| செந்தமிழ்த் தேசிகரான 
 வீரமாமுனிவரா லியற்றிய வைந்திலக்க ணத் தொன்னூல் விளக்கம் எனு மிந்நூலானது 
 1838ம் - ஆண்டில் பிர பல வித்துவானாகிய களத்தூர் - வேதகிரி முதலியாரால் 
 பார்வையிடப்பட்டு, புதுவை மாநகரத்தில் முதல் முதலில் அச்சிடப்பட்டது. வீரமா 
 முனிவ ரியற்றிய பலநூல்களைப்போலவே இதுவும் பொருள்நடை முதலியவற்றிற் சிறந்து 
 காணப்படும். செந்தமிழ்க்குரிய வைந்திலக்கணத்தைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் 
 தெரிவிக்கும் சிறந்த நூல் வேறின்மையின் இதனை மாணாக்கருக்குப் பிரயோஜனமாக 
 இரண்டாந்தரம் அச்சிற் பதிப்பிக்க வேண்டு மென்று நான்விரும்பி இராயப்பேட்டை 
 உவெஸ்லியன் மிசியோன் காலேஜு தமிழ்ப் பண்டிதரும் எனது நண்பருமாகிய ம-ள-ள-ஸ்ரீ, 
 உ. ஸ்ரீநிவாசராகவாசாரியர் அவர்களை இதைப் பார்வையிடும்படி கேட்டுக் கொள்ள 
 அவர் இதைப் பழைய பிரதியுடன் ஒப்பிட்டுப்பரி சோதித்துத்தர அதை நான் முதற் பதிப்பைப்போலன்றிச் 
 சூத்திரமும் உரையும் நன்கு விளங்குமாறு சூத்திரத்தைச் செய்யுள்போலப் பெரிய வெழுத்திலும் 
 வசனரூபமா யிருக்கும் உரையைச் சிறிய வெழுத்திலும் பதிப்பித்து, அதிகாரம், இயல், 
 ஓத்து முதலியவற்றிற்குத் தக்கவாறு இங்கிலீஷ்ப்பெயரு மெடுத்துக்காட்டி யிருக்கிறேன். 
 மேற்கூறிய வெனது நண்பர் எனக்குச் செய்த விப்பேருதவிக்கு நான்மிக நன்றியறிதலுள்ளவனா 
 யிருக்கிறேன். வீரமாமுனிவர் சரித்திரத்தை முதல் 
 முதலில் எழுதினவரும் தமிழ் வித்துவானுமாகிய, அ. முத்துச்சாமிப் பிள்ளை 
 யவர்களினது மிகவணுகிய மரபினரான ம-ள-ள-ஸ்ரீ, ம. சா. இயாகப் பிள்ளை யவர்கள் 
 தயவாய் இதைத் தமது இயந்திரசாலையில் அச்சிட்டுத் தந்ததற்கும், உவெஸ்லியன் 
 மிசியோன் சங்கப் போதகராகிய, ம-ள-ள-ஸ்ரீ, யாழ்ப்பாணம். சா. வெ. அம்பலவாணர் 
 ஐயர் இதை எழுத்துப் பிழையறப் பார்த்ததற்கும் நான் மிகவும் வந்தனம் 
 செலுத்துகிறேன். |