தான் தமிழியல்பைச் சிறப்பாக விளக்கமுடியும் என்னும் சிவஞான முனிவரின் கூற்றை
ஏற்க இயலாது. அது நடுநிலையான மதிப்பீடும் ஆகாது. இப்படியாக இந்த உரைநிலை
பற்றிய கருத்துகள் ஏராளமாக உள்ளன.
“சிவஞான முனிவர் நன்னூல் முழுமைக்கும் உரை எழுதவில்லை என்பது
முன்பே
சொல்லப்பட்டது. சங்கர நமச்சிவாயர் இயற்றிய விருத்தியுரையில் முனிவர் பல
பகுதிகளைக் கூட்டினார்; சில பகுதிகளைக் குறைத்தார்; சிற்சில பகுதிகளைக் குறைத்தும்
கூட்டியும் மாற்றினார்; மூன்று நூற்பாக்களுக்கு (நன். 50, 125, 293) மட்டுமே
புத்துரை
எழுதினார். முனிவர் கூட்டி எழுதிய விளக்கங்கள் எல்லாம் அவரே சொந்தமாக
எழுதியவை என்றும் சொல்ல முடியவில்லை”.
இந்த அடிப்படையில் மாணவர்க்குப் பாடம் சொல்லிக் கொடுக்க
விரும்பிய
சிவஞான முனிவர் சில திருத்தங்களைச் செய்துகொண்டார் என்பது மட்டுமே
பொருத்தமாக இருக்கமுடியும். எனினும் சிவஞான முனிவர் உரையிலும் சில சிறப்புகள்
இருந்தன. காட்டாகச் சொற்களை உச்சரிக்கும் முறைக்கு, “எல்லாச் சொற்களையும்
கூறுங்கால் பொருள் சிறக்கும் இடத்து எழுத்தினை எடுத்தும் அயலெழுத்தினை
நலிந்தும் ஏனை எழுத்துகளைப் படுத்தும் கூறுக” (நன்.132) என்று முனிவர் தரும்
விளக்கத்தைக் கூறலாம்.
இதுபோன்று எத்தனையோ வகையான உரை நுட்பங்களைப் பதிப்பாசிரியர்
சிறப்புறத் தொகுத்தளித்துள்ளார். அவரே கூறுவதுபோல நன்னூல் விருத்தியுரைக்கு
இது ஒரு செம்பதிப்பு எனலாம். இந்த அளவுக்குத் தன் ஆராய்ச்சி அறிவைப
பயன்படுத்தி, அருமையான ஒரு நூலை வெளிக் கொணர்ந்த முனைவர் அ. தாமோதரன்
அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
|