இரண்டாம்
பதிப்பின் வெளியீட்டாளர் முகவுரை
அரிய பன்மொழி - பல்துறை நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் உயரிய பணியைத் தொடர்ந்து ஆற்றிவரும் நிறுவனம் சரசுவதி மகால் நூலகமாகும். இந்நூலகம் தமிழில் இலக்கியம், இலக்கணம், மருத்துவம், சோதிடம் முதலிய பல்துறை நூல்களை வெளியிட்டு அருந்தொண்டாற்றி வருகின்றது. இங்கு இரண்டாம் பதிப்பாக வெளியிடப் பெறும் ‘இலக்கண விளக்கம்-எழுத்ததிகாரம்’ என்னும் இந்நூல் இலக்கணத்துறை நூலாகும். திருவாரூர் வைத்தியநாத தேசிகர் என்னும் புலவர் பெருமகனாரால் பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற ‘இலக்கண விளக்கம்’ எனும் இந்நூல் ‘குட்டித் தொல்காப்பியம்’ எனப் போற்றப் பெறும் படைப்பாகும். இந்நூல் சரசுவதி மகால் நூலகத்தால் 1971இல் முதற் பதிப்பாக வெளியிடப்பெற்றது. அதுபோழ்து இந்நூலினைத் தமிழ்ப் பேரறிஞர் திருமிகு தி, வே.கோபாலையர் அவர்கள் மிகச் சிறந்த, எடுத்துக் காட்டான பதிப்பாக உருவாக்கி அளித்தமை இங்கு நன்றியுடன் நினைவுகூரத் தக்கது. |