகின்றன.

  • மெய்நிகர் பல்கலைக் கழகம் எனப்படும் இணையப் பல்கலைக் கழகங்களில் சேர்ந்து இணையம் வழியாகவே படித்துப் பட்டம் பெற வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டு அரசின் ’தமிழ் இணையப் பல்கலைக் கழகம்’ (Tamil Virtual University) பிற நாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் தமிழ் பயில விரும்பும் ஆர்வலர்கள் படித்துப் பயன்பெற பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது. http://www.tamilvu.org என்னும் வலையகத்தில் இதற்கான விவரங்களை அறியலாம்.

  • கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்கள் மட்டுமின்றி, நவீனத் தொழில்நுட்பங்களான கணிப்பொறியியல், உயிரித் தொழில்நுட்பம், உயிரி வேதியியல், உயிரித் தகவலியல், நானோ தொழில்நுட்பம் போன்ற பாடங்களுக்குக்கூட இணையத்தில் இலவசப் பாடப்பயிற்சிகள் உள்ளன.

  • இணையம் ஒரு சிறந்த வேலைவாய்ப்பு அலுவலகமாகச் செயல்படுகிறது. வேலை தேடுவோர் முதலில் ஒரு வேலைவாய்ப்பு வலையகத்தில் பதிவு செய்து கொண்டு தன்னைப்பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும். தகுதி வாய்ந்த ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கும் நிறுவனம் உங்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பினை அனுப்பி வைக்கும்.

  • குறிப்பிட்ட பொருள்பற்றி விவாதம் நடத்தும் செய்திக்குழுக்கள் இணையத்தில் செயல்படுகின்றன. கணிப்பொறி, யூஸ்நெட், அறிவியல், பொழுதுபோக்கு, சமூகம், பேச்சு, மனிதவியல், பலவகை என எட்டு உயர்நிலைக் குழுக்களும் அவற்றின் உட்குழுக்களும் உள்ளன. செய்திக்குழு முன்பு ‘யூஸ்நெட்’ என்று அழைக்கப்பட்டது.

  • ஒரு செய்திக்குழு வலையகத்தில் நுழைந்து, ஏற்கெனவே விவாதம் நடந்து கொண்டிருக்கும் ஒரு செய்திக்குழுவில் பங்கேற்கலாம். ஏற்கெனவே அக்குழுவில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை நீங்கள் பார்வையிட்டு, உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம். உங்கள் கருத்துக்குப் பதில் கருத்துகள் வரும். அவற்றைப் பார்வையிடலாம். அவற்றுக்கு உங்கள் பதிலைத் தெரிவிக்கலாம். இவ்வாறு விவாதம் தொடர்ந்து கொண்டே போகும்.

  • உங்களுக்கென சொந்த வலைப்பதிவகம் உருவாக்கிக் கொள்ளும் வசதி இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. வலைப்பதிவகத்தில் உங்கள் எண்ணங்கள், கருத்துகள், கொள்கைகள், கோட்பாடுகளை வெளியிடலாம். உங்கள் வலைப்பதிவைப் படிப்பவர்கள் தங்கள் விமர்சனங்களைப் பதிவு செய்வார்கள். அந்த விமர்சனங்களுக்கான உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். உங்கள் வலைப் பதிவகம் ஒரு விவாதக் குழு போலவே செயல்பட முடியும். உங்கள் எழுத்து வன்மை மூலம் சமூக உணர்வுமிக்க ஒரு சிறந்த குழுவை உருவாக்க முடியும்.

  • இணையத்தில் நிலவும் சமூகக் குழுக்கள் ‘மின்வெளிச் சமூகக் குழுக்கள்’ எனப்படுகின்றன. இத்தகைய குழுவமைப்புகளைச் ‘சமூகப் பிணையமாக்கம்’ (Social Networking) என்றும் கூறுவர். அஞ்சல் குழுக்கள், செய்திக் குழுக்கள், வலைப்பதிவுக் குழுக்கள் தவிர ஃபேஸ்புக், ஆர்க்குட், மைஸ்பேஸ் போன்ற வேறுபல சமூகப் பிணையமாக்கக் குழுக்களும் இணையத்தில் நிலவுகின்றன. மின்வெளிச் சமூகக் குழுக்கள் நாடு, இனம், மதம் கடந்து பல்வேறு மக்களையும் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.

  • இத்தகைய சமூகக் குழுக்கள் மூலமாக, சாதி, மதம், நாடு, இனம், மொழி அனைத்தையும் கடந்த புதியதோர் உலக சமூகம் எதிர்காலத்தில் உருவாக இணையம் வழிவகுக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

  • இணையத்தில் ஏராளமான வலையகங்கள் இலவச விளையாட்டுகளை வழங்குகின்றன. ஒருவர் விளையாடுவது, இருவர் விளையாடுவது, பலர் விளையாடுவது எனப் பல்வேறு விளையாட்டுகள் உள்ளன.

  • இணைய விளையாட்டுகளைச் சாகச விளையாட்டு, பந்தய விளையாட்டு, புதிர் விளையாட்டு, பலகை விளையாட்டு, சீட்டு விளையாட்டு எனப் பலவாறு வகைப்படுத்தலாம். ஒவ்வொன்றிலும் தொடக்கநிலை, இடைநிலை, உயர்நிலை, வல்லுநர் எனப் பல நிலைகள் இருக்கும். உங்களின் அனுபவத்துக்கு ஏற்ற நிலையைத் தேர்ந்தெடுத்து விளையாடலாம்.

  • திரைப்படப் பாடல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கும் வலையகங்கள் இணையத்தில் ஏராளமாய் உள்ளன.

  • நோக்கமின்றி மனம்போன போக்கில் அரட்டை அடிக்கவும் இணையம் உதவுகிறது. அதற்கான மென்பொருளை நிறுவிக் கொண்டு, இணையத்தில் அரட்டை வலையகம் ஒன்றில் நுழைந்து, விருப்பமான அரட்டைக் குழுவில் கலந்து கொண்டு, முன்பின் அறிமுகமே இல்லாத பல நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் அரட்டை அடிக்கலாம்.